கனடாவின் “கறைபடுத்தப்பட்ட ரத்த” விசாரணை
கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
கனடாவில் மாசுபடுத்தப்பட்ட ரத்தத்தை ஏற்றிக்கொண்டவர்களில் அதிகமதிகம் பேர் எய்ட்ஸினால் மரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த அதிகரிப்பு? 1980-களில் கனடாவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் “கறைபடுத்தப்பட்ட ரத்த”த்திலிருந்தும் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களிலிருந்தும் எய்ட்ஸ் வைரஸைப் பெற்றனர். வருத்தத்தைத் தரும் இந்த உண்மைகள், கனடாவின் ரத்த விநியோக விசாரணை கமிஷன் (Commission of Inquiry on the Blood System in Canada) ஒன்றை அமைக்கும்படி மத்திய அரசைத் தூண்டிற்று. கனடாவின் ரத்த விநியோக அமைப்பு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை ஒரு பொது விசாரணை தீர்மானிக்கும்.
அந்த நாட்டில் பெரிதும் மதிக்கப்படக்கூடிய மேல்நிலை நீதிபதிகளில் ஒருவர் இந்த விசாரணையின் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்தக் கமிஷன் கனடா முழுவதும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. 1994, பிப்ரவரி 14-ம் தேதி டோரன்டோவில் விசாரணை தொடங்கியது. இறுதியில் தன்னுடைய கண்டுபிடிப்புகளை அறிக்கை செய்யவும் முன்னேற்றங்களுக்கான சிபாரிசுகளைச் செய்யவும் ஒன்டாரியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைச் சேர்ந்த திரு. ஜஸ்டிஸ் ஹோரேஸ் க்ரிவர் நியமிக்கப்பட்டார்.
மாசுபடுத்தப்பட்ட ரத்தத்திலிருந்து பெற்ற எய்ட்ஸுக்குத் தன் மகனைப் பறிகொடுத்ததால் துயரத்தில் ஆழ்ந்த ஒரு தாய், நீதிபதியிடம் இவ்வாறு முறையிட்டாள்: “என் மகனைக் கொன்றுவிட்டார்கள், எனக்குக் கிடைத்த இழப்பீடெல்லாம் இந்த விசாரணை மட்டுமே. தயவுசெய்து இதை முக்கியமானதாகக் கருதுங்கள்.” தீர விசாரணை நடத்தப்பட்டு, அதன்வாயிலாக, ரத்தமேற்றுதல்களோடு சம்பந்தப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைக் காண அவள் அதிக ஆவலுள்ளவளாக இருந்தாள். கறைபடுத்தப்பட்ட ரத்தத்தினால் ஏற்பட்ட மரணத்தில் தன் மகனைப் பறிகொடுத்த தாய் இவள் மட்டுமல்ல. கனடாவைச் சேர்ந்த அநேகரின் உயிரை மாய்த்த இந்தத் துயரத்தைப் பற்றிய நெஞ்சத்தை உருக்கும் சாட்சியங்களை கமிஷன் கேட்டது.
டோரன்டோவின் க்ளோப் அண்ட் மெய்ல் தனது தலைப்புச் செய்திகளில் கீழ்க்கண்டவற்றை அறிக்கை செய்தது: “ரத்த பயங்கரத்திற்கு பாதிக்கப்பட்டோர் சொல்கையில் கோபமும் கண்ணீரும்”; “உறையவைக்கும் சாட்சியங்களைக் கேட்கிறது ரத்த விசாரணை”; “மருத்துவ டாக்டர்களின் அறியாமை அறிக்கையிடப்படுகிறது”; மற்றும் “எய்ட்ஸ் ஆபத்து குறைவானதென அதிகாரிகள் மதிப்பிட்டதாக ரத்த விசாரணை கூறிற்று.”
ரத்தத்திலிருந்து HIV வைரஸைப் பெற்று ஆபத்திற்குள்ளானவர்கள், ஆபத்துக்களைப்பற்றி தாங்கள் எச்சரிக்கப்படவில்லை என்று கூறினார்கள். தாங்கள் எய்ட்ஸ் வைரஸ் தொற்றப்பெற்றிருப்பதாக அறிந்ததற்கு முன்புவரை தங்களுக்கு ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதை பலர் அறியாமலேயே இருந்தனர்.
மூன்று வயதாயிருந்தபோது திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட சமயத்தில் ஏற்றப்பட்ட ரத்தத்திலிருந்து எய்ட்ஸைப் பெற்றுக்கொண்டான் பருவ வயது பையன் ஒருவன். லேசான ரத்த ஒழுக்கு நோயுள்ள, HIV சோதனையில் பாஸிடிவ் என அறிக்கை செய்யப்பட்ட ஒருவன் 1984-க்கு முன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகித்து வந்தான். இதனால் வரும் ஆபத்துக்களை அறிந்திருந்தானேயானல், தன்னுடைய வாழ்க்கை பாணியில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்திருப்பான். 1985-ல் ஒரு தாய்க்கு HIV-யால் மாசுபடுத்தப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது. இப்போது அவளும், அவளுடைய கணவனும், அவர்களுடைய நான்கு வயது மகளும் அவ்வைரஸ் தொற்றப்பெற்றுள்ளனர்.
ஓரிரு யூனிட் மட்டுமே பெற்றுக்கொண்ட ஆட்கள் தொற்றப்பட்டதைக் குறித்து, இருதயத்தை நொறுக்கும் கதைகளும் இருந்திருக்கின்றன. “தன்னுடைய கன்னத்திற்கு ஏதோ கொஞ்சம் மெருகேற்றுவதற்காக,” என்று தன்னுடைய கணவனுக்கு HIV-யைத் தொற்றவைத்த ரத்தமேற்றுதலைப்பற்றி மனம் கசந்து சொன்னாள் ஒரு பெண். இப்போது அவளுக்கும் இந்த வைரஸ் இருக்கிறது.
அதிக சாட்சிகள் சாட்சியம் சொல்லச்சொல்ல, பேரளவில் இருக்கும் மற்றொரு துயரத்திற்குக் கவனம் சென்றிருக்கிறது—ரத்தத்தினால் ஏற்படும் ஈரல் அழற்சி. க்ளோப் அண்ட் மெய்ல் சொல்லுகிறபடி “கனடாவைச் சேர்ந்தவர்களில் வருடத்திற்கு 1,000 பேர் வரையாக ஈரல் அழற்சி C-யின் காரணமாக மரிக்கின்றனர்,” என்பதாக கணக்கிடப்படுகிறது. “அவர்களில் பாதிப்பேருக்குமேல் ரத்தமேற்றுதலின்போது இந்த நோய் பரவியிருந்திருக்கலாம்,” என்று இந்தச் செய்தித்தாள் மேலுமாக கூறுகிறது.
1961-ல் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது ஒருமுறை ரத்தம் ஏற்றிக்கொண்டதிலிருந்து தனக்கு எப்படி ஈரல் அழற்சி C வந்தது என்பதைப்பற்றி ஒருவர் சொன்னார். அவருடைய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் ஒழுங்காக ரத்த தானம் செய்துகொண்டிருந்தார். 1993-ல் தன்னுடைய ஈரலில் கரணை நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார். “எனக்கு இந்த நோய் இருக்கிறதென்று தெரியாமலிருந்த இவ்வளவு வருடகாலமாக நான் தானம் செய்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்ட மக்களுக்கு என்ன ஆயிருக்கும்?” என்று அந்த விசாரணை கமிஷனைக் கேட்கிறார் அவர்.
கறைபட்ட ரத்தத்தினால் விளைவடைந்த HIV பீடிப்பினாலும் மற்ற துயரங்களாலும் வாழ்க்கை நொறுங்கிப்போன, கனடாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்களின் துயரத்தை ஜஸ்டிஸ் க்ரிவர் உன்னிப்பாக கவனித்தார். ரத்த விநியோகத்தை நோய்க் கடத்தப்படும் அபாயத்திலிருந்தும், மற்ற அபாயங்களிலிருந்தும் முற்றிலும் பாதுகாப்பானதாக்க முடியாது என மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். ரத்தம் சம்பந்தமாக ஏற்படும் பேராபத்துக்களையும் துர்ப்பிரயோகத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். “ஒரு மருத்துவராக நீங்கள் ரத்தம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், நீங்கள் நோயைக் கண்டுபிடிப்பதிலோ அல்லது சிகிச்சை அளிப்பதிலோ தவறியிருக்கிறீர்கள்,” என்று சொல்வதன்மூலம் தான் பிரச்சினைக்குக் கவனத்தைத் திருப்புவதாக, மண்டல ரத்தமேற்றுதல் சேவையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜே. ப்ரையன் மக்ஷஃப்ரி உறுதியாகக் கூறினார்.
கனடாவில் வருடத்திற்கு 25 கோடி டாலர் செலவுசெய்யும் ரத்த விநியோக அமைப்பின் “பெரும் பங்குதாரர்கள்” என்று அரசாங்க கமிட்டியால் அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் உள்ள அரசியல் சூழ்ச்சி, பகைமை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்துவருகின்றன. செஞ்சிலுவைச் சங்கமும் அரசாங்க ஏஜன்ஸிகளும் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன. சிக்கலான அந்தத் தேசிய ரத்த விநியோக அமைப்புக்கு யாருமே பொறுப்பில்லாததுபோல் தோன்றுகிறது.
மகிழ்ச்சிக்குரிய முரண்பாடு
நெஞ்சத்தை உருக்கும் சாட்சியங்களுக்கு நேர்மாறாக, மே 25, 1994-ல் சஸ்காட்செவானின் ரெஜினாவில், ஜஸ்டிஸ் க்ரிவருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்றும் அளிக்கப்பட்டது. தீவிர ரத்த ஒழுக்கு நோய் இருக்கிற வில்லியம் ஜே. ஹால் என்ற 75 வயதுள்ள ஒரு மனிதர், ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை உபயோகித்து தனது நிலைமையை எப்படி வெற்றிகரமாக சமாளிக்கிறார் என்பதைச் சொன்னார். ஆகவே அவருக்கு எய்ட்ஸ் வரவில்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, தன்னுடைய மத சம்பந்தமான மனச்சாட்சியின் காரணமாக, திரு. ஹால் ரத்தத்தையும் ரத்தக் காரணிகளையும் தவிர்த்தார்.—பக்கம் 22-ல் உள்ள பெட்டியைக் காண்க.
இன்னும் அதிகம் வரவிருக்கிறது. இந்த விசாரணையை அரசாங்கம் 1995 இறுதிவரை நீட்டித்துள்ளது. யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் ஆயிரக்கணக்கான பெரியவர்களுக்கும் சிறுபிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் பலனளிக்கக்கூடிய ரத்தமில்லா சிகிச்சை முறையை ஆராய்ந்து பார்க்க இந்தக் கமிஷனுக்குப் போதுமான சமயம் கிடைக்கக்கூடும். இந்த மாற்று சிகிச்சை முறைகள் மற்றவர்களுக்கும் உகந்ததாகவே இருக்கின்றன.
அத்தகைய மாற்று சிகிச்சை முறையை அளிக்கும் டாக்டர்கள், கமிஷனோடு பகிர்ந்துகொள்ளக்கூடிய நிபுணத்துவம் படைத்த அத்தாட்சிகளை வைத்திருக்கின்றனர். மேக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மார்க் போய்ட் 1993-ல் தி மெடிக்கல் போஸ்ட் செய்தித்தாளிடம் சொன்னதாவது: “நாம் யெகோவாவின் சாட்சிகளுக்கு உண்மையிலேயே ஒருவகையில் நன்றிக்கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் ரத்தமேற்றாமல் எவ்வளவு வெற்றிகரமாக நம்மால் சமாளிக்கமுடியும் என்பதை அவர்கள் காட்டியிருக்கிறார்கள்.” ஐ.மா. ஜனாதிபதியின் சார்பாக அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் 1988-ல் இவ்வாறு குறிப்பிட்டது: “முடிந்தவரை மற்றவர்களுடைய ரத்தத்தை ஒரு நோயாளிக்கு ஏற்றுவதைத் தவிர்ப்பதே ரத்த விநியோகம் சம்பந்தப்பட்ட நிச்சயமான தடுப்பு நடவடிக்கையாக இருக்கிறது.” ‘ரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்ற கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்பட்டு நடப்பதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் கறைபடுத்தப்பட்ட ரத்தத்திற்கு எதிராகவும் ரத்தமேற்றுதலின் மற்ற ஆபத்துக்களுக்கு எதிராகவும் அந்த “நிச்சயமான தடுப்பு நடவடிக்கை” உள்ளவர்களாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 15:20, 29.
அறிவு தேவை
விசனகரமாக, கறைபடுத்தப்பட்ட ரத்தத்தை ஏற்றிக்கொண்டு பலியானவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய துயரங்களைத் தவிர்த்திருக்கக்கூடிய மாற்று சிகிச்சையைப் பற்றி தெரிவிக்கப்படாதவர்களாக இருந்தனர். விவரமறிந்து சம்மதம் தெரிவிக்கும்—ரத்தத்தின் ஆபத்துக்களை ஏற்றுக்கொள்வதா அல்லது பாதுகாப்பான மாற்று சிகிச்சைகளைப் பயன்படுத்துவதா என்ற—தெரிவு நோயாளிகளுக்கு அளிக்கப்படாதிருந்தது.
ரத்தமேற்றுதலுக்குப் பதிலாகவுள்ள மாற்று சிகிச்சைகளைப்பற்றி டாக்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவூட்டவேண்டும் என்பதை கமிஷனுக்கு அளிக்கப்பட்ட அத்தாட்சிகள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய உயர்மட்ட அரசாங்க விசாரணை கனடாவின்மீது பெரும் விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். ஜஸ்டிஸ் க்ரிவருடைய சிபாரிசுகள், ரத்தமேற்றும் முறைகள்மீது கனடா நாட்டு மருத்துவத் துறையினர் கொண்டிருக்கும் மனப்போக்குகளிலும் கல்வியிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்க முடியும். விசாரணை கமிஷனின் கண்டுபிடிப்புகள் ரத்தமேற்றுதலோடு வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க விரும்பும் அனைவருடைய அக்கறையையும் தூண்டுவதாக இருக்கும்.
[பக்கம் 22-ன் பெட்டி]
ரத்த ஒழுக்கு நோய் ரத்தமின்றி சமாளிக்கப்படுகிறது
சஸ்காட்செவானின் நிப்பவினைச் சேர்ந்த, வில்லியம் ஜே. ஹால், எப்படி மற்றும் ஏன் தன்னுடைய தீவிர ரத்த ஒழுக்கு நோயை ரத்தப் பொருட்களின்றியே சமாளிக்கிறார் என்பதை கமிஷனுக்குச் சொன்னார். அவர் சொன்ன சாட்சியத்தின் நீதிமன்றத்தினுடைய அதிகாரப்பூர்வமான பதிவுகளிலிருந்து வரும் சுருக்கம் பின்வருமாறு:
◻ “ஒருமுறை என்னுடைய பாதத்திலிருந்து இடுப்புவரை வீங்கியபோது எனக்கு ரத்த ஒழுக்கு நோய் இருக்கிறது என்று என்னுடைய பெற்றோர்களுக்குப் புரிந்துவிட்டது. டாக்டர்கள் அது ரத்த ஒழுக்கு நோய் என்பதாக கண்டுபிடித்தனர். . . . எனக்கு அப்போது ஒரு வயது என்று நினைக்கிறேன்.”
◻ “ரத்தத்தையோ எந்தவிதமான ரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையோ நான் ஏற்றிக்கொள்ளவில்லை. . . . ரத்தத்தை ஏற்றிக்கொள்வது என் மத நம்பிக்கைக்கு எதிரானது, ஏனென்றால் அது பரிசுத்தமானது என்று நம்புகிறேன்.”
◻ ரத்த ஒழுக்கு நோய் இருந்த தனது சகோதரனைப்பற்றி அவர் சொன்னார்: “நான் வைத்திருந்த அதே விசுவாசம் அவருக்கு இல்லாதிருந்தது. ஆகவே அவர் ரத்தமேற்றிக்கொண்டு ஈரல் அழற்சியினால் இறந்துபோனார்.”
◻ 1962-ல் முன்சிறுகுடலில் இருந்த புண்ணுக்கு: “நான் ரத்தம் ஏற்றிக்கொள்ளவில்லையென்றால் மரித்துவிடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டார். . . . மருத்துவமனையில் [ரத்தமேயில்லாமல்] எனக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டது.” ரத்த ஒழுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.
◻ 1971-ல் முறிந்துபோன இடுப்பைச் சரியாக்க: “ரத்தமேயில்லாத கவனமாக மட்டும் செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையாகவே அது இருந்தது. . . . அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது.” அச்சமயத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவருடைய ரத்தத்தில் VIII-ம் காரணி (உறைவிக்கும் காரணி) இல்லாதிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
◻ அவர் எவ்வாறு சமாளிக்கிறார்: “கவனமான . . . வாழ்க்கை பாணி.” உணவுக் கட்டுப்பாடு, ஓய்வு, உடற்பயிற்சி போன்றவற்றையும், வீக்கங்கள், காயங்கள், ரத்தக் கசிவுகள் ஆகியவற்றிற்கு கவனமாக சிகிச்சை அளிப்பதையும் உட்படுத்திக்கொண்டார்.
◻ “மகிழ்ச்சியான ஓய்வு நேரங்களைக் கழிப்பது, நம்முடைய கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நல்ல காரியங்களைப்பற்றி தியானம் செய்வது, அதனால் நம்முடைய கவலைகளை மறப்பது ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது அதிக உதவியளிப்பதாக தோன்றுகிறது.”
வில்லியம் ஹாலுக்கு இப்போது வயது 76, அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார்.
[பக்கம் 20-ன் படம்]
கமிஷனின் தலைவர், ஜஸ்டிஸ் ஹோரேஸ் க்ரிவர்
[படத்திற்கான நன்றி]
CANPRESS PHOTO SERVICE (RYAN REMIROZ)
[பக்கம் 21-ன் படம்]
விசாரணை கமிஷனுக்கு முன் சாட்சியம் சொல்ல வில்லியம் ஹாலும் மார்கரட் ஹாலும் 370 கிலோமீட்டர் தூரம் காரோட்டிக்கொண்டு வந்தனர்