பைபிளின் கருத்து
கடவுளுடைய தராதரங்கள் எட்டுவதற்கு மிகக் கடினமானவையா?
“கடவுள் மனிதரை அங்குல நுட்பமாய் மதிப்பிடுகிறதில்லை.”
—பூர்வ ஸ்காட்லாந்து பழமொழி.
பள்ளி பரீட்சைகள், வேலைக்காக நேர்முகத் தேர்வுகள், மருத்துவ சோதனைகள் ஆகியவை, ஓர் ஆள் மதிப்பிடப்படுகிற, வாழ்க்கையின் திரும்புகட்டங்களில் சிலவேயாகும். ஆனால் கடவுளுடைய தராதரங்களின்படி நாள்தோறும் வாழ்வதற்கு வருகையில், தாங்கள் அவற்றை எட்ட எவ்வாறாவது தவறுவார்களென ஆட்கள் பலர் உணருகின்றனர். அதுவே உங்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறதா? கடவுளுடைய தராதரங்களை உங்களால் எட்ட முடியுமா?
பதிலளிப்பதற்கு நாம், கடவுள் தம்மை வணங்குவோருக்கு வைத்திருக்கிற தராதரங்களை முதலாவதாகப் பார்க்கலாம். வாழ்க்கையினூடே நாம் நடந்துசெல்ல வேண்டிய பாதையின்பேரில் பைபிள் வெளிச்சம் பிரகாசிக்கச் செய்கிறது. (சங்கீதம் 119:105) ‘உண்மையான கடவுளுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதே’ மனிதனின் ‘முழு கடமை’ என்று பைபிள் எழுத்தாளராகிய ஞானமுள்ள அரசன் சாலொமோன் முடிவுக்கு வந்தார். (பிரசங்கி 12:13, NW) தீர்க்கதரிசியாகிய மீகா இவ்வாறு கூறினார்: “நியாயஞ்செய்து மனதார இரக்கத்தைப் பாராட்டி உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்”?—மீகா 6:8, தி.மொ.
‘உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் நேசிப்பதும்,’ ‘உன்னைப்போல் உன் அயலானை நேசிப்பதுமான’ இவற்றைப் பார்க்கிலும் பெரிதான கட்டளைகள் வேறெதுவுமில்லை என்று கடவுளுடைய சொந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து கூறினார். (மாற்கு 12:30, 31, NW) மேலுமாக, நாம் கடவுளை நேசிக்கிறோமென்பதை, அவருடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதன் மூலம் காட்டுகிறோம்.—1 யோவான் 5:3.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மனிதர் கடவுளை நேசித்து அவருக்கு மரியாதை செலுத்தி, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், நேர்மையாய் நடந்து, எல்லாரிடமும் தயவாயிருக்க வேண்டும், பெருமையைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய தராதரங்கள் நம்மால் கடைப்பிடிக்கக் கூடியவையாக இருக்கின்றன அல்லவா?
கடவுள் சலுகை அளிக்கிறார்
கடவுள் வைக்கும் தராதரங்களை மனிதர் எட்டும்படி அவர் சரியாகவே எதிர்பார்க்கிறார். ஆனால், உண்மையில், எந்த மனிதனாவது இந்தத் தராதரங்களை எல்லா சமயத்திலும் பூரணமாய்க் கடைப்பிடிக்கிறானா? இல்லை என்பது தெளிவாயிருக்கிறது, ஏனெனில் நம்முடைய மூதாதையாகிய ஆதாமிலிருந்து நாம் அபூரணத்தைச் சுதந்தரித்திருக்கிறோம். (ரோமர் 5:12) இவ்வாறு, நாம் தவறு செய்யும் மனச்சாய்வு உடையோராக இருக்கிறோம். எனினும் இது, கடவுளை ஏற்கத்தக்க முறையில் சேவிப்பதற்கு நம்மைத் தகுதியற்றவராகும்படி செய்கிறதில்லை.
உதாரணமாக, ஒரு மோட்டார் வண்டி ஓட்டுவதற்குக் கற்றுக்கொள்ளும் பிரச்சினைகளைக் கவனியுங்கள். ஓட்டும் பரீட்சையில் தேறுவதற்குப் போதியளவு நன்றாய் ஓட்ட, எச்சரிக்கையான இடைவிடாத விழிப்பும் நேரமும் எடுக்கிறது. தேறி உரிமம் பெற்ற பின்பும், நிச்சயமாகவே நன்றாய் ஓட்டுவதற்கு நாம் இன்னும் உழைத்து வரவேண்டும். நாம் மேலும் அனுபவம் பெற்று வருகையில், நம்முடைய திறமைகளைக் கூராக்கி வருகிறோம். ஆனால் பரிபூரண காரோட்டிகள் எவரும் இல்லை!
மகிழ்ச்சியுண்டாக, கடவுள் நம்முடைய குறைபாடுகளுக்கு சலுகையளிக்கிறார். நம்மால் செய்ய முடியாததைக் கேட்பதற்கு அவர் நியாயமற்றவரும் அல்லர், விடாது குற்றம் கண்டுபிடிப்பவரும் அல்லர். நம்முடைய தவறுசெய்யும் பாங்குகளையும் பலவீனங்களையும் அவர் புரிந்துகொள்கிறார். தீங்கான முறையில் பாவம் செய்துவிட்ட அரசன் தாவீது இவ்வாறு அறிக்கையிட்டார்: “நமது பாவங்களுக்குத் தக்கபடி அவர் நமக்குச் செய்யவில்லை; நமது அக்கிரமங்களுக்குத் தக்கபடி அவர் நமக்குப் பதிற் செய்யவில்லை.” என்ன காரணத்தினிமித்தம்? “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமோ அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய [கடவுளுடைய] கிருபையும் [“அன்புள்ள இரக்கமும்,” NW] அவ்வளவு பெரிது.” நாம் பாவம் செய்வதை யெகோவா அறிந்திருக்கிறபோதிலும், நம்முடைய அக்கிரமங்களை “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய்” வைத்துவிட அவர் ஆயத்தமாயிருக்கிறார்.—சங்கீதம் 103:10-14, தி.மொ.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
உள்ளப்பூர்வமாய் வணங்கும் ஒருவர் இவ்வாறு விளக்கினார், “நான் சோர்வடைகையில், கடவுளுடைய தராதரங்களின்படி வாழும் முயற்சியில் நான் ஒருபோதும் வெற்றிகாணமாட்டேன் என்று சில சமயங்களில் முடிவுக்கு வருவதுண்டு. ஆனால் மேலும் நம்பகமான ஒரு மனநிலையை வளர்க்கையில், நான் வாழும்படி கடவுள் விரும்புகிற முறையில் வாழ என்னால் சமாளித்துக்கொள்ள முடியுமென்று உணருகிறேன். ஆனால் அதெல்லாம் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை!” நீங்கள் இவ்வாறு உணர்ந்தால் மனத்தளர்வடையாதீர்கள். அத்தகைய உணர்ச்சிகளை அடைவதில் நீங்கள் முதல்வருமல்ல, கடைசியானவராக இருக்கப்போவதுமில்லை.
கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு வெளிப்படையாய் ஒப்புக்கொண்டார்: “நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு என்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். உள்ளான மனுஷனைப் பார்த்தால், கடவுளின் நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியப்படுகிறவனாயிருக்கிறேன். என் அவயவங்களிலோ வேறொரு பிரமாணத்தைக் காண்கிறேன். அது என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடி . . . பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்குகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” எனினும் கடவுள் எதிர்பார்த்தது மட்டுக்குமீறிய கடினமானதென்ற முடிவுக்கு அவர் வரவில்லை, ஏனெனில் அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாய்க் கடவுளுக்கு ஸ்தோத்திரம். இப்படியாக நானே என் மனதினாலே கடவுளின் நியாயப்பிரமாணத்துக்கும் மாம்சத்தினாலே பாவப்பிரமாணத்துக்கும் தொண்டுசெய்கிறவனாயிருக்கிறேன்.” (ரோமர் 7:21-25, தி.மொ.) இவ்வாறு அவர் பாவியாக இன்னும் இருந்தபோதிலும் கடவுளைப் பிரியப்படுத்தக் கூடியவராக உணர்ந்தார்.
நம்முடைய அன்புள்ள சிருஷ்டிகராகிய யெகோவா, தம்முடைய அன்பான குமாரனாகிய இயேசுவின் மீட்புக்கிரய பலியினுடைய விலைமதிப்பின் மூலமாய் நம்முடைய குற்றங்களையும் குறைபாடுகளையும் மன்னிக்கிறார். “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரரான இயேசுகிறிஸ்துவே பிதாவினிடம் நமக்குச் சகாயர். நமது பாவங்களுக்கு அவரே பிராயச்சித்த [ஈடுசெய்யும்] பலி,” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 2:1, 2, தி.மொ.) பாவம் இடையில் குறுக்கிட்டு, கடவுளுடன் நட்புகொள்வதற்கான அவருடைய தராதரத்தை எட்டுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் அந்தத் தடை, கிறிஸ்துவின் பலியினுடைய வல்லமையால் நீக்கப்படுகிறது அல்லது முறிக்கப்படுகிறது. இவ்வாறு கடவுளுடன் நட்புறவு திரும்பப் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த அன்புள்ள ஏற்பாட்டை மனத்தாழ்மையுடன் ஏற்பது மன்னிப்பைக் கொண்டுவருகிறது, ஏனெனில், ‘நைந்து தாழ்ந்த ஆவியுள்ளவர்களிடம்’ கடவுள் வாசம் செய்கிறார். (ஏசாயா 57:15, தி.மொ.) நம்முடைய ஆவியை உயிர்ப்பிக்கும்படி அவரில் நம்பியிருக்கலாம். ‘பலவீனனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுவாரென’ அவர் வாக்குக் கொடுக்கிறார். கடவுளுக்கு முழுமையாய்க் கீழ்ப்படிவதிலிருந்து நாம் தவறுகையில் தொடர்ந்து மனச்சோர்வுற்ற நிலையில் நாம் இனிமேலும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவருடைய தராதரங்களின்படி வாழ்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளைக் கடவுள் கவனியாமல் ஒருபோதும் இருப்பதில்லை என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—சங்கீதம் 113:7, தி.மொ.; எபிரெயர் 6:10-12.
இது போராட்டமாக இருந்தாலும், கடவுளுக்குப் பிரியமானதைச் செய்வதில் நீங்கள் அதிக மகிழ்ச்சியாயிருப்பதாக உங்களைக் காண்பீர்கள். கடவுளிடம் பயபக்தியாயிருப்பது, உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளோருக்கும் வாழ்க்கையை மேலும் நல்லமுறையில் தாங்கக்கூடியதாக்குகிறது. மேலும் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தியுங்கள். கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதற்குத் தற்போது முயற்சி செய்வது, பரதீஸ் நிலைமைகளின்கீழ் நித்தியமாய் வாழும் எதிர்பார்ப்பைக் கொண்டுவருகிறது.—ஏசாயா 48:17; ரோமர் 6:23; 1 தீமோத்தேயு 4:8.
மலையேறுவோராக அனுபவம் வாய்ந்தவர்கள், மலையுச்சியை எட்டுகையில், தாங்கள் பாதி தூரமே சாதித்திருப்பதாக உணருவர். அவர்கள் இன்னும் பத்திரமாய் இறங்க வேண்டியதாயிருக்கிறது. அவ்வாறே, கடவுளுக்குப் பயந்து நடப்போர், கடவுளுடைய தராதரங்களை எட்டவும் வேண்டும், பின்பு அவற்றின்படி வாழ்வதில் விடாமுயற்சி செய்துகொண்டிருக்கவும் வேண்டும்.—லூக்கா 21:19; யாக்கோபு 1:4.
கடவுளுடைய தராதரங்கள் எட்டுவதற்கு மிகக் கடினமானவையல்ல என்ற இந்த அறிவிலிருந்து ஆறுதலடையுங்கள். அவற்றின்படி முழுமையாக நடக்க நீங்கள் எப்போதாவது தவறும்போது, அவருடைய மன்னிப்பைப் பெற நாடுங்கள். அவருடைய அன்புள்ள உதவியின்பேரில் நம்பியிருங்கள். (சங்கீதம் 86:5) ஆகவே, யெகோவாவும் அவருடைய குமாரனும் உங்களுக்கு உதவிசெய்வோராக இருப்பதால், கடவுளுடைய தராதரங்களை நீங்கள் எட்டி, அவருடைய அங்கீகாரத்தைப் பெறக்கூடும்.—நீதிமொழிகள் 12:2, தி.மொ.