மீன் விருந்துக்குக் கழுகுகள் பறந்து செல்லும் இடம்
அவை ஆயிரக்கணக்கில், விருந்திற்கென அழகாக உடுத்தி, அலாஸ்கா முழுவதிலிருந்தும், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வாஷிங்டன் மாகாணம் போன்ற தொலை தூரத்திலிருந்தும் பறந்து வருகின்றன. சிந்தையைக் கவரும் பறவைகள், அவற்றின் வெள்ளைத் தலைகளுடன், பகட்டான வெள்ளை வாலின் இறகுகளை விசிறிக்கொண்டு தரையில் இறங்குவதற்கு அதிக பிரசித்திப்பெற்றவை. அவற்றின் பழுப்பு நிற உடல்கள் சராசரியாக ஆறு கிலோகிராம் இருக்கும், ஆணினத்தைவிட பெண்ணினம் சற்று பெரியதாக இருக்கும். இறக்கைகளை 1.8 முதல் 2.4 மீட்டர் வரை விரித்துக்கொண்டு, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்—ஆனால் அவற்றின் கூரிய கண்கள் மீன் ஒன்றை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே ஒருவேளை கண்டுவிட்டால், அவை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் அதன்மீது பாய்ந்து வந்து, கொத்தியெடுத்துச் சென்றுவிடும்!
ஆயினும் சில்காட் ஆற்றில் நடைபெறும் அவற்றின் விருந்துக் கூட்டத்திற்காக அத்தகைய பிரமிப்பூட்டும் வித்தையை அந்தரத்தில் காட்டவேண்டிய அவசியமில்லை. அவற்றின் சால்மன் மீன் உணவு எங்கும் போய்விடாது. அவை பெரும் திரளாக அவற்றின் முன் பரப்பி வைக்கப்பட்டுள்ளன, வெறுமனே அவற்றால் விழுங்கப்படத்தான் காத்திருக்கின்றன. இந்த அனைத்து விருந்துகளையும் அலாஸ்கா சில்காட் பால்டு ஈகில் சரணாலயம் அளிக்கிறது. இதை அலாஸ்கா மாநிலம் 1982-ல் “பால்டு ஈகிலை [வெள்ளைத் தலையையும் கழுத்து மற்றும் வாலின் இறகுகளை வெண்ணிறத்திலும் கொண்டுள்ள ஒருவகை கழுகு] பாதுகாப்பதற்கும் உலகிலேயே மிகப் பெரியளவில் அவை திரண்டிருக்கும் மையமாகவும் அவற்றின் முக்கிய தங்கும் இடமாக நீடித்திருப்பதற்கும்,” நிறுவியது.
சில்காட், கிலேஹேனீ மற்றும் சர்க்கூ ஆறுகளின் ஆற்றுப் படுகை நிலங்களான 19,000 ஹெக்டேர் பரப்பளவை இந்தச் சரணாலயம் கொண்டுள்ளது. கழுகுகள் குடியிருப்புக்கான முக்கிய இடங்களை மட்டுமே உட்படுத்துகின்றன. ஹென்ஸ் நகரத்திற்கும் குலூவான் நகரத்திற்கும் இடையே ஹென்ஸ் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் செல்லும் சில்காட் ஆற்றில் எட்டுக் கிலோமீட்டர் நீளமுள்ள இடமே ஆயிரக்கணக்கான கழுகுகள் செறிந்துள்ள மற்றும் அவற்றைக் காண்பதற்காக பார்வையாளர்கள் திரண்டு செல்லும் விசேஷமான இடம்.
ஆற்றின் எட்டுக் கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பகுதி கழுகுகளுக்குத் திரளான அருஞ்சுவை சால்மன் மீன்களைக் கொடுக்க ஏன் முடிகிறது என்பதை “அலாஸ்கா சில்காட் பால்டு ஈகில் சரணாலயம்” என்று பெயரிடப்பட்ட அரசாங்கத்தின் துண்டு வெளியீடு சொல்கிறது.
“நீர் உறைந்துபோகும் மாதங்களில், சில்காட் ஆற்றின் எட்டுக் கிலோமீட்டர் நீளமுள்ள பகுதி உறையாமல் இருப்பதற்கு இயற்கை நிகழ்வுதான் காரணமாக அமைகிறது, இது ‘வண்டல் படிவிடம் தேக்கம்’ (alluvial fan reservoir) என்று அழைக்கப்படுகிறது. சர்க்கூ, கிலேஹேனீ, சில்காட் ஆகிய ஆறுகள் சந்திக்கும் இடத்தில், சரளைக் கல், பாறை, மணல், பனிப்பாளத்தின் சிதைவுகள் விசிறி வடிவத்தில் சேர்ந்துள்ள இடம்தான் சர்க்கூ வண்டல் படிவிடம், இது பெரிய நீர்த் தேக்கமாக செயல்புரிகிறது.”
சாதாரணமாக, ஒரு ஆறு மற்றொரு நீர் நிலையுடன் கலக்கும்போது வேகம் குறைக்கப்படுகிறது, அதன் மண்டியைப் படியவைத்து டெல்டாவை உருவாக்குகிறது, ஆனால் நீர்த் தேக்கத்தை பின்விட்டுச் செல்வதில்லை. ஆயினும் சர்க்கூ ஆறு சில்காட் ஆற்றுடன் கலக்கிற இந்த இடத்தில், பூமியின் பாறைத் தளங்களின் இடைமுறிவுகள் மற்றும் பனிப்பாளத்தின் செயல் ஆகியவை, கடல் மட்டத்துக்குக் கீழ் 230 மீட்டருக்கும் அதிகமான ஆழமுள்ள ஒரு பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்கை குடைந்தெடுப்பதில் விளைவடைந்தது. நகரும் பனிப்பாறைகள் உருகியபோது சிதைவுகளைப் பின்விட்டுச் சென்றன, அவற்றுடன் மணல் மற்றும் சரளைக் கல் படிப்பொருள்கள் ஆகியவற்றை ஆறுகள் சேர்த்தன. இவை கடைசியில் அந்தப் பள்ளத்தாக்கு அடித்தளத்திலிருந்து 230 மீட்டருக்கு அதிகமான அடர்த்திக்கு இளகிய நுண்துளையுடைய வண்டல் படிவத்தை அதன் அடித்தளத்தில் கொண்டிருக்கும் வரை சேர்த்துவிட்டன.
இதமான வெப்பம் நிலவும் வசந்தகாலம், கோடைகாலம், முன் மாரிக்காலம் ஆகிய பருவங்களில், பனியிலிருந்து மற்றும் பனிப்பாளத்திலிருந்து உருகிய தண்ணீர் வண்டல் படிவிடத்தில் பாய்கிறது என்று அந்த அறிக்கை காட்டுகிறது. இந்த வண்டல் படிவிடம் தண்ணீரை அது வெளியேற்றும் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் பெற்றுக்கொண்டு, ஒரு பிரமாண்டமான நீர்த் தேக்கத்தை உண்டாக்குகிறது. ஈகில் சரணாலயத்தின் துண்டு வெளியீடு தொடர்ந்து கூறுகிறது: “பனிக்காலம் வந்ததும், குளிர்ச்சியான சீதோஷ்ணம் தொடங்கிவிடும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் தண்ணீர் எல்லாம் உறைந்துவிடும். ஆயினும், இந்தப் பெரிய நீர்த் தேக்கத்தின் தண்ணீர் சுற்றுவட்டாரத்திலிருக்கும் தண்ணீரின் வெப்பநிலையைவிட ஐந்து டிகிரியிலிருந்து பத்து டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகம் இருக்கும். இந்த வெதுவெதுப்பான தண்ணீர் சில்காட் ஆற்றில் ‘கசிந்து’ தண்ணீர் உறையாமல் தடுக்கிறது.
“இந்த இடத்திலும் அருகிலிருக்கும் மற்ற நீரோடைகளில் மற்றும் சிற்றாறுகளில் ஐந்து வகையான சால்மன் மீன் இனங்கள் திரளாகக் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சு பொரிப்பதற்கான சால்மன் மீனின் வருகை கோடைகாலத்தில் தொடங்கி பின் மாரிக்காலம் அல்லது முன் பனிக்காலம் வரையாக நீடிக்கிறது. குஞ்சுகளைப் பொரித்து சிறிது காலத்திற்குப் பின் சால்மன் மீன்கள் இறந்துவிடுகின்றன, அவற்றின் சடலங்கள்தான் கழுகுகளுக்குப் பெரும் அளவில் உணவாக அமைகின்றன.”
சால்மன் மீன் விருந்து அக்டோபரில் ஆரம்பமாகி பிப்ரவரியில் முடிகிறது, அதற்குப்பின் உடனடியாக, கழுகுகள் ஆயிரக்கணக்கில் வெகு தூரமான சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்குச் சிதறிச் செல்லத் துவங்குகின்றன. ஆயினும் இந்தச் சரணாலயம் 200 முதல் 400-க்கு இடைப்பட்ட கழுகுகளுக்கு வருடம் முழுவதற்கும் இல்லமாகத் திகழ்கிறது. அவை பிடிக்கும் ஏதேனும் மீனுடன்கூட, நீர்ப்பறவை, சிறிய பாலூட்டிகள் மற்றும் அழுகிய பிணங்கள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் உணவை ஈடு செய்து கொள்கின்றன.
குதூகலமான காதலீடுபாடுகள், நிலையான “திருமணங்கள்”
அவை 40 வயதை எட்டுகின்றன; முழு வாழ்நாளுக்காக இணைசேருகின்றன, ஆனால் பொதுவாக கூடு கட்டும் பருவங்களில் மட்டும் சேர்ந்து இருக்கும். காதலீடுபாட்டுச் செயல்கள் ஏப்ரலில் ஆரம்பமாகிறது, ஈகில்ஸ்—தி அலாஸ்கா சில்காட் பால்டு ஈகில் ப்ரிஸர்வ் என்னும் செய்திமடலின் பிரகாரம் “நகங்களை ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு பாய்வது மற்றும் ஆகாயத்தில் குட்டிக்கரணம் போடுவது போன்ற அற்புதமான காதலீடுபாட்டுக் காட்சிகள் அடங்கும்.” இவை மட்டுமா, கைகளையும் அல்லவா கோர்த்துக் கொண்டிருக்கின்றன? மெய்மறந்த காதலாகத் தெரிகிறதே!
இந்தச் சரணாலயத்தில் தொண்ணூற்று நான்கு கூடுகள் காணப்பட்டிருக்கின்றன. மே மாதத்தின் பிற்பகுதிக்கும் ஜூன் மாதத்தின் ஆரம்பத்திற்கும் இடையில், அடைகாக்கும் காலமாகிய 34 அல்லது 35 நாட்களுக்குப்பின் பெரும்பாலும் ஒன்று முதல் மூன்று முட்டைகள் பொரிக்கின்றன. இந்தக் குஞ்சுகள் செப்டம்பரில் கூட்டை விட்டுச் செல்கின்றன, ஆனால் அவை தங்களின் பழுப்பு நிறப் புள்ளிகளுடனும் வெள்ளை இறகுகளுடனும் திருப்தி அடைந்தாக வேண்டும். அவற்றிற்கு நான்கு அல்லது ஐந்து வயதாகும் வரை கவர்ச்சியான வெள்ளைத் தலைகளையும் வால்களையும் பெற்றுகொள்வதில்லை!
கழுகுகள் உயிர்வாழப் போராடும் சில பின்னணிகளையும் இந்தச் சரணாலயத்தை எப்படிப் பாதுகாப்பாகக் கண்டுகளிப்பது என்று பார்வையாளர்களுக்கு ஆலோசனையையும்கூட அந்த செய்திமடல் கொடுக்கிறது:
“கழுகுகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட 19,000 ஹெக்டேர் பரப்பை அலாஸ்கா சில்காட் பால்டு ஈகில் சரணாலயம் கொண்டுள்ளது. ஆனால் கழுகுகள் எந்நாளும் பாதுகாக்கப்படவில்லை, ஒரு காலத்தில் அவை துஷ்ட உயிரிகளைக் கொல்லும் வேட்டைக்காரர்களுக்குச் சட்டப்பூர்வமான வேட்டை விளையாட்டாக இருந்தன. உயிருடனிருக்கும் சால்மன் மீன் மற்றும் சிறு விலங்கினங்கள் ஆகியவற்றின் மீது கழுகுகளுக்கு இருந்த அபார பசியைப்பற்றிய அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, 1917-ல் அலாஸ்கா பிராந்திய சட்ட மன்றம் கழுகுகளைக் கொண்டு ஊக்க ஊதியத்தை உருவாக்கியது. ஹென்ஸில் உள்ள வில்லியம் ஹெச். சீவார்டு கோட்டையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் தங்களுடைய சொற்ப சம்பளத்துடன், ஒவ்வொரு ஜோடி நகத்திற்காக $1 (பிறகு $2-க்கு உயர்ந்தது) கூடுதலாகக் கொடுக்கப்பட்டார்கள் என்னும் கதைகளையும் சொல்கின்றனர்.
“சால்மன் மீன் குஞ்சு பொரிப்பதற்கு கழுகுகளால் தீங்கு இழைக்கப்படுகிறது என்று மிகைப்படுத்திக் கூறப்பட்டதாக புலன்விசாரணைகள் கண்டுபிடித்ததால், பின்னர் ஊக்க ஊதியம் 1953-ல் நீக்கப்பட்டது. அதற்குள்ளாக 1,28,000 கழுகுகள் ஊக்க ஊதியத்திற்காகச் சுட்டுத் தள்ளப்பட்டிருந்தன. ஊக்க ஊதியம் நடைமுறையில் இருந்த சமயத்திலேயே, 1940-களில் தென்கிழக்கு அலாஸ்காவில் இருந்த கழுகுகளின் தொகையானது 1970-களில் இருந்த கழுகுகளின் தொகையில் பாதியளவுதான் இருந்தன என்று மதிப்பிடப்பட்டது.
“1959-ல் அலாஸ்கா ஒரு மாநிலமாக மாறியபோது, பால்டு ஈகில் சட்டம் 1940-ன்படி கூட்டரசு பாதுகாப்பின் கீழ் அலாஸ்காவின் பால்டு ஈகில் வந்தது. ஒரு கழுகைக் கொல்லுவது கூட்டரசுக்கு இழைக்கும் குற்றமாகும், உயிருள்ள அல்லது செத்த கழுகை அல்லது அதன் உடலின் எந்த உறுப்புகளையும் (இறகுகள் உட்பட!), சில குறிப்பிட்ட நிலைமைகள் நீங்கலாக வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.
“1972-ல் அலாஸ்கா மாநில சட்டமன்றம் சில்காட் ரிவர் க்ரிட்டிகல் ஹேபிட்டை நிறுவியது. பெரும் அளவில் கழுகுகள் திரண்டிருக்கும் மையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, இது அலாஸ்காவின் மீன் மற்றும் வேட்டையாடப்படும் விலங்குத் துறையால் நிர்வகிக்கப்பட்டது. கழுகுகளின் தங்கும் இடம் என்று மிகப் பரந்தளவில் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி பாதுகாக்கப்படாமலே இருந்தது, சில்காட் சமவெளியில் நிலப்பகுதியை உபயோகிப்பதன் பேரில் சுற்றுச் சூழல் வல்லுநர்களுக்கும் முன்னேற்ற ஆதரவாளர் சக்திகளுக்கும் இடையே நீண்டகாலமாக, அடிக்கடி கசப்பான போராட்டம் எழுந்தது. தேசிய ஆடபன் சங்கத்தால் நடத்தப்பட்ட தீவிர ஆய்வு மற்றும் ஹென்ஸ்/குலூவான் வளங்களின் பேரில் மாநில நிதி உதவியளித்து நடத்தப்பட்ட ஆய்விற்குப் பின்னர், மரத்தொழில் புரிவோர், மீனவர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், தொழில் புரிவோர் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் கடைசியாக ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள். 1982-ல் மாநில சட்ட மன்றம் அந்த உடன்பாட்டை ஒரு சட்டமாக இயற்றி, 19,000 ஹெக்டேர் பரப்பளவான அலாஸ்கா சில்காட் பால்டு ஈகில் சரணாலயத்தை உருவாக்கியது.
“இந்தச் சரணாலயத்தில் மரம்வெட்டுதல் அல்லது சுரங்கவேலை அனுமதிக்கப்படவில்லை, ஆனால் பெரி பழங்களை (berry) பொறுக்குதல், மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற பண்டைய முறையில் நிலத்தை பயன்படுத்துவது தொடரலாம். உள்ளூர்வாசிகள், மாநில அதிகாரிகள் மற்றும் ஓர் உயிரியல் வல்லுநர் என்று 12 உறுப்பினர்கள் அடங்கிய அறிவுரைக் குழுமத்தின் உதவியோடு, அலாஸ்கா டிவிஷன் ஆஃப் பார்க்ஸ் இந்தச் சரணாலயத்தை நிர்வகிக்கிறது.
“சுற்றுச்சூழலைப் பாதிக்காமல், இந்தச் சமவெளியின் இயற்கை வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்னும் கேள்வி தொடர்ந்துகொண்டே இருக்கிறது, நிலத்தை பயன்படுத்துவதில் உள்ள விவாதங்கள் இன்னமும் இந்தச் சில்காட் சமவெளியில் சர்ச்சையை எழச்செய்யலாம். ஆனால், கழுகுகளின் பாதுகாப்பிற்காக உள்ளூர் தீர்வு காணப்பெற்றதில் உள்ளூர்வாசிகள் பெருமை அடைந்துள்ளனர்.”
பார்வையாளர்கள் கழுகுகளைப் பார்க்கக்கூடிய முக்கிய இடம் ஹென்ஸ் நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல் இருக்கிறது, இந்த இடம் சில்காட் ஆற்றுக்கு இணையாகச் செல்கிறது. அங்குப் பரண்கள் இதற்காகவே போடப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கிலேஹேனீ ஆறு சில்காட் ஆறு
சர்க்கூ ஆறு குலூவான்
கழுகைப் பார்வையிடும் இடம்
(வண்டல்படிவிடம் தேக்கம்)
▴
▴
ஹென்ஸ் நெடுஞ்சாலை
சில்கூட் ஆறு ▴ சில்கூட் ஏரி
சில்காட் ஏரி ▴
சில்காட் ஆறு ▴ லூட்டாக் குடா
டாக்ஹீன் ஆறு ▴
ஹென்ஸ்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps™ copyright © 1993 Digital Wisdom, Inc.
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Bald eagles on pages 15-18: Alaska Division of Tourism