“ஒரு நாளுக்கு ஓர் ஆப்பிள்—மருத்துவரைத் தவிர்க்கிறது”
அவ்வழகிய சிவந்த ஆப்பிள்களைப் பாருங்கள். அவை தின்னத் தூண்டுவதாய்த் தோன்றுகிறதில்லையா? நிச்சயமாகவே அவை தின்னத் தூண்டுவதாய்த் தோன்றுகின்றன—நல்ல காரணத்தோடுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆப்பிள்கள் உங்கள் நலனுக்காகவும் நல்ல உடல்நலத்துக்காகவும் உதவிசெய்வதற்காகத் திட்டமிடப்பட்டன. உணவுக்காகும் பயனுள்ள பலவிதப் பழங்களில், முதல்தரமானவற்றில் ஆப்பிள் ஒன்றாகும். இவ்வகையில், நீங்கள் அவற்றைத் தின்னுவதன்மூலம் உங்களுக்குப் பலன் ஏற்படுத்திக்கொள்ள உங்களை அவை தூண்டுகின்றன.
ஆப்பிள் மரம், பேரிக்காய், க்வின்ஸ், ஒண்மலர்ச் செங்கனி, சர்வஸ் மரம் ஆகியவற்றைப் போன்றே ரோஸ் (ரோசேசி) குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வெல்லா மரங்களின் சாறும் அதிகளவு சர்க்கரைப்பொருளைக் கொண்டுள்ளது. அவற்றின் மிக்க நறுமணமுள்ள பழங்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய பல்வேறு நிறத்திண்மையையும், புளிப்பிலிருந்து இனிப்புவரையான சுவையையும் கொண்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 200 கோடி மரக்கால்—170-லிருந்து 180 லட்சம் டன் எடையுள்ள—ஆப்பிள்கள் விளைவிக்கப்படுகின்றன. ஐக்கிய மாகாணங்களில், சுமார் பாதியளவு அப்படியே தின்னப்படுகின்றன. மீதமானவை ஆப்பிள் வெண்ணெய், ஆப்பிள் சாறு, ஆப்பிள் குழம்பு, ஆப்பிள் பச்சடி, ஆப்பிள் பிராந்தி, ஆப்பிள் சைடர், ஆப்பிள் சோமாஸ்கள் மேலும் பிற மாப்பண்டங்கள், ஆப்பிள் புளிக்காடி, ஆப்பிள் ஒயின் போன்ற பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் மிகப் பெரியளவு விளைச்சல் சைடர், ஒயின் மற்றும் பிராந்திக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மொத்த உற்பத்தியில், சுமார் காற்பகுதி சைடராகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பழங்கள் நம் வாய்க்கு இன்பமூட்டுவதற்கு வெகுநாட்களுக்கு முன்பாகவே, பூக்கள்நிறைந்த ஆப்பிள் மரம் நம் கண்களுக்கு மகிழ்வூட்டுகிறது. அது ரோஜாநிற விளிம்புடைய வெண்ணிறப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அவ்வளவு ஏராளமாய் இருப்பதானது, அவையனைத்தும் ஆப்பிள்களாக வளர்ச்சியடைந்தால், மரம் அவற்றின் எடையைத் தாங்கமுடியாததாய் இருக்கும். ஓர் ஆரம்ப வேனிற்காலப் புயல் வழக்கமாய்ப் பூக்களில் சிலவற்றைக் கொண்டுசெல்வதில் விளைவடையும்.
ஆப்பிள் பயிர்செய்தல்
ஆப்பிள் மரம் மிதவெப்பநிலை மண்டலப் பகுதிகளில் மிக நன்றாக வளர்கிறது. மேலும் அது வெகுகாலமாக பயிர்செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிள் மரங்களும் ஆப்பிள்களும் பைபிளில் ஆறுமுறை சொல்லப்பட்டிருக்கின்றன.a ரோமர்கள் அவற்றை அனுபவித்தனர், மேலும் தங்களது எண்ணற்ற இராணுவ வெற்றிகளில், ஆப்பிள்களின் பல்வேறு ரகங்களை இங்கிலாந்து முழுவதிலும், மேலும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் பரப்பியுள்ளனர். ஆரம்பத்தில் அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள் இங்கிலாந்திலிருந்து தங்களோடு ஆப்பிள் விதைகளையும் ஆப்பிள் மரங்களையும் கொண்டுவந்தனர்.
மிகுதியான பரிசோதனையினால், காலாகாலமாய்ப் பயிர்செய்பவர்கள், இனக்கலப்பின் மூலமாக ஆப்பிள்களின் தரத்தை மேம்படுத்தியுள்ளனர். என்றபோதிலும், இது, வேகமாய் நடைபெறும் ஒரு செய்முறை அல்ல. சந்தைக்கு வரும் ஒரு புதிய ஆப்பிள் ரகத்தை உருவாக்குவதற்கு, 20 ஆண்டுகள்கூட எடுக்கலாம். ஆனால் இன்று, பயிர்செய்பவர்களுடைய விடாமுயற்சியின் பயனாக, நாம் தெரிந்தெடுக்கும்வகையில், சாறுநிறைந்த, மற்றும் பல நிறங்களுடைய ஏராளமான ரகங்களை நாம் கொண்டிருக்கிறோம்.
அறுவடை செய்தல்
வட கோளார்த்தத்தில் ஆப்பிள் பருவம் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ஆரம்பிக்கிறது. ஆனால் முந்திப் பழுக்கும் ரகங்களான ஜேம்ஸ் கிரீவ் அல்லது டிரான்ஸ்பாரன்ட் போன்றவை நீண்டநாட்களுக்கு சேமித்துவைக்க முடியாதவை. அவை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சீக்கிரம் தின்னப்படவேண்டும். என்றபோதிலும் அவை, தொடர்ந்து பழுக்கும் ஆயிரக்கணக்கான வகைகளில் சிலவான ரோம் எழில்கனி, பிப்பின், காக்ஸ் ஆரஞ்சு, ஜொனாத்தன், தேன்கனி, சிவப்புத் தேன்கனி, மஞ்சள் தேன்கனி, மக்கின்ட்டோஷ், கிரேன்னிஸ்மித் போன்றவற்றைத் தின்னும்படியாக நம் பசியார்வத்தைத் தூண்டுகின்றன.
ஆப்பிள்கள் வறட்சியான பருவத்தில் அறுவடை செய்யப்படவேண்டும். இளந்தளிர்களும் அவற்றின் இலைகளும் சேதப்படுத்தப்பட்டு விடாதபடி அவை கவனமாய்ப் பறிக்கப்படவேண்டும். ஆப்பிள்கள் நிஜமாகவே பழுத்தவையாய் இருக்கையில், இலேசாகப் பழத்தைத் திருப்புவதும்கூட, பழம் அதன் கிளையிலிருந்து எளிதில் விடுபடும்படி செய்யும். காம்பு ஆப்பிளைவிட்டு முறிக்கப்பட்டுவிடாதபடி கவனமாய்ப் பார்ப்பது முக்கியமானது, ஏனெனில் இது நைவுப்புண்களை ஏற்படுத்தி, பழத்தை உபயோகிக்கும் நாட்களைக் குறைத்துவிடும்.
பிந்திப் பழுக்கும் ரகங்கள் முடிந்தவரை—வானிலை அனுமதிக்கும்வரை—மரத்திலேயே விட்டுவிடப்படவேண்டும். முந்திய உறைபனியால் மரத்தில் ஆப்பிள்கள் உறைந்தால், அவற்றின் விறைப்பு தளர்வுறும்வரை அவற்றைப் பறிப்பது ஒத்திப்போடப்படவேண்டும். ஆப்பிள்கள் அவற்றின் பழுநிலையின் அளவையும் அவற்றின் சர்க்கரைப்பொருளின் அளவையும் பொறுத்து உறைநிலைக்குக் கீழ் சில டிகிரிவரை தாக்குப்பிடிக்கும், ஆனால் ஒருமுறை உறைந்து, விறைப்புத் தளர்வுற்றபிறகு, அவை சேமித்து வைக்கப்பட முடியாது. சீக்கிரத்தில் அவை சாறாக, வேகவைத்தப் பழமாக, அல்லது புளிக்காடியாக தயாரிக்கப்படவேண்டும்; அவை உலர்த்தப்பட முடியாது.
சேமித்துவைத்தல்
ஆப்பிள்களின் ஓர் அக்கறைக்குரிய விஷயமானது, அவை சுவாசிப்பதாகும். அவை காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சிக்கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடையும் நீரையும் வெளிவிடுகின்றன. ஆகவே, சுற்றுப்புறம் மிதவெப்பமாய் இருக்குமளவுக்கு, சீக்கிரமாய் அவை நீரை அகற்றிவிட்டு வாடிவதங்குகின்றன. சுவாசித்தலின்மூலமாக அவை சுற்றுப்புறங்களிலிருந்து மணத்தையும் உறிஞ்சுகின்றன. ஆகவே, ஆப்பிள்களை மட்டுமே சுமார் ஐந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்பநிலையில் சேமித்துவைப்பது மிகச்சிறந்தது.
ஆப்பிள்களை உருளைக்கிழங்குகளோடு சேர்த்து ஒரு நிலவறையில் சேமித்துவைப்பது, ஆப்பிள்கள் தங்களிடமுள்ள புதிய சுவையை இழக்கும்படி செய்யும். மேலுமாக, வேறுபட்ட ரகங்கள் தனித்தனியே வைக்கப்படவேண்டும். அதோடுகூட, ஆப்பிள்கள் தனித்தனியே காகிதத்தில் சுற்றிவைக்கப்படுவது மிகச்சிறந்தது. இது நீர் அகற்றப்படுவதைத் தாமதப்படுத்துகிறது, மேலும் அழுகிக்கொண்டிருக்கும் பிறவற்றால் மாசுபடுத்தப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
உடல்நல மதிப்பு
“ஒரு நாளுக்கு ஓர் ஆப்பிள் மருத்துவரைத் தவிர்க்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்போதுமே அப்படியிராவிடினும், ஆப்பிள் இப்பரிந்துரைக்கும் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. ஏன்? ஏனெனில் நன்மைக்காக ஒருவரின் உடல்நலத்தைத் தாக்கம்செய்யும் பொருட்களை அது கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தனி ஆப்பிளும் அத்தியாவசியமான ஊட்டமளிக்கும் பொருட்களைக்கொண்ட ஒரு சிறிய பண்டகசாலையாகும். பழுத்திருக்கையில், அது B1, B2, B6, C, E ஆகிய வைட்டமின்களைக் கொண்டுள்ளது. டெக்ஸ்ட்ரோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரைப்பொருட்களையும் அது அளிக்கிறது. அதிலுள்ள அமிலங்களின் சேர்மானமே, சுவைக்குக் காரணமாயிருக்கிறது. அதோடுகூட அது கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற ஏராளமான தாதுப்பொருட்களையும், பெக்டினையும் நார்ப்பொருளையும் கொண்டுள்ளது. ஆப்பிளில் சுமார் 85 சதவீதம் நீர் அடங்கியுள்ளது.
ஆப்பிள்களில் காணப்படும் மற்றொரு பொருள் எத்திலீன், அது விசேஷித்த வகையில் இயல்பான வளர்ச்சி ஒழுங்குமானியாகச் செயல்படுவதானது, பழம் பழுப்பதற்கு ஊக்கமளிக்கிறது. நீங்கள் பச்சைத்தக்காளி அல்லது கடினமான பேரிக்காய் போன்ற பழவகைகளை வைத்திருந்தால் இவ்வாயுப்பொருள் நன்கு பயன்படுத்தப்படலாம். ஒருசில பழுத்த ஆப்பிள்களுடன் ஒரு காகிதப்பையில் அவற்றைப் போட்டுவையுங்கள், அவை வெகு சீக்கிரமாய்ப் பழுத்துவிடும்.
ஆப்பிள் உடல்நல மதிப்பைக் கொண்டுள்ளதால், அவற்றை எப்போது, எப்படி தின்னவேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியம். முதலாவதாக, அவை பழுத்திருக்கவேண்டும். குளிர்ந்த ஆப்பிள்களைத் தின்னாதிருப்பது நல்லது; அவை அறைவெப்பநிலையில் சிறிது நேரம் இருக்கட்டும். அவற்றை நன்கு சவைத்துத் தின்னுவதும் முக்கியமானது.
அக்கறையூட்டும் விதத்தில், ஆப்பிள்கள் செரிமான மண்டலத்தை சுத்திகரிக்க உதவியாயுள்ள தன்மைகளைக் கொண்டுள்ளன. இதே தன்மைகள் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டிற்குமே நிவாரணமளிப்பதில் உதவுகின்றன.
எச்சரிக்கை
மற்ற பழங்களைப் போன்றே ஆப்பிள்களும் மோல்டுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. இதன் காரணமாகவே, ஓரளவு எச்சரிக்கை சரியானது. அதனால் ஏற்படும் நோய்நச்சுகள் உடல்நலமின்மையையும் குமட்டலையும் ஏற்படுத்தலாம். ஆகவே, மோல்டுகளைக் குறித்து முன்னெச்சரிக்கையுடனிருங்கள், நோய்நச்சு பரவும் தன்மைகொண்டதால் மோல்டு உள்ள பகுதியைமட்டுமன்றி, கெட்டுப்போன பகுதியைச் சுற்றியுள்ள ஒரு துண்டு முழுவதையும் வெட்டிவிடுங்கள்.
இருந்தபோதிலும், ஆப்பிள்கள் உங்கள் நல்ல உடல்நலத்திற்கு உதவுகின்றன. ஆகையால், நீங்கள் ‘மருத்துவரைத் தவிர்க்க விரும்பினால்,’ ஒவ்வொரு நாளும் ஓர் ஆப்பிளைத் தின்ன முயலுங்கள்!
[அடிக்குறிப்பு]
a ஆப்பிள் மரம்: உன்னதப்பாட்டு 2:3; 8:5; யோவேல் 1:12; NW. ஆப்பிள்கள்: நீதிமொழிகள் 25:11; உன்னதப்பாட்டு 2:5; 7:8; NW.
[பக்கம் 24-ன் படங்கள்]
பூக்கள்நிறைந்த ஆப்பிள் மரம் கண்களுக்கு மகிழ்வூட்டுகிறது