பாலின தொந்தரவு—நான் எவ்விதமாக என்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?
சுலபமாக புன்னகை புரிந்துவிடும் அனிதா 16 வயதுள்ள குதூகலமான ஒரு பெண். ஆனால் பள்ளியில் நடந்த சமீப கால சம்பவங்களை விவரிக்கும்போது அவள் முகத்தைச் சுளிக்கிறாள். “மிகவும் பிரபலமான ஒரு பையன் நடைகூடத்தில் ஒரு மூலையில் என்னை மடக்கி அசிங்கமாக என்னைத் தொட ஆரம்பித்தான்,” என்று அவள் நினைவுபடுத்தி சொல்கிறாள். “மற்ற பல பெண்கள் அவனுடைய செயல்களை ஆட்சேபிக்காமல் இருந்துவிட்டதால் அவன் தன் முயற்சியில் வெற்றி அடைந்தான்; அவனுடைய கவனத்தினால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டனர், ஆனால் நான் அவ்விதமாக பெருமைப்படவில்லை! என்னைத் தொடுவதை நிறுத்திவிடும்படியாக நான் மரியாதையுடன் கேட்டுக்கொண்டது பலனளிக்கவில்லை. நான் உண்மையாக அப்படிச் சொன்னதாக அவன் நினைக்கவில்லை.”
அனிதாவின் இரண்டக நிலை நிச்சயமாகவே அசாதாரணமான ஒன்றல்ல. பாலின தொந்தரவு பைபிள் காலங்களில் சாதாரணமாய் இருந்தது. (ரூத் 2:8, 9, 15-ஐ ஒப்பிடுக.) மேலும் இன்று அது அச்சந்தரும் அளவில் எங்கும் இருக்கிறது. “வேலை செய்யுமிடத்தில் சில ஆண்கள் என்னுடைய உடல்வாகைப் பற்றி மட்டரகமாக விமர்சித்திருக்கின்றனர்,” என்பதாக பருவ வயது பெண் ஒருத்தி சொல்கிறாள். ஆனால் அநேக சமயங்களில் தொந்தரவுகள் வெறுமனே பேச்சோடு நின்றுவிடுவதில்லை. “சிலர் என்னைத் தொட அல்லது பற்றிக்கொள்ள முயற்சிசெய்திருக்கிறார்கள்,” என்பதாக அவள் மேலுமாகச் சொல்கிறாள். ரனே என்ற பெயருள்ள ஒரு பருவ வயது பெண் விழித்தெழு!-விடம் இவ்வாறு சொன்னாள்: “வேலைசெய்யுமிடத்தில் தொந்தரவு அத்தனை மோசமாக ஆனதால் நான் வேலையை விட்டு நின்றுவிடும்படி ஆனது.”
8 முதல் 11 வரையான வகுப்புகளிலுள்ள 81 சதவீத மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது பாலின தொந்தரவுக்கு உட்பட்டிருப்பதை சமீப காலத்திய சுற்றாய்வு அறிவித்தது. “அவர்களில் 65 சதவீத பெண்களும் 42 சதவீத பையன்களும் தாங்கள் தொடப்பட்டு, பற்றிக்கொள்ளப்பட்டு அல்லது பாலின உணர்ச்சியைத் தூண்டும்விதமாக கிள்ளப்பட்டிருப்பதாய் சொன்னதாக,” ஐ.மா. செய்தியும் உலக அறிக்கையும் (ஆங்கிலம்) அறிவிப்பு செய்கிறது. ஆம், பையன்களும் பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு பருவ வயது பையனின் பெற்றோர் நினைவுகூரும் வண்ணமாகவே: “என்னுடைய மகன் படிக்கும் பள்ளியில் பெண்கள் அத்தனை துணிச்சலுள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவனுக்கு சுமார் 12 வயதாயிருந்த சமயத்திலிருந்தே இடைவிடாத தொலைபேசி அழைப்புகளை, தனிமையில் சந்திக்க அழைப்புகளை, மறைமுகமான நடத்தைகெட்ட பேச்சுகள் போன்றவற்றை நாங்கள் கொண்டிருந்திருக்கிறோம்.”
எரிச்சலூட்டும் இத்தகைய நடத்தையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதிருப்பது சுலபமாகும். ஒரு இளம் பெண் இவ்வாறு குறிப்பிட்டாள்: “சில சமயங்களில் அது தமாஷான முறையில் செய்யப்படுகிறது.” ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அது தமாஷ் அல்ல! பாலின தொந்தரவுகள் அநேகமாக ஒழுக்கங்கெட்ட நடத்தைக்குள் கவர்ந்திழுப்பதற்கான முயற்சி என்பதை அவர்கள் அறிவார்கள், இது யெகோவா தேவன் கண்டனம் செய்யும் ஒன்று. (1 கொரிந்தியர் 6:9, 10) மேலுமாக, கடவுளுடைய வார்த்தை இளம் பெண்கள் “எல்லாக் கற்புடன்” நடத்தப்படவேண்டும் என்று கட்டளையிடுகிறது. (1 தீமோத்தேயு 5:2) அது ‘ஆபாசமுள்ள பரியாசத்தைக்கூட’ தடைசெய்கிறது. (எபேசியர் 5:3, 4, NW) ஆகவே கிறிஸ்தவ வாலிபர்கள் பாலின தொந்தரவுகளைச் சகித்துக்கொள்ளக்கூடாது. கேள்வியானது, அதனால் தாக்கப்படும் ஒரு நபராயிருப்பதிலிருந்து நீங்கள் எவ்வாறு உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்? வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகளைப்பற்றி பேசலாம்.
தொந்தரவை விலக்கிடுவதற்கு வழிகள்
கிறிஸ்தவ நடத்தைக்கு ஒரு நற்பெயரை வளர்த்துக்கொள்ளுங்கள். ‘உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது,’ என்பதாக இயேசு அறிவுரை கூறினார். (மத்தேயு 5:16) நீங்கள் நம்பும் காரியங்களைப் பள்ளி சகாக்களோடும் உடன் வேலைசெய்பவர்களோடும் பகிர்ந்துகொள்வது இதைச் செய்வதற்கு ஒரு வழியாகும். அசைக்கமுடியாத நம்பிக்கைகளையும் உயர்வான ஒழுக்க தராதரங்களையும் கொண்ட ஒரு நபராக நீங்கள் அறியப்பட்டிருக்கையில், தொந்தரவுக்கு இலக்காகும் வாய்ப்பு குறைவாகும்.
நீங்கள் எவ்வாறு உடுத்திக்கொண்டும் சிகை அலங்காரம் செய்துகொண்டுமிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். பைபிள் காலங்களில் ஒருசில வகையான உடைகள் ஒரு பெண்ணை ஒழுக்கங்கெட்டவளாக அடையாளங்காட்டியது. (நீதிமொழிகள் 7:10-ஐ ஒப்பிடுக.) அதேவிதமாகவே இன்று பாலின ஆசைகளைத் தூண்டும் பாணிகள் உங்கள் சகாக்களிடம் உங்களைப் பிரபலமானவராக ஆக்கலாம், ஆனால் தவறான அபிப்பிராயத்தை அவை கொடுக்கக்கூடும். எதிர்பாலாரின் தவறான வகையான கவனத்தை ஈர்த்துக்கொண்டிருப்பதாக உங்களையே நீங்கள் காணலாம். ஒரு பெண் தான் உண்மையில் இருப்பதைவிட வயதில் அதிகமானவளாக தன்னைத் தோன்றச் செய்யும் ஒரு வகையில் ஒப்பனை செய்துகொண்டால் அதேவிதமான ஒரு பிரச்சினை எழலாம். ‘தகுதியான வஸ்திரத்தாலும் நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் அலங்கரிக்க வேண்டும்,’ என்பதே பைபிளின் ஆலோசனை.—1 தீமோத்தேயு 2:9.
உங்கள் கூட்டாளிகளை கவனமாக தெரிவுசெய்யுங்கள். (நீதிமொழிகள் 13:20) எப்படியிருந்தாலும், மக்கள் உங்கள் கூட்டாளிகளை வைத்தே உங்களை எடைபோடுவார்கள். உங்கள் கூட்டாளிகள் எதிர்பாலாரைப் பற்றி பேசுவதில் அதிகமான நேரத்தைச் செலவழிப்பவர்களாக அறியப்பட்டிருந்தால், மக்கள் உங்களைப் பற்றியும்கூட அதே அபிப்பிராயத்தைக் கொள்வர்.—ஆதியாகமம் 34:1, 2-ஐ ஒப்பிடுக.
விளையாட்டுக் காதலைத் தவிர்த்திடுங்கள். சிநேகமுள்ளவராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை என்பது உண்மையே. என்றபோதிலும் உற்றுப் பார்ப்பதும் தொடுவதும் எதிர்பாலாரை எளிதில் தப்பர்த்தம் கொள்ளும்படியாகச் செய்யலாம். சம்பாஷிப்பதற்கு ஒருவரைத் தொடுவது அவசியமில்லை. பொன்விதியைக் கடைப்பிடித்து, நீங்கள் நடத்தப்பட விரும்பும் விதமாக எதிர்பாலாரை நடத்துங்கள்—கற்புடனும் மரியாதையுடனும். (மத்தேயு 7:12) வெறுமனே ஒரு விளையாட்டிற்காக எதிர்பாலாரின் கவனத்தைக் கவர முயற்சிசெய்வதைத் தவிர்த்திடுங்கள். அவ்விதமாகச் செய்வது தயவற்றதாகவும் தவறாக வழிநடத்துவதாகவும் இருப்பது மட்டுமல்லாமல், ஆபத்தானதாகவும் இருக்கக்கூடும். “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?” என்பதாக பைபிள் நீதிமொழிகள் 6:27-ல் கேட்கிறது.
நீங்கள் தொந்தரவு செய்யப்பட்டால்
நிச்சயமாகவே, உங்கள் உடை, சிகை அலங்காரம் அல்லது நடத்தையில் சில மாற்றங்கள் பொருத்தமானதாயிருந்தாலும்கூட மற்றவர்களுக்கு உங்கள்மீது கை வைப்பதற்கு அல்லது உங்களிடம் மறைமுகமாக ஒழுக்கங்கெட்ட பேச்சைப் பேசுவதற்கு உரிமை இல்லை. தோற்றத்திலும் நடத்தையிலும் நல்ல முன்மாதிரிகளாக இருந்திருக்கும் சில இளைஞரும்கூட தொந்தரவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உங்களுக்குச் சம்பவித்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? இங்கே சில ஆலோசனைகள்.
உறுதியாக மறுத்திடுங்கள். பாலின அணுகுதல்களை உண்மையில் விரும்பினாலும், அதற்கு முடியாது என்பதாக சில ஆட்கள் சொல்வது நன்கு அறியப்பட்டிருக்கிறது. ஆகவே அரை மனதாக முடியாது என்பதாக சொல்லப்படுவது உண்மையில் சரி என்பதையே அர்த்தப்படுத்துகிறது—அல்லது குறைந்தபட்சம் நீங்கள் வேறுவிதமாக அவர்களை நம்ப வைக்கும் வரையில் அங்கே ஒரு வாய்ப்பிருப்பதாக உங்களைத் தாக்க வருபவர் ஊகித்துக்கொள்ளக்கூடும். நீங்கள் இல்லை என்று சொல்வது இல்லை என்றே புரியும்படி செய்யுங்கள் என்ற இயேசுவின் ஆலோசனை இந்த விஷயத்தில் மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாய் இருக்கிறது. (மத்தேயு 5:37, NW) இளிக்காதீர்கள் அல்லது விளையாட்டுத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள். உங்களுடைய சைகைகள், குரல் அல்லது முக பாவனை உங்களுடைய வார்த்தைகளுக்கு முரணாக இருக்க அனுமதியாதீர்கள்.
சப்தம் போட்டு பிறர் கவனத்தைத் திருப்பப் பாருங்கள். பாலினத் தாக்குதல் செய்யும் ஆட்கள் அநேகமாக அவர்களுக்கு பலியாகிறவர்கள் எதிர்க்க மனமில்லாதிருப்பதையே நம்பியிருக்கிறார்கள். ஆனால் பைபிள் காலங்களில், இஸ்ரவேல பெண்கள் பாலின தாக்குதலை எதிர்ப்பதற்கு உரிமை, ஆம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தனர். (உபாகமம் 22:23, 24) அதேவிதமாகவே இன்று, தகாதவிதமாய் தொடப்படுவது அல்லது தழுவப்படுவது வினைமையான ஒரு பிரச்சினை இல்லை என்பதாக ஒரு கிறிஸ்தவர் நினைக்கக்கூடாது. அது தவறானதாக, ஒரு நபராகவும் ஒரு கிறிஸ்தவராகவும் உங்கள் கண்ணியத்தைத் தாக்குவதாக உள்ளது. அதைத் தடுக்காமல் சும்மாயிருக்க வேண்டியதில்லை! ‘தீமையை வெறுத்திடுங்கள்,’ என்பதாக பைபிள் அறிவுரை கூறுகிறது!—ரோமர் 12:9.
சப்தம்போட்டு பிறர் கவனத்தைத் திருப்பி உங்களைத் தொந்தரவு செய்பவரை சங்கடத்துக்குட்படுத்துவதே தவறாக நடந்துகொள்பவரைத் தடுத்து நிறுத்துவதற்கு திறம்பட்ட ஒரு வழியாகும்; ஒருவேளை அவன் நிறுத்திவிடலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அனிதாவின் அனுபவத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். அவளைத் தாக்குபவனை தன்னைத் தொடாதிருக்கும்படியாக மரியாதையுடன் கேட்டுக்கொண்டது வெற்றியடையவில்லை. அனிதா நமக்குச் சொல்கிறாள்: “அப்படி என்னைத் தொடாதே என்பதாக அவனிடம் சப்தமாக சொல்வதன் மூலம் அவனுடைய நண்பர்களுக்கு முன்னால் அவனை நான் சங்கடப்படுத்த வேண்டியதாக இருந்தது!” விளைவு? “அவனுடைய நண்பர்கள் அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். அவன் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அலட்சியமாக இருந்தான், ஆனால் ஒருசில நாட்களுக்குப் பின்னர் அவன் தன்னுடைய நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டான்; வேறு ஒருவன் எனக்குத் தொந்தரவு கொடுக்க முயற்சித்தபோது அவன் என்னைக் காப்பாற்றவும்கூட செய்தான்.”
வார்த்தைகள் பயனுள்ளதாக இல்லையென்றால், நீங்கள் வெறுமனே தாக்கப்படும் இடத்திலிருந்து சென்றுவிடலாம், அல்லது ஓடிவிடவும் செய்யலாம். தப்பியோடுவது சாத்தியமில்லையென்றால், தொந்தரவை தவிர்ப்பதற்கு தேவையாக இருக்கும் எந்த வழிமுறையையும்கூட பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. ஒரு கிறிஸ்தவப் பெண் வெளிப்படையாக இவ்விதமாகச் சொன்னாள்: “ஒரு பையன் என்னைப் பற்றிக்கொள்ள முயற்சி செய்தபோது என்னால் முடிந்தளவு ஓங்கி அடித்துவிட்டு நான் ஓட்டம்பிடித்தேன்!” தொந்தரவு செய்பவர் மறுபடியும் முயற்சி செய்யமாட்டார் என்பதை நிச்சயமாகவே இது அர்த்தப்படுத்தாது. ஆகவே ஏதாவது உதவியைப் பெறுவது உங்களுக்கு அவசியமாக இருக்கலாம்.
எவரிடமாவது சொல்லுங்கள். “அதைத்தான் நான் கடைசியாக செய்ய வேண்டியதாக இருந்தது,” என்பதாக 16 வயது ஆட்ரியன் ஒப்புக்கொள்கிறாள். “ஒரு நல்ல நண்பன் என்பதாக நான் நினைத்துக்கொண்டிருந்த ஒரு பையன் எனக்கு பாலின தொந்தரவுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தபோது அந்த நிலைமையில் என் பெற்றோரிடம் நான் ஆலோசனை கேட்டேன். நான் அதிகமதிகமாக எதிர்த்தபோது, அவன் அதை ஒரு விளையாட்டு போல எண்ணி அதிகமதிகமாக பிடிவாதமாயிருந்தான்.” ஆட்ரியனின் பெற்றோர், பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க அவளுக்கு உதவிசெய்ய நடைமுறையான ஆலோசனையைக் கொடுத்தனர்.
தொந்தரவு செய்யப்படுவதால் வரும் சங்கடம், பயம் அல்லது அவமானம் போன்ற உணர்ச்சி சம்பந்தமான பின்விளைவுகளைச் சமாளிக்கவும்கூட உங்கள் பெற்றோர் உங்களுக்கு உதவக்கூடும். நீங்கள் தாக்கப்பட்டது உங்களுடைய தவறு அல்ல என்பதை அவர்கள் உங்களுக்கு உறுதிசெய்யக்கூடும். எதிர்காலத்தில் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கையும்கூட எடுக்கக்கூடும்.
உதாரணமாக, பிரச்சினையைக் குறித்து உங்கள் ஆசிரியருக்கு அல்லது பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிப்பது பிரயோஜனமாயிருக்கும் என்பதாக அவர்கள் முடிவு செய்யலாம். ஐக்கிய மாகாணங்களிலுள்ள அநேக பள்ளிகள், புகார்களை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்கின்றன, மாணவர்கள் மத்தியில் பாலின தொந்தரவுகளைக் கையாளுவதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட செயல் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
எல்லா பள்ளி அதிகாரிகளும் அனுதாபிகளாக இருப்பதில்லை என்பது உண்மையே. 14-வயது அர்லீஷா சொல்கிறாள்: “என்னுடைய பள்ளியில் சில சமயங்களில் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள், பிள்ளைகளைவிட மோசமாக நடந்துகொள்கிறார்கள். உதவிக்காக எங்கே செல்வது என்று உங்களுக்குத் தெரியாது.” தான் தொந்தரவு செய்யப்படுவது குறித்து அவள் புகார் செய்தபோது, அவள் அளவுக்கு அதிகமாக ரோஷமுள்ளவளாய் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது ஆச்சரியமாயில்லை. ஆனால் ஆர்லீஷா விட்டுக்கொடுக்கவில்லை. இதே பையனால் கிள்ளப்பட்டு தழுவப்பட்ட மற்ற ஆறு பெண்களோடு அவள் சேர்ந்துகொண்டாள். “உண்மையான ஒரு பிரச்சினை இருப்பதை பள்ளித் தலைவர் நம்பும்படிச் செய்வதற்கு நாங்கள் ஆறுபேர் தேவைப்பட்டோம்,” என்பதாக அவள் சொல்கிறாள். கடைசியாக, தவறான நடத்தையை அவளால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது.
ஆதரவுக்காக கடவுளிடம் திரும்புங்கள். பள்ளியில் இருப்பது சிங்க கெபியினுள் சிக்கிக்கொண்டிருப்பது போல சில சமயங்களில் உங்களை உணரச்செய்தால், யெகோவா தேவன் தானியேல் தீர்க்கதரிசியை சொல்லர்த்தமான ஒரு சிங்க கெபியிலிருந்து பாதுகாத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (தானியேல் 6:16-22) யெகோவா தேவன் உங்களுக்கும்கூட உதவிசெய்ய முடியும். பள்ளியில் நீங்கள் எதிர்ப்படும் அழுத்தங்களை அவர் புரிந்துகொள்கிறார். நிலைமை கடினமாகும்போது உதவிக்காக நீங்கள் அவரை நோக்கி கூப்பிடலாம்—தேவைப்பட்டால் சப்தமாக கூப்பிடலாம்! மெய்க் கடவுளின் ஊழியன் என்பதாக அறியப்படுவதைக் குறித்து பயப்படவோ சங்கடப்படவோ வேண்டாம். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு பைபிள் இவ்விதமாக வாக்களிக்கிறது: “அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.”—சங்கீதம் 97:10.
அற்புதமாக விடுவிக்கப்படுவதற்கு இது உத்தரவாதமளிப்பதில்லை. உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யவேண்டும். பைபிள் நியமங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் பேச்சிலும் தோற்றத்திலும் அடக்கமுள்ளவர்களாயிருங்கள். எதிர்பாலாரோடு தொடர்புகொள்ளும்போது எச்சரிக்கையாயிருங்கள். அவ்விதமாகச் செய்வதன் மூலம் தொந்தரவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நீங்கள் அதிகத்தைச் செய்யமுடியும்.
தவறான அணுகுதல்களை மறுக்கையில், அரைமனதோடு அதைச் செய்யாதீர்கள்; இல்லை என்று சொல்வது இல்லை என்றே புரியும்படி செய்யுங்கள்!