புகையிலை நிறுவனங்கள் ஒரு தீப்புயலில் சிக்கிக்கொண்டன
ஜூலை 26, 1995 தேதியிடப்பட்ட தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் தோன்றும் ஓர் அறிக்கையின்படி, “சிகரெட்டுகளில் அடங்கியுள்ள பொருட்களையும் அவற்றின் கெடுதியான விளைவுகளையும் பற்றி, கட்டுப்படுத்தும் அலுவலர்களிடம் புகையிலை நிறுவனங்கள் தவறாக அறிவித்திருக்கிறார்களா என்பதைப் புலன்விசாரணை செய்யும்படி ஆய்வுக்குழு ஒன்றை நீதித்துறை நியூ யார்க்கில் கூட்டியிருக்கிறது. இத்துறை, நிறுவன நிர்வாகிகள் அமெரிக்கக் குடியரசுகளின் சட்டமாமன்றக் கமிட்டியிடம் புகையிலைப் பொருட்களைப் பற்றி பொய் சொன்னார்களா என்பதைப் புலன்விசாரணை செய்ய அநேகமாக ஓர் இரண்டாம் குழுவினரைக் கூட்டலாம்.”
இதற்கான அடிப்படை? அந்த அறிக்கை அதைத் தெளிவாக்கிற்று. ஏப்ரல் 1994-ல், ஐக்கிய மாகாணங்களிலுள்ள முன்னணியில் இருக்கும் ஏழு புகையிலை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓர் அமெரிக்க சட்டமாமன்றக் கமிட்டியின் முன்பாக “நிக்கட்டின் அடிமையாக்கும் தன்மையுடையதென்றோ, சிகரெட்டுகள் நோய்க்குக் காரணமானவையென்றோ, அல்லது தங்களின் நிறுவனங்கள் புகையிலைப் பொருட்களில் நிக்கட்டினின் அளவை சூழ்ச்சித் திறத்துடன் கையாண்டனவென்றோ தாங்கள் நினைக்கவில்லை” என்பதாக உறுதிமொழி கூறுவதன்மூலம் சான்றளித்திருந்தனர்.
அதற்குப் பிறகு ஜூன் 1995-ல், இரண்டாயிரம் குற்றச்சாட்டு ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டபோது ரகசியம் அம்பலமானது—குற்றமின்மைக்கான அவர்களது உரிமைகோரல்கள் தகர்க்கப்பட்டன. புகையிலை ஆராய்ச்சியாளர்கள், புகைப்பவர்களின் உடலிலும் மூளையிலும் நடத்தையிலும் நிக்கட்டினின் “மருத்துவயியல்” விளைவுகளைப் பற்றிக் கற்றறிவதில் 15 வருடங்கள் செலவழித்திருந்தனர் என்பதாக இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த நிறுவனங்களொன்றின் முன்னாள் ஆராய்ச்சி அறிவியலாளர் ஒருவரான டாக்டர் விக்டர் டிநோபில் ஆராய்ச்சியின் அடிப்படை கண்டுபிடிப்பை விளக்குகிறார்: “தாங்கள் தாரின் அளவைக் குறைத்து, அதே சமயத்தில் நிக்கட்டினின் அளவை அதிகரித்தால் புகைப்பவர்கள் அந்த சிகரெட்டை இன்னும் ஏற்றுக்கொள்ளச் செய்யலாம் என்பதை நிறுவனம் உணரத் தொடங்கினது. தங்களின் எல்லாவித ஆராய்ச்சிக்குப் பிறகு, நிக்கட்டின் வெறுமனே அமைதிப்படுத்தும் அல்லது தூண்டும் ஒன்றல்ல, ஆனால் அது மூளையில் மைய விளைவை ஏற்படுத்துகிறது என்றும், அது மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளுக்காக மக்கள் புகைத்துக்கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் அறிந்தனர்.”
தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி, “மக்கள் எந்த பிராண்டு (brand) சிகரெட்டைப் புகைத்தாலும், ஆழ்ந்து உள்ளிழுப்பதன் மூலமாகவும், புகையை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதன் மூலமாகவும் அல்லது நிறைய சிகரெட்டுகளைப் புகைப்பதன் மூலமாகவும் தங்களுக்கு வேண்டிய நிக்கட்டின் அளவைப் பெற நாடினர்” என்பதாக நிறுவனத்தின் ஆய்வுகள் காட்டின. புகைப்பவருக்கு திருப்தியை வழங்குவதற்குப் போதுமானளவு நிக்கட்டினையும் குறைந்தளவு தாரையும் கொண்ட சிகரெட்டை உண்டாக்க நிறுவன ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்தனர்.
புகையிலை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்பேரில் ஓர் ஆழ்ந்த அக்கறையை வெளிக்காட்டியதாக அந்த ஆவணங்கள் மேலும் வெளிப்படுத்தின. 15 வருடங்களுக்கும் மேலாக கல்லூரி மாணவர்கள் அதன் நுட்பமான ஆராய்ச்சிப் பொருளாயிருந்தனர். அயோவா மாநில நகரொன்றின் மக்கள், 14-வயது புகைப்பவர்கள் சிலர் உட்பட, அவர்களது புகைக்கும் பழக்கங்களைக் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டனர்.
இந்த ஆராய்ச்சி ஆவணங்களின் மூலம் தெரிவிக்கப்பட்ட செய்தி, ஏழு புகையிலை வியாபார ஸ்தாபனங்களுக்கு எதிராக ஒரு வகுப்பு-நடவடிக்கை வழக்கு முயற்சியில் இறங்கிய வழக்குரைஞர்களின் ஒரு கூட்டிணைவுக்குப் பேருதவியாய் இருந்ததாகக் காணப்படுகிறது. போதைக்கு அடிமையாவதை மேம்படுத்தும்படி, நிக்கட்டினின் அடிமையாகச் செய்யும் தன்மைகளைப் பற்றிய அறிவை புகையிலை நிறுவனங்கள் மறைத்தனர் என்றும், நிக்கட்டின் அளவை சூழ்ச்சித்திறனுடன் கையாண்டனர் என்றும் குற்றஞ்சாட்டினர். இந்த நிறுவனங்கள் இவ்வாராய்ச்சியை ஒரு பொழுதுபோக்கு வேலையாகச் செய்துகொண்டிருந்தனர் என்பதாக உலகிலுள்ள எந்தவொரு விசாரணைக்குழுவும் நம்பாதென ஒரு வழக்குரைஞர் கூறினார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் இத்தீப்புயல் தீவிரமாகையில், வளர்முக நாடுகளில் புகையிலைப் புகை அதிகம் வீசுகிறது. நாற்பது வருடங்களுக்கு முன்பு, தெற்குப்பகுதியில் அல்லது வளர்முக நாடுகளில், நடைமுறையாக பெண்களில் எவருமே புகைக்கவில்லை, மேலும் ஆண்களில் 20 சதவீதம் மட்டுமே புகைத்தனர். ஆனால் இன்று, வளர்முக நாடுகளிலுள்ள எல்லாப் பெண்களில் 8 சதவீதமும் எல்லா ஆண்களில் 50 சதவீதமும் புகையிலை புகைப்போராயிருக்கின்றனர்—மேலும் அவ்வெண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. “புகை தெற்கே வீசுகிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
போக்கின்மீது விழித்தெழு! நிருபர் அறிக்கை செய்கிறார்
பிரேஸிலில் தங்கியுள்ள எமது எழுத்தாளர் தெற்கிலுள்ள சூழ்நிலைமீது சில பொதுவான குறிப்புகளைச் செய்கிறார். தொழில்மயமாக்கப்பட்ட உலகில் செய்யப்பட்ட ஆராய்ச்சி, புகையிலை புகைப்பவருக்கு எப்போதையும்விட கொடிய விளக்கத்தை வருணித்துக் கூறுகிறது. அது அதற்குரிய விளைவைக் கொண்டுள்ளது. “பொதுமக்கள் தொடர்பின் இன்றியமையாத முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள நாடுகள் இப்போது புகையிலை உபயோகத்தில் ஒரு சரிவின் ஆரம்பங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன,” என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிக்கை செய்கிறது. “வடக்கே, புகைத்தல் பல வீடுகளில், பொதுவிடங்களில் மற்றும் வேலைத்தலங்களில் இனிமேலும் சமுதாய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” என்று லண்டனில் தலைமைக் காரியாலயத்தைக் கொண்ட ஒரு தகவல் அமைப்பான பானோஸ் மேலும் சொல்கிறது. “புகைப்பது தங்களைக் கொல்லக்கூடும்” என்று பெரும்பாலான மக்கள் இப்போது உணருகின்றனர். “புகையிலைத் தொழில் தெற்கே நகர்ந்துகொண்டிருக்கிறது.”
அதற்கு நேர்மாறாக, தெற்கே, ஒரு புதிய விற்பனையைத் தொடங்குவது ஒரு சிகரெட்டுக் கட்டைத் திறப்பதைப்போல் அவ்வளவு எளிதாயுள்ளது. புகையிலைத் தொழிலுக்கு, வளர்முக நாடுகளிலுள்ள நிலைமைகள் ஆசைகாட்டுவதாய் உள்ளன. 4 வளர்முக நாடுகளில் 3-ல் விளம்பரத்தின்மீது எந்தவிதத் தடைகளும் இல்லாதிருக்கின்றன, அதே சமயத்தில், புகைப்பதன் அபாயத்தைப் பற்றிய பொது மக்களின் விழிப்புநிலை குறைவாக இருக்கிறது. “மக்கள் தங்களுக்குச் சொல்லப்படாததால் அந்த அபாயங்களைப் பற்றி அறியாதிருக்கின்றனர்,” என்று பானோஸ் குறிப்பிடுகிறது.
இளம் பெண்களை—இத்தொழிலின் முக்கியக் குறியிலக்குகளின் ஒரு சாராரை—அவர்களின் முதல் சிகரெட்டைப் பற்றவைக்க இணங்கச்செய்வதற்கு, விளம்பரங்கள் “சுதந்திரப் பெண்களால் அனுபவிக்கப்படும் ஒரு வசீகர வேடிக்கை நடவடிக்கையாக புகைத்தலை வருணிக்கின்றன.” புகையிலை விளம்பரங்கள் பாதி நூற்றாண்டுக்கு முன்பு தொழில்மயமாக்கப்பட்ட உலகில் பயன்படுத்தப்பட்டவற்றைப் போன்றே சந்தேகப்படும் வகையில் ஒத்திருக்கின்றன. அப்போதெல்லாம், விளம்பரங்கள் பலனுள்ளதாய் இருந்தன. ஒரு செய்திமூலம் சொல்கிறது, வெகு சீக்கிரத்தில், மூன்று பெண்களில் ஒருவர் “ஆண்-போன்ற உற்சாகத்துடன் புகைத்துக்கொண்டிருந்தார்.”
இன்று, வளர்முக நாடுகளிலுள்ள விழிப்பாயிராத பெண்கள்மீது குறிவைக்கப்பட்ட தீவிரமாக்கப்பட்டுள்ள ஆக்கிரமிக்கும் விற்பனையானது, 1920-களின் மற்றும் 1930-களின் இந்த விளம்பர “வெற்றி” திரும்பப் பெறப்படப்போவதாக நிச்சயமளிக்கிறது. ஆகவே, இருண்ட எதிர்கால வாய்ப்பானது, உலகின் ஏழை நாடுகளிலுள்ள இலட்சக்கணக்கான இளம் பெண்ணினங்கள், “அழகிய இளம் பெண்கள் தங்கள் ஆரம்ப நிக்கட்டின்களில்” என்று ஒரு கவனிப்பாளர் கூறுவதுபோல் ஆகிக்கொண்டிருக்கும் அபாயத்தில் தற்போது இருக்கின்றன.
பிரதான குறியிலக்கு
பெண்கள் புகையிலைத் தொழிலின் முதன்மைக் குறியிலக்குகளில் ஒன்றை உண்டுபண்ணுகிறபோதிலும், இளம் பிராயத்தினர் அதன் பிரதான குறியிலக்காக உள்ளனர். கார்ட்டூன்-பாணி விளம்பரங்களும் விளையாட்டுப் பொருட்களிலுள்ள சிகரெட் அடையாளச் சின்னங்களும் நல்ல லாபத்தை உண்டாக்குகின்றன, போட்டிவிளையாட்டு நிகழ்ச்சிகளை ஆதரிப்பதும் அதைப்போன்றே உள்ளன.
சீனாவில், பானோஸ்கோப் பத்திரிகை அறிக்கை செய்கிறது, இளம் பிராயத்தினரில் “அதிக சதவீதமானோர் புகைக்கின்றனர்.” 12 வயதுமுதல் 15 வயதுவரை உள்ளவர்களில் சுமார் 35 சதவீதமானோரும் 9 வயதுமுதல் 12 வயதுவரை உள்ளவர்களில் 10 சதவீதமானோரும் புகைப்பவர்களாய் உள்ளனர். பிரேஸிலில், ஃபோல்யா டி எஸ். பாலோ என்ற தினசரி, மதிப்பிடப்பட்ட ஒரு கோடி இளைஞர்கள் புகைப்பவர்கள் என்பதாக அறிக்கை செய்கிறது. அவர்கள் அபாயங்களைப் பற்றி அறியாதவர்களாய் இருக்கிறார்களா? ஒரு நாளைக்கு ஒன்றரை பேக்கட் சிகரெட்டுகளைப் புகைக்கும் 15-வயதுள்ள பிரேஸிலிய பையனான ரஃபேல் கூறுகிறான், “சிகரெட் புகைப்பது தீங்கானது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது ரொம்ப நல்லாயிருக்கு.” கவலையில்லாத இவ்விதப் பகுத்துணர்வின் விளைவு? “ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் மற்றொரு 4,000 இளம் பிராயத்தினர் புகைக்க ஆரம்பிக்கின்றனர்,” என்பதாக பானோஸ் அறிக்கை செய்கிறது.
வடக்கே விற்கப்படும் பிராண்டுகளில் இருப்பதைவிட அதிகளவு தார் மற்றும் நிக்கட்டின் அடங்கிய பிராண்டுகளின் சில தயாரிப்புகளைப் புகையிலைத் தொழிற்துறை தெற்கே ஏற்றுமதி செய்கிறது. அதன் காரணம் தெளிவாயுள்ளது. “நிக்கட்டினுக்காக நான் மன்னிப்பு கேட்கிறதில்லை,” என்பதாக சில வருடங்களுக்கு முன்பு ஒரு புகையிலை நிறுவனத்தின் அலுவலர் கூறினார். “அதுதான் வியாபாரம் தொடருவதற்கு வழிவகுக்கிறது. அதுதான் மக்கள் இன்னும் அதிகம் வாங்கும்படிச் செய்கிறது.” அது பலனுள்ளதாய் இருக்கிறது. “நிக்கட்டினின் அதிக அளவினால், சிகரெட்டுகளைச் சார்ந்திருத்தல் சீக்கிரம் நிறைவேற்றப்படுகிறது, இதுவே மெதுமெதுவாக அவற்றிலுள்ள நிக்கட்டினின் அளவைக் குறைப்பதனால் அதன் உபயோகத்தை அதிகரிக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் வாய்ப்புகள் அளிக்கிறது” என்பதாக டச்சு வெளியீடாகிய ரூக்கன் வெல்பெஸ்கோடு (புகைத்தல்—எல்லாம் ஆழ்ந்து ஆராயப்படுதல்) உறுதிப்படுத்துகிறது.
“தெற்கைத்தான் தொழிலுக்கு நல்ல ஓட்டத்தை ஏற்படுத்தும் விற்பனைத் தலமாக புகையிலைத் தொழிற்துறை நோக்குகிறது” என்பதாக பானோஸ் முடிக்கிறது.
புகைத்தலா, தொடர்ந்து உயிர்வாழ்தலா?
ஒரு வளர்முக நாட்டில் நீங்கள் வாழ்கிறீர்களென்றால், என்ன செய்வீர்கள்? உண்மைகள் தெளிவாயுள்ளன. 1950 வரை, புகைத்தலோடு தொடர்புடைய நோய்களினால் வந்த இறப்புகள் மிகக் குறைவாக இருந்தன, ஆனால் இன்று தெற்கே பத்து லட்சம் மக்கள் ஒவ்வொரு வருடமும் புகைத்தலோடு தொடர்புடைய நோய்களினால் இறந்துகொண்டிருக்கின்றனர். என்றபோதிலும், 30 ஆண்டுகளுக்குள் புகைத்தலோடு தொடர்புடைய இறப்புகள், வளர்முக நாடுகளில் 70 லட்சமாக உயரும் என்று WHO எச்சரிக்கிறது. புகையிலை விளம்பரங்கள் உங்களிடம் சொல்வதற்கு மாறாக, சிகரெட்டுகள் முடிவாக சவப்பெட்டியின் ஆணிகளாக உள்ளன.
நீங்கள் அபாயங்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களென்று சொல்கிறீர்களா? நல்லது, ஆனால் அந்த அறிவைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? புகைத்தல் பற்றிய பயங்கரமான பல விஷயங்களை வாசித்திருந்து அதனால் வாசிப்பதையே விட்டுவிடத் தீர்மானித்த புகைப்பவரைப் போல் இருப்பீர்களா? அல்லது புகையிலை விளம்பரங்களால் போடப்படும் புகைத்திரையின் ஊடாகப் பார்க்கவும் புகைத்தலை நிறுத்தவும் போதியளவு விழிப்புள்ளவர்களாய் இருப்பீர்களா? புகையிலைப் புகை தெற்கே வீசிக்கொண்டிருப்பது மெய்தான்—ஆனால் அது உங்கள் பக்கமாக வீசவேண்டியதில்லை!
[பக்கம் 19-ன் பெட்டி]
சீனா—முதலாவது
சீனாவில், ஜாங் ஹான்மின் என்ற 35-வயதுள்ள ஒரு தொழிலாளர் தன் உள்ளங்கைகளால் மறைத்து ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறார். அவர் கூறுகிறார், “உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், எத்தனையோ பொருட்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் சிகரெட் மட்டும் இல்லாமல் இருக்க முடியாது.” ஜாங்கின் உடன்தேசத்தாரில் மற்ற 30 கோடி மக்களுக்கும் அவ்விதமே தோன்றும் என்று சொல்லப்படலாம். 1980-களிலிருந்து சீனா மற்றெந்த நாட்டையும்விட “அதிகமாகத் தயாரித்திருக்கிறது, விற்றிருக்கிறது, புகைத்துமிருக்கிறது.” சமீபத்திய ஆண்டில், “புகைப்பதையே வழக்கமாகக் கொண்ட மக்களிடம் கோடிக்கணக்கான சிகரெட்டுகள் விற்கப்பட்டதால்,” சீனாவை “உலகின் முதல் புகையிலை நாடாக” ஆக்கியிருக்கிறது.—பானோஸ்கோப் பத்திரிகை.
[பக்கம் 20-ன் பெட்டி]
ஓர் “உத்தரவாதம்” கொண்ட சிகரெட்டுகள்?
புகையிலைத் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் மக்கள் இறந்தாலும், அவர்களது பழக்கம் பாதுகாப்பானதே என்பதாக விளம்பரங்கள் புகைப்பவர்களிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஒரு பிரேஸிலிய பத்திரிகையில் சமீபத்திய விளம்பரம் ஒன்று, “ஒரு தொழிற்சாலை உத்தரவாதத்தோடு வருகிற” ஒரு சிகரெட் பிராண்டின் வருகையைப்பற்றி பறைசாற்றியது. அந்த விளம்பரம் நிச்சயமளித்தது: “உங்கள் கார் ஓர் உத்தரவாதம் கொண்டுள்ளது; உங்கள் டிவி ஒர் உத்தரவாதம் கொண்டுள்ளது; உங்கள் கடிகாரம் ஓர் உத்தரவாதம் கொண்டுள்ளது. உங்கள் சிகரெட்டும் அவ்விதம் கொண்டுள்ளது.” என்றபோதிலும், விளம்பரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகிறபடியும், நீடித்த அவலநிலையிலுள்ள புகைப்பவர்கள் உறுதிப்படுத்த முடிகிறபடியும், ஒரே உத்தரவாதம், “புகைத்தல் உடல்நலத்துக்குக் கேடானது” என்பதுதான்.
[பக்கம் 19-ன் படம்]
ஒரு முதன்மைக் குறியிலக்கு —வளர்முக நாடுகளிலுள்ள பெண்கள்
[படத்திற்கான நன்றி]
WHO photo by L. Taylor
[பக்கம் 20-ன் படம்]
அபாயங்களைப் பற்றி அறியாதவர்களா?
[படத்திற்கான நன்றி]
WHO