கனடாவின் தலைமை நீதிமன்றம் பெற்றோர்களின் உரிமைகளை வலுப்படுத்துகிறது
கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
உங்களுடைய பிள்ளைக்கு அவசரநிலை மருத்துவ பிரச்சினைகள் எழும்போது, அன்பான பெற்றோர்களாக நீங்கள் அக்கறை காட்டுவதும் கவலைகொள்வதும் சகஜம்தான். பொறுப்பான, இரக்க குணமுள்ள டாக்டர்கள் சிகிச்சைக்கான உங்களுடைய தெரிவை மதிப்பார்களேயானால், அது உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாயும் ஆறுதலளிப்பதாயும் இருக்கும்! எனினும், மனம்போன போக்கில் நடவடிக்கை எடுத்து, பெற்றோர்களின் விருப்பங்கள் புறக்கணிக்கப்படும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. அடிக்கடி இது அதிர்ச்சிதரும் அனுபவங்களுக்கு வழிநடத்துகிறது.
கனடாவில் குழந்தைநல சட்டங்கள் குழந்தைகளைக் கைப்பற்ற அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கின்றன. நீதிமன்ற விசாரணையின்றி பெற்றோர்களின் விருப்பங்களை நிராகரிக்க நான்கு மாகாணங்கள் அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கின்றன. இது எல்லா பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் முக்கியமான பிரச்சினைகளைத் தருகிறது. எந்தெந்த விஷயங்களில் தீர்மானம் எடுக்க பெற்றோர்களுக்கு உரிமை உண்டு? பெற்றோர் எடுத்த தீர்மானத்தில் அரசாங்கம் குறுக்கிட விழையுமானால், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அடிப்படை நீதியை வழங்க என்ன செயல்முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்? தீர்மானம் எடுப்பதற்கான பெற்றோர்களின் உரிமையை சட்டமைப்பு பாதுகாக்கிறதா?
மார்ச் 3, 1995 தேதியிட்ட தி டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில், 1983-ல் குறைமாதக் குழந்தையாகப் பிறந்த ஒரு பெண் குழந்தையை உட்படுத்திய வழக்கோடு சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினைகளைச் சுருக்கிக்கூறிய ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அவளுடைய பெற்றோர்கள் யெகோவாவின் சாட்சிகளாயிருந்தனர். “[அவர்கள்] பெரும்பாலான மருத்துவ சிகிச்சைகளையும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் ரத்தம் ஏற்றுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்களோ நீதிமன்ற ஆணை வேண்டுமென கேட்டனர். அந்த நீதிபதி, பொறுப்பை சில்ட்ரன்ஸ் எய்ட் சொஸைட்டியிடம் ஒப்படைத்தார். மூன்று வாரங்கள் முடியும்வரை குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படவில்லை, அதுவும் விருப்பம் இருந்தால் செய்துகொள்ளக்கூடிய கண் பரிசோதனைக்கும் ஒருவேளை சாத்தியமாயிருந்த கண் ஆபரேஷனுக்கும் ஆயத்தப்படுத்துவதற்காகவே இது செய்யப்பட்டது. பெற்றோர்கள் தலைமை நீதிமன்றம் செல்லும்வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.”
ஜனவரி 27, 1995-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 1983-ல் என்ன செய்யப்பட்டதோ அதை தலைமை நீதிமன்றம் மாற்றிவிடவில்லையென்றாலும், அரசாங்க அதிகாரம் துர்ப்பிரயோகிக்கப்படுவதைத் தடைசெய்ய ஒன்பது நீதிபதிகளில் ஐந்துபேர் வழிமுறைகளை இயற்றினர். தங்களுடைய பிள்ளைகளுக்காக மருத்துவ தீர்மானங்களைச் செய்ய பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமைகளை இந்த நீதிமன்ற தீர்மானம் வலுப்படுத்துகிறது.
குறிப்பாக, தீர்மானங்களைச் செய்ய பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமையை நீதிமன்றம் கனடாவின் உரிமைகள் மற்றும் சுயாதீனங்களின் சாசனம் (Canadian Charter of Rights and Freedoms) உறுதியளித்த மத சுயாதீனத்தைக் கருத்தில்கொண்டு சிந்தித்தது. பெரும்பான்மையோரைப் பிரதிநிதித்துவம் செய்பவராக, ஜஸ்டிஸ் ஜரார்டு லா ஃபாரெஸ்ட் கூறினார்: “அவர்களுடைய மத நம்பிக்கைகளின்படி, தங்களுடைய பிள்ளைகளுக்காக மருத்துவ மற்றும் மற்ற சிகிச்சைகளைத் தெரிந்தெடுப்பதற்கான உரிமையும் உட்பட்ட, தங்களுடைய பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமையும் மத சுயாதீனத்தின் ஒரு சமமான அடிப்படை அம்சமாகவே இருக்கிறது.”
இந்த சாசனம் உறுதியளித்த மத சுயாதீனம் தங்களுடைய பிள்ளைகளுக்காக மருத்துவ சிகிச்சையைத் தீர்மானிக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமையையும் உட்படுத்துகிறது என்பதை கனடாவின் உச்ச நீதிமன்றம் ஆதரித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். ஜஸ்டிஸ் லா ஃபாரெஸ்ட் பின்வருமாறு கூறியதன்மூலம் இந்த நியமத்தை தெளிவுபடுத்தினார்: “பிள்ளையின் சுயாதீனத்தையோ அல்லது உடல்நலத்தையோ பாதுகாப்பது அவசியம் என்று அரசாங்கம் உணரும்போது அரசாங்கத்தால் தலையிட முடியாது என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால் அத்தகைய குறுக்கீடு நியாயப்படுத்தப்பட வேண்டும். அதாவது, அரசாங்கத்தின் குறுக்கீடு நீதிமன்றங்களால் தகுந்த முறையில் மேற்பார்வை செய்யப்படுவதற்கு, பிள்ளைகளுக்காக தீர்மானிக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமை சாசனத்தின் பாதுகாப்பைப் பெறவேண்டும்; மேலும் அத்தகைய குறுக்கீடு சாசனத்திற்கு பின்னால் இருக்கும் மதிப்பீடுகளுக்கு ஒத்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.”
தன் உடன் நீதிபதிகளில் இருவரால் சொல்லப்பட்ட குறிப்புகளுக்கு பதிலளிக்கும்போது பிள்ளைகளுக்காக தீர்மானிக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமையில் தலையிடுவது நியாயப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை ஜஸ்டிஸ் லா ஃபாரெஸ்ட் அழுத்திக்காட்டினார்: “அவ்வாறு செய்யவேண்டியது அவசியம் என்று தொழில்முறை மருத்துவர் ஒருவர் நினைக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றோர்களின் உரிமைகள் ஒன்றுமில்லாததாக்கப்படுவதை ஆதரிக்கின்றன என்பதாக அவர்களின் கருத்துக்களில் சில புரிந்துகொள்ளப்படலாம். அவசியத்தைத் தெளிவுபடுத்தாமலேயே தொழில்முறை மருத்துவர் ஒருவரால் பெற்றோர்களின் நோக்குநிலையைத் தள்ளிவிடமுடியுமென்றால் அது எனக்கு அதிக கவலையைத் தருவதாக இருக்கும்.”
மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக தீர்மானிக்க பெற்றோர்களுக்கு இருக்கும் உரிமையானது கனடாவின் உரிமைகள் மற்றும் சுயாதீனங்கள் சாசனத்தின் கீழ் சட்டப்பூர்வமான உரிமையாக அடையாளம் காட்டப்பட்டது. இவ்வாறு, குழந்தைநல பராமரிப்பு அலுவலர்களுக்கும் நீதிபதிகளுக்கும் மிகவும் வல்லமைவாய்ந்த ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அவர்கள் எச்சரிக்கையோடும் பெற்றோர்களுக்கான உரிமைகளுக்கு தகுந்த மதிப்பைக் காண்பிக்கும் வகையிலும் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி உள்ள மருத்துவர்களும்கூட, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தெரிவுசெய்யும், ரத்தமேற்றாத மருத்துவ சிகிச்சையையும் உட்பட்ட, நியாயமான மாற்று சிகிச்சைகளை ஆதரிப்பதன்மூலம் இந்த வழிமுறைகளை வரவேற்பார்கள்.
ரத்தமேற்றுதலைப் பற்றியும் அதனால் ஏற்படும், எய்ட்ஸையும் உட்படுத்தும், ஆபத்துக்களையும் பற்றிய தற்போதைய விவாதத்தையும் பார்க்கும்போது, ஜஸ்டிஸ் லா ஃபாரெஸ்ட் கீழ்க்கண்டவாறு தொடர்ந்து சொன்ன குறிப்புகளை ஒருவரால் பாராட்டமுடியும்: “இந்தத் தற்போதைய முறையீட்டைத் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறை, மருத்துவ பிரயோஜனங்கள் பெரிய கேள்விக்குறியாக இருக்கும் சிகிச்சைகளை அளித்ததன் நியாயத்தன்மையைப் பற்றிய மிகப் பொதுவான கேள்வியை எழுப்புகிறது . . . எனினும், 1983-ல் அளிக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் . . . ரத்தமேற்றுதலின் அவசியத்தைப்பற்றி கேள்வி கேட்க எங்களை அனுமதிக்கிறதில்லை, இருந்தாலும் ஒருவேளை கடந்தகால சம்பவங்களை நினைக்கையில் கேள்வி கேட்கும்படி சிலர் தூண்டப்படலாம். ஆனாலும், பெற்றோர்களின் மறுப்பைப் புறக்கணிக்கையில் கவனமாக செயல்பட்டிருக்க வேண்டிய அவசியத்தை இந்த முறையீடு எங்களுக்கு நினைவுபடுத்துகிறது.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
தி டோரன்டோ ஸ்டாரில் வெளிவந்த முன்பு குறிப்பிடப்பட்ட கட்டுரை இவ்வாறு கூறி முடித்தது: “தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பினால் சாதிக்கப்பட்டிருப்பது என்ன? முதலாவதாக, பெற்றோர்களுக்கும் டாக்டர்களுக்கும் இடையே ஒரு கருத்து முரண்பாடு நிலவும்போது, டாக்டர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சமூகப் பணியாளர்களுக்கும், மற்றும் நீதிபதிகளுக்கும் இப்போது வழிமுறைகள் கிடைக்கின்றன. இரண்டாவதாக, ரத்தமில்லா மாற்று மருந்துகள் அதிகமதிகம் கண்டுபிடிக்கப்பட்டு, பெறக் கிடைக்கும் காலத்தில், மாற்று மருத்துவ சிகிச்சைகளின் மேல் கொடுக்கப்பட்ட அழுத்தமானது, ரத்தமேற்றும் மருத்துவ விஷயத்தில் வளைந்துகொடுப்பதை சாத்தியமாக்க வேண்டும். மூன்றாவதாக, பெற்றோர்களின் தீர்மானத்தை மாற்றிக்கொள்ள கேட்டுக்கொள்வதற்கு தீர்மானிக்கையில், அவ்வாறு கோரும் குறுக்கீட்டிற்கான அவசியம் என்ன என்பதை அத்தாட்சிகளோடு நிரூபிக்கும் பொறுப்பை அரசாங்கத்தின்மேலும் டாக்டர்கள்மேலும் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் தீர விசாரிக்கவேண்டும்.”
கனடாவின் தலைமை நீதிமன்றத் தீர்ப்பில் பெரும்பான்மையோரால் இயற்றப்பட்ட வழிமுறைகளை மற்ற தேசத்தில் உள்ள மருத்துவர்களும், நீதிபதிகளும், பெற்றோர்களும் உதவியளிப்பதாகவும், பிரயோஜனமாகவும் இருப்பதாகக் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எல்லா இடங்களிலுமுள்ள மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகிய இருசாரார்களின் உரிமைகளுக்காகவும் கொண்டுள்ள அக்கறையுடன், இரக்கமுள்ள வகையில் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து மருத்துவ பராமரிப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.