கண்ணாடி—அதை முதலில் உருவாக்கியவர்கள் நெடுங்காலத்துக்குமுன் வாழ்ந்தனர்
நுண்ணிய ஓரணு உயிர்களாகிய நுண்பாசிகள் (diatoms), கடலின் மேற்பரப்பு நீரில் மிதக்கின்றன; சமுத்திரத்தின் மிதவை உயிரிகளின் (plankton) பாகமாக இருக்கும் உயிரிகளில் பத்தில் ஆறு பங்கை இவை உருவாக்குகின்றன. “மிதவியம்” என்ற வார்த்தை, “அலைந்து திரிய செய்யப்பட்டது” என்று அர்த்தப்படுகிறது; மிதவை உயிரிகள் “நீரோட்டத்தின் சக்திக்கேற்றவாறு மிதந்து திரிவதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாதபடி மிகவும் சிறியவையும் பலமற்றவையுமாய் இருக்கின்றன” என்று சொல்லப்படுகின்றன.
அவை சிறியவையாக இருக்கக்கூடும், ஆனால் பலமற்றவையாக இருப்பது அரிது. புயல்கள் கடலின் ஆழத்திலிருந்து ஊட்டச்சத்துப் பொருட்களை கலக்கி மேலெழுப்பும்போது, நுண்பாசிகள் என்றழைக்கப்பட்ட இந்த ஓரணு பாசிகள், வெறித்தனமாக உண்டு, இரண்டே நாட்களில் தங்கள் எண்ணிக்கையில் இருமடங்காகலாம். மேலும் அவை இருமடங்காகும்போது, தங்கள் கண்ணாடி உற்பத்தியையும் இரட்டிப்பாக்குகின்றன. உயிர்—அது எப்படி இங்கு வந்தது? படைப்பினாலா பரிணாமத்தினாலா? (ஆங்கிலம்) என்ற புத்தகம் இதைக் குறித்து விரிவாகச் சொல்லுகிறது:
“நுண்பாசிகள் என்ற ஓரணு உயிரிகள், கடல்நீரிலிருந்து சிலிக்கானையும் ஆக்சிஜனையும் எடுத்து, கண்ணாடி செய்து, அதை வைத்து மிகச் சிறிய ‘மாத்திரைப்பெட்டிகளை’ கட்டி, அதனுள் தங்கள் பச்சைநிற பச்சையத்தை வைத்திருக்கின்றன. அந்தப் பெட்டிகளின் முக்கியத்துவத்தையும் அழகையும்பற்றி ஓர் அறிவியலாளர் இவ்வாறு புகழ்ந்துரைக்கிறார்: ‘கடலில் உயிர் வாழும் அனைத்திற்கும் தேவையான பத்தில் ஒன்பது பங்கு உணவை அளிக்கும் மேய்ச்சல் நிலங்களாக, இந்த நகைப்பெட்டிகளுக்குள் இருக்கும் பச்சை இலைகள் இருக்கின்றன.’ அவற்றின் உணவு மதிப்பின் பெரும்பாகம், நுண்பாசிகள் உண்டுபண்ணும் எண்ணெயில் இருக்கிறது; அவற்றின் பச்சையம் சூரிய ஒளியில் திளைக்கும்விதத்தில், மேல்மட்டத்தின் அருகே துள்ளி மிதப்பதற்கும் அதுவே உதவி செய்கிறது.
“இதே அறிவியலாளர் நமக்கு மேலுமாகச் சொல்வதாவது, அவற்றின் அழகிய கண்ணாடிப் பெட்டிகள், ‘திகைப்புறச் செய்யும் பல்வேறு வடிவங்களில்—வட்டங்கள், சதுரங்கள், கேடயங்கள், முக்கோணங்கள், நீள் வட்டங்கள், நீள் சதுரங்கள்—எப்போதுமே வடிவியல் சம்பந்தமான செதுக்கங்களுடன் நயநுணுக்க எழிலுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மனித முடி ஒன்று நீளவாட்டில் நானூறு கூறுகளாக்கப்பட்டு அதில் ஒன்றை இந்த செதுக்குக்குறிகளுக்கிடையே பொருத்தும் அளவிற்கு இவை தூய்மையான கண்ணாடியில் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.’ ”—பக்கங்கள் 143-4. a
சமுத்திரத்தின் மிதவை உயிரிகளில் செழித்தோங்கும் மற்றுமோர் நுண்ணிய கலை வேலைப்பாட்டுத் தொகுதியானது ரேடியோலேரியாக்களாகும். இந்த நுண்ணிய முன்னுயிரிகளும்—20 அல்லது அவற்றிற்கும் அதிகமானவை ஒரு குண்டூசித்தலையில் ஒன்றையொன்று தொடாமல் அமர முடிகிற இவையும்—சமுத்திரத்திலுள்ள சிலிக்கானையும் ஆக்சிஜனையும் வைத்து கண்ணாடியை உண்டுபண்ணுகின்றன. இந்தப் படைப்புகளில் உருவமைக்கப்பட்டிருக்கும் சிக்கலான அழகும் வியப்பூட்டும் வடிவமைப்புகளும் விவரிப்பை செல்லாததாக்குகின்றன, ஏனென்றால் அவை நுண்பாசிகளையும் விஞ்சி நிற்கின்றன. ரஷ்ய பொம்மைகளைப் போல மூன்று உருண்டைகள் ஒன்றுக்குள் ஒன்று பொருந்தி அமைந்துள்ளதும் அதன் கண்ணாடி உருவரைச்சட்டத்தினுள்ளிருக்கும் துளைகளினூடே புரோட்டோப்பிளாச கூர்முனைகள் அதன் உணவைப் பிடிப்பதற்கும் அதை செரிப்பதற்கும் ஏற்றபடி நீட்டிக்கொண்டிருக்கும் ரேடியோலேரியாக்களில் ஒன்றைக் காண்பிக்கும் இதனோடு கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கவனமாக ஆராயுங்கள். அறிவியலாளர் ஒருவர் இந்தக் குறிப்பை அளித்தார்: “இந்த மிகச் சிறந்த கட்டடக் கலைஞருக்கு மெல்லிய குவிமாடம் ஒன்று போதாது; இழைப் பின்னல் வேலைப்பாடுகள் அமைந்த மூன்று குவிமாடங்கள் ஒன்றிற்குள் ஒன்றாக அமைக்கப்பட்டதாய் இருக்கவேண்டும்.”
கண்ணாடி உருவரைச்சட்டங்களைக் கட்டியமைக்கும் கடற்பஞ்சுகளும் இருக்கின்றன—வீனஸ் பூக்கூடை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். முதன்முதலாக, 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதன் திட்டமைப்பு கண்ணைக்கவர்ந்து ஈர்க்கும் அளவுக்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்ததால், இந்தக் கடற்பஞ்சுகள் உயிரியல் சம்பந்தமான சேகரிப்புகளில் விலையுயர்ந்த பொக்கிஷங்களாக ஆயின; இவை அரியவை அல்ல ஆனால் “பிலிப்பீன்ஸில் சேபூக்கு அருகிலுள்ள பகுதியில் அடிகடலிலும், ஜப்பானிய கடற்கரையோரங்களில் 200-300 மீட்டர் [700-1,000 அடி] ஆழத்திலும், ஒரு கம்பளத்தையே உருவாக்குகின்றன” என்று கண்டுபிடிக்கப்பட்டது வரையாக அவ்வாறிருந்தது.
அறிவியலாளர் ஒருவர் பின்வருமாறு சொல்லுமளவிற்கு அதனால் மிகவும் கவரப்பட்டு, திகைப்புற வைக்கப்பட்டார்: “[வீனஸின் பூக்கூடை] என்றழைக்கப்படுகிறதைப் போன்ற சிலிக்கா கம்பிமுட்கூறுகளாலான சிக்கலான கடற்பஞ்சின் உருவரைச்சட்ட அமைப்பைப் பார்க்கையில், நமது கற்பனைத்திறம் திணறவைக்கப்படுகிறது. பகுதியளவே தனித்தியங்கும் நுண்ணுயிர் செல்கள் ஒன்றிணைந்து பத்துலட்ச கண்ணாடித் துண்டுகளை வெளிவரச்செய்து அப்பேர்ப்பட்ட கடுஞ்சிக்கலான அழகிய பின்னலமைப்பை எப்படி உருவாக்க முடியும்? நமக்கு அது தெரியாது.”
கடற்பஞ்சுக்கும் அது தெரியாது. அதற்கு மூளை இல்லை. அது அவ்வாறு செய்யும்படி திட்டமைக்கப்பட்டிருப்பதால் அவ்வாறு செய்கிறது. அதைத் திட்டமைத்தவர் யார்? மனிதன் அல்ல. அவன் அங்கு இருக்கவில்லை.
கண்ணாடியின் வரலாற்றில் மனிதனின் பங்கு
இப்போது மனிதன் இங்கு இருக்கிறான், கண்ணாடியை உண்டாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் அவன் காணக்கூடியவிதத்தில் முக்கியப் பங்கை வகிக்கிறான். அது எங்கும் காணப்படுகிறது; அது நம்மைச் சுற்றி இருக்கிறது. அதை உங்கள் ஜன்னல்களில், மூக்குக் கண்ணாடிகளில், கம்ப்யூட்டர் திரையில், மேசைத் தட்டுமுட்டுச் சாமான்களில், மற்றும் ஆயிரக்கணக்கான மற்ற பொருள்களிலும் கொண்டிருக்கிறீர்கள்.
கண்ணாடியின் பல்வகை பயனுள்ள தன்மையும் அழகும் அதன் பிரபலத்தைக் காத்துக்கொள்ள உதவியிருக்கின்றன. அது ஓரளவு எளிதாக உடைந்துவிடக்கூடும் என்றாலும், அதற்கு மற்ற பலங்கள் இருக்கின்றன. உணவுப் பொருட்களை வைப்பதற்கு அதுவே இன்னும் உகந்ததாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, உலோகம் ஏற்படுத்துவதுபோல அது உணவுக்கு ஒருவித சுவையை ஏற்படுத்துவதில்லை. சில கண்ணாடிக் கலங்கள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படலாம். உங்களுக்கு இஷ்டமான உணவகம், ஓர் அறுவடையில் கிடைத்த திராட்சைப் பழ ரசத்தை பிளாஸ்டிக் கப்புகளில் தருவதை நீங்கள் அரிதாகவே கற்பனை செய்துபார்க்க முடியும்.
யோபு, மதிப்பில் கண்ணாடியைப் பொன்னுடன் ஒப்பிடுகிறார். (யோபு 28:17, NW) அது இப்போது பயன்படுத்தப்படுவது போல் அவ்வளவு சாதாரணமானதாக அவருடைய நாளில் இல்லை; ஆனால் ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேலான வருடங்கள் அது ஒருவேளை உபயோகத்தில் இருந்திருக்க வேண்டும்.
காலப்போக்கில் கண்ணாடி உண்டாக்கும் கலை எகிப்தை சென்றெட்டியது. உள்மையப்பகுதியை உருவாக்குதல் என்ற ஒரு முறையை எகிப்தியர்கள் பயன்படுத்தினர். களிமண் மற்றும் சாணத்தால் வடிவமைக்கப்பட்ட உள்மையப்பகுதி ஒன்று உண்டாக்கப்பட்டது; ஒரு சமதளமான பரப்பில் உருட்டப்படுகையில் உருக்கப்பட்ட கண்ணாடி அதைச் சுற்றி ஊற்றப்பட்டு, வடிவமைக்கப்பட்டது. பின்னர் பளபளப்பான நிறமுடைய கண்ணாடி இழைகள் பல்வேறு உருவரைகளை உண்டாக்கும்படி அதன்மீதாக இழுத்துச்செல்லப்பட்டன. கண்ணாடியின் சூடு ஆறியதும், அந்தக் களிமண் உள்மையப்பகுதி கூரிய ஒரு கருவியை வைத்து வெளியே எடுக்கப்படுகிறது. பழம்பாணியான முறையைப் பயன்படுத்தியபோதிலும், ஆச்சரியகரமான கவர்ச்சிக்குரிய சில கண்ணாடிப் பொருள்கள் உண்டாக்கப்பட்டன.
வெகுகாலத்திற்குப் பின்னரே, ஊதுவதன்மூலம் கண்ணாடிப்பொருட்களை உண்டாக்கும் புதிய முறை, கண்ணாடி உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். இது பெரும்பாலும் கிழக்கு மத்தியதரைக் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும்; அதுவே இன்றும் கண்ணாடி உண்டாக்குவதற்கான முக்கிய வழியாக இருக்கிறது. உள்ளீடற்ற குழாய் ஒன்றிற்குள் ஊதுவதன்மூலம், அனுபவம் வாய்ந்த கண்ணாடி ஊதுபவர், ஊதுகுழலின் முனையில் இருக்கும் உருகிய கண்ணாடி ‘உருகு குழம்பிலிருந்து’ விரைவில் சிக்கலானதும் சமச்சீரானதுமான வடிவங்களை உருவாக்க முடியும். இன்னொரு வகையாக, அவர் உருகிய கண்ணாடியை ஒரு அச்சாகவும் ஊதியெடுக்க முடியும். இயேசு பூமியில் இருந்தபோது, ஊதுவதன்மூலம் கண்ணாடி செய்தல் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது.
ஊதுவதன்மூலம் கண்ணாடி செய்யும் முறையின் கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசின் ஆதரவுடன், கண்ணாடிப் பொருட்களை சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடியதாக்கிற்று; இனிமேலும் கண்ணாடிப் பொருட்கள், உயர்குடி மக்களுக்கும் செல்வந்தருக்கும் மட்டுமே சொந்தமானவையாக இருக்கவில்லை. ரோம செல்வாக்கு அதிகரித்தபோது, கண்ணாடி உருவாக்கும் கலை பல நாடுகளுக்குப் பரவியது.
15-ம் நூற்றாண்டிற்குள், ஐரோப்பாவுக்கு முக்கியமான வணிக மையமாக இருந்த வெனிஸ், ஐரோப்பாவிலேயே கண்ணாடிப் பொருட்களின் முக்கிய உற்பத்தியாளராகி இருந்தது. வெனிஸிய கண்ணாடித் தொழிற்சாலை மூரானோவை மையமாகக் கொண்டிருந்தது. வெனிஸிலுள்ள கண்ணாடி உண்டாக்குகிறவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்; ஆனால் அவர்களுடைய விசேஷித்த வணிக இரகசியங்கள் மற்றவர்களுக்குச் சொல்லப்படாதபடி, மூரானோ தீவிலிருந்து அவர்கள் வெளியே செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தனர்.
அழகிய வெனிஸிய கண்ணாடிப் பொருட்கள் கண்ணாடியின் பிரபலத்தைக் கூட்டுவதற்காக அதிகத்தைச் செய்தன; ஆனால் கண்ணாடி உருவாக்குதல் எவ்விதத்திலும் அவ்வளவு எளிதான வேலையாக இருக்கவில்லை. அது எப்படி இருந்தது என்பதை விளக்குகிற 1713-ன் பிரசுரம் ஒன்றை கண்ணாடியைப் பற்றிய சுருக்கமான வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் மேற்கோள் காட்டுகிறது. “அந்த ஆட்கள் பாதி-நிர்வாணமாக உறையவைக்கும் குளிரில், மிகவும் சூடான உலைகளுக்கு அருகில் தொடர்ந்து நிற்கிறார்கள் . . . அளவுக்கதிகமான சூட்டினால் . . . அவர்களுடைய இயல்பான நிலை பொசுக்கப்படுவதால் அவர்கள் வாடிவதங்கிவிடுகிறார்கள்.” பின்னான வருடங்களில், சுழலும் சக்கரம் ஒன்றையும் உராய்வுப் பொடிகளையும் வைத்து கண்ணாடி அறுக்கிறவர்கள் கண்ணாடிக்கு மெருகூட்டினர்.
பிந்திய கண்டுபிடிப்புகள்
கண்ணாடியின் வரலாற்றில், இங்கிலாந்து விசேஷித்த பெயரைச் சம்பாதித்திருக்கிறது. கண்ணாடி உருவாக்கும் ஆங்கிலேயர் ஒருவர் 1676-ல் ஈயக்கண்ணாடி உருவாக்குவதற்காக ஒரு செய்முறையைக் கண்டுபிடித்தார். ஈய ஆக்ஸைடை சேர்ப்பது, பலமான, தெளிவான, பளிச்சிடும் கனத்த கண்ணாடியை உருவாக்கியது.
விக்டோரியாவின் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசு அதன் சிறந்த நிலையில் இருந்தது; இந்தச் சமயத்திற்குள் பிரிட்டனும் பெரும் கண்ணாடி உற்பத்தியாளராக இருந்தது. 1851-ல் க்றிஸ்டல் பாலஸில் நடத்தப்பட்ட பெரிய கண்காட்சியாகிய உலகின் முதல் கண்காட்சி, விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது; இது கிட்டத்தட்ட 90 நாடுகளிலிருந்து தொழில்நுட்பக் கலை மற்றும் கைவினைப் பொருட்களைக் காட்சியில் வைப்பவர்களைக் கவர்ந்தது. அந்தக் காட்சிகளில், கண்ணாடி பிரபலமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், மத்தியில் 8.2 மீட்டர் உயரக் கண்ணாடி நீரூற்றை உடையதாய் இருந்த அந்த க்றிஸ்டல் பாலஸ் தானே கவர்ச்சி மையமாக இருந்தது. சுமார் 400 டன் கண்ணாடித் தகடுகள் இந்த மகத்தான கட்டமைப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டன; கையால் ஊதப்பட்ட 3,00,000 பாளங்களை அது கொண்டிருந்தது.
இருந்தாலும், கண்ணாடி உருவாக்குதலில் அடுத்த பெரிய மாற்றம் ஐக்கிய மாகாணங்களில் நடந்தது. இது என்னவென்றால், 1820-களில் இயந்திர ஆற்றலால் அழுத்தும் கருவியின் அமைப்பு மேம்படுத்தப்பட்டதாகும். கண்ணாடியைப் பற்றிய சுருக்கமான வரலாறு என்ற புத்தகம் இதைப் பற்றி குறிப்பிடுகிறது: “இயந்திர ஆற்றலால் அழுத்தும் கருவியில், குறைந்தளவு அனுபவமுள்ள இருவர், ஊதுவதன்மூலம் கண்ணாடி உண்டாக்கும் பயிற்றுவிக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு பேராலான ஒரு தொகுதி உருவாக்கும் கண்ணாடியைவிட நான்கு மடங்கு அதிகமானதை உருவாக்க முடியும்.”
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தானாகவே புட்டியை ஊதி உண்டாக்கும் இயந்திரத்தின் அமைப்பு ஐக்கிய மாகாணங்களில் மேம்படுத்தப்பட்டது. 1926-ல், பென்ஸில்வேனியாவிலுள்ள ஒரு தொழிற்சாலை, ஒரு நிமிடத்தில் 2,000 விளக்கு பல்புகளை உருவாக்குவதற்கு, தானாக இயங்கும் கருவி ஒன்றைப் பயன்படுத்தியது.
அநேக கைவினைஞர்களும் திட்டமைப்பாளர்களும் கண்ணாடியின் கலை ஆற்றலால் கவரப்பட்டிருக்கின்றனர். இது கண்ணாடிப் பொருட்களுக்கு அதிக புதுப் புனைவான வடிவங்களையும், கண்ணாடியில் அதிகப்படியான கலை வேலைப்பாடுகளையும் கொண்டுவந்திருக்கிறது.
கண்ணாடி நிச்சயமாகவே ஒரு அதிசயமாக இருக்கிறது. அதன் வீட்டு உபயோகம் அனைத்தும் போக, அதன் மற்றுமநேக பயன்பாடுகளையும் கவனியுங்கள்—ஹபிள் விண்வெளி தொலைநோக்கியில், காமரா வில்லைகளில், இழை ஒளியியல் தகவல் தொடர்பு அமைப்புகளில், வேதியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அது எளிதில் உடைவதாக இருக்கக்கூடும், ஆனால் பல்வகை பயனுள்ள தன்மையும் அழகும் மிக்கது.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Top and Bottom: The Corning Museum of Glass
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
The Corning Museum of Glass