உலகத்தைக் கவனித்தல்
வத்திகனின் ஒரு “முரண்பாடு”
“புனிதரே, வத்திகன் ஏன் இன்னும் சிகரெட்டுகளை விற்பனை செய்கிறது?” என்று ரோமிலுள்ள குருமார்களுடன் நடக்கும் போப்பின் வருடாந்தர பேட்டியின்போது, ஜான் பால் II-விடம் பாதிரியார் ஒருவர் கேட்டார். அவர் தொடர்ந்து கேட்டதாவது: “உடல் நலத்தைக் கெடுப்பது ஒருபுறமிருக்க, உடல்நல பாதுகாப்பிற்காக தங்களின் தொடர்ச்சியான முறையீட்டிற்கும் நம்முடைய திருச்சபைசார்ந்த செயலுக்கும் இந்த வியாபாரம் முரண்படுகிறது.” 76 வயது பாதிரியார் யூகோ மெஸ்ஸீன்னீ என்பவருக்கு “புகைபிடித்தல் உங்கள் உடலுக்குப் பாதிப்பு,” என்ற வாசகத்தைத் தாங்கிய புகையிலையையும் சிகரெட்டுகளையும் வத்திகன் விற்பனைசெய்யும் உண்மையானது, “இறைச்சான்றிற்கு எதிராகவும்” மற்றும் போப்பின் செய்திக்கு “முரண்பாடாகவும்” உள்ளது. ரோம செய்தித்தாள் இல் மெஸ்ஸாஜெரியோ-ல் அறிவித்தப் பிரகாரம், புகையிலை விவகாரத்தில் தன்னுடைய “மனச்சாட்சி சுத்தமாக உள்ளது,” என்று போப் பதிலளித்தார். ஆயினும் வத்திகனின் சிகரெட் விற்பனையைக்குறித்து அதனை மேற்பார்வை செய்யும் தன்னுடைய திருத்தூதரிடத்தில் பேசுவதாகக் கூறினார்.
“சாத்தானின் நூற்றாண்டு”
“இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான அம்சங்களை கருத்தில்கொண்டால், இது சாத்தானின் நூற்றாண்டு,” என்பதாக நியூ யார்க் டைம்ஸ்-ன் இதழாசிரியரின் கட்டுரை கூறுகிறது. “இனம், மதம் அல்லது வகுப்பு இவற்றின் காரணமாக, மற்ற மனிதர்களை லட்சக்கணக்கில் கொல்வதில் இவ்வளவதிக மனச்சாய்வையும் ஆசையையும் மனிதர்கள் முன்னொருபோதும் வரலாற்றில் காட்டியதே கிடையாது.” 50 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஔஸ்ச்விட்ஸ் மரண முகாமை அது உதாரணமாக காட்டுகிறது. “தீக்குச்சிகள் போன்று ஒல்லியாக இருந்த அடிமை வேலைக்காரர்களையும் புத்திபேதலித்துப்போன ஆய்வுக்கூட சோதனைகளில் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்த பிள்ளைகளையும் நான்கு விஷவாயு அறைகளின் எஞ்சிய பகுதிகளையும் ஒருகாலத்தில் நாள் ஒன்றுக்கு 20,000 இரையானோரைக் கொன்ற, பிணங்களை எரிக்கும் அடுப்புகளின் எஞ்சிய பகுதிகளையும்,” ஜெர்மானியரின் இந்தச் சித்திரவதை முகாமை விடுவித்தவர்கள் கண்டார்கள் என்றும், “43,000 ஜதை ஷூக்களையும் மனித முடியின் குவியல்களையும் எரிப்பதற்கு குவித்துவைத்தார்போன்று மனித உடல்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தது,” அவர்களின் நினைவில் தீ வடுவைப்போன்று பதிந்துவிட்டிருக்கிறது என்றும் இதழாசிரியரின் கட்டுரை கூறுகிறது. “ஔஸ்ச்விட்ஸில் நடந்தவை இன்றுவரை புலனுணர்வுக்கும் புரிந்துகொள்ளும் திறனுக்கும் எட்டாமலே இருக்கின்றன,” என்று அது மேலும் கூறுகிறது.
உணவு பற்றாக்குறைகள் எதிர்பார்க்கப்படுகின்றன
“தொழில் நுட்பவியலை மாற்றியமைப்பதில் பெரும் மூலதனம் இருந்தால் தவிர, மிகக் கடுமையான பிரச்சினைகளை ஒருவேளை நாம் எதிர்ப்படக்கூடும்,” என்று எகிப்திலிருந்து மேம்பாட்டு வல்லுநரும் உலக வங்கியின் துணைத் தலைவருமாய் இருக்கும் இஸ்மாயில் சராக்கெல்டீங் கூறுகிறார். அத்தியாவசிய உணவு அதிகரிக்கப்படும் தேவையை—ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பாகங்களில் ஏற்கெனவே வழங்கீட்டை மிஞ்சிக்கொண்டிருக்கும் தேவையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அங்கெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சி உச்ச வேகத்தில் உள்ளது. “எத்தகைய தடுப்புமுறையைக் கையாண்டாலும் அடுத்த 20 வருடங்களில் கூடுதலான 200 கோடி [மக்களை] நாம் கொண்டிருப்போம், அவர்களில் 95 சதவிகிதத்தினர் மிகவும் ஏழ்மையான நாடுகளில் வாழ்வார்கள்,” என்று அவர் கூறினார். கடந்த 25 வருடங்களில் அடிப்படை பயிர் விளைச்சலில் திடீர் அதிகரிப்புகள் இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் வரம்புகளின் காரணமாக கூடுதலான பயிர் விளைச்சலின் அதிகரிப்பைப் பெறுவது மிகவும் கடினம். கொடிய பூச்சிகள், தாவர நோய்கள் மற்றும் நிலம் சீரழிதல் போன்றவற்றால் தானியங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. உவர்ல்டுவாட்ச் இன்ஸ்டிட்யூட்டும் இதை அங்கீகரிக்கிறது. அது “உலகமானது சுற்றுச்சூழலை நிறுவமுடியாத பொருளாதார பாதையில் இருப்பதற்கான அத்தாட்சியை, மீன் பிடிப்புக்கள் சீராகக் குறைதல், அடிநில நீர்மட்டம் குறைதல், பறவை இனங்கள் குறைதல், வெப்ப அலைகளின் பதிவு, தானியத்தின் இருப்பு குறைதல் போன்ற கொடுக்கப்படும் வெகு சில உதாரணங்கள் மூலம் காணலாம்,” உலகத்தின் நிலைமை 1995 (ஆங்கிலம்) என்ற தன் அறிக்கையில் இவ்வாறு கூறியது.
வயதும் திட்ட உணவும்
இப்போது, 50 வயதுக்கு மேல் உள்ள ஆட்கள் நடுத்தரவயதில் கூடிய அதிக எடையைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் என்பதாக லண்டனின் தி டைம்ஸ் அறிவித்தது. உதாரணமாக, நுகர்வோர் சங்க பத்திரிகையின் ஆசிரியர் டேவட் டிக்கின்ஸன் கூறுவதாவது: “உயரத்திற்கு ஏற்ற எடை விகிதத்திற்கு அதிகப்படியாக இருக்கும் எவரும் அதிக குண்டு என்றும் மெலிந்தாகவேண்டும் என்ற அறிவுரையும் தவறாக பொருள்கொள்ளப்பட்டுள்ளது. உயரத்துக்கு ஏற்ற எடையின் பாதிப்பைச் சார்ந்திராது, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மெலிதல் பாதிக்கலாம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலோர் மெலியவேண்டிய தேவையில்லை.” ஊட்டச்சத்து மற்றும் உணவூட்ட இயல் பேராசிரியர் டாம் சான்டர்ஸ் விளக்குகிறார்: “கொழுமையின் உடல் ஆரோக்கிய ஆபத்துக்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுகின்றன. சர்க்கரை நோயையும் மூட்டு அழற்சியையும் அது அதிகரிக்கவே செய்கிறது, ஆனால் பருமனால் வரும் உடல் ஆரோக்கிய ஆபத்துக்கள் சிறியவையே. இது ஒருவேளை பெண்களுக்கு நன்மைகளையும்கூட வழங்கலாம்.” உடல் ஆரோக்கியத் துறையின் டாக்டர் மார்டீன் உவைஸ்மேன் ஆலோசனை கூறுகிறார்: “எந்த வயதிலும் அதிக பருமனாக அல்லது அதிக ஒல்லியாக இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். அதை அடைவதற்கான சிறந்த வழி கணிசமாக சாப்பிடுவதும் மற்றும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதும் ஆகும், ஆனால் நமக்கு வயதாக வயதாக பருமனாக இருத்தல் மெலிந்திருத்தலைக் காட்டிலும் சிறந்தது.”
நன்மை பயக்கும் விபத்தா?
வாத்துகள், ஆமைகள், நீர்நாய்கள் மற்றும் தவளைகள் போன்ற வடிவிலுள்ள 29,000 பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் நிரம்பிய ஒரு கொள்கலம், ஜனவரி 1992-ல் வடக்கு பசிபிக் புயலால் கப்பலிலிருந்து கடலுக்கு அடித்துச்செல்லப்பட்டது. இந்த விபத்து விஞ்ஞானிகளுக்கு ஒரு நன்மையாக நிரூபித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடலில் அடித்துச்செல்லப்பட்ட 61,000 நைக்கீ அத்லெடிக் ஷூக்களைப்போன்று இல்லாமல், இந்தக் குறைந்த எடையுள்ள விளையாட்டுப் பொருட்கள் கிட்டத்தட்ட முற்றிலும் தண்ணீரின்மேல் மிதந்து காற்றாலும் பெருங்கடலின் நீரோட்டங்களாலும் அடித்துச்செல்லப்பட்டன. இது வடக்கு பசிபிக் கடலின் கடல் ஓதங்களை ஆய்வு செய்யும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் காற்றின் பாதிப்பையும் சேர்த்துக்கொள்ளச் செய்தது. கடலில் விழுந்து சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் தென்கிழக்கு அலாஸ்காவின் கடற்கரைகளில் முதலில் விளையாட்டுப் பொருட்கள் தென்படத் துவங்கின, 850 கிலோமீட்டர் நீளமுள்ள அலாஸ்கா வளைகுடாவில் மேலும் 400 விளையாட்டுப் பொருட்கள், தொடர்ந்துவந்த பத்து மாதங்களில் கரைசேர்ந்தன. 13 சென்டிமீட்டர் நீளத்திற்கு அதிகமில்லாத இந்தச் சிறு விளையாட்டுப் பொருட்கள் ஹாங்காங்கிலிருந்து அ.ஐ.மா.-வின் வாஷிங்டனில் உள்ள டாகோமாவிற்கு கப்பலேற்றப்பட்டன. இறுதியாக சில, பேரிங் ஜலசந்தியைக் கடந்து, மிதக்கும் பனிக்கட்டிப் பாலத்துடன் பிரயாணம்செய்து, ஆர்க்டிக் பெருங்கடலைக் கடந்து, அட்லான்டிக் பெருங்கடலில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலியோ மீது அரைகுறையான வெற்றி
போலியோ என்று பரவலாக அறியப்படும் முடக்கு இளம்பிள்ளைவாதம் வரலாறு முழுவதிலும் ஒரு கோடி ஆட்களைக் கொன்றதாக அல்லது முடமாக்கியதாக சொல்லப்படுகிறது. பண்டைய எகிப்து, கிரீஸ், ரோம் அவர்களின் காலத்து செதுக்கப்பட்ட உருவங்களில் இது தீட்டப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் இளம்பிள்ளைகளையே தாக்குகிறது, அது முடக்குவாதத்தை உண்டாக்குகிறது அல்லது மூச்சடைப்பான் மூலம் மரணத்தை விளைவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு பிரிவாகிய அனைத்து அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் பிரகாரம் புவி அரைக்கோளத்தின் மேற்குப்பகுதி வரை போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகிறது. 1991-ல் ஒரு கால் சேதத்துடன் தப்பிய பெருவீயன் பிள்ளை ஒன்றுதான் கடைசியாக அறிவிக்கப்பட்ட நோயாளி. ஆயினும் 1977-ல் உலகமுழுவதிலிருந்தும் ஒழிக்கப்பட்ட பெரியம்மையைப்போன்று இல்லாமல், இந்தப் போலியோ வைரஸ் வேறு பிரதேசங்களில் இன்னும் காணப்படுகின்றது, குடிப்பெயர்ச்சி மற்றும் பிரயாணம் மூலம் அமெரிக்காக்களில் திரும்பவும் அறிமுகம் செய்யப்படலாம். கடைசி முழுமையான அறிக்கையானது அந்த ஆண்டில் 10,000-க்கும் குறைவான நோயாளிகளைக் காட்டியது. முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை நோய்த் தடுப்பாற்றல் கொடுப்பது தொடரவேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தைவானுடைய மனிதக்குரங்கின் தர்மசங்கடம்
தைவான் அதிகாரிகள் ஒரு புதுமையான பிரச்சினையை எதிர்ப்படுகிறார்கள்: தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் “பொருத்தமான துணை” என்று காட்டப்பட்டதிலிருந்து, 1986-ல் நவீனபாணி செல்லப் பிராணிகளாக மாறிய மனிதக்குரங்குகளை என்ன செய்வது என்பதாகும். நியூ சையன்டிஸ்ட்-ல் அறிவித்தப் பிரகாரம் சுமார் ஓராயிரம் குட்டி மனிதக்குரங்குகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, செல்லப் பிராணிகளாக விற்கப்பட்டன. இப்போது அந்த மிருகங்கள் பாலியல் முதிர்ச்சியை நெருங்க நெருங்க, வலியத் தாக்கும் தன்மையுள்ளவையாகவும் நிதானிக்க முடியாதவையாகவும் மாறியுள்ளன, நூற்றுக்கணக்கானவை அவற்றின் எஜமான்களால் கைவிடப்படுகின்றன. ஏனென்றால் அவை தனித்துவாழும் மிருகங்கள், சிம்பான்ஸீகள் மற்றும் கொரில்லாக்கள் போன்று சமுதாயக் கூட்டமாக ஒற்றுமைப்படும் பிரச்சினையை எதிர்ப்படுவதில்லை, வீட்டில் பயிற்றுவிக்கப்பட்ட மனிதக்குரங்குகளை காட்டில் திரும்பவும் கொண்டுவிடலாம். ஆயினும் இந்தச் செல்லப் பிராணிகள் மனித நோய்களான ஈரல் அழற்சி (hepatitis B) மற்றும் காசநோய் போன்றவற்றை பற்றிக்கொண்டுள்ளன, ஏற்கெனவே ஆபத்திலிருக்கும் காட்டிலுள்ள மனிதக்குரங்குகளை ஆபத்திற்குள்ளாக்கலாம். அநேகம் அழிக்கப்படக்கூடும், தங்களுடைய மீதமுள்ள வாழ்நாளை உற்சாகமற்ற விலங்கு புகலிடத்தில் கழிப்பதைவிட அழித்துவிடுவதே தயவான காரியம் என்று சிலர் கருதுகிறார்கள்.
டோரன்டோ தெருவோரப் பிள்ளைகள்
டோரன்டோ நகரில் கிட்டத்தட்ட 10,000 தெருவோரப் பிள்ளைகள் நிலையான அடிப்படையில் திரிகிறார்கள் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். “இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது,” என்று தி டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. “தெருவோரப் பிள்ளைகளில் பலர், துர்ப்பிரயோகம் முதற்கொண்டு தாங்கள் கீழ்ப்படிய மறுத்த பெற்றோர்களின் விதிமுறைகள் வரையாக, வீட்டு பிரச்சினைகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் போதைப்பொருள், வன்முறை, வேசித்தனம், மணிக்கணக்கில் வெறுமையான சலிப்பு இவற்றின் உலகைப்பற்றி கூறுகிறார்கள்.” டோரன்டோவின் தெருவோரப் பிள்ளைகளில் 54 சதவீதத்தினர் வேசித்தனத்தில் ஈடுபடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து பெண்பிள்ளைகளில் ஒருத்தி கருத்தரிப்பாள், 80 சதவீதத்தினர் போதைப்பொருள் அல்லது குடியை உபயோகிக்கின்றனர், 67 சதவீதத்தினர் துர்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர் மற்றும் 43 சதவீதத்தினர் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். “எவராவது தெருவாழ்க்கை பகட்டானது, குதூகலமானது என்று சொன்னால் நம்பாதீர்கள். இது மரணத்தைப்போன்றது, இது வாழ்க்கையே அல்ல,” என்கிறான் ஒரு இளைஞன். “சிலருக்குப் போதைப்பொருள், வேசித்தனம் மற்றும் குற்றச்செயலில் மேலும் மேலும் ஈடுபடும் வாழ்க்கையில் தொடர்ந்திருப்பதிலிருந்து விடிவைக் காண்பதில்லை; சற்று பெரியவர்களாகவும் அறிவாளிகளாகவும் இருக்கும் மற்றவர்கள், கல்வியும் வேலையும் கிடைக்குமா என்று எதிர்நோக்குகிறார்கள்,” என்று ஸ்டார் மேலும் கூறுகிறது.
அந்தப் பல்லை காப்பாற்றுங்கள்!
விபத்தால் ஒரு பல் தட்டி விழுந்துவிடுமென்றால், அதை தூர எறிந்துவிடாதீர்கள் என்று UC பெர்கெல்லி வெல்னஸ் லெட்டர் அறிவுரை கூறுகிறது. “30 நிமிடங்களுக்குள் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்றால், அதை மீண்டும் பொருத்துவதில் 50% வெற்றி வாய்ப்பு உங்களுக்கு உள்ளதை ஆராய்ச்சி காட்டுகிறது.” நீங்கள் என்ன செய்யவேண்டும்? எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியாக இருக்க முயலுங்கள். பல்லை அதன் தலைப்பகுதியில் பிடித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் மெதுவாக அலம்பிச் சுத்தம் செய்யவும்—அதை தேய்க்க வேண்டாம். உங்களுடைய விஜயத்தை அறிவிக்க உங்களுடைய பல் மருத்துவரிடம் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும். அவர் வேறு ஏதாகிலும் சொன்னாலே தவிர, பல்லை மெதுவாக திரும்பவும் பல்லடிக்குழியில் பொருத்தவும். அந்தப் பல் அமருவதற்காக, ஐந்து நிமிடங்களுக்கு ஒரு சுத்தமான துணி அல்லது கைக்குட்டையை அழுத்தமாக கடிக்கவும், நீங்கள் மருத்துவரை சென்று பார்க்கும் வரை, மிதமான அழுத்தம் கொடுத்து தொடர்ந்து கடித்துக்கொண்டே இருங்கள். உங்களால் உடனே பல்லை திரும்பவும் பொருத்த முடியவில்லை என்றால், உங்களுடைய வாய்க்குள் அதை உமிழ்நீரில் முக்கி வைத்திருங்கள். மிகவும் சிறிய பிள்ளைகள் ஒருவேளை பல்லை விழுங்கிவிடலாம், பல்லை ஒரு பிளாஸ்டிக் பையில் அல்லது ஒரு கோப்பையில் வைத்து பாலில் அல்லது சிட்டிகையளவு உப்பு கலந்த தண்ணீரில் அமிழ்த்தி வைத்திருக்கவும். அதிக நேரம் கடந்துவிட்டபோதிலும் பல் மருத்துவரை சென்று பார்ப்பது மிகவும் சிறந்தது, என்ன செய்வது என்று அவர் முடிவெடுக்கட்டும். “ஒரு பல்லைக் காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சி நிச்சயமாகவே மதிப்புடையது,” என்று அந்த அறிக்கை சொல்கிறது.