நார்வேயின் உச்ச நீதிமன்றம் மத உரிமைகளை ஆதரிக்கிறது
எப்படிப்பட்ட சூழ்நிலைகள் பெற்றோர் ஒருவரை தன் பிள்ளையை வளர்க்க தகுதியற்றவராக ஆக்க முடியும்? உலகெங்கும் காப்புப் பொறுப்பு பற்றிய வழக்குகளில் இந்தக் கேள்வி தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெற்றோரின் உடல்நிலை, வாழும் சூழ்நிலைகள், பிள்ளையோடுள்ள தொடர்பு ஆகியவை உட்பட அநேக அம்சங்கள் கவனிக்கப்படுகின்றன.
ஆனால் மதத்தைப் பற்றியென்ன? வெறுமனே அவர் அல்லது அவளது விசுவாசத்தின் காரணமாக பெற்றோர் ஒருவர் தகுதியற்றவராக அறிவிக்கப்பட முடியுமா? நார்வேயில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை உட்படுத்திய காப்புப் பொறுப்பு வழக்கு ஒன்றில் இந்தக் கேள்வி கவனத்திற்குரியதானது. நார்வேயின் உச்ச நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு முன் இரண்டுக்கும் அதிகமான வருடங்கள் சென்றன, மேலும் மூன்று விசாரணைகள் நடந்தன.
அது 1988-ல் தொடங்கியது. அந்தப் பெற்றோர் மார்ச் 1989-ல் முற்றிலுமாகப் பிரிந்துவிட்டனர்; அவர்களுடைய மகளின் காப்புப் பொறுப்பை, தாயார் தன் வசமாக வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் முழு வளர்ப்புப் பொறுப்பும் தன்னிடம் கொடுக்கப்படும்படி உரிமை கோரி அந்தத் தகப்பன், அந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். இயல்பான, ஆரோக்கியமான வளர்ப்பை அந்தப் பிள்ளைக்குக் கொடுக்க தாயார் திறமையற்றவர் என்றும், அதன் காரணமாக சந்திப்பு உரிமைகள் மட்டுமே அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவருடைய உரிமைகோரலுக்குக் காரணம்? தாயார் யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொண்டிருந்தார்.
யெகோவாவின் சாட்சிகளுடைய எதிரிகளின் “திறம்பட்ட” அத்தாட்சிகளுக்காக நாடி, யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளும் வாழ்க்கை பாணியும் பொறுப்பான பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான மனப்பான்மைகள் மற்றும் தரங்களுடன் முரண்படுவதாக இருக்கின்றன என்று அந்தத் தகப்பன் நீதிமன்றத்தை நம்பவைக்கத் தொடங்கினார். தகப்பனாருக்கு சந்திப்பு உரிமைகளை அளித்து, தினசரி கவனிப்புக்கு அந்தப் பிள்ளை தாயுடனேயே இருக்க வேண்டும் என்பதற்கு மாவட்ட நீதிமன்றம் 2-க்கு 1 தீர்ப்பை வழங்கியது. தகப்பனார் அந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார். மீண்டுமாக, தாயாரே பிள்ளையின் தினசரி கவனிப்பை ஏற்கும்படி 2-க்கு 1 தீர்ப்பு ஆதரிக்கப்பட்டது. என்றபோதிலும், இந்த முறை, நீடிக்கப்பட்ட சந்திப்பு உரிமைகள் தகப்பனாருக்கு வழங்கப்பட்டன. மேலுமாக, தாய்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்கூட பிள்ளையின் எதிர்காலத்தைக் குறித்து சந்தேகங்களை உடையவர்களாகத் தோன்றினர். இந்த வலுவாக்கப்பட்ட பிடியுடன், தகப்பனார் நார்வேயின் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.
மறுபடியுமாக, அந்தத் தகப்பனார், யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை அவமதிக்க நாடினார். அப்படிப்பட்ட ஒரு செல்வாக்கின்கீழ் வளருவது தன் மகளுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என்று அவர் வாதாடினார்.
என்றாலும், உச்ச நீதிமன்றம் காரியத்தை வேறுவிதத்தில் நோக்கியது. ஆகஸ்ட் 26, 1994 அன்று கொடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக, அந்த நீதிமன்றத்தின் முதல் நீதிபதி அறிவித்தார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய அங்கத்தினரில் ஒருவராக தாய் இருப்பது, பிள்ளையின் தினசரி கவனிப்புரிமையை அவருக்கு வழங்குவதற்கு எவ்விதத் தடையாகவும் இல்லை.” அவர் மேலுமாகச் சொன்னார்: “அந்தப் பிள்ளை நல்லபடியாக செயல்படுகிறாள், மேலும் அவள் ஒரு மகிழ்ச்சியுள்ள பெண். அவளுடைய தகப்பனும் தாயும் வாழ்க்கையைப் பற்றி மிகவும் வித்தியாசமான நோக்குகளை வைத்திருப்பதால் எழும்பவேண்டிய பிரச்சினைகளை அவள் நன்றாகவே கையாண்டிருப்பதாகத் தெரிகிறது.” அவருடைய முடிவு, மற்ற நான்கு நீதிபதிகளாலும் ஒருமனதாக ஆதரிக்கப்பட்டது.
யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக சொல்லப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் புரிந்துகொண்டார்கள் என்பதை நார்வேயிலுள்ள சத்தியப் பிரியர்கள் பெரிதும் போற்றுகிறார்கள். கடவுளை வழிபடுவதற்கு ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கும் சுயாதீனத்தையும், அவன் அல்லது அவள் பைபிள் நியமங்களை வைத்துப்பேணும் கனிவான வளர்ப்பை தன் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்பதையும் இந்தத் தீர்மானத்துடன் நீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்தியது. a
[அடிக்குறிப்பு]
a ஏப்ரல் 8, 1990, பக்கம் 31 மற்றும் அக்டோபர் 8, 1993, பக்கம் 15-ல் ஆங்கில விழித்தெழு! பிரதிகளில் இதைப் போன்ற வழக்குகள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.