இளைஞர் கேட்கின்றனர்
ராக் இசைநிகழ்ச்சிகளுக்கு நான் போகலாமா?
ஒரு பிரபல இசைக்குழு உங்கள் நகரத்திற்கு வருகிறது. டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகின்றன, எனவே நீங்கள் இப்போதே தீர்மானிக்கவேண்டும். நீங்கள் போகப் போகிறீர்களா?
பொருத்தமான சூழ்நிலையில் ஆரோக்கியமான இசை அனுபவிக்கத்தக்கதே. சொல்லப்போனால், யெகோவா தேவன் இசையை அனுபவிக்கும் திறமையுடன் நம்மை படைத்துள்ளார், பல்வேறுபட்ட இசைகள் அவர் ஏற்கத்தக்கதே.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இசைக்குரிய விருப்பத்தேர்வு, பெரும்பாலும் ராக் இசையின் பல்வேறு ஒலிவடிவங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கிறது. பலர் அதை நேரில் காணும்போது மிகவும் அனுபவிக்கிறார்கள். ஆயினும் ராக் இசைநிகழ்ச்சிகளில் நடக்கும் மற்ற காரியங்கள் பலவற்றுள், வன்முறை, கட்டுக்கடங்காத நடத்தை போன்றவற்றின் அறிக்கைகள் கடவுள் பயமுள்ள இளைஞர்களுக்கு ராக் இசையின் பேரில் கருத்தார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. ராக் இசைநிகழ்ச்சிகளில் என்னத்தான் அப்படி நடக்கிறது? அதற்குப் போவது நல்ல யோசனையா?
இசையை சோதித்துப்பார்த்தல்
முதலாவதாக, நாம் இசையையே ஆழ்ந்தாராயலாம். பல்வேறு உணர்ச்சிகளை இசையானது—வெளிப்படுத்தக்கூடும்—தூண்டக்கூடும். பைபிள் காலங்களில், கடவுளின் மக்கள், கடவுள் பேரில் தங்களுக்கிருந்த அன்பை வெளிக்காட்டுவதற்காக அடிக்கடி இசையை உபயோகித்தார்கள். (சங்கீதம் 149:3; 150:4) மகிழ்ச்சி, கிளர்ச்சி, மனத்துயர் இவற்றை வெளிக்காட்டுவதற்கும்கூட இசை உபயோகிக்கப்பட்டது. (ஆதியாகமம் 31:27; நியாயாதிபதிகள் 11:34; 1 சாமுவேல் 18:6, 7; மத்தேயு 9:23, 24) இருப்பினும், வருந்தத்தக்கதாக, பைபிள் காலங்களில்கூட இசை எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவில்லை. இஸ்ரவேலர்கள் சீனாய் மலை அருகே முகாமிட்டிருந்தபோது, வெறித்தனமான, சிற்றின்ப உணர்ச்சிகளைக் கிளறிவிட்ட இசையானது இஸ்ரவேலர்கள் சிலரை பாவம் செய்ய தூண்டியதில் பங்குவகித்திருக்கலாம்.—யாத்திராகமம் 32:1-6, 17, 18, 25.
அதுபோலவே, பெரும்பாலான ராக் இசையும்—பாலியல் ஒழுக்கக்கேடு, போதைப்பொருட்கள், கலகம், ஆவிக்கொள்கை போன்ற—கெட்ட காரியங்களை உண்மையிலேயே முன்னேற்றுவிக்கிறது. இசையையே கேட்கக்கூடாது என்னும் சபதத்தை நீங்கள் எடுக்கவேண்டும் என்று அர்த்தப்படுத்துவதில்லை, ஆனால் “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்,” என்று கிறிஸ்தவர்களுக்குப் பைபிள் சொல்லவே சொல்கிறது. (எபேசியர் 5:10) எனவே இசையைப் பொருத்தமட்டில், நீங்கள் தெரிவுசெய்பவர்களாகவும், பகுத்துணருபவர்களாகவும் இருக்கவேண்டும்.a
நீங்கள் தெரிவுசெய்யும் இசை எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது? அது உங்களை சந்தோஷமாக, சாந்தமாக, அமைதியாக உணரச்செய்கிறதா? அல்லது அது உங்களை கோபமாக, கலகத்தனமாக அல்லது மனச்சோர்வாக உணரச்செய்கிறதா? டென்மார்க்கிலுள்ள ஒரு கிறிஸ்தவர், ராக் இசையின் ஒலிவடிவங்களில் ஒன்றான ஹெவிமெட்டல் இசையின் ரசிகராக இருந்த நாட்களை நினைவுகூறுகிறார். அவர் சொல்கிறார்: “நான் வேலை செய்யும்போது அதைக் கேட்பேன். நான் பிழைசெய்துவிட்டால், எனக்கு அவ்வளவு கிறுக்குப்பிடிக்கும், அதனால் நான் வேலைசெய்துகொண்டிருக்கும் பொருளை நொறுக்கி, கோபத்தோடு தூக்கி எறிந்துவிடுவேன்!” மற்றொரு இளைஞர் ஒத்துக்கொள்கிறார்: “பாலியலையும் உலகப்பிரகாரமான வாழ்க்கை பாணியையும் சிறப்பித்துக்காட்டிய ராப் இசையையும் ஹெவிமெட்டல் இசையையும் மிகுதியாகக் கேட்டேன். இந்த இசை என் மனதை நிறைத்தது, அதன் விளைவாக, அவை பாடிய காரியங்களுக்காக ஏக்கம் பிறந்தது.” இப்போது, வெறுமனே பதிவுசெய்யப்பட்டதே இத்தகைய ஒரு பாதிப்பை ஏற்படுத்துமாயின், நேரடியான இசைநிகழ்ச்சியின் வலிமையைக்குறித்து கற்பனை செய்யுங்களேன்!
இதையும் ஆழ்ந்தாராய்க: சரியாக எவ்வளவு சத்தமாக இசை இருக்கும்? தெரிந்தவிதமாகவே, இந்தக் காரியத்தில், ஜனங்களுக்கு வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன. ஓரளவுக்குச் சத்தமாக இருக்கும் இசையை பைபிள் ஒதுக்கித்தள்ளுவதில்லை. ஏன், சாலொமோன் கட்டிய ஆலயத்தினுடைய பிரதிஷ்டையின்போது, பூரிகைகளை ஊதினோரின் எண்ணிக்கை மாத்திரம் 120 ஆயிற்றே! (2 நாளாகமம் 5:12) அது உண்மையிலேயே பிரமிப்பூட்டும் விதத்தில் சத்தமாக இருந்திருக்க வேண்டும்! ஆயினும், கடவுளைச் சத்தமாக துதிக்கும் ஓசைக்கும் காதைப்பிளக்கும் ராக் இசைக்கும் இடையே இமாலய வித்தியாசம் இருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காரியத்தில் சத்தமானது கூட்டத்தினரை கட்டுப்பாடற்ற வெறித்தனத்தைத் தூண்டுவதற்கென்றே அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் “களியாட்டுகள்” அல்லது “வெறி நிகழ்ச்சிகள்” ஆகியவற்றை பைபிள் கண்டனம் செய்கிறது. (கலாத்தியர் 5:21; பையிங்டன்) உங்கள் சரீரத்தின் பேரிலிருக்கும் மதிப்பானது, உங்களுடைய கேட்கும் திறனையே ஆபத்திற்கு உட்படுத்தும் அளவுக்கு அவ்வளவு சத்தமான இசையைக் கேட்பதை தடுத்துவிடும்.—ரோமர் 12:1.
ஆழ்ந்தாராயவேண்டிய மற்றொரு காரியம் யோபு 12:11-ல் சொல்லப்பட்டிருப்பதாகும். அங்கு பைபிள் கேட்கிறது: “வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?” இதற்கு இசைவாக, நீங்கள் பாடலின் வார்த்தைகளை ‘சோதித்துப்பார்க்க’ வேண்டும்! ஒரு கிறிஸ்தவ இளைஞர் ஒத்துக்கொள்கிறார்: “நான் விரும்பிய சில பாடல்களின் வரிகளை கேட்க ஆரம்பித்தேன், வியக்கத்தக்க விதத்தில், அவை ஒரு கிறிஸ்தவன் கேட்பதற்கு தகுதியற்றவையாக இருந்தன. அந்த இசையை விட்டுவிட வேண்டியதன் அவசியத்தை நான் உணர்ந்தேன்.” (1 கொரிந்தியர் 14:20; எபேசியர் 5:3, 4) கலைஞர்கள் பலர் தங்களுடைய பழைய, ஒருவேளை ஆரோக்கியமான இசையிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தனித்தன்மைவாய்ந்த பொருளையுடைய—புதிய வெளியீடுகளை முன்னேற்றுவிக்க இசைநிகழ்ச்சிகளை பயன்படுத்துகிறார்கள் என்ற விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாக இருங்கள்.
இன்னும் கூடுதலாக, குறிப்பாக ஹெவிமெட்டல் இசை வகைகளில் முக்கியமாக இருப்பதைப்போன்று—பேய்களின் மேற்சுரங்கள் (overtones) ஏதும் இல்லாதிருப்பதைக்குறித்து நீங்கள் நிச்சயமாய் இருக்கவேண்டும். ஹெவி-மெட்டல் இசைக்குழுக்கள் தங்களையும் தங்களுடைய ஆல்பங்களையும் பேய்களின் சின்னங்களாலும் சாத்தானிய கருவிகளாலும் ஒப்பனை செய்வதற்குப் பேர்போனவை. (யாக்கோபு 3:15) அத்தகைய குழுவினரின் இசைநிகழ்ச்சிக்குச் செல்வது, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று கட்டளையிடும் தேவனை கொஞ்சம்கூட பிரியப்படுத்தாதே!—யாக்கோபு 4:7.
கட்டுப்பாடற்ற நிலை
இசைநிகழ்ச்சியில்தானே என்ன நடைபெறக்கூடும்? ஸ்டேஸி என்னும் பெயருடைய ஒரு குமரிப்பெண் தன் தோழிகளுடன், ஓரளவுக்குத் தீங்கற்ற இசையை இசைக்கிறார்கள் என்று அவர்கள் உணர்ந்த ஒரு இசைக்குழுவிற்குச் சென்றார். ஆனால் இசைநிகழ்ச்சியின் மத்தியில், குழுவின் முதன்மைப் பாடகர், ஆவித்தொடர்பைத் தூண்டினார், பார்வையாளர்களையும் ஆவியுலகத்துடன் தொடர்புகொள்வதற்கான முயற்சியில் பங்கேற்க அழைத்தார்! வெறுமனே ஒரு ஏமாற்று செயலா? ஒருவேளையிருக்கலாம். ஆனால், ஆவிக்கொள்கை எத்தகைய வடிவத்தில் இருப்பினும், அதை பைபிள் கண்டனம் செய்வதனால், ஸ்டேஸியும் அவருடைய தோழிகளும் அதைவிட்டு வெளியேற கட்டுப்பட்டவர்கள் என்று உணர்ந்தார்கள்.—லேவியராகமம் 19:31; உபாகமம் 18:10-13; வெளிப்படுத்துதல் 22:15.
மற்ற கிறிஸ்தவ இளைஞர்களும் இதுபோன்ற கலவரமடையச்செய்யும் அனுபவங்களை அனுபவித்திருக்கிறார்கள், ஏனென்றால் ராக் இசைநிகழ்ச்சிகளின்போது வெளியரங்கமான ஆவிக்கொள்கை ஒருவேளை ஓரளவுக்கு அரிதாக இருந்தாலும், கட்டுப்பாடற்ற நடத்தைகள் சகஜமானவை. ஒரு இசைநிகழ்ச்சியில், இசைக்குழுவினர் இன்பக் களியாட்டத்தைத் தூண்டிவிடுவதில் உதவியதால், அது 60 பேர் காயமடைவதிலும், $2,00,000 சேதமடைவதிலும் விளைவடைந்தது! இன்னும் மற்றொரு இசைநிகழ்ச்சியில் மூன்று இளைஞர்கள் நெரிசலில் சாகடிக்கப்பட்டனர். உண்மைதான், பெரும்பாலான ராக் இசைநிகழ்ச்சிகள் இன்பக் களியாட்டத்திலும், காயமடைவதிலும் அல்லது மரணத்திலும் விளைவடைவதில்லை. ஆனாலும், தெரிந்தவிதமாகவே எச்சரிக்கையாக இருப்பதற்கான தேவையிருக்கிறது. நீதிமொழிகள் 22:3 சொல்கிறது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்கிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.”
ஆகவே நீங்கள் ஒருவேளை ராக் இசைநிகழ்ச்சிக்குப் போக நினைத்தால், அதுசம்பந்தமான விவரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். அந்த இசைக்குழுவினர் கட்டுப்பாடற்ற நடத்தையைத் தூண்டிவிடுபவர்கள் என்னும் பேர்போனவர்களாக இருக்கிறார்களா? அந்த இசைக்குழுவினர் எத்தகைய பார்வையாளர்களைக் கவரக்கூடும்? (1 கொரிந்தியர் 15:33) எந்த அளவுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களின் உபயோகங்கள் புழக்கத்தில் உள்ளன? இசைநிகழ்ச்சி அரங்கத்தைப் பற்றியதென்ன? பாதுகாப்பு பிரச்சினைகளை அது முன்பு எதிர்ப்பட்டிருக்கிறதா? இருக்கைகளின் ஏற்பாடுகள் எத்தகையதாக இருக்கும்? எவரேனும் காயமடையும் வாய்ப்பானது யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அமரும் இருக்கை-ஏற்பாடுகளில் அதிகரிக்கப்படுகிறது.
ராக் இசைநிகழ்ச்சிகளில் போதைப்பொருளின் மற்றும் மதுபானத்தின் உபயோகங்கள் மிகப் பரவலாக உள்ளன. “ஜனங்கள் இசைக்காக வருவதில்லை, குடித்து வெறிக்கவே வருகிறார்கள்,” என்று தன் இளம் பருவத்தில் பழையபாணி ராக் இசைக்குழுவின் நிகழ்ச்சிக்குச் சென்றதைப்பற்றி, அதன் மயக்கத்திலிருந்து விடுபட்ட ஒரு கிறிஸ்தவ மனிதர் கூறினார். அதுவே, தான் கடைசியாகச் சென்ற ராக் இசைநிகழ்ச்சியாக இருக்கட்டும் என்று முடிவுசெய்தார். ஒரு கிறிஸ்தவ குமரிப்பெண் அதேபோன்று அறிவிக்கிறார்: “‘புதுமைகள் புகுத்தும்’ இசைக்குழுவினரால் இசைக்கப்பட்ட இசைநிகழ்ச்சிக்குச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அது அவ்வளவு அருவருப்பாக இருந்தது! ஜனங்கள் கஞ்சாக்குடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய மொழி கேட்கவே சகிக்கமுடியாததாய் இருந்தது, அவர்கள் பார்ப்பதற்கு சாத்தானை வழிபடுபவர்களைப்போல் இருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் அவ்விதம் உடுத்தியிருந்தார்கள்.” போதைப்பொருளும் மதுபானமும் எவ்வளவுதான் தீவிரமாகத் தடைசெய்யப்பட்டிருப்பினும், பார்வையாளரில் பலர் ஏற்கெனவே வெறித்துப்போய் வருவது ஒன்றும் இயல்புக்கு மாறானதல்ல. அத்தகைய நிகழ்ச்சிக்குச் செல்வது ‘அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம் பண்ண’ வேண்டும் என்னும் பைபிளின் கட்டளைக்கு ஒத்திசைவாக இருக்குமா?—தீத்து 2:12.
சூழ்நிலையின் செல்வாக்கு
நீங்கள் வன்முறையில் ஈடுபடாத வரையில், உங்களைச் சூழ்ந்திருப்போர் எப்படி நடந்துகொண்டாலும் கவலைப்பட தேவையில்லை என்று நீங்கள் ஒருவேளை உணரக்கூடும். ஆயினும், சூழ்நிலை உங்களைப் பாதிக்கவே செய்யும். எபேசியர் 2:2-ல், ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவியைப்பற்றி’ பைபிள் சொல்கிறது. இந்த உலகமானது “ஆவியை” அல்லது ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதை கவனியுங்கள். காற்றானது எங்கும் வியாபித்திருப்பதைப் போன்றே இது எங்கும் இருக்கிறது. ஆனால் இந்த ஆவி அல்லது மனப்பான்மை ‘அதிகாரத்தை’ கொண்டுள்ளது, அதற்கு உங்களை ஆட்படுத்தும்போது, உங்களுடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் நடத்தையையும் மாற்றியமைக்கும் செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதையும் கவனியுங்கள்! நீங்கள் வெறுமனே இந்த வலிமையான காற்றை சுவாசித்துவிட்டு, பாதிக்கப்படாமலிருக்க முடியாது.
பல சந்தர்ப்பங்களில், உயர்ந்த அளவில் இந்த உலகத்தின் ஆவிக்கு ஆட்பட செய்பவையாக ராக் இசைநிகழ்ச்சிகள் இருக்கின்றன. இயல்பாகவே நிலவிக்கொண்டிருக்கும் ரெளடித்தனமான சூழ்நிலைக்குள்—அல்லது கலைஞர்களுக்குக் கிட்டத்தட்ட வணக்கத்திற்குரிய போற்றுதலைக் காண்பிக்கும் தோரணையில் கூச்சலிடுதல், கைகளை அசைத்தல் போன்றவற்றில் ஒருவர் எளிதாக இழுத்துச்செல்லப்படலாம். அத்தகைய மிதமிஞ்சிய போற்றுதல், நியாயப்படி கடவுளுக்குச் சொந்தமான வணக்கத்துக்குரிய போற்றுதலின் வலிமையை இழக்கச்செய்கிறது. வேதாகமங்களில் தெளிவாகக் கண்டனம்செய்யப்பட்டிருக்கும் விக்கிரக வணக்கத்திற்கு நிகராகும். (1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) அதனால் அதில் அடித்துச்செல்லப்படும் ஆபத்திற்குள் மாட்டிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா?
பெரும்பாலான ராக் இசைநிகழ்ச்சிகளுக்குச் செல்வதினால் ஒருவர் பெறும் ஏதேனும் நன்மைகளைவிட ஆபத்துக்களே மேலோங்கிடும் என்று சொல்வது முரணானதல்ல. நிச்சயமாகவே, குறிப்பிட்ட ஒரு இசைநிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதிக்கலாமா வேண்டாமா என்னும் இறுதியான தீர்மானத்தை எடுக்கும் உரிமை உங்கள் பெற்றோருக்குத்தான் இருக்கிறது. ஆனாலும், ஒருவேளை சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கிருந்தால், விவேகமான தெரிவைச் செய்யுங்கள். ஒருவர் ஆரோக்கியமான விதத்தில் அனுபவிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன, ராக் இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வதினால் வரும் ஆபத்துக்களுக்கு உங்களை ஆளாக்கிக்கொள்ளாதீர்கள்.
[அடிக்குறிப்பு]
a பிப்ரவரி 8, பிப்ரவரி 22, மார்ச் 22, 1993-ன் ஆங்கில விழித்தெழு! இதழ்களில், “இளைஞர் கேட்கின்றனர் . . .” பகுதியில் இசையைப்பற்றிய கட்டுரைகளைக் காண்க.
[பக்கம் 18-ன் படம்]
ராக் இசைநிகழ்ச்சிகளில் மதுபானம், போதைப்பொருட்கள், மற்றும் வெறித்தனமான நடத்தை சகஜமானவை