ஒரு துப்பாக்கிக் குண்டு என் வாழ்க்கையை மாற்றினது
பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் தங்கள் சிருஷ்டிகரைப் பற்றிய அறிவையும் அவரைச் சேவிக்க வேண்டுமென்ற ஆவலையும் படிப்படியாக அறிவுறுத்தி வருவதே அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாகும். நான் பருவ வயதினளாகத்தான் இருந்தேன், அப்போது எனக்கு நேரிட்ட துயர விபத்து ஒன்று இந்த உண்மையை மதித்துணரும்படி எனக்கு உதவி செய்தது.
அப்போது—20-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால்—நடந்ததை விவரிப்பதற்கு முன்பாக, ஐக்கிய மாகாணங்களின் தெற்கு பாகத்தில் நான் வளர்ந்தபோதான என் வாழ்க்கையைப் பற்றி சிறிது சொல்கிறேன். மீறிய கடும் துன்ப அனுபவங்களை நான் எவ்வாறு சமாளிக்க முடிந்திருக்கிறதென்பதன் பேரில் இது நேரடியாகச் சார்ந்திருக்கிறது.
என் வாழ்க்கையை உருப்படுத்தி அமைத்தது
நான் அலபாமாவிலுள்ள பர்மிங்ஹாமில்—இன வேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்ட தென் பாகத்தில்—ஜனவரி 1955-ல் பிறந்தேன். நான் எட்டு வயதே ஆனவளாக இருந்தபோது, எங்கள் வீட்டுக்குச் சிறிது தூரத்தில் வெடித்த ஒரு வெடிகுண்டு, ஞாயிறு பள்ளி வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது ஒரு சர்ச்சைத் தகர்த்தெறிந்தது. ஏறக்குறைய என் வயதாயிருந்த கறுப்பர் பிள்ளைகள் பலர் திகிலடைந்தவர்களாய் அலறிக்கொண்டு வெளியில் ஓடினர்; மற்றவர்கள் இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருக்க வேதனையால் முனகிக்கொண்டிருந்தனர். நான்கு பேர் இறந்துவிட்டனர்—வெள்ளையரால் கொலை செய்யப்பட்டனர்.
இத்தகைய துன்ப நிகழ்ச்சிகள் தெற்கு பாகத்தில் அடிக்கடி நேரிடுபவையே. இதற்குப் பின்னான கோடைகாலத்தில், பொது உரிமைத் துறை வேலையாளர்கள் மூவர் மிஸ்ஸிஸிபியில் கொலை செய்யப்பட்டனர். அவை எங்கள் எல்லாரையும் பாதித்த இனக் கலவரத்தின் பயங்கர நாட்களாக இருந்தன.
என் தாய் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தார்கள், 1966-ல் தகப்பனும் அவர்களில் ஒருவரானார். விரைவில் எங்கள் முழு குடும்பமும், சமாதானமான ஒரு புதிய உலகத்தைப்பற்றிய, பைபிளில் ஆதாரம் கொண்ட எங்கள் நம்பிக்கையை எங்கள் அயலாருடன் பகிர்ந்துகொண்டிருந்தது. (சங்கீதம் 37:29; நீதிமொழிகள் 2:21, 22; வெளிப்படுத்துதல் 21:3, 4) 1960-க்குரிய பத்தாண்டுகளின் முடிவுப் பகுதியின் கோடைகாலங்களின்போது ஒவ்வொரு சனிக்கிழமையும், பர்மிங்ஹாமுக்கு வெளியிலிருந்த, பிரசங்கிக்கப்பட்டிராத பிராந்தியங்களுக்குப் பிரசங்கிக்கும்படி சென்றோம். அங்கே, யெகோவாவின் சாட்சிகளைப்பற்றியோ நாங்கள் பிரசங்கித்த ராஜ்ய செய்தியைப் பற்றியோ ஜனங்கள் ஒருபோதும் கேட்டிருக்கவில்லை. யெகோவா என்ற கடவுளுடைய பெயரும்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. (சங்கீதம் 83:17) இந்தப் பொல்லாதப் பழைய உலகத்தை நீக்கி அதனிடத்தில் பூமிக்குரிய ஒரு பரதீஸை நாட்டப்போகிற யெகோவாவின் நோக்கத்தைப்பற்றி, அந்தக் குழப்பமான காலங்களின்போது ஜனங்களிடம் பேசுவதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைந்தேன்.—லூக்கா 23:43.
வாழ்க்கையில் ஓர் இலக்கை வைத்தல்
டிசம்பர் 1969-ல் யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீரில் முழுக்காட்டப்படுவதால் அடையாளப்படுத்தினேன். யெகோவாவிடம் நான் ஜெபித்து, முழுநேர ஊழியத்தை என் வாழ்க்கைப் போக்காகத் தொடர்ந்து செய்யும்படியான என் உள்ளப்பூர்வ ஆவலைத் தெரியப்படுத்தினேன். சில வாரங்களுக்குப் பின்னால், என் தகப்பன், பர்மிங்ஹாமுக்குச் சில மைல்கள் தூரத்தில் ஆடம்ஸ்வில்லில் இருந்த சிறிய சபைக்கு உதவிசெய்யும்படி நியமிக்கப்பட்டார். இந்தப் பிராந்திய மாற்றம், பயனியராக, அல்லது முழுநேர போதக ஊழியம் செய்பவளாக இருக்கும்படியான என் ஆவலைப் பெருகச் செய்தது. என் உயர்நிலைப் பள்ளி படிப்பு ஆண்டுகளின்போது கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பின்போதும் தற்காலிகப் பயனியராக ஊழியம் செய்வேன். இது, ஒவ்வொரு மாதமும் குறைந்தது 75 மணிநேரம் செலவிடுவதை உட்படுத்தினது.
நான் பள்ளி படிப்பில் தேறின பின்பு முழுநேர ஊழியத்துக்கு என்னை ஆயத்தம் செய்வதற்கு ஒரு தொழிலைக் கற்கும்படி தீர்மானித்தேன். ஆனால் என் உயர்நிலைப் பள்ளி படிப்பின் கடைசி ஆண்டில் ஒரு சவாலை எதிர்ப்பட்டேன். தனிப்பட்ட உயர்ந்த மார்க்குகளைப் பெற்றிருந்த ஒரு தொகுதியாருக்குள் நானும் இருந்தேன். ஆகவே ஒரு நாள் ஏதோ உயர் கல்விக்கான சோதனைகளுக்காக அருகிலிருந்த பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பின்பு, ஆலோசகருடைய அலுவலகத்துக்கு வரும்படி அழைக்கப்பட்டேன். அந்த அம்மாள் என் நிமித்தமாக ஆர்வ பரபரப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தார்கள். “நீ முதன்மைநிலை பெற்றுவிட்டாய்!” என்று உணர்ச்சி பொங்கியவாறு சொன்னார்கள். “நீ தெரிந்துகொள்ளும் எந்தக் கல்லூரியிலும் உனக்கு இடம் கிடைக்கும்!” உபகாரச் சம்பளத்துக்காக விண்ணப்பத் தாள்களை அப்போதே நிரப்பத் தொடங்கும்படி சொன்னார்கள்.
இதற்கு நான் ஆயத்தமாக இராததால் மனக்குழப்பமடைந்தேன். நான் முழுநேர போதக ஊழியம் செய்பவளாகும்படியும், இந்த ஊழியத்தில் என்னை ஆதரிப்பதற்கு உலகப்பிரகாரமான பகுதிநேர வேலை செய்யும்படியுமான என் திட்டங்களை உடனடியாக விளக்கிக் கூறினேன். பின்னால், மற்ற சாட்சிகள் செய்திருக்கிறபடி, அயல் நாடு ஒன்றில் மிஷனரியாக நான் சேவிக்கக்கூடும் என்றும் அவர்களிடம் சொன்னேன். ஆனால் நான் சொன்னது அவர்கள் காதில் விழாததுபோல் இருந்தது. அறிவியலில் நான் முதன்மை பெற்றதாகக் கூறி, அவ்விடத்து கல்லூரி ஒன்றுக்குச் சென்று படித்தால், அறிவியல் ஸ்தாபனம் ஒன்றில் எனக்கு வேலை கிடைக்கும்படி தான் பார்த்துக்கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.
“உன் மதத்தை வார இறுதிநாட்களுக்கு மட்டுப்படுத்திக்கொள், குளோரியா. உன் பெற்றோர் உன்னைக் குறித்து பெருமையுடையோராக இன்னும் இருப்பர்,” என்று சொன்னார்கள். என்னுடைய முழுநேர ஊழிய இலக்கு, என் பெற்றோர் வற்புறுத்தித் தூண்டினதன் விளைவாக உண்டானதென்று எண்ணிக்கொள்ளும் அவமதிப்பை உணர்ந்தேன். இந்த மகத்தான வாய்ப்பை ஏற்க மறுப்பதன்மூலம் கறுப்பர் இனம் முழுவதற்குமே என் முதுகைத் திருப்பிக் கொண்டதுபோல் நான் சங்கட உணர்ச்சியடையும்படி செய்தார்கள். எனினும், நான் உறுதியாக நிலைநின்றேன். பள்ளி படிப்பு முடிந்த பின்பு, கல்லூரி படிப்பைத் தொடருவதற்குப் பதிலாக, செயலராகப் பகுதிநேரம் வேலைசெய்யத் தொடங்கினேன்.
ஒரு பயனியர் துணைக்காகத் தேடினேன், ஆனால் ஒருவரும் கிடைக்கவில்லை. பயணக் கண்காணி எங்கள் சபையைச் சந்தித்தபோது, என் பிரச்சினையைப் பற்றி அவரிடம் சொன்னேன். “உனக்கு ஒரு துணை தேவையில்லை,” என்று சொன்னார். பின்பு, உலகப்பிரகாரமான வேலை பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் அதோடுகூட பயனியர் செய்ய போதிய நேரம் இருப்பதற்கும் ஏற்றவாறு ஒரு திட்டத்தைக் குறிப்பிட்டார். அந்தத் திட்டம் மிகப் பொருத்தமாய் இருந்ததாக உணர்ந்தேன். நான் மிக மகிழ்ச்சியோடு பிப்ரவரி 1, 1975-ஐ என் பயனியர் ஊழியத்தைத் தொடங்கும் தேதியாகக் குறிப்பிட்டுக் கொண்டேன்.
எனினும், சில நாட்களுக்குப் பின்பு, 1974, டிசம்பர் 20 அன்று, ஜெனரல் ஸ்டோரிலிருந்து வீட்டுக்கு நடந்து செல்கையில், திசைத்தவறி வந்த துப்பாக்கிக் குண்டு என்னைத் தாக்கியது.
மரண வாசலில்
நான் தரையில் கிடக்கையில், என் உயிர் இரத்தம் பீறிட்டு வெளியில் கொட்டுவதை நேரடியாக நான் காண முடிந்தது. நான் சாகப்போகிறேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. யெகோவாவைச் சேவிப்பதில் முழு கவனத்தையும் ஊன்ற வைத்திருக்கிற ஒரு குடும்பத்துக்கும்கூட அத்தகைய நாசமுண்டாக்கும் விபத்து நேரிடக்கூடும் என்று என் தாயார் புரிந்துகொள்ளும்படி உதவிசெய்வதற்குப் போதியளவு நீடித்த காலம் நான் உயிரோடிருக்க என்னை அனுமதிக்கும்படி யெகோவாவைக் கேட்டேன். ‘சமயமும் எதிர்பாராத சம்பவமும் அவர்களெல்லாருக்கும் நேரிடுகிறது,’ என்ற பைபிள் வசனம் எங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தபோதிலும், இத்தகைய பயங்கரமான கோரசம்பவத்தைக் கையாள நாங்கள் ஆயத்தமாக இருந்ததாய் நான் நினைக்கவில்லை.—பிரசங்கி 9:11, NW.
அந்தத் துப்பாக்கிக் குண்டு கழுத்தின் இடதுபுறத்தில் என்னைத் தாக்கி, என் முதுகுத் தண்டுவடத்திலுள்ள நரம்புகளைத் துண்டித்துவிட்டது. என் பேச்சும் சுவாசிப்பும் பாதிக்கப்பட்டன. நான் இரண்டு நாட்களுக்கு மேலாக உயிர்வாழும்படி எதிர்பார்க்கப்படவில்லை. பின்பு “இரண்டு வாரங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். நுரையீரல் அழற்சி உண்டானபோது மேலுமதிகச் சிக்கலான மூச்சுப்பொறிக்கு மாற்றப்பட்டேன். கடைசியாக, என் நிலைமை நிலைப்பட்டது, திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவர திட்டங்கள் போடப்பட்டன.
பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள்
முதல் சில வாரங்கள் நான் மனவாட்டமடையவில்லை. வெறும் மரத்த உணர்ச்சியுடையவளாக இருந்தேன். பர்மிங்ஹாமில் ஸ்பெய்ன் மறுசீரமைப்பு ஸ்தாபனத்தில் எல்லாரும் தயவாக இருந்து எனக்காகக் கடினமாய் உழைத்தனர். நான் என் மீதி வாழ்நாட்காலமெல்லாம் முற்றிலும் செயலற்று, என் முதுகில் மல்லாக்கப் படுத்துக்கிடப்பேனென்றே டாக்டர்கள் நினைத்ததாக மருத்துவமனை பணியாளரிடமிருந்து அறிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் C2 குவாட்ரிப்ளீஜிக் நிலை என வகுக்கப்பட்டேன். இது, என் மீதியான வாழ்நாட்காலமெல்லாம் கிசுகிசுவென்ற குரலுக்கு மேலாகப் பேசமுடியாதவளாய் மூச்சுப்பொறியால் சுவாசித்துக் கொண்டிருப்பேனென அவர்கள் உணர்ந்தார்களென்று அர்த்தப்பட்டது.
மூச்சுக்குழாய்க் குழல் ஒன்றை டாக்டர்கள் குரல்வளையில் புகுத்தியிருந்தனர், அதன் வழியாக நான் சுவாசித்தேன். பின்னால் நுரையீரல் மருத்துவ நிபுணர், சிறிய குழாய் நான் பேசும்படி அனுமதிக்குமாவென்று காண அதைப் பார்க்கிலும் சிறியக் குழலை வைத்தார். எனினும் உருவளவு எந்த வேறுபாடும் உண்டாக்கவில்லை. ஆகவே ஒரு நரம்பு சேதமே நான் பேச முடியாதிருப்பதற்குக் காரணமென்ற முடிவுக்கு வந்தனர். பெரும்பாலும் இந்தச் சமயத்தில் நான் மனச்சோர்வடையத் தொடங்கினேன், எவராவது சொல்லக்கூடிய எதுவும் என்னை நல்ல உணர்ச்சியடையும்படி செய்ய முடியவில்லை. தயவான ஒவ்வொரு வார்த்தையும் இகழ்வதைப்போல் என்னைத் தாக்கினது. ஆகவே நான் மிகவும் அழுவேன்.
ஒருவருடைய ஆவிக்குரிய தன்மைக்கு எதாவது இடையூறு உண்டாக்கினால், இரண்டு காரியங்கள் உதவிசெய்யக்கூடுமென்று உணர்ந்தேன்—யெகோவாவிடம் இடைவிடாமல் ஜெபிப்பதும் ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபடுத்தி, பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்வதுமேயாகும். (நீதிமொழிகள் 3:5) சரிதான், ஜெபிப்பது எளிதாயிருந்தது. அதை நான் செய்ய முடியும். ஆனால் என் நிலைமையில், நான் ஊழியத்தில் எவ்வாறு அதிக சுறுசுறுப்பாய் ஈடுபடுபவளாவது?
என் குடும்பத்தாரிடம், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பிரதிகளையும், ஊழியத்தில் அப்போது நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், மெய்ச் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த மூலக்காரணத்திலிருந்து?, இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? போன்ற மற்ற பைபிள் படிப்பு உதவிப் புத்தகங்களையும் கொண்டுவரும்படி கேட்டேன். இவை என் அறையின் பல்வேறு பாகங்களில் வைக்கப்பட்டன. வேலைசெய்யும் நபர்கள் என்னை இரக்கத்துடன் நோக்கி: “கண்ணே, நான் உனக்கு ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார்கள்.
நான் ஒரு புத்தகத்தின்மீது என் கண்ணைத் திருப்பி, உதடுகளின் அசைவால் என் வார்த்தைகளைத் தெரிவித்து, எனக்கு வாசிக்கும்படி அந்த நபரைக் கேட்பேன். அந்த நபர் வாசிப்பதில் செலவிட்ட நேரத்தை, என் ஊழியத்தில் செலவிட்ட மணிநேரமாக நான் கணக்கிட்டுக் கொள்வேன். எனக்கு வாசித்ததற்காக அந்த நபருக்கு நன்றியைத் தெரிவிப்பதற்கு, நான் பெரும்பாலும் அந்த புத்தகத்தை அல்லது பத்திரிகையை அவருக்கு இனாமாகக் கொடுத்துவிடுவேன். இவற்றை என் அளிப்பாகக் கருதினேன். ஒருவர் எனக்கு இரண்டாவது தடவை வாசித்தபோது, அதை மறுசந்திப்பாகக் கருதினேன். என் கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளுமான பலர் அனுப்பின, இருதயத்தைக் கனிவித்த கார்டுகளும், பூக்களும், சந்திப்புகளும் என்னை ஊக்கப்படுத்தி வைத்து வந்ததுபோல், இவ்வகையில் ஊழியத்தில் பங்குகொண்டதும் செய்தது.
பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் முயற்சியில் பல மாதங்கள் செலவிட்ட பின்பு, நான் என் தலையைச் சிறிது மாத்திரமே தூக்க முடிந்தது. ஆனால் மேலுமதிகமாய் அசைக்க முயற்சி செய்யும்படி தீர்மானித்தேன். ஆகவே இயற்பியல் மற்றும் தொழில்வழி நோய்நீக்கல் சிகிச்சையில் அதிக நேரம் தரும்படி கேட்டேன். சக்கர நாற்காலியில் என்னை வைக்கும்படி நான் கேட்டபோது, அது இயலாத காரியமென்றும், நிமிர்ந்து உட்காருவதற்கு நான் என் தலையை உயர்த்தி வைக்க முடியாதென்றும் சொல்லப்பட்டேன். எவ்வாறாயினும் முயற்சி செய்யும்படி அவர்களைக் கேட்டேன்.
டாக்டர்கள் அனுமதி தந்த பின்பு, பொறுப்பைக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒரு சக்கர நாற்காலியில் என்னை வைக்க உதவிசெய்தார்கள். மார்பிலிருந்து இடுப்பு வரையிலும், தொடையிலிருந்து முட்டி வரையிலும், மற்றும் முட்டியிலிருந்து பாதம் வரையிலும் ஏஸ் பிரான்டு பேன்டேஜ்களால் என்னைச் சுற்றி பொதிந்து வைத்தனர். பதனம் செய்யப்பட்ட பிணத்தைப்போல் நான் தோன்றினேன். இது, என் இரத்த அழுத்தம் நிலையாக இருப்பதை உறுதிசெய்துகொள்வதற்கும் அதிர்ச்சியுண்டாவதைத் தவிர்ப்பதற்கும் முன்னெச்சரிக்கையாகச் செய்யப்பட்டது. இது பயனுள்ளதாயிருந்தது! இருப்பினும், ஒவ்வொரு சமயமும் ஒரு மணிநேரம் மாத்திரமே நிமிர்ந்து உட்காரும்படி அனுமதிக்கப்பட்டேன். ஆனால்—57 நாட்கள் என் முதுகில் மல்லாக்கப் படுத்திருந்த பின்—நான் உட்கார்ந்திருந்தேன்!
கடைசியாக வீட்டில்!
கடைசியாக, ஐந்து நீண்ட மாதங்களுக்குப் பின் என் மூச்சுக் குழாய் கழற்றப்பட்டு, நான் வீட்டுக்குச் செல்லும்படி அனுமதிக்கப்பட்டேன். அது மே 1975-ல் நடந்தது. அதன்பின், சிகிச்சைக்காக பயணம்செய்து மறுசீரமைப்பு ஸ்தாபனத்துக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன். சீக்கிரமாய், 1975-ன் கோடைகாலத்திலேயே, கிறிஸ்தவ ஊழியத்துக்கு என் சக்கர நாற்காலியில் செல்லத் தொடங்கினேன். நான் அதிகம் செய்ய முடியவில்லை, ஆனால் நண்பர்களுடன் அங்கே வெளி ஊழியத்தில் இருக்கவாவது முடிந்தது.
என் மறுசீரமைப்பு சிகிச்சைக்குப் பணம் அளிக்கும் பொறுப்புடைய ஏஜென்ஸியாகிய VRS (வாழ்க்கைத் தொழில் சார்ந்த மறுசீரமைப்பு சேவைகள்), 1976-ன் தொடக்கத்தில் ஒரு சமயம், மறுமதிப்பீட்டுக்காகச் செல்லும்படி கேட்டது. நான் முன்னேற்றம் செய்துகொண்டிருப்பதாக நினைத்தேன். என் பற்களுக்கிடையில் தூரிகையை வைத்துக்கொண்டு ஓவியம் தீட்ட நான் கற்றுக்கொண்டிருந்தேன். அதே முறையில் ஒரு குச்சியைப் பயன்படுத்தி, தட்டச்சடிக்கவும் பென்சில் வைத்துக்கொண்டு எழுதவும்கூட தொடங்கிக் கொண்டிருந்தேன். பெரும்பான்மையான என் சிகிச்சைக்கு VRS பணம் செலுத்திவந்ததால், எனக்கு ஒரு வேலைக்கான வழியைக் கண்டுபிடித்து, நான் சமுதாயத்தின் பலன்தரும் உறுப்பினளாகும்படி விரும்பினது.
அந்த ஆலோசகர் கரிசனையுள்ளவராக இருந்ததுபோல் முதலில் தோன்றினது, ஆனால் சத்தமாய்ப் பேசுவதற்கு முயற்சி செய்யும்படி என்னைக் கேட்கத் தொடங்கினார். அந்தச் சமயத்தில் கிசுகிசு என்பதற்குச் சற்று மேலாகத்தானே என்னால் பேச முடிந்தது. பின்பு அவர்: “உன்னால் நேராக உட்கார முடியாதா?” என்று கேட்டார்.
என்னால் முடியவில்லை.
“ஒரு விரலை மாத்திரம் அசை,” என்றார்.
அதைக்கூட என்னால் செய்ய முடியாதபோது, அவர் தன் பேனாவை எழுதுமேசையின்மீது தொப்பென்று போட்டுவிட்டு ஏமாற்றக் குரலில்: “நீ பயனற்றவள்!” என்று சொன்னார்.
நான் வீட்டுக்குச் சென்று அவருடைய தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கும்படி சொல்லப்பட்டேன். அவருடைய சங்கடத்தை நான் புரிந்துகொண்டேன். அந்த ஸ்பெய்ன் மறுசீரமைப்பு ஸ்தாபனத்தில் எனக்கு முன்னால், ஒரு நோயாளியும் என்னுடையதைப் போன்ற அவ்வளவு கடுமையான குறைபாடுடையவராக இருந்ததில்லை. அங்கே பயன்படுத்தப்பட்ட கருவிகள் மிக உயர்ந்த விலையுள்ளவை. தீர்மானங்களைச் செய்வதற்கான பொறுப்புடையவருக்கு, என்னைப் போன்ற அவ்வளவு மட்டுப்பட்ட இயக்கமுடைய நோயாளியைக் குறித்ததில் என்ன செய்வதென்பதற்கு வழிகாட்டும் அறிவுரைகள் இருக்கவில்லை. எனினும், பயனற்றவள் என்று அழைக்கப்பட்டது வருத்தமுண்டாக்கினது, ஏனெனில் நான் ஏற்கெனவே அவ்வாறு உணரத் தொடங்கியிருந்தேன்.
சில நாட்களுக்குப் பின்பு, தொலைபேசி அழைப்பு எனக்கு வந்து, நான் அதற்குமேலும் அந்தத் திட்டத்தின் பாகமாக இல்லை என்று சொல்லப்பட்டேன். நான் கைவிடப்பட்டவளாக உணர்ந்தேன். அது மற்றொரு மனச்சோர்வு தாக்குதலில் விளைவடைந்தது.
மனச்சோர்வை அடக்கி மேற்கொள்ளுதல்
அப்போது சங்கீதம் 55:22-ஐ (தி.மொ.) நினைவுபடுத்திக் கொண்டேன், அது சொல்வதாவது: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” நான் கவலைப்பட்ட ஒரு காரியம், என் பெற்றோர்மீது வந்த பணசம்பந்தமான பாரமாகும், இதைப்பற்றி நான் ஜெபித்தேன்.
என் மனச்சோர்வுற்ற நிலை உடல் சம்பந்தமாய் என்னைத் தீங்காகப் பாதித்தது. ஆகவே அந்தக் கோடைகாலத்தில் நடத்தப்பட்ட மாவட்ட மாநாட்டின்போது, நான் நிமிர்ந்து உட்கார முடியவில்லை. நான் படுத்துக்கொண்டே நிகழ்ச்சிநிரலுக்குச் செவிகொடுத்துக் கேட்டேன். துணைப் பயனியர் ஊழியம் என்று அழைக்கப்பட்டது அந்த 1976-ன் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது என் கவனத்தைக் கவர்ந்தது. துணைப் பயனியர் செய்வதற்கு ஊழியத்தில் 60 மணிநேரமே செலவிடத் தேவைப்படுகிறது. இது ஒரு நாளுக்கு 2 மணிநேரமேதான். அதை நான் செய்ய முடியுமென்று உணர்ந்தேன். பின்னால், துணைப் பயனியர் செய்ய எனக்கு உதவிசெய்யும்படி என் சகோதரி எலிசபெத்தைக் கேட்டேன். நான் விளையாட்டுக்குச் சொல்வதாக அவள் நினைத்தாள். ஆனால் பயனியர் செய்வதற்கான என் விண்ணப்பத்தை ஆகஸ்ட்டில் நான் கொடுத்தபோது, அவளும் ஒன்றைக் கொடுத்தாள்.
எலிசபெத் விடியற்காலமே எழுந்திருந்து என் தனிப்பட்ட தேவைகளைக் கவனிப்பாள். பின்பு நாங்கள் தொலைபேசியில் சாட்சி கொடுப்பதைத் தொடங்குவோம். இது தொலைபேசியில் ஆட்களை அழைத்து, கடவுள் தம்முடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் ஜனங்களுக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி அவர்களுடன் உரையாடுவதை உட்படுத்தியது. கடிதங்களையும் எழுதினோம், முக்கியமாய் ஆறுதல் தேவைப்பட்ட ஆட்களுக்கு எழுதினோம். வார இறுதிநாட்களில், குடும்பத்தார் அல்லது நண்பர்கள் வீடுவீடாக ஊழியம் செய்வதில் பங்குகொள்ள என் சக்கர நாற்காலியில் என்னை அழைத்துச் சென்றனர். என் கைகால்கள் பயனற்றிருந்ததால், ராஜ்ய செய்தியைப் பேசுவதையும், வேதவசனங்களைக் குறிப்பிடுவதையும், அல்லது பைபிளிலிருந்து வாசிக்கும்படி மற்றவர்களைக் கேட்பதையும் தவிர என்னால் அதிகம் செய்ய முடியாது.
அந்த மாதத்தின் கடைசி நாளில், நான் பூர்த்திசெய்ய வேண்டிய 60 மணிநேரங்களை நிரப்புவதற்கு இன்னும் 6 மணிநேரங்கள் எனக்குத் தேவைப்பட்டன. எனக்கு உதவிசெய்ய எலிசபெத் இல்லை. ஆகையால், நான் நிமிர்ந்து உட்காரும்படி என் சக்கர நாற்காலியின் சாய்மானத்தை நிமிர்த்தி வைக்கும்படி என் தாயாரைக் கேட்டேன். பின்பு, வாய்க் குச்சியைப் பயன்படுத்தி, 6 மணிநேரங்கள் கடிதங்களைத் தட்டச்சு செய்தேன். கெடுதலான விளைவுகள் எதுவும் உண்டாகவில்லை! எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் மிகவும் களைத்துப்போயிருந்ததே!
என் ஜெபம் பதிலளிக்கப்பட்டது
இதற்கு அடுத்த வாரம், என் சக்கர நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, ஸ்பெய்ன் மறுசீரமைப்பு ஸ்தாபனத்துக்குப் பரிசோதனைக்காகச் சென்றேன். அந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்தத் திட்டத்திலிருந்து நான் நீக்கப்பட்டது முதற்கொண்டு என்னைப் பார்த்திராத என் டாக்டர், ஆச்சரியமடைந்தார். என் முன்னேற்றத்தை அவரால் நம்ப முடியவில்லை. “நீ என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார். என் போதக ஊழியத்தைப்பற்றி நான் சொல்லி முடிப்பதற்கு முன்பே, அவர் எனக்கு ஒரு வேலையைத் தந்தார்.
அவருடைய உதவியாளர் என்னைச் சந்தித்துப் பேசி, ஊழியத்தில் நான் செய்துகொண்டிருந்ததைக் குறித்து உள்ளக் கிளர்ச்சியுற்றார்கள். மாதிரி நோயாளி திட்டம் எனப்படுவதில் பங்குகொள்ளும்படி அந்த அம்மாள் என்னைக் கேட்டார்கள். இது நான் உதவிசெய்யப்போகிற மற்றொரு நோயாளிக்கு ஒத்த நிலையில் என்னை வைக்கும். நம்முடைய ஊழியத்தைக் குறிப்பிட்டு அவர்கள்: “எவ்வாறாயினும், இதைத்தான் உங்கள் ஆட்கள் செய்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். ஏறக்குறைய என்னைப்போல் மட்டுப்பாடுடைய ஒரு நோயாளிக்கு உதவிசெய்யும்படி நான் நியமிக்கப்பட்டேன்.
என் குடும்பத்தாரின் உதவியைக்கொண்டு ஊழியத்தில் நான் நிறைவேற்றிக்கொண்டிருந்ததைப் பற்றிய செய்தி எவ்வாறோ VRS-க்கு எட்டிவிட்டது. அவர்கள் அவ்வளவாய் உள்ளம் கவரப்பட்டதால், அந்தத் திட்டத்தில் நான் மறுபடியும் சேர்க்கப்படும்படி சிபாரிசு செய்யப்பட்டது. இது என் தனிப்பட்ட நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு எனக்குத் தேவைப்பட்ட தனி சாதனத்துக்கான பணத்தைச் செலுத்த எங்கள் குடும்பம் பணவசதியைப் பெறும் எனக் குறித்தது. கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளித்தாரென்று உணர்ந்தேன்.
என் நிலைமை திடப்பட்டது
நான் என் தலையைத் தூக்கவும், திருப்பவும், நிமிர்ந்து உட்காரவும் முடியுமளவுக்கு என் உடல் மீண்டும் சுகமானது. பேசும் திறமையை ஏறக்குறைய முழுமையாக மீண்டும் பெற்றதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். வாய்க் குச்சியைப் பயன்படுத்தி, நான் எழுதவும், தட்டச்சு செய்யவும், ஒலிபெருக்கியைக் கொண்ட தொலைபேசியை இயக்கவும், ஓவியம் தீட்டவும் முடியும். என் ஓவியங்கள் சில, வாயால் வண்ண ஓவியம் தீட்டும் ஓவியக் கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இயந்திரம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் நான் சுற்றிவருகிறேன். அதை நான் முகத் தாடையால் கட்டுப்படுத்தி ஓட்டுகிறேன். மின்சாரத் தூக்கிக் கருவி ஒன்று என் சக்கர நாற்காலியை எங்கள் மூடுவண்டிக்குள் தூக்கி வைக்கும், இதோடு நான் செல்ல விரும்புகிற இடமெங்கும் பெரும்பாலும் கொண்டுசெல்லலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எனக்கு மிகுதியாக இருந்திருக்கின்றன—நுரையீரல் அழற்சி இடைவிடாத பயமுறுத்தலாயிருக்கிறது. சில சமயங்களில் இரவில் எனக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது. 1984-ல் ஒரு தொற்று நோயால் உண்டான சிக்கல்களின் விளைவால் நான் சாகும் நிலையில் இருந்தேன். மருத்துவமனைக்குள் பல தடவைகள் இருந்துவர நேரிட்டது. ஆனால் இப்போது என் உடல்நலம் மேம்பாடடைந்துள்ளது. 1976 முதற்கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை, இருமுறை நான் துணைப் பயனியர் ஊழியம் செய்ய சமாளித்திருக்கிறேன். ஆனால் நிறைவேற்ற உணர்ச்சியடையவில்லை. பத்தொன்பது வயதுக்குட்பட்டவளாக இருந்தபோது நான் கொண்டிருந்ததும் துப்பாக்கிக் குண்டு குறுக்கிட்டுத் தடைசெய்ததுமான அந்தத் திட்டங்களைப் பற்றி நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
என் இலக்கு நிறைவேறிற்று
செப்டம்பர் 1, 1990-ல், நான் கடைசியாக முழுநேர பயனியர்களின் அணிவரிசையில் சேர்ந்து, இவ்வாறு என் சிறுவயது ஆசையை நிறைவேற்றினேன். பனிக்கால மாதங்களின்போது குளிராக இருக்கையில், கடிதங்கள் எழுதுவதன் மூலமும் ஒலிபெருக்கியைக் கொண்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதன் மூலமும் சாட்சிகொடுக்கிறேன். ஆனால் குளிர் மாறி வெப்பமுண்டாகையில், வீடுவீடாகச் செய்யும் ஊழியத்திலும் பங்குகொள்கிறேன். ஆண்டு முழுவதும், ஒலிபெருக்கியைக் கொண்ட தொலைபேசியைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து பைபிள் படிப்புகளை நடத்துகிறேன்.
பரதீஸான பூமியில், கிறிஸ்து இயேசுவும் யெகோவா தேவனும் என்னை இந்த சக்கர நாற்காலியிலிருந்து விடுதலையாக்கும் அதிசயமான ஓர் எதிர்காலத்திற்காக நான் ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். உயிர்த்துடிப்புள்ள உடல்நலத்தையும், ‘மானைப்போல் குதிக்கும்’ திறமையையும் வாக்களித்திருக்கிற யெகோவாவின் வாக்குகளுக்காக நான் ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றிசெலுத்துகிறேன். (ஏசாயா 35:6) நான் இழந்த காலத்துக்குச் சரியீடுசெய்ய என்னால் கூடியவரையில் நான் ஓடிக்கொண்டே இருக்கப்போகிறேன், பின்பு குதிரையில் சவாரிசெய்யக் கற்றுக்கொள்ளப் போகிறேன்.
அந்தக் காலத்தை எதிர்பார்த்தவளாய், யெகோவாவின் மகிழ்ச்சியுள்ள ஜனங்களில் ஒருத்தியாயிருந்து ஊழியத்தில் முழு பங்கு கொண்டிருப்பதில் விவரிக்கமுடியாத சந்தோஷம் இப்பொழுதும்கூட எனக்கு இருக்கிறது.—குளோரியா உவில்லியம்ஸ் சொன்னபடி.
[பக்கம் 15-ன் படங்கள்]
என் கிறிஸ்தவ ஊழியம்—வீடுவீடாக செல்லுதல், தொலைபேசிமூலம் சாட்சிகொடுத்தல், கடிதங்கள் எழுதுதல்
[பக்கம் 16-ன் படம்]
வாயால் வண்ண ஓவியம் தீட்டும் ஓவியக் கண்காட்சிகளில் என் ஓவியங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன