ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆயத்தமாயிருங்கள்
“ஆயத்தமாயிருங்கள்,” என்று இயேசு வற்புறுத்தினார். (லூக்கா 12:40) நாம் அப்படி ஆயத்தமாக இருந்தோமானால், கிறிஸ்து “மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்,” வரும்போது, “உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்,” என்ற அவருடைய கட்டளைக்கு சந்தோஷத்தோடே நம்மால் கீழ்ப்படிய முடியும்.—லூக்கா 21:27, 28.
என்ன வகையான மீட்பு? ஏன், நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் அனுபவித்து மகிழ்ந்தார்களே அதைப்போன்றதுதான்—ஆம், இந்த உலகத்தின் முடிவிலிருந்து மீட்பு! ‘உலகம் ஒழிந்துபோம்,’ என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார், “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
யெகோவாவின் புதிய உலகத்தில், ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய பிரஜைகள், நித்திய ஜீவனை அனுபவத்து மகிழ்வார்கள். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது. (சங்கீதம் 37:29) கடவுள் தம்முடைய ஜனத்திற்கு என்னே ஒரு அற்புதகரமான எதிர்காலத்தை வாக்களிக்கிறார்! ‘தேவன்தாமே அவர்களோடேகூட இருப்பார்,’ என்று அவருடைய வார்த்தை சொல்லுகிறது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” இது உண்மையான தீர்க்கதரிசனம்!—வெளிப்படுத்துதல் 21:3, 4.
எனினும், இந்த எதிர்காலத்தை அனுபவித்து மகிழ நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அறிவைப் பெறுதல் அத்தியாவசியமான முதல் காரியமாக இருக்கிறது. பைபிள் விவரிப்பதாவது: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3.
‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலை நாம் விட்டுவிடாமல், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறோமோ அவ்வளவாய் புத்திசொல்ல வேண்டும்,’ என்று உந்துவிக்கிறார் அந்த அப்போஸ்தலன். இதன்படி இந்த அறிவை நாடும் மற்றவர்களோடு நீங்கள் தவறாமல் கூடிவரவேண்டிய தேவையும் இருக்கிறது. (எபிரெயர் 10:24, 25) மெய்யாகவே, கடவுளுடைய புதிய உலகத்திற்குள் கொண்டுசெல்லும் மீட்பு நாள் எப்பொழுதும் இருப்பதைவிட சமீபித்து வருவதை யெகோவாவின் ஜனங்கள் காண்கின்றனர். ஆகவே, ஒன்றாக கூடிவருவதற்கு அவர்கள் நன்கு அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
பெரிய ஸ்டேடியம் ஒன்றில் அவ்வாறு கூடிவந்த ஒரு கூட்டத்தைப்பற்றி சொல்கையில், லண்டன் ஸண்டே டெலக்ராஃப் இவ்வாறு அறிக்கையிட்டது: “‘முடிவு சமீபமாயிருக்கிறது’ என்று அறிவிப்பவர்களோடு வழக்கமாக தொடர்புபடுத்தப்படும் சோர்ந்த மனநிலை யாரிடமும் காணப்படவில்லை. முடிவு சமீபமாக இருக்கலாம். இதற்கிடையில் அவர்களில் ஒவ்வொருவரும் சாந்தமான, சரியான, தெய்வபயமுள்ள ஆனால் சந்தோஷமான ரீதியில் வாழ்க்கையை அனுபவிப்பதாகத் தோன்றுகிறது.” அந்தச் செய்தித்தாள் தொடர்ந்து கூறியதாவது, “தற்போதைய உலக ஒழுங்குமுறை உண்மையிலேயே அழிந்துபோகும் தறுவாயில் இருக்கிறதென்றால், புதிய ஒழுங்குமுறை ஒன்றை ஒருங்கமைப்பதற்கு ட்விக்கன்ஹாமில் இருக்கும் சாட்சிகள் நன்கு தயாராக இருப்பதாக தோன்றுகிறது.”
ஆயத்தமாக இருப்பதென்றால், சுறுசுறுப்பாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. ‘நீதியைப் பிரசங்கித்தவராக,’ நோவா ஜலப்பிரளயத்திற்கு முன்பு இருந்த நாட்களில் செய்ததைப்போன்ற ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்க வேண்டும். (2 பேதுரு 2:5) ஆயத்தமாயிருப்பது, “பரிசுத்த நடக்கையும் தேவபக்திக்குரிய செயல்களும் உள்ளவர்களாயிரு”ப்பதை அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் ஜனங்களோடு சேர்ந்து, “கடவுளுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திரு”க்கும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள், ஆம், உத்வேகப்படுத்தப்படுகிறீர்கள்.—2 பேதுரு 3:11, 12, NW.