ஒரே சீராக இயங்கும் நாட்டில் சிறுபான்மையோருக்கு ஒரு வெற்றி
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
தங்கள் முகங்களில் புன்னகை தவழ 19 வயதான குனிஹீடோ கோபாயாஷியும் அவருடைய பெற்றோரும் மாநாட்டு அறைக்குள் நுழையும்போது, ஒசாகா உயர் நீதிமன்ற செய்தியாளர் கழகத்தில் இந்த இளம் வாதி ஆஜராவதற்காக ஏழு தொலைக்காட்சி காமராக்களும் டஜன்கணக்கான நிருபர்களும் காத்துக்கொண்டிருந்தனர். செய்தியாளரின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கையில் காமரா ஒளிகள் அடிக்கடி அந்த அறையில் பளிச்சிட்டன.
“என்னுடைய வழக்கிற்கு ஒரு பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெற்றிருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று குனிஹீடோ கூறினார். “அவன் அல்லது அவளுடைய மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் எவரும் எந்த மேல்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டு, மேல் வகுப்புக்கு உயர்த்தப்பட்டு, படிப்பை முடித்து வெளிவரக்கூடிய ஓர் உலகைக் காண நான் விரும்புகிறேன்,” என்றார்.
கோப் மாவட்ட கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒசாகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, குனிஹீடோ நாடியதை, அதாவது தன்னுடைய மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் கல்வி பெறுவதற்கான உரிமையை அவருக்கு அளித்தது.
அந்த விவாதம்
இந்தச் சட்டவழக்கில் விவாதத்தில் இருந்ததென்னவென்றால், மத சம்பந்தமான காரணங்களுக்காக கென்டோ பயிற்சிகளில் (ஜப்பானிய வாள் போர்த்திறத்தில்) பங்கெடுக்காததற்காக கோப் முனிசிப்பல் இன்டஸ்ட்ரியல் டெக்னிக்கல் காலேஜிலிருந்து (கோப் டெக் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது) அவர் வெளியேற்றப்பட்டதாகும். அவரை மேல்வகுப்புக்கு உயர்த்த மறுத்து, பின்னர் அவரை வெளியேற்றிய பள்ளியின் நடவடிக்கைகளை தள்ளுபடி செய்த ஒசாகா நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, குனிஹீடோ தன் மின் பொறியியல் படிப்பைத் தொடரும் விருப்பத்தைத் தெரிவித்தார். அவருடைய ஐந்து வருட கல்லூரி படிப்பில் முதல் மூன்று வருடங்கள், மூன்று வருட மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்குச் சமானமானது.
குனிஹீடோ, தன் உடற்பயிற்சி வகுப்பின் பாகமாக கென்டோ பயிற்சிகளில் பங்கெடுக்க வேண்டும் என்று கோப் டெக் வற்புறுத்தியிருந்தது. என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அவர் இருந்ததால், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய மனசாட்சி அந்தத் தற்காப்பு பயிற்சிகளில் பங்கெடுக்க அவரை அனுமதிக்கவில்லை. செய்தியாளர் கூட்டத்திலுள்ள நிருபர்களுக்கு, குனிஹீடோ பைபிளைத் திறந்து, தன் நிலைநிற்கையை விளக்கினார்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:4.
அப்படியென்றால், மத சுயாதீனத்தையும் கல்வி பயில்வதற்கான உரிமையையும் பெறுவதற்கு ஓரிளம் மாணவன் ஏன் சட்டத்திடம் திரும்ப வேண்டியிருந்தது? ஸுகூபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோஜி டோனாமி இவ்வாறு குறிப்பிட்டார்: “அசட்டை மனப்பான்மை மற்றும் புரிந்துகொள்ளுதலின்மையின் காரணமாக விசுவாசிகளின் விசுவாசத்தின்மீது எதிர்பாராத வரையறைகள் இருக்கலாம்.” அரசாங்கம் அல்லது சமுதாயம் வேண்டுமென்றே ஒரு மதத்தை ஒடுக்காது என்றாலும், அறியாமலேயே மதம் அடக்கப்படுகிற சம்பவங்கள் ஏற்படக்கூடும்.
அப்படிப்பட்ட “எதிர்பாராத வரையறைகள்” சிறுபான்மையோரின் உரிமையின்மீது ஏன் சுமத்தப்பட்டன? “ஏனென்றால், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்கு ஒத்திசைந்து செல்லும்படி வற்புறுத்தும் ஒரு சமூக அமைப்புமுறையை ஜப்பானிய சமுதாயம் போற்றி வந்திருக்கிறது,” என்பதாக ஆயோயாமா காக்கூயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிடோஷி செரிஸாவா பதிலளிக்கிறார். சமுதாயத்துடன் ஒத்துப்போவதற்கான அழுத்தம் உண்மையிலேயே ஜப்பானில் பலமானதாக இருக்கிறது.
வித்தியாசமாக இருப்பவர்களை ஒதுக்கிவைக்கும் ஒரு பள்ளி அமைப்புமுறையில் இருப்பது இளைஞர்களுக்கு எளிதானதல்ல. என்றாலும், இது மதம் சம்பந்தப்பட்டதில் சிறுபான்மையோராக இருப்பவர்களுக்கு மட்டும் அக்கறைக்குரிய ஒரு விஷயம் அல்ல. அந்த வழக்கை அதன் தொடக்கத்திலிருந்து கவனித்து, அங்கு விவாதத்திலிருந்தது என்ன என்றும் இந்தத் தீர்மானம் பொது மக்களை எப்படி பாதிக்கிறது என்றும் காண்போம்.
சிறுபான்மையோரின் உரிமையை நிலைநாட்டுதல்
1990-க்கு முன்னர், கோப் டெக் அதன் மாணவர்கள் தற்காப்பு கலை வகுப்புகளைக் கொண்டிருப்பதைத் தேவைப்படுத்தவில்லை. ஆனால் தற்காப்பு கலைகளின் பயிற்சிக்கான அறையை உட்படுத்திய உடற்பயிற்சிக்கூடம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டபின், அந்தப் பள்ளி கென்டோ பயிற்சியை மாணவர்கள் கொண்டிருக்கும்படி தேவைப்படுத்தியது. 1990-ல் பள்ளியிலுள்ள உடற்பயிற்சி துறை பணியாளர்கள், 16 வயதில் கோப் டெக்கில் நுழைந்த யெகோவாவின் சாட்சிகளிடமாக விட்டுக்கொடுக்காத நிலைநிற்கையை எடுத்தார்கள். கென்டோ பயிற்சியிலிருந்து விலக்குதலளிக்கும்படி கோரிய அவர்களுடைய மனுவைக் குறித்து ஒரு ஆசிரியர் சொன்னார்: “பள்ளி உங்களிடம் செய்யச் சொல்வதை செய்ய முடியாவிட்டால், பள்ளியைவிட்டு வெளியேறுங்கள்!”
தங்கள் நம்பிக்கைக்காக உறுதியாய் நின்ற சாட்சி இளைஞர்களுக்கு, அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவதற்கான எதிர்நோக்கு மங்கலாகவே இருந்தது. மற்றொரு ஆசிரியர் சொன்னார்: “மற்ற [உடற்பயிற்சி கல்வி] நிகழ்ச்சிகளில் நீங்கள் கடினமாக உழைத்தால்கூட தேறுதலுக்குரிய சான்று எதுவும் உங்களுக்குக் கிடைக்காது.” மூங்கிலால் உண்டாக்கப்பட்டிருந்தாலும்கூட அந்த வாளை எடுக்காமல் இருப்பதன்மூலம் ஐந்து மாணவர்கள் தங்கள் நம்பிக்கையைச் சார்ந்து நின்றார்கள். அவர்களில் மூவர் யெகோவாவின் முழுக்காட்டப்பட்ட சாட்சிகள், இருவர் முழுக்காட்டப்படாதவர்கள், ஆனால் அனைவரும் பைபிளில் தங்கள் நம்பிக்கையை உறுதியாக வைத்திருந்தனர். ஆசிரியர்கள் அவர்களிடம் தேவைப்படுத்தும் மாற்று நடவடிக்கைகள் என்னவாயினும் அவற்றை ஏற்க மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்.
அவர்களுடைய நிலைநிற்கையின் காரணமாக, அடுத்த மேல்வகுப்புக்கு உயர்த்தப்பட மறுக்கப்பட்டார்கள். 1991-ல் அடுத்த பள்ளி வருடம் தொடங்கியபோது, கென்டோ பயிற்சிகளில் பங்கெடுக்க மறுத்த ஐந்து மாணவர்களையும், அதே நம்பிக்கையை உடைய ஒன்பது புதியவர்களையும் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்கள் ஒன்றுகூட்டி, இவ்வாறு சொன்னார்கள்: “நீங்கள் அடுத்த மேல்வகுப்புக்கு அனுப்பப்படவேண்டுமானால், அளவுக்கதிகமான உயர்ந்த மதிப்பெண்களைப் பெறவேண்டும். உங்களில் எவரும் அரிதாகவே அவ்வளவு மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.” அந்த ஆசிரியர்கள் மேலுமாக அவர்களிடம் சொன்னார்கள்: “இது கட்டாயக் கல்வி அல்ல. [ஜப்பானில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையாக கட்டாயக் கல்வி இருக்கிறது.] ‘இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று எங்களால் உங்களிடம் சொல்ல முடியும்.”
அந்த ஐந்து மாணவர்களும் பள்ளிக்கு எதிராக கோப் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்; வணக்க சுயாதீனம் மற்றும் கல்வி பெறுதலுக்கான அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பள்ளியின் நடவடிக்கை மீறியதாக வாதிட்டனர். அதேநேரத்தில், வழக்கு விசாரிக்கப்படுகையில் அவர்கள் தங்கள் பாடங்களையும் படிப்பதற்கு ஏற்றவகையில், மேல்வகுப்புக்கு உயர்த்தப்படுவதை மறுக்கும் நடவடிக்கையை அமல்படுத்துவதை நிறுத்தும்படியாக அந்த ஐந்து மாணவர்களும் கோப் மாவட்ட நீதிமன்றத்திடமும் பின்னர் ஒசாகா உயர் நீதிமன்றத்திடமும் மனுசெய்தனர். என்றபோதிலும், அந்த மனுக்கள் இரு நீதிமன்றங்களிலும் மறுக்கப்பட்டன.
அந்த ஐந்து மாணவர்களில் இருவர், பள்ளியில் அடுத்த வருடம், உடற்பயிற்சிக்குரிய மதிப்புச் சான்றுகள் வழங்க மறுக்கப்பட்டு, வெளியேற்றப்படப்போவதாகப் பயமுறுத்தப்பட்டனர். அதன் விளைவாக, அவர்களில் ஒருவர் பள்ளியின் தூண்டுதலால் பள்ளியைவிட்டு வெளியேறினார். வெளியேறும்படியான பள்ளியின் ஆலோசனையை மற்றவர் ஏற்க மறுத்தார். குனிஹீடோ கோபாயாஷி என்ற அந்த மாணவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஒரு வகுப்பில் இரு முறை தவறியவர்கள், “படிப்பில் மட்டமானவராக பட்டம்பெறும் வாய்ப்பற்றவராகக் கருதப்பட்டு” உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் என்பதாக அந்தப் பள்ளியின் விதிமுறைகள் வரையறுத்தன. ஆனால் குனிஹீடோ “படிப்பில் மட்டமானவராக” இருந்தாரா? உடற்பயிற்சி கல்வியில் கென்டோ பிரச்சினையின் காரணமாக அவர் 100-க்கு 48 மதிப்பெண்கள் எடுத்து தவறியிருந்தாலும், அது உட்பட எல்லா பாடங்களுக்கும் சராசரியாக 90.2 புள்ளிகளைப் பெற்றிருந்தார். 42 மாணவர்கள் அடங்கிய வகுப்பில் அவரே மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்! அவர் நன்னடத்தை உள்ளவராகவும் கற்றுக்கொள்ள மனமுள்ளவராகவும் இருந்தார்.
இந்த வெளியேற்றுதல் நடவடிக்கையை அமல்படுத்துவதை நிறுத்தும்படி கோப் மாவட்ட நீதிமன்றத்திற்கும் ஒசாகா உயர் நீதிமன்றத்திற்கும் மனுக்கள் செய்யப்பட்டன. ஆனால் இரு நீதிமன்றங்களுமே அந்த மனுவை தள்ளுபடி செய்தன.
மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு
அந்த ஐந்து மாணவர்களும் வழக்குத்தொடுத்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குப்பின், பிப்ரவரி 22, 1993 அன்று, கோப் மாவட்ட நீதிமன்றம் தன் தீர்ப்பை பள்ளிக்குச் சாதகமாக வழங்கியது. “கென்டோ பயிற்சிகளில் பங்கெடுக்கவேண்டும் என்று பள்ளி தேவைப்படுத்துவது, வாதியின் வணக்க சுயாதீனத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியது என்பதை மறுக்கமுடியாது,” என்று தலைமைதாங்கிய நீதிபதியான டாடாவோ ஸுஜி ஒத்துக்கொண்டார். ஆனால், “பள்ளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தை மீறவில்லை” என்று அவர் முடிவாகக் கூறினார்.
அந்த மாணவர்கள் தாமதிக்காமல் வழக்கை ஒசாகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். என்றாலும், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிந்திக்கும் ஆட்களை வருத்தமடையச் செய்தது. மைனிச்சி ஷிம்பூன் செய்தித்தாளில் வாசகர் பத்தியில் ஒருவர் இவ்வாறு தன்னை வெளிப்படுத்தி கூறினார்: “இந்த முறை அந்தத் தீர்ப்பானது, ‘மத அடிப்படையில் கென்டோ பாடங்களில் பங்கெடுக்காமல் இருப்பதைப் பொறுத்துக்கொள்வது பற்றிய மத சகிப்புத்தன்மையை மீறுவதை’ சுற்றி அமைந்தது. என்றபோதிலும், நடுநிலை வகிப்பு என்பது, விவாதத்தில் இருக்கும் எந்தப் பக்கத்தையும் ஆதரிக்காமல் இருப்பதை அர்த்தப்படுத்தும். மேலும் மத சம்பந்தமான நடுநிலை வகிப்பு என்று வருகையில், பெரும்பான்மையோருக்கு எதிராக சிறுபான்மையோரின் விசுவாசத்தைப் பாதுகாப்பதே விவாதத்தில் இருக்கிறது. ஆகவே, இந்தத் தீர்ப்பு, மெய்மையில் மத சுயாதீனத்தை மறுக்கிறது, நீதிமன்றம்தானே மத சம்பந்தமான நடுநிலை வகிப்பை மீறியிருக்கிறது.”
அநேகர் விழிப்பூட்டப்பட்டு, தங்கள் கருத்துக்களைச் சொல்லும்படி தூண்டுவிக்கப்பட்டனர். நான்ஸான் பல்கலைக்கழகத்தில் அரசமைப்புச் சட்டவியல் பேராசிரியரான டாக்டர் டாகிஷி கோபாயாஷி இந்த வழக்கைப் பற்றிய தன் கருத்தை ஒசாகா உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, இவ்வாறு சொன்னார்: “சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் குறித்த சவாலை எப்படி கையாளுவார்கள் என்று வாதத்திலிருக்கும் இந்த வழக்கு நம் நாட்டிலுள்ள நீதிமன்றங்களை நிச்சயமாகவே கேட்கிறது. . . . மதமும் நாடும் தனிப்பட்டவை மற்றும் பொதுக் கல்வியின் நடுநிலையான நிலைநிற்கை ஆகியவற்றின் போர்வையின்கீழ், அந்தக் கல்லூரி, பெரும்பான்மையோரின் பொதுக் கருத்தின் அடிப்படையில் சிறுபான்மையோரின் மத நிலைநிற்கையைப் பொறுத்துக்கொள்ள அறவே மறுத்தது. கீழ் நீதிமன்றத் தீர்ப்பு, அப்படிப்பட்ட நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் அரசியல் சட்டத்திற்குட்பட்டவை என்றும் ஆதரித்தது. என்றபோதிலும், சிறுபான்மையோரின் நம்பிக்கை, பொதுவாக மதசார்பானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நோக்குநிலையிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லாவிட்டாலும், அப்படிப்பட்ட நம்பிக்கைகள் நேர்மையானவையாக இருந்தால் அவை மதிக்கப்படவேண்டும். விசேஷமாக நீதிமன்றமானது, சிறுபான்மையோருக்கு அதுவே முடிவாக வாதாடுவதாய் இருக்கிறது என்ற உணர்வுடன் தீர்ப்பளிக்கவேண்டியது அவசியம்.”
ஸுகூபா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு சட்ட நிபுணராகிய பேராசிரியர் டெட்ஸூயோ ஷிமோமுரா சொன்னார்: “இந்த வழக்கில் கவலைக்குரியதாக இருப்பது என்னவென்றால், அந்தப் பள்ளியின் பாகத்தில் இன்னும் ஆழமாக வேர்கொண்டிருக்கும் கொடுங்கோன்மையான மனப்பான்மைகளே.” ஒரு மாணவனுக்கு மாற்றுப் படி எதையும் கொடுக்காமல் வெளியேற்றுவது கற்பிக்கிறவர்களின் பாகத்தில் ஒரு குறையை வெளிப்படுத்துவதாயும் மாணவர்களின் நலனில் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாயும் இருக்கிறது.
பிப்ரவரி 22, 1994 அன்று, குனிஹீடோவை மீண்டும் கோப் டெக்கில் சேர்க்கும்படி அதன் முதல்வரிடம் கோப் வழக்குரைஞர் குழாம் பரிந்துரை செய்தது. குனிஹீடோவை மேல் வகுப்புக்கு உயர்த்த மறுத்ததும் அவரை வெளியேற்றியதுமான பள்ளியின் நடவடிக்கைகள் அவருடைய வணக்க சுயாதீனம் மற்றும் அவர் கல்வி பயிலுவதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவதாக இருந்தன என்று அது அறிவித்தது.
பாரபட்சமற்ற தீர்ப்பு
மேல்முறையீட்டு விசாரணைகள் தொடர்கையில், குனிஹீடோவைத் தவிர மற்ற நான்கு வாதிகளும் தங்கள் வழக்கை விட்டுவிட தீர்மானித்தனர். இது ஏனென்றால் அவர்களில் மூவர் ஏற்கெனவே அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்பட்டனர்; ஒருவர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். குனிஹீடோவை பள்ளி கையாண்ட முறையில் கவனம் செலுத்தப்படுவது, விவாதத்திற்குரிய விஷயமாவதில் இது விளைவடைந்தது.
என்றாலும், குனிஹீடோவின் பழைய வகுப்புத்தோழர் நான்குபேரும், எப்போதும் அந்த விசாரணைகளுக்கு ஆஜராக முயல்வதன்மூலம் தங்கள் மன ஆதரவை அளித்தனர். கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மாணவர் தன் பகுதிநேர வேலை மூலமாகச் சம்பாதித்த குறைந்த பணத்தைச் சேமித்து வைத்து, இந்தச் சட்ட வழக்கைத் தொடருவதற்கு குனிஹீடோவுக்கு உதவும்படி மொத்தமாக 1,00,000 யென்களை நன்கொடையாக அளித்தார்.
டிசம்பர் 22, 1994 அன்று, குனிஹீடோவும் மற்ற மாணவர்களும் ஒசாகா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி ரேஸுகி ஷிமாடாவின் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர்.
“முந்தின தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதி ஷிமாடா தீர்ப்பளித்தார்.
நீதிபதி ஷிமாடா, தன்னுடைய குறிப்பிடத்தக்க தீர்ப்பில், கென்டோ பயிற்சிகளை மறுப்பதற்கான குனிஹீடோவின் காரணம் நேர்மையானது என்று தீர்த்துக் கூறினார். பொது மக்களுக்கு தடைபடாததாக இருக்கும் ஒரு கல்வி நிறுவனமாக கோப் டெக் தன்னுடைய மாணவர்களுக்கு கல்விசார்ந்த சலுகையை அளிக்க கடமைப்பட்டிருக்கிறது என்று அந்த நீதிபதி குறிப்பிட்டார். கென்டோ பயிற்சியை ஏற்க மறுத்தது குனிஹீடோவுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அவரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை உண்மையில் அவர் கல்வியைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்பையும் நீக்கிப்போட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பள்ளி மாற்றுப் படிகளை அளிக்கவேண்டும் என்று நீதிபதி ஷிமாடா தீர்ப்பளித்தார். அப்படிப்பட்ட மாற்றுப் படிகளை அளிப்பது, அந்த மேல்முறையீட்டாளரின் மதத்தை எவ்விதத்திலும் முன்னேற்றுவிப்பதாகவோ உதவுவதாகவோ இல்லை; மற்ற மாணவர்களை ஒடுக்குவதாகவும் இல்லை என்று அவர் கூறினார். “மேல் முறையீடு தொடுக்கப்பட்டிருப்பவர் [அந்தப் பள்ளி] பாகத்தில் மாற்றுப் படிகளைக் கவனமாக ஆராய்ந்திருப்பதாக எவ்வித அத்தாட்சியும் இல்லை,” என்று அந்த நீதிபதி குறிப்பிட்டார். “மாறாக, . . . மேல்முறையீடு தொடுக்கப்பட்டிருப்பவர், கென்டோ பயிற்சி மறுப்பை பொறுத்துக்கொள்ளாத போக்கை பிடிவாதமாகக் காத்துக்கொண்டு, மாற்றுப் படிகளை அளிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய தொடங்கக்கூட இல்லை.”
இந்தத் தீர்மானம் உங்களை எப்படி பாதிக்கிறது
சிறுபான்மையோர் தொகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞனின் வெற்றியில் நீங்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? முன்னாள் வாட்டர்கேட் ஊழலின் விசேஷ வழக்குரைஞராக இருந்த ஆர்ச்சிபால்ட் காக்ஸ், நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டமும் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் கொடி வணக்கப் பிரச்சினையில் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து அதைப்போன்ற ஒரு கேள்வியைக் கேட்டார்: “அந்த மிகச் சிறிய சிறுபான்மையோர் தொகுதியின் ஆவிக்குரிய சுதந்திரத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?”
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், காக்ஸ் சொன்னார்: “நம் சமுதாயம் சார்ந்திருக்கிற தனிப்பட்ட பெருமிதத்தின் ஆதாரத்தில் அதன் பதிலின் ஒரு பகுதி அமைந்திருக்கிறது; இந்தத் தனிப்பட்ட பெருமிதம் வைதீகத்தைச் சேர்ந்தவரும் திருச்சபைக் கொள்கையைச் சேர்ந்தவருமாகிய இருவருக்கும் உரியதாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய பேச்சை நாடு அமைதிப்படுத்திவிட்டதென்றால் . . . , அடுத்ததாக நம்முடையதை அவ்வாறு செய்யக்கூடும் என்பதை அறிந்திருப்பதிலும் அதன் பதிலின் இன்னொரு பகுதி அமைந்திருக்கிறது.”
ரியுகோக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாகிஷி ஹிரானோ, காக்ஸுடன் இதை ஒத்துக்கொண்டு, கென்டோ வழக்கைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “அநேக நீதிமன்ற வழக்குகளில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போரிட்ட யெகோவாவின் சாட்சிகளுக்குத் தற்போது ஐக்கிய மாகாணங்களிலுள்ள வணக்க சுயாதீனம் தங்களுக்கும் உரியதாக இருக்கிறது என்று சிந்திக்கும் ஆட்கள் கருதுகிறார்கள். நம்முடைய [ஜப்பான்] நாட்டிலும்கூட, இதுபோன்ற வழக்குகள் மூலமாக வணக்க சுயாதீனம் நிறுவப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.”
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நம்பிக்கைகளைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாப்பதில் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை; 20-ம் நூற்றாண்டில் அடிப்படை மனித உரிமைகளை நிறுவுவதற்கு அவர்கள் பெரும் பங்கை வகித்திருக்கிறார்கள். அநேக நாடுகளில் யெகோவாவின் சாட்சிகள், அறிவூட்டப்பட்ட தெரிவைச் செய்வதற்கான நோயாளியின் உரிமை, தேசிய கொடிக்கு எப்படி மரியாதை காட்டவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்களின் உரிமை, தன் சொந்த நம்பிக்கைகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக் கூறுவதற்கான ஒரு தனி நபரின் உரிமை ஆகியவற்றை ஆதரித்துச் சட்ட வழக்குகளைத் தொடுப்பதில் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர். சிறுபான்மையோரின் உரிமைகளை நிலைநாட்டுவதில் யெகோவாவின் சாட்சிகளுடைய பங்களிப்பின் பதிவில், ஒசாகா உயர் நீதிமன்றத்தின் வெற்றி மற்றொரு குறிப்பிடத்தக்க சேர்க்கையாக இருக்கிறது.
வேறுபட்ட மதிப்பீடுகளை உடையவர்களை மதித்தல்
மனித உரிமைகளை முன்னேற்றுவிக்கிற பலனுடன் சேர்ந்து, சிறுபான்மையோரின் நம்பிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளும் விவாதம் உங்கள் வாழ்க்கையில் மற்றொரு விதத்தில் தொடர்புடையதாய் இருக்கிறது. கோமாஸாவா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கானாமே சாருயா இந்த வழக்கைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “அரசமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பட்ட வணக்க சுயாதீனம், [அந்த மாணவன்] வித்தியாசப்பட்டவனாக இருந்ததால் அலட்சியம் செய்யப்பட்டது. வழக்கத்திலிருந்து வித்தியாசப்பட்டதாய் இருப்பதை ஏற்க மறுப்பது ஜப்பானில் பரவலாக இருக்கிறது.”
வேறுபட்டதாக அல்லது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும் எதையும் அழிப்பதற்கான அழுத்தம் மிகவும் பலமாக இருக்கிறது. ஜப்பானிலும் மற்ற நாடுகளிலும் பள்ளிகளில் பரவியிருக்கும் அடாவடித்தனம், அந்தச் சமுகத்துடையதிலிருந்து வித்தியாசப்பட்டதாக இருப்பதை ஒதுக்கிவைக்கும் மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பள்ளியில் அடாவடித்தனம் செய்கிறவர்களைப்பற்றி, டோக்கியோ நகரிய காவல்துறையின் பொது மேற்பார்வையாளர் சொன்னது என்னவென்றால், காவல்துறையியலின் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, அடாவடித்தனம் செய்வதற்குரிய காரணங்களில் பெரும்பாலானவை, அடாவடித்தனம் செய்தவருடைய நோக்கில், அப்படி கொடுமையாக நடத்தப்பட்டவர்களின் ஆளுமைகளும் செயல்களும் வித்தியாசப்பட்டிருந்ததே ஆகும். அவர் முடிவாக இவ்வாறு கூறினார்: “விநோத மனப்போக்குகளை அல்லது உடல்சம்பந்தமாகவும் மனம்சம்பந்தமாகவும் வித்தியாசமாக இருப்பவற்றை ஏற்க மறுப்பதான, ஜப்பானிய சமுதாயத்தில் ஆழமாக மறைந்துகிடக்கும் ஒரு ஆரோக்கியமற்ற பண்பு தற்போது வெளித்தோன்றிக்கொண்டு இருக்கிறது.”
சமுதாயத்திலிருந்து வித்தியாசப்பட்டதாக இருப்பதை ஒதுக்கிவைக்கும் மனச்சாய்வு, ஜப்பானில் மட்டுமல்ல, எங்கும் காணப்படுகிறது. இருந்தாலும், சமாதானத்துடன் ஒன்றாக வாழ்வதற்கு முக்கிய அம்சமானது வித்தியாசப்பட்ட மதிப்பீடுகளைப் பொறுத்துக்கொள்ளும் திறனிலேயே இருக்கிறது. கோப் மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஒசாகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் “ஒரு முனைப்பான வேறுபாட்டை ஏற்படுத்தின” என்று இதைக் குறித்து ஆஸாஹி ஷிம்புன்-லுள்ள தலையங்கக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டது. “அந்த இரு தீர்ப்புகளும் இரண்டு விதமான சிந்தனையை அடையாளப்படுத்துவதாகத் தெரிகிறது,” என்று அந்தச் செய்தித்தாள் கூறியது; அதாவது ஒன்று, நிர்வாக நோக்குள்ள அடக்குமுறையும் மற்றொன்று, வேறுபட்ட மதிப்பீடுகளைச் சகித்துக்கொள்ளுதலும் ஆகும்.
வேறுபட்ட மதிப்பீடுகளைச் சகித்துக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மற்றவர்களுடைய நிலைநிற்கையிலுள்ள நியாயத்தன்மையைக் காண நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அக்கறைக்குரியவிதமாக, இந்தக் கட்டுரையில் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள ஆர்ச்சிபால்ட் காக்ஸ், சிறுபான்மையோரில் அக்கறைகொள்வதற்கு மற்றுமொரு காரணத்தைக் கூறினார்: “அரியதோர் சிறுபான்மையோர் தொகுதி சத்தியத்தை—காலங்கடத்தப்பட்ட அல்லது கீழடக்கப்பட்டதால் நித்தியமாக இழக்கப்பட்ட ஒரு சத்தியத்தை—கண்டுபிடிக்கக்கூடும் என்பதை அறிந்திருப்பதிலும் பதில் அமைந்திருக்கிறது.”
கோப் டெக்கிலுள்ளவர்கள் தாங்கள் கீழடக்கி வைத்திருந்திருக்கக்கூடிய சத்தியத்தில் அக்கறை உடையவர்களாகவும் இல்லை, சகித்துக்கொள்ளும் மனநிலையைக் காண்பிப்பவர்களாகவும் இருக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. மாறாக, அவர்கள் ஜப்பானின் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கை மேல்முறையீடு செய்திருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிற்கு எப்படி தீர்ப்பு வழங்கும்? காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
[பக்கம் 14-ன் படம்]
குனிஹீடோவும் (நடுவில்) மற்ற நான்கு பழைய வாதிகளும்