பைபிளின் கருத்து
வாழ்க்கையின் அர்த்தமென்ன?
“உயிரின வாழ்க்கைக்கு இயற்கைத் தெரிவே போதிய விளக்கமாயிருக்கிறது என்று டார்வின் கொள்கையாளர்கள் வாதாடுகின்றனர். எனினும் ஓர் உயிர் மேலும் சிக்கல் வாய்ந்த முழுமையை நோக்கியும் தன்னாற்றலுணர்விடமாகவும் அறிவுக்கூர்மையிடமாகவும் வளர்வது, அந்தக் குணங்கள் விரும்பப்படுவதன் காரணமாகவே என்று எண்ணுவது புத்திசாலித்தனமாகத் தெரிகிறது.” —டிலன் தாமஸ் (1914-53, வேல்ஸ் நாட்டு பாவலரும் புத்தகாசிரியரும்).
வாழ்க்கையின் அர்த்தத்துக்கான ஆய்வு புதியதொன்றல்ல. நூற்றாண்டுகளாக ஆர்வமுள்ள மனங்களை அது ஆக்கிரமித்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக இருந்ததைக் காட்டிலும் இன்று நியூ ஜீலாந்தியரின் மனங்களில் அது அதிகமாயிருப்பதாகச் சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. 15 வயது, மேலும் அதற்கும் மேற்பட்ட வயதினரை உள்ளடக்கிய நாற்பத்தொன்பது சதவீத மக்கள்தொகை “அடிக்கடி வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி சிந்தித்தது” என்று லிஸ்னர் என்பதில் வெளிவந்த அறிக்கை சொல்கிறது; இதுபோன்ற சுற்றாய்வு 1985-ல் நடத்தப்பட்டபோது 32 சதவீதமாக இது இருந்தது.
பிற தேசங்களின் மக்கள் பகர்ந்த உணர்ச்சிகளை நியூ ஜீலாந்தியர்கள் வெளிக்காட்டுபவர்களாகத் தெரிகிறார்கள். லிஸ்னர் தொடருகிறது: “நாம் உயிர்வாழ்வதன் முக்கியத்துவத்தை வினவக்கூடிய அதிகரிக்கும் போக்கு, 80-களில் இருந்ததைக் காட்டிலும் இப்போது நாம் மிகவும் கவலையுள்ளவர்களாக, சரியான போக்கைப் பற்றி குறைவான நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டலாம்.”
தெளிவாகவே, நாம் ஏன் இருக்கிறோம் என்று உலகமே கேட்கும் கேள்விக்குப் பரிணாமவாதிகள் அளிக்கும் பதில்கள் வளர்ந்துவரும் எண்ணிக்கையான மக்களுக்குத் திருப்தியளிப்பதாயில்லை. ஒருவருடைய வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு வேண்டிய அறநெறிக்கான வழிகாட்டுதலை பைபிள் கொடுக்குமா?
“பிரதான உந்துவிக்கும் சக்தி”
பூமி சிருஷ்டிகள் அனைத்திலும், மனிதனே வாழ்க்கையின் அர்த்தத்தைக் குறித்து யோசிக்கிறான். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? பிரசங்கி 3:11-ல் பைபிள் ஒரு காரணமளிக்கிறது. சிருஷ்டிகரைக் குறித்து அது சொல்கிறது: “கடந்த கால உணர்வையும் எதிர்கால உணர்வையும் அவர் மனிதருக்குக் கொடுத்திருக்கிறார்.” (புதிய ஆங்கில பைபிள்) எல்லா ஜீவராசிகளும் உயிரைப் பற்றியிருக்கும் மனச்சாய்வைக் கொண்டிருந்தபோதிலும், காலம் என்பதைப் பற்றிய கருத்தைக் கொண்டிருப்பதில்—இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்—மனிதன் விசேஷித்தவனாக இருப்பதாகத் தோன்றுகிறது. மனிதன் கடந்த காலத்தைக் குறித்து தியானிக்கலாம், எதிர்காலத்தை எதிர்நோக்கியிருந்து அதற்காகத் திட்டம்போடலாம், ஆம், அதிலே பங்குகொள்ளும் பலமான ஆசையுடையவனாகவும் இருக்கலாம். மேலும் தன் குறுகிய வாழ்நாட்காலத்தின் தற்காலிகமான இயல்பினிமித்தம் எதிர்காலத்தைப் பற்றிய தன் இலக்குகளை நிறைவேற்ற முடியவில்லையென்றால், அவன் மனச்சோர்வடையவுங்கூடும்.
எனவேதான், மனிதன் மாத்திரம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறான்: நான் ஏன் வாழ்கிறேன்? நான் எங்கே போகிறேன்? உள மருத்துவராகிய விக்டர் ஃபிரான்ங்ல் எழுதினார்: “ஒருவருடைய வாழ்க்கையில் அர்த்தத்தைக் காண பிரயாசப்படுவதே மனிதனில் இருக்கும் பிரதான உந்துவிக்கும் சக்தியாக இருக்கிறது. . . . படுமோசமான நிலைமைகளைத் தப்பிப்பிழைப்பதற்கு, ஒருவருடைய வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கிறது என்ற அறிவைப் போல அந்தளவு திறம்பட்ட விதத்தில் உதவுவது உலகில் எதுவுமே கிடையாது என்று நான் துணிவுடன் சொல்லுவேன்.”
சாலொமோனின் கண்டுபிடிப்பு இயேசுவால் உறுதிசெய்யப்பட்டது
வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதன் தேவை பண்டைய மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டியது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலுள்ள சாலொமோனின் ஆட்சியில் இஸ்ரவேல் ராஜ்யத்தினிடமாக சரித்திர பக்கங்களை நாம் புரட்டலாம். அவரைக் குறித்து சேபாவின் ராஜஸ்திரீ சொன்னாள்: “உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.”—1 இராஜாக்கள் 10:6, 7.
பிரசங்கி என்னும் பைபிள் புத்தகத்தை எழுதுகையில், சாலொமோன் அரசன் வாழ்க்கையின் நோக்கத்தை ஒளிரச் செய்வதற்காகத் தான் நடத்திய ஒரு பரிசோதனையின் விளைவுகளைத் தன்னுடைய வாசகருக்குத் தெரிவித்தார். அது பண்டைய கிழக்கின் குறிப்பிடத்தக்க ஓர் அரசனுக்குப் பொருந்தக்கூடிய வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளில் ஒரு பரிசோதனையாகத் திகழ்ந்தது. 2-ம் அதிகாரம், 1-10 வசனங்களில் இன்று கற்பனை செய்து பார்க்க முடியாத சுகபோக வாழ்க்கையை அவர் வர்ணித்தார். செல்வ வளம், மாம்சப்பிரகாரமான போகங்கள் ஆகியவை சம்பந்தமாக வாழ்க்கை அளித்த எல்லாவற்றையுமே அவர் முயன்று பார்த்தார். அத்தகைய நாட்டங்களின் அர்த்தத்தைக் குறித்து அவருடைய மதிப்பீடு என்னவாக இருந்தது? மட்டுமீறிய தன்னம்பிக்கையுள்ள நபருக்கு அவர் தரும் விடை திடுக்கிடச் செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றையும் அவர் பின்னோக்கிப் பார்க்கையில், அவருடைய மதிப்பீடு பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்தது. அவை பயனற்றவையாக, நேரத்தை வீணடிப்பவையாகவே இருந்தன. அவர் எழுதினார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:11.
மிக சாதகமான சூழ்நிலைமைகளிலும், பூமிக்குரிய சுகபோகங்கள் தற்காலிக மகிழ்ச்சியையே கொண்டு வருகின்றன என்று அவர் முடிவுசெய்தார். வாழ்க்கையின் வேதனையிலிருந்தும் தத்தளிப்பிலிருந்தும் மனித ஞானமுங்கூட மனிதனை விடுவிக்க முடியாது.
ஒரு மனிதன் பொருள் சம்பந்தமான சுதந்தரத்தின்பேரில் மிதமீறி அக்கறை காட்டியதற்குப் பிரதிபலிக்கையில், இயேசு கிறிஸ்துவும் அவ்வாறே முடிவு செய்தவராக, செவிசாய்த்துக் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினிடம் சொன்னார்: “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.”—லூக்கா 12:15.
அனுதின வாழ்க்கையில் மனித குறைபாட்டை முற்றிலும் மேற்கொண்டு மனித நடவடிக்கைகளுக்கு ஞானமான நோக்கத்தை யெகோவா தேவனால் மாத்திரமே அளிக்க முடியும். ஆகவே, கடவுள் இல்லாத வாழ்க்கை வீணானதே. பிரசங்கி 12:13-ல் பதிவு செய்யப்பட்டிருப்பதுபோல, சாலொமோன் விவரித்தார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”
வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது
வாழ்க்கையின் அர்த்தத்தை கடவுள்பேரில் ஆரோக்கியமான பயம் கொண்டிருப்பதிலிருந்து பிரிக்க முடியாது என்ற சாலொமோனின் முடிவு இயேசு கிறிஸ்துவால் திரும்பத்திரும்ப உறுதிசெய்யப்பட்டது. “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே,” என்று கடவுளுடைய வார்த்தையை மேற்கோள் காட்டி இயேசு சொன்னார். (மத்தேயு 4:4; உபாகமம் 8:3) ஆம், ஒருவருடைய வாழ்க்கை நிறைவளிப்பதாக இருப்பதற்கு ஆவிக்குரிய காரியங்கள் புறக்கணிக்கப்படலாகாது. தம்மைக் குறித்து இயேசு மேலும் சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) கீழ்ப்படிதலோடு தம் பரம பிதாவைச் சேவிப்பது சந்தோஷத்திற்கும் மனநிறைவிற்கும் மூலகாரணமாக இருந்தது. அது அவரைப் போஷித்தது. அவருடைய வாழ்க்கைக்கு நோக்கத்தை அளித்தது.
ஆதலால், கடவுளில்லாமல் வாழ்க்கை அதன் முழு நிறைவையும் அடையுமா? இல்லை! அக்கறையூட்டும் விதமாக, ஆர்னல்டு டாய்ன்பீ ஒருமுறை எழுதினார்: “மேன்மையான மதத்தின் உண்மையான உத்தேசம், தன் சாராம்சமாயிருக்கும் ஆவிக்குரிய அறிவுரைகளையும் சத்தியங்களையும் அதனால் எவ்வளவு ஆத்துமாக்களை எட்ட முடியுமோ அவ்வளவு ஆத்துமாக்களைச் சென்றெட்டி, இப்படியாக இந்த ஆத்துமாக்களில் ஒவ்வொன்றும் மனிதனின் மெய்யான நோக்கத்தை நிறைவேற வைப்பதாகும். மனிதனின் மெய்யான நோக்கம் கடவுளை மகிமைப்படுத்தி அவரை என்றும் அனுபவித்து மகிழவேண்டியதே.” மல்கியா தீர்க்கதரிசி கடவுளுடைய நோக்குநிலையை வெளிப்படுத்தினார்: “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.”—மல்கியா 3:18.
[பக்கம் 26-ன் படம்]
“சிந்திப்பவன்,” ரோடன் உருவாக்கியது
[படத்திற்கான நன்றி]
Scala/Art Resource, N.Y.