50 ஆண்டுகளுக்குமுன் உலகம் எப்படியிருந்தது?
உலகம் 1945-ல் எப்படியிருந்தது என்பதை ஞாபகப்படுத்திப் பார்க்க போதுமான வயதுடையவர்களாக இருக்கிறீர்களா? அது 1939-ல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டு, அப்போதுதான் பழைய நிலைக்குத் திரும்பவர ஆரம்பித்திருந்தது. போலந்தை நாசிக்கள் ஆக்கிரமித்ததனால் பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிமீது பிரகடனப்படுத்தியதால் இப்போர் மூண்டது. அதை ஞாபகப்படுத்திப் பார்க்கமுடியாத அளவுக்கு சிறுவராக இருந்தால், 1950-ல் கொரியாவில் தொடங்கிய போர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அல்லது வியட்நாமில் 1950-களில் இருந்து 1975 வரை நீடித்த போர் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அல்லது ஈராக்கால் தூண்டப்பட்டு குவைத்தில் 1990-ல் நடந்த போர் ஞாபகம் இருக்கிறதா?
இரண்டாம் உலகப் போரிலிருந்து வரலாற்றைத் திரும்பவும் புரட்டிப் பார்ப்போமானால், கோடிக்கணக்கான ஜனங்களைத் துயரப்படச்செய்து, அல்லல்படவைத்தவையும், கூடுதலாக கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காவுகொண்டவையுமான இன்னும் அநேக போர்களை ஞாபகப்படுத்தி பார்க்கவேண்டியிருப்பது உங்களுக்கு குறிப்பிடத்தக்கதாக தோன்றவில்லையா? இரண்டாம் உலகப் போர் அப்பொழுதிருந்த மக்களுக்கு என்னத்தை விட்டுச் சென்றது?
இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகள்
இரண்டாம் உலகப் போரில் ஏறக்குறைய ஐந்து கோடி மக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 1945-ல் ஐரோப்பா முழுவதிலும் லட்சக்கணக்கான அகதிகள் சுற்றியலைந்தனர். குண்டு போட்டழிக்கப்பட்ட தங்களுடைய மாநகரங்களுக்கும் நகரங்களுக்கும் திரும்பிச்சென்று சிதறடிக்கப்பட்ட தங்களுடைய வாழ்க்கையைத் திரும்பவும் அமைத்துக் கொள்வதற்காக முயற்சித்தனர். முக்கியமாக ரஷ்யாவிலும் ஜெர்மனியிலும், படையெடுத்து வந்த போர்வீரர்களால் கற்பழிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களும் வயதுப் பெண்களும் அதன் அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர முயற்சித்துவந்தனர். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் வரையறுக்கப்பட்ட அளவு உணவும் உடையும் வழங்கப்பட்டு வந்தது—உணவு, உடை பற்றாக்குறை ஏற்பட்டது. படையிலிருந்து விடுவிக்கப்பட்ட லட்சக்கணக்கான போர்வீரர்கள் வேலைதேடி அலைந்தனர். லட்சக்கணக்கான விதவைகளும் அனாதைகளும் இழந்துபோன தங்களுடைய கணவர்மார்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் துக்கப்பட்டனர்.
யூதர்கள், லட்சக்கணக்கில் தங்களுடைய சகயூதர்களை அழித்த அந்தப் படுகொலையின் மெய்ம்மையையும், அவர்கள் எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் சாத்தியங்களை துடைத்தழித்த படுகொலையின் மெய்ம்மையையும் கிரகிக்க இன்னும் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் மற்ற அநேக நாட்டைச் சேர்ந்தவர்களும் லட்சக்கணக்கில் அந்தப் போரில் மாண்டனர். உலக வல்லரசுகளும் அவற்றின் ஆட்சியாளர்களும் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபார அக்கறைகளை விரிவாக்க, பேரளவு மரபணுப் பொதுச்சேர்ம ஆற்றலை (genetic pool) இழந்துவிட்டனர்.
அநேக நாடுகள் இரண்டாம் உலகப் போரினால் அவ்வளவு மோசமாகத் தாக்கப்பட்டதால், அவற்றின் பொருளாதார சூழ்நிலையைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதை முதல் முன்னுரிமையாக வைக்கவேண்டியிருந்தது. போருக்குப் பிறகு பல வருடங்கள் கழித்தும் ஐரோப்பாவில் உணவுப் பற்றாக்குறை பரவலாக தொடர்ந்திருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது ஸ்பெய்ன் நடுநிலைமை வகித்திருந்தபோதிலும், அது தனது சொந்த உள்நாட்டுப் போரினாலும் (1936-39) வியாபாரத் தடையுத்தரவுகளினாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் 1952 ஜூன் மாதம் வரை ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தன.
சீனா, பர்மா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் மற்ற கீழ்த்திசை நாடுகளிலும் உள்ள பலியாட்களின் மனதில், தூரக் கிழக்கு தேசங்களில் ஜப்பானியர்கள் செய்த அக்கிரமங்களைப் பற்றிய நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருந்தன. ஐக்கிய மாகாணங்கள் வெற்றிவாகை சூடிய ஒரு தேசமாக இருந்தபோதிலும், சுமார் 3,00,000 ராணுவ வீரர்களை இழந்தது. இந்த நஷ்டத்தில் ஏறக்குறைய பாதியளவு பசிபிக் போர்க்களங்களில் ஏற்பட்டதாகும். ஜப்பானில் வறுமைக் கொடுமையும், காசநோயும், உணவுப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளுமே ராணுவம் சேராத மக்களின் நிலைமையாக இருந்தன.
சர்ச்சிலினுடைய செயல்படுவதற்கான அழைப்பு
ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் மே 13, 1945-ல் பிரிட்டிஷ் மக்களுக்கு ஆற்றிய வெற்றியுரையில் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய போராட்டங்கள், தொல்லைகள் அனைத்தும் ஓய்ந்தன என்று இன்றிரவு உங்களிடம் சொல்லமுடிந்தால் பரவாயில்லையே என்று ஆசையாய் இருந்தேன். . . . இன்னும் செய்வதற்கு ஏகப்பட்டவை இருக்கின்றன, மாபெரும் கொள்கைகளுக்காக மனதாலும் உடலாலும் செய்யப்படும் மேன்மேலுமான முயற்சிகளுக்கும் இன்னுமதிக தியாகங்களுக்கும் நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்று . . . நான் உங்களை எச்சரிக்க வேண்டியிருக்கிறது.” நீண்ட எதிர்காலத்தை மனதில் கொண்டு, கம்யூனிஸம் பரவுவதை எதிர்நோக்கியவராக, அவர் சொன்னார்: “ஐரோப்பா கண்டத்தில், ‘சுதந்திரம்’, ‘மக்களாட்சி’, ‘விடுதலை’ ஆகிய வார்த்தைகள், நாம் கற்றுக்கொண்ட அவற்றின் உண்மையான அர்த்தத்திலிருந்து புரட்டப்படாமல் இன்னும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.” அதற்குப் பின்னர் செயலாற்றத் தூண்டும் ஓர் அழைப்பை விடுத்தார்: “முழு வேலையும் முடியும்வரை, முழு உலகமும் பாதுகாப்புள்ளதாகவும் சுத்தமாகவும் ஆகும்வரை முன்னேறுங்கள், பின்வாங்காதீர்கள், விட்டுக்கொடுக்காதீர்கள், தளர்ந்துபோய்விடாதீர்கள்.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
போர்களும் மரணமும் நிறைந்த அரை நூற்றாண்டு
1992-ம் ஆண்டு கொடுத்த ஒரு பேச்சில், ஐநா பொதுச் செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, “1945-ல் ஐக்கிய நாடுகள் நிறுவப்பட்டதிலிருந்து, உலகைச் சுற்றி 100-க்கும் அதிகமான பெரிய போர்களில் சுமார் இரண்டுகோடி ஜனங்கள் இறந்திருக்கின்றனர்,” என்று ஒப்புக்கொண்டார். இறந்தவர்களின் அதிகரித்த எண்ணிக்கையைக் காண்பிக்கும் வகையில், உவர்ல்ட் உவாட்ச் என்ற பத்திரிகை இவ்வாறு கூறியது: “இந்த நூற்றாண்டுதான் அனைத்தைக் காட்டிலும் அமைதி குறைந்ததாய் இருந்திருக்கிறது.” “மனித வரலாற்றிலேயே ஏற்பட்டுள்ள போர்களனைத்திலும் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இந்த நூற்றாண்டில் அதிகம்பேர் கொல்லப்பட்டனர். அவ்வளவு மரணங்களிலும் சுமார் 2.3 கோடி இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு விளைவிக்கப்பட்டிருக்கின்றன,” என்று ஒரு ஆராய்ச்சியாளர் சொன்னதாக இதே பத்திரிகை மேற்கோள் காட்டுகிறது.
எனினும், தி வாஷிங்டன் போஸ்ட் வேறொரு புள்ளிவிவரத்தைத் தந்தது: “இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து, உலகம் முழுவதும் சுமார் 160 போர்கள் நடத்தப்பட்டன. இது போர்க்களத்தில் 70 லட்சம் போர்வீரர்கள் மரிப்பதிலும் ராணுவத்தைச் சேராதவர்கள் 3 கோடி பேர் மரிப்பதிலும் விளைவடைந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், காயமடைந்தவர்கள், கற்பழிக்கப்பட்டவர்கள், அகதிகளாக்கப்பட்டவர்கள் என்று அநேகரும் இருந்திருக்கின்றனர்.” கடந்த 50 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஏற்பட்ட வன்முறை குற்றச்செயல்களுக்கு பலியானவர்களை இவை உட்படுத்தாது!
இப்பொழுது, 1995-ல், பற்றியெரியும் வெறுப்பினால் மூட்டிவிடப்பட்ட மரணம் விளைவிக்கும் போர்கள் நம் மத்தியில் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை மரணத்தின் சாத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் போர்வீரர்களை மட்டுமல்ல, ஆனால் ஆப்பிரிக்கா, பால்கன், மத்திய கிழக்கு, ரஷ்யா ஆகிய நாடுகளில் ராணுவத்தைச் சேராத ஆயிரக்கணக்கானோரையும் கொன்று குவிக்கின்றன.
ஆகவே, 1945-க்குப் பிறகு 50 வருடங்கள் கழித்து, “முழு உலகமும் பாதுகாப்புள்ளதாகவும் சுத்தமாகவும்” ஆகிவிட்டதா? நம் பூமியை வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் மாற்றுவதில் மனிதவர்க்கம் என்ன முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கிறது? 50 வருடங்களில் நாம் என்ன கற்றுக்கொண்டோம்? மதிப்பீடுகள், தார்மீகம், நன்னெறிகள் ஆகிய உண்மையிலேயே முக்கியமான விஷயங்களில் மனிதவர்க்கம் முன்னேறியிருக்கிறதா? அடுத்த இரண்டு கட்டுரைகளும் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும். நம்முடைய உலக கிராமத்தில் இருக்கும் நம்மனைவருக்கும் இருக்கும் எதிர்கால வாய்ப்பு நலன்களைப்பற்றி நான்காவது கட்டுரை சிந்திக்கும்.
[பக்கம் 4-ன் பெட்டி]
இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றிய நினைவுகள்
இப்பொழுது தனது 60-களில் இருக்கும் ஒரு ஆங்கிலேயர் நினைவுபடுத்திப் பார்க்கிறார்: “40-களின் பிற்பகுதியில், எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாதிருந்தது. எங்களுடைய கற்பனாசக்தியைத் தூண்டும் கருவியாக இருந்தவற்றில் வானொலி முக்கியமானதாக இருந்தது. நான் இன்னும் பள்ளி மாணவனாக இருந்துவந்ததால், வாசிப்பதிலும் வீட்டுப்பாடத்திலுமே என் மனது மூழ்கியிருந்தது. மாதத்துக்கு ஒருமுறை சினிமாவுக்குப் போனால் போவேன். என்னுடைய அபிமான கால்பந்தாட்ட அணி விளையாடுவதைப் பார்க்க சனிக்கிழமைகளில் பல மைல்கள் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவது வழக்கம். ஒப்பிடுகையில் ஒருசில குடும்பங்களாலேயே காரோ தொலைபேசியோ வைத்திருக்க முடிந்தது. பிரிட்டனில் உள்ள மற்ற லட்சக்கணக்கானோரைப் போல எங்களுக்கு தனிப்பட்ட குளியலறை இல்லாதிருந்தது. கழிப்பறை வெளியிலிருந்தது, குளியல் தொட்டியோ குளியலறையாகவும் பயன்படுத்தப்பட்ட சமையலறையில் வைக்கப்பட்டிருந்தது. போரின்போது, உலரவைத்த—முட்டை பவுடர், பால் பவுடர், உருளைக் கிழங்கு பவுடர் போன்ற—உணவுப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்டு பிழைத்தோம். ஆரஞ்சு பழம் வாழைப்பழம் போன்ற பழவகைகள் எப்போதாவது ஒருமுறை கிடைக்கும் சுகபோக உணவாக இருந்தன. இவை உள்ளூர் காய்கறிகடைக்கு வருவதுதானே அனைவரும் தங்களுடைய பங்கைப் பெறுவதற்காக வரிசையில் நிற்க முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கான சிக்னலாக இருந்தது. பெண்களில் அநேகர் போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யவேண்டியிருந்தது. தொலைக்காட்சி, வீடியோ, கம்ப்யூட்டர், சைபர்ஸ்பேஸ், ஃபேக்ஸ் தொடர்பு, விண்வெளிப் பயணம், மரபணுப் பொறியியல் போன்ற நம்பமுடியாத மாற்றங்கள் அடங்கிய உலகம் தங்களுக்கு அண்மையில் இருக்கிறது என்பதை அக்கால மக்கள் அறியாதிருந்தனர்.”