பேரழிவு தாக்கும்போது
இந்த 20-ம் நூற்றாண்டு, மிகுந்த பேரழிவுகளால் குறிக்கப்பட்டிருக்கிறது; அவற்றில் பெரும்பாலானவை மனிதனால் ஏற்படுத்தப்பட்டவையாக இருந்திருக்கின்றன. என்றாலும், சில அவ்வாறு இல்லை. நம் நாட்களைப்பற்றி முன்னறிவிப்பவராய் இயேசு கிறிஸ்து சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” (மத்தேயு 24:7) போர்களுக்கும் உணவு பற்றாக்குறைகளுக்கும் மனிதனே பொறுப்பாளி என்பது உண்மைதான்; ஆனால் பூமியதிர்ச்சிகளுக்கு அவன் பொறுப்பாளி அல்லன். அதேவிதமாக, மனிதனுடைய செயல்களின் காரணமாக பேரழிவை உண்டாக்கும் சில வெள்ளப்பெருக்குகள் ஏற்படுத்தப்பட்டாலும், பூமியதிர்ச்சிகளுக்காக அவனைக் குறைசொல்ல முடியாது. சூறாவளிகளும் எரிமலை வெடிப்புகளும்கூட மனிதனின் குறை காரணமாக ஏற்படுவதில்லை.
காரணம் என்னவாக இருந்தாலும், இயற்கை பேரழிவுகள் மனிதனின் அற்பமான நிலையை, மலைப்பூட்டும் இயற்கை சக்திகளுக்கு எதிரில் அவனுடைய சக்தியற்ற நிலையைக் காண்பிக்கின்றன. நம் வீடாகிய இந்தப் பூமி, அவ்வளவு பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால் அது ஒரு பூமியதிர்ச்சியில் உலுக்கப்படும்போது, வெள்ளப்பெருக்குகளால் மூழ்கடிக்கப்படும்போது, அல்லது வெடி ஒன்று தாக்கும் வேகத்தில் பலத்த காற்றுகளால் கடுமையாக தாக்கப்படும்போது, அந்தப் பாதுகாப்புணர்ச்சி மறைந்துவிடுகிறது.
இயற்கை பேரழிவுகள், அதிகப்படியான சேதத்தையும் மிகுந்த உயிரிழப்புகளையும் இந்த 20-ம் நூற்றாண்டில் உண்டுபண்ணியிருக்கின்றன. இதைத் தவிர்த்திருக்க முடியுமா? அழிவுக்குரிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு ஏதேனும் செய்யப்பட முடியுமா? தனிநபர்களாக, நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு நாம் என்ன செய்யலாம்? பேரழிவு தாக்கும்போது நாம் முற்றிலும் உதவியற்றவர்களாக இருக்கிறோமா? மனிதகுலம் எப்போதுமே இவ்விதமாகப் பலியாக்கப்படுமா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைக் கலந்தாலோசிக்கும்.