பணம் மரத்திலேயே இருக்குமிடம்
பணம் மரத்தில் காய்க்கிறது எனவும் உங்களிடம் அப்படிப்பட்ட மரம் ஒன்று இருக்கிறது எனவும் வைத்துக்கொள்வோம். உங்களுக்குப் பக்கத்திலுள்ள வீடுகளில் வாழும் அநேகர் தினந்தோறும் கடந்துசெல்லும் பாதை ஓரமாக உங்கள் மரம் நடப்பட்டிருப்பதாக இப்போது கற்பனை செய்துகொள்ளுங்கள். எவ்வளவு நேரத்திற்கு அந்தப் பணம் உங்கள் மரத்திலேயே இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
உங்களுக்குப் பக்கத்திலுள்ள வீடுகளில் வாழ்பவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால், உங்கள் பணம் காய்க்கும் மரம் பத்திரமாக இருக்கும். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில் எல்லா விஷயங்களிலும் நேர்மையுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படி பைபிள் கொடுக்கும் கட்டளையை யெகோவாவின் சாட்சிகள் கடைப்பிடிக்கின்றனர். (எபிரெயர் 13:18) சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இதை விளக்குகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவில், ஐந்து நைரா நோட்டு ஒன்று அருகிலிருந்த உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலக கட்டிடங்களிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் சாலையில் கிடந்தது. அதைக் கண்டெடுத்தவர், அதை இழந்தவர் தேடிக்கொண்டு திரும்ப வருவார் என எண்ணி அருகிலிருந்த தென்னைமரத்தின் ஓலை ஒன்றில் அதைக் கட்டிவைத்தார்.
அவ்வழியாக தினந்தோறும் கடந்துசென்ற டஜன்கணக்கான யெகோவாவின் சாட்சிகளின் கண்களில் தெளிவாக தென்படும்படி அந்தப் பணம் இருந்தபோதிலும், ஒருவரும் அதைத் தங்களுடையதென எடுத்துக்கொள்ளவில்லை. அநேக நாட்களுக்குப் பின் அது அங்கிருந்து எடுக்கப்பட்டு சொஸைட்டியின் நன்கொடை பெட்டியில் போடப்பட்டது.