இளைஞர் கேட்கின்றனர்
கடவுளின் நண்பனாக இருப்பது எனக்கு உதவுமா?
ஒரு தலைமுறைக்கு முன் சொன்னாலும் நம்ப முடியாத அழுத்தங்களின் கீழ் இன்று பல இளைஞர்கள் வளருகிறார்கள். 1,60,000 இளைஞர்களை சுற்றாய்வு செய்த தேசிய சுற்றாய்வு நிபுணர்கள் விளக்கினார்கள்: “சமாளிக்க முடியவில்லையே என்று அவர்கள் உணரும் அழுத்தங்களினால்; அவர்களின் நம்பிக்கையை மேற்கொள்ளும் ஊக்கமின்மை மற்றும் கவலையினால்; அவர்களின் பிரச்சினையைக் குறித்து உணர்வற்றவர்களாக இருக்கும் பெற்றோர்களினால் பெரும்பாலான அவர்களுடைய உள்ளக் குமுறல்கள் எழுகின்றன என்று பருவ வயதினர்கள் எங்களிடத்தில் கூறுகிறார்கள்.” அதேவிதமாக, ஒரு இளைஞருக்கு வாழ்க்கை சில சமயங்களில் எவ்வளவு வேதனையாக உள்ளது என்பதை மற்றவர்கள் சரியாகப் புரிந்துகொள்வதில்லை என்று நீங்களும் ஒருவேளை உணரலாம்.
நிச்சயமாகவே, உணர்ச்சி சம்பந்தமான ஆதரவுக்காக நாடக்கூடிய நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுக்கு இருக்கலாம், இது ஒருவேளை கொஞ்சம் ஆறுதலளிக்கும். ஆனால், நீங்கள் தன்னந்தனியே எதிர்ப்படவேண்டிய வாதிக்கும் கஷ்டங்கள் இருக்கின்றன என்பது உண்மை அல்லவா? “[உங்கள்] ஆத்துமாவின் கசப்பு” உங்கள் சொந்த “இருதயத்திற்குத் தெரியும்,” என்பது சில சமயங்களில் எவ்வளவு உண்மையாக இருக்கிறது. (நீதிமொழிகள் 14:10, NW) ஆனால், உங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் இருக்கிறார், அவர் தம்முடைய நட்புக் கரங்களை நீட்டுகிறார். பல இளைஞர்கள் மிகவும் வேதனையான சந்தர்ப்பங்களிலும் அவருடைய நட்புறவை பெரும் உதவியாகக் கண்டிருக்கிறார்கள்.
கடவுளுடன் நட்புறவு
எந்தக் காரியத்திற்காக யெகோவாவிற்கு அதிக நன்றி செலுத்தினார் என்று ஒரு குமரியிடம் கேட்கப்பட்டது. அவர் பதிலளித்தார்: “அவரை நாம் அறிந்துகொள்ள முடியும் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்களாக ஆக முடியும்.” ஆம், இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்த நட்புறவில் இணைவது சாத்தியம்! சங்கீதக்காரன் எழுதினார்: “யெகோவாவுடன் நெருங்கிய நட்பு அவருக்கு பயந்தவர்களுக்கு சொந்தம்.”—சங்கீதம் 25:14, NW.
“யெகோவாவுடன் நெருங்கிய நட்பு”—என்னே ஓர் அருமையான வாய்ப்பு! விசேஷித்த நண்பர் ஒருவரிடத்தில் மனந்திறந்து, அந்தரங்கமாகப் பேசுதல் என்ற கருத்தை மூல எபிரெய வார்த்தை தெரிவிக்கிறது. இவ்வாறாக, இது அன்பை ஆதாரமாகக் கொண்ட நெருங்கிய உறவு, பரஸ்பர நம்பிக்கையிலிருந்து உதயமாகும் சிலாக்கியமான நெருங்கிய நட்புறவு. ஒரு நபராக உங்களின் உண்மையான மதிப்பு உங்களை நிஜமாகப் புரிந்துகொள்கிற இவரால் மதிப்பிடப்படுகிறது என்பதை நீங்கள், கடவுளின் ஒரு நண்பராக, உணருவீர்கள். ஆனால் இந்த நட்புறவின் நன்மைகள் யாவை?
“என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கை”
பல இளைஞர்களுக்கு மேற்பூச்சான போலித்துணிச்சல் இருந்தும் உள்ளுக்குள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள். “நான் என் கருத்துகளை கூறுகிறேன், எவரேனும் தங்கள் கருத்துகளை முன்வைத்து, என்னுடையதை முற்றிலுமாக மாற்றிவிடுகிறார்கள், என்னைக் குறித்து நானே நிச்சயமாக இல்லை,” என்று 13 வயது ஜூடி வருந்துகிறார். ஆயினும், நம் பரலோக தகப்பன், தம்முடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில், வெற்றிகரமான வாழ்க்கைக்கு குறிப்பான வழிநடத்துதலைக் கொடுக்கிறார். பார்க்கப்போனால், பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை “வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும்” கொடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது, தன் பாதைகளை செவ்வையாக்க உதவும். (நீதிமொழிகள் 1:1-4; 3:1-6) இது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடும்! வாழ்வதற்கு மிகச் சிறந்த வழியை நீங்கள் அறிந்துகொள்ளக்கூடும்.
பைபிள், அதனோடுகூட பைபிள் துணை ஏடுகளான இதுபோன்ற பத்திரிகை, நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது முதற்கொண்டு பெற்றோரிடத்தில் சரியான மனப்பான்மை வரையாக கிட்டத்தட்ட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புத்திமதியளிக்கிறது. (நீதிமொழிகள் 1:8, 9; 13:20) இத்தகைய வழிநடத்துதலுக்குச் செவிகொடுக்கிறவர்கள் அதினால், “மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.” (நீதிமொழிகள் 14:27) உதாரணமாக, மே என்னும் பெயருடைய பெண், தன் சகோதரி பைபிள் நியமங்களை அலட்சியம் செய்ததைப் பார்த்தார். அந்தச் சகோதரி தன்னுடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் அகால மரணம் அடைந்தார். அத்தகைய ஒழுக்கக்கேடான வாழ்க்கையைத் தன்னால் எப்படி தவிர்க்கமுடிந்தது என்று விளக்குகிறார்: “யெகோவாவின் ஒழுக்கநெறி நியமங்களை என்னால் தெளிவாக பிரதிபலிக்கமுடியும், இது என்னைப் பாதுகாக்கிறது. யெகோவா எவ்வளவு நிஜமாக இருக்கிறார் என்றும் அவருடைய வழிதான் மிகச் சிறந்தது என்றும் காண்பதற்கு இந்த நியமங்கள் எனக்கு உதவுகின்றன.”
ஆயினும், யெகோவாவை நண்பராகக் கொண்டிருப்பது, அவருடைய தராதரங்களை வெறுமனே கற்றுக்கொள்வதைக் காட்டிலும் அதிகத்தை உள்ளடக்குகிறது. உங்கள் வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட அக்கறையை நீங்கள் அனுபவிக்கலாம். தாவீது ராஜா இளம்பிராயம் முதல் கடவுளால் போதிக்கப்பட்டார் என்று அவரைப்பற்றி பைபிள் சொல்கிறது. தாவீது கடவுளின் நண்பராக ஆனார், அவர் “அநேக இக்கட்டுகளை” அனுபவித்தபோதும், தன் வாழ்க்கையில் கடவுள் செயல்படுவதை உண்மையிலேயே அவர் கண்டார். தன் சார்பில் கடவுள் செய்த “அதிசயங்களை” பற்றியும், யெகோவாவின் “வல்லமை” அல்லது பலம் தன் வாழ்க்கையில் செயல்படுத்தப்பட்டதைப் பற்றியும் தாவீது கூறினார். அத்தகைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தாவீது எழுதினார்: ‘கர்த்தராகிய ஆண்டவரே, நீர் என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.’ (சங்கீதம் 71:5, 17, 18, 20) யெகோவாவின் ஆசீர்வாதங்களை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் உணர உணர, இதே நம்பிக்கையைக் கொண்டிருக்கக்கூடும். சவால்களின் மத்தியிலும் அவருடைய வழிநடத்துதலை நீங்கள் பின்பற்ற கடும் முயற்சியெடுக்கையில், நீங்கள் கடவுளுடன் பொன்னான உறவுக்குள் நிச்சயமாகவே நடப்பீர்கள்.—ஆதியாகமம் 6:9-ஐ ஒப்பிடுக.
சரியான வழியைப் பின்பற்ற கடவுள் நமக்கு உதவுகிறார்
வாழ்க்கையில் இருக்கும் எல்லா சோதனைகளோடும் அழுத்தங்களோடும் கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவது சுலபமல்ல. விசேஷமாக இது பெக்கியைப் பொருத்தமட்டில் உண்மையாக இருந்தது, குமரிப் பருவத்திலிருந்தே ஒரு போதைப்பொருள் அடிமையாகவும், ஒரு வேசியாகவும் அவர் இருந்தார். பைபிள் படித்ததன் மூலம் தன் அடிமைப்பழக்கத்தை மேற்கொள்ள அவரால் முடிந்தது, ஒழுக்கநெறி மாற்றங்களையும் செய்ய முடிந்தது, ஆகவே அவர் கடவுளுடன் ஒரு நட்புறவை வளர்த்துக்கொண்டார். ஆனால் பெக்கிக்கு அதே அழுத்தங்களை எதிர்ப்பட வேண்டியதாய் இருந்தது, இது அவற்றிலிருந்து தப்பிக்க போதைப்பொருளை நாடச் செய்தது. அவர் எவ்வாறு தொடர்ந்து தவிர்த்தார் என்று கேட்டபோது, அவர் பதிலளித்தார்: “அது யெகோவாவின் ஆவியினால் என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும்.”
தம்முடைய பரிசுத்த ஆவியை அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியை தம்முடைய நண்பர்களுக்குக் கடவுள் கொடுக்கிறார் என்பதையும், அவருடைய தராதரங்களின்படி அவர்கள் வாழ்வதற்கு இது வலிமையளிக்கும் என்பதையும் பெக்கி அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 5:32; 1 கொரிந்தியர் 6:9-11) “இப்பொழுதும் சில நேரங்களில் அந்தப் பழைய உணர்வுகள் மீண்டும் எனக்கு வரும், விசேஷமாக நான் தனியாக இருக்கும்போது; ஆனால் அப்போதே உடனடியாக ஜெபிக்க ஆரம்பித்துவிடுவேன். என் வாழ்க்கையில் நான் இதுவரை சாதித்ததில் வேறு எதைக்காட்டிலும், இந்தப் பிரச்சினைகளை மேற்கொள்ளக்கூடிய ஆற்றல்தான் எனக்கு அதிகக் கிளர்ச்சியூட்டுகிறது,” என்று பெக்கி ஒத்துக்கொள்கிறார். ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவர்’ நமக்கு ஒரு நண்பராக இருந்து உதவக்கூடும் என்று அறிவது எவ்வளவு உற்சாகமளிப்பதாய் இருக்கிறது.—எபேசியர் 3:20.
நீடியபொறுமை, சாந்தம், இச்சையடக்கம் போன்ற குணங்களை வளர்ப்பதற்கு கடவுளின் ஆவி நமக்கு உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23) மேலும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அல்லது மேய்ப்பர்கள் நடைமுறையான உதவியை அளிப்பதற்கென்றே கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெக்கி மேலும் கூறுகிறார்: “சபையிலிருந்து, விசேஷமாக மூப்பர்களிடமிருந்து, அதிகமான ஆதரவை நான் பெற்றேன். அது மாபெரும் ஓர் உதவி.”
‘என் இருதயத்தின் கன்மலை’
“நண்பன் எக்காலமும் அன்பு காட்டுகிறான், கஷ்டகாலங்களில் சகோதரனாவான்.” இவ்வாறு தி பேஸிக் பைபிளில் நீதிமொழிகள் 17:17 குறிப்பிடுகிறது. விசேஷமாக “கஷ்டகாலங்களில்” தான், ஒரு நண்பர் தேவைப்படுகிறார். சங்கீதக்காரன் ஆசாப் கடுமையான உணர்ச்சிப் போராட்டத்தை அனுபவித்தார், ஆயினும் ஒரு நண்பனைப்போல் கடவுளிடத்தில் நெருங்கி வந்தார். இவ்வாறாக, உள்ளத்தின் வேதனையால் அவருடைய “மனம் கசந்த” போதிலும்கூட, அவர் சொன்னார்: ‘தேவன் என் இருதயத்தின் கன்மலை.’ (சங்கீதம் 73:21, 26, 28) ஆசாப் என்ன உணருகிறார் என்பதை யெகோவா உண்மையிலேயே புரிந்துகொண்டார், அவருக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை நல்கினார். அவர் நம்பிக்கையையும் தைரியத்தையும் இழந்துவிடாதபடி, யெகோவாதாமே ஆசாபின் மீது சமநிலைப்படுத்தும் ஆற்றலாக இருந்தார்.
அதேவிதமாகவே, இன்னல் நிறைந்த காலங்களில் உங்களுக்கு ஒரு கன்மலையாக இருப்பார் நம் பரலோக நண்பர். இதை தன்னுடைய சொந்த அனுபவத்தின்மூலம் கண்டுகொண்டார் ஒரு குமரிப்பெண். போன்னீ 13 வயதாக இருக்கையில், அவருடைய சிறிய கிராம பள்ளிக்கூடத்துப் பெண்களில் சிலர், அவரைப்பற்றி கேடுவிளைவிக்கிற அவதூறான வதந்தியைப் பரப்பினார்கள். இந்தப் பொய்யை அனைவரும் நம்பிவிட்டதைப்போல் போன்னீக்குத் தோன்றியது. அவருடைய வகுப்பு மாணவிகள் அவரை உணர்ச்சியற்ற விதத்தில் நடத்தினார்கள், அவரை கெட்ட கெட்ட பெயர்களாலும்கூட அழைத்தனர். “வீட்டிற்கு வந்து பல இரவுகள் அழுவேன். நான் உள்ளுக்குள் மிகவும் புண்படுத்தப்பட்ட காரணத்தால், என்னை நானே மாய்த்துக்கொள்ளவும்கூட நினைத்தேன்,” என்று போன்னீ விளக்குகிறார். ஆதரவுக்காக தன் தோழிகள் சிலரிடம் சென்றார். “நான் ஆட்களிடத்தில் பேச முயற்சித்தேன், ஆனால் அவர்கள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் என் பிரச்சினையை ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றச் செய்தார்கள். சில சமயங்களில் நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்.” அத்தகைய கொந்தளிப்பின் மத்தியில், நம்பிக்கையை இழக்காமல் அவரை உறுதியாக வைத்திருந்தது எது? அவர் தொடர்ந்து கூறுகிறார்: “யெகோவாவுக்காக மாத்திரம் இல்லையென்றால், என்னை நானே மாய்த்திருப்பேன். நான் அவரை அவ்வளவாக நேசிக்கிறேன். அவர் என்னுடைய மிகச் சிறந்த நண்பர்.” கடவுளுடன் அவர் கொண்டிருந்த நட்புறவுதான் உணர்ச்சிப்பூர்வமாக நொறுக்கிய அந்த அனுபவத்தை சகிப்பதற்கு உதவியது என்பது இப்போது அவருக்குத் தெரியும்.
ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் கூருணர்வுத்திறத்தைப் பிறர் காட்டத் தவறும்போது, யெகோவா நம் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்கிறார், உண்மையிலேயே என்ன நடந்தது என்று அறிந்திருக்கிறார் என்பதை அறிவதே மிகப் பெரிய ஆறுதலாகும். மேலுமாக, நாம் இரக்கமற்ற விதத்தில் நடத்தப்படுகிறபோதும் அல்லது துர்ப்பிரயோகம் செய்யப்படும்போதும்கூட, நம் நண்பர் “இரக்கங்களின் பிதா” என்று அறிந்திருப்பது ஒரு பெரும் உதவியாகும். சில சமயங்களில் நம் சொந்த இருதயமே நம்மைக் கண்டனம் செய்யும், ஆனால், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (2 கொரிந்தியர் 1:3, 4; 1 யோவான் 3:20) ஒரு காரியத்தில் கடவுளின் நோக்குநிலையைக் கொண்டிருப்பது மெய்யாகவே ஆறுதலளிப்பதாய் இருக்கும். உதாரணமாக, ஒரு 13 வயது பையனை மூன்று ஆண்கள் மிருகத்தனமாக பாலியல் துர்ப்பிரயோகம் செய்தார்கள். “அதற்குப் பிறகு, எனக்கு நேர்ந்த நிலைமைக்கு நான் மிகவும் வெட்கப்பட்டேன் மற்றும் என்னை நானே நொந்துகொண்டேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன்,” என்று இவர் ஒப்புக்கொண்டார். பிறகு அவர் உவாட்ச் டவர் சொஸைட்டியின் பைபிள் சார்ந்த பிரசுரங்களில் கற்பழிப்பு என்ற பொருளின் பேரில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். “நான் இந்தத் தகவலைப் படித்தவுடன், என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அழுதேன். என் தோள்களிலிருந்து ஒரு பெரிய பாரம் எடுக்கப்பட்டதைப்போல் நான் உணர்ந்தேன். நான் இரையானவனாக இருந்தேன். யெகோவாவின் மீதும், குடும்பம் மற்றும் நண்பர்கள் மீதும் சார்ந்திருந்ததால், இந்தக் கொந்தளிப்பான காலத்தை என்னால் மேற்கொள்ள முடிந்தது.” அத்தகைய பைபிள் சார்ந்த வார்த்தைகள் எத்தகைய ஆதரவைக் கொடுக்கின்றன!
கடவுளுடன் நட்புறவு பல வழிகளில் உதவும்! வாழ்க்கையில் உண்மையான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம், கடவுளின் வழியைப் பின்பற்றுவதற்குத் தேவையான உள்ளார்ந்த வலிமையை வளர்த்துக் கொள்ளலாம், இன்னல்கள் நிறைந்த காலங்களில் கன்மலைபோன்ற ஆதரவைக் கொண்டிருக்கலாம். ஆனால் அத்தகைய நட்புறவை நாம் எவ்வாறு கட்டியமைப்பது? இதே தொடரில் இனி வரவிருக்கும் ஒரு கட்டுரை விளக்கம் கொடுக்கும்.
[பக்கம் 13-ன் படம்]
கடவுள் ‘உங்கள் இருதயத்தின் கன்மலை’ ஆகலாம்