கட்டுப்படுத்த இயலா நடத்தை—அது உங்கள் வாழ்வைக் கட்டுப்படுத்துகிறதா?
“நான் ஒவ்வொருநாள் காலையிலும் 6 மணிக்கு விழித்தெழுறேன்,” என்று கூறுகிறார் கீத்.a “என் அலாரக் கடிகாரம் அதாகவே 6 மணிக்கு வைக்கப்பட்டிருக்கு. அது வைக்கப்பட்டிருக்குன்னு எனக்குத் தெரியும். நான் அதை மாத்துறதே இல்ல. ஆனாலும் அதை நான் சரிபாத்துக்கிட்டே இருக்கவேண்டிருக்கு. தினமும் ராத்திரி நான் படுக்கைக்குப் போறதுக்குமுன்னால குறைஞ்சது அஞ்சு தடவையாவது அதைப் பாக்கிறேன். அப்புறம், ஸ்டவ்வில் (stove) இருக்கிற திருகுகள்—ஒவ்வொன்னும் அமத்தப்பட்டிருக்கான்னு நான் நிச்சயப்படுத்தவேண்டிருக்கு. அவை அமத்தப்பட்டிருக்குதுன்றத நான் பார்க்க முடியுது, ஆனால் திரும்பவும் போய்—சும்மா நிச்சயப்படுத்துறதுக்காக—ஒரு தடவை, இரண்டு தடவை, மூனு தடவை பாக்கிறேன். அதுக்குப்பிறகு, குளிர்சாதனப்பெட்டியின் கதவை, திரும்பத்திரும்ப, அது மூடியிருக்குதான்றதை நிச்சயப்படுத்துறதுக்காக சரிபாக்கவேண்டியிருக்கு. அப்புறம் வலைக்கதவின் பூட்டு, அதோடுகூட வீட்டு மெயின் கதவின் இரண்டு பூட்டுகள் . . .”
கீத் கட்டுப்படுத்த முடியாத நினைவுகளையும் (மன உறுத்தல்கள்) நடத்தைகளையும் (கட்டுப்படுத்த இயலாத நடத்தைகள்) தனித்தன்மையாகக் கொண்ட பலவீனப்படுத்தும் ஒரு நிலையென வரையறுக்கப்படும் மன உறுத்தலுடைய-கட்டுப்படுத்த இயலா சீர்குலைவால் (OCD [obsessive-compulsive disorder]) துன்புறுகிறார்.b OCD உடைய ஓர் ஆள் இந்த மன உறுத்தல்களையும் கட்டுப்படுத்த இயலாமையையும் முற்றிலும் தானாக இயங்கும் தன்மைகொண்டனவாய் உணருகிறார். அது அவர்கள் தங்கள் காரியங்களை வற்புறுத்தி தங்கள் கட்டுக்குள் வைப்பதாகப் பாவனை செய்வதைப் போன்றது.
ஒவ்வொரு மனிதரும் எப்பொழுதாவது விரும்பப்படாத நினைவுகளையும் ஆவல்களையும் அனுபவிக்கிறார். ஆனால் OCD-யாயிருந்தால், இவை அவ்வளவாய் விடாமல் நடைபெறுவனவாயும் மீண்டும் மீண்டும் நடைபெறுவனவாயும் இருப்பதால், அவை சாதாரண வாழ்க்கைமுறையைத் தகர்த்துப்போடுவனவாயும் தீவிர உடல்நலமின்மைக்குக் காரணமானவையாயும் சில சமயங்களில் மனச்சோர்வில் விளைவடைவனவாயும் உள்ளன. “தொடர்ந்த மனப்போராட்டம் என்னைத் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றியே சிந்திக்கத் தூண்டியது,” என்று துன்புறுபவர் ஒருவர் கூறுகிறார். புரிந்துகொள்ள முடியாத இந்தச் சீர்குலைவின் அறிகுறிகளில் சிலவற்றைக் கருத்திற்கொள்ளுங்கள்.
பார்ப்பது நம்புவதாய் இல்லை
புரூஸ் தனது காரை ஒரு மேட்டின்மீது ஏற்றி இறக்குகையில், சோர்வடையச்செய்யும் திகில் அவரை உணர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது. ‘நடந்து செல்லும் ஒருவர்மீது அப்படியே மோதியிருந்தால் என்னவாகும்?’ என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்கிறார். “குற்றம்” நடந்த இடத்தைப்பற்றிய காட்சியை மீண்டும்—சும்மா ஒருமுறையல்ல ஆனால் திரும்பத்திரும்ப—நினைத்துப் பார்த்து சரிபார்க்கும்வரை அவ்வுணர்வு பலமாகிறது! உண்மையிலேயே, புரூஸ் ஓர் அடிபட்ட நடந்துசென்றவரைக் காண்கிறதில்லை. என்றாலும், அவர் நிச்சயமாயில்லை! ஆகையால் அவர் வீட்டுக்கு வந்துசேர்கையில், மோதிவிட்டு ஓட்டம்பிடிக்கும் ஒரு விபத்து பற்றிய அறிக்கைகளுக்காக செய்தியைப் பார்க்கிறார். “மன்னிப்பு” கோரும்படி போலீஸையும்கூட அவர் அழைக்கிறார்.
புரூஸைப்போன்று, OCD உள்ள பலர் சந்தேகங்களால் தொல்லைபடுத்தப்படுகின்றனர்: ‘நான் எவர்மீதாவது மோதிவிட்டேனா? நான் வீட்டைவிட்டு வந்தபோது ஸ்டவ்வை அமர்த்தினேனா? நான் வீட்டைப் பூட்டினேனா?’ பெரும்பாலான மக்கள் எப்பொழுதாவது அதேபோன்ற எண்ணங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் OCD உள்ளவர் சரிபார்த்து, மீண்டும் சரிபார்த்தபிறகும்கூட திருப்தியடைய மாட்டார். “சரிபார்த்துக்கொண்டேயிருக்கும் என் நோயாளிகள் ‘புலனுணர்வுகளால் அறிந்துகொள்ளும் வினைத்திறத்தால்தான் அறிவு வருகிறது’ என்று கூறுவதுபோல் தோன்றுகிறார்கள்” என டாக்டர் ஜூடத் ராப்பபார்ட் எழுதுகிறார். “எனவே கதவின் கைப்பிடி மறுபடியும் மறுபடியும் திருகப்படவேண்டும்; விளக்கு போட்டுப்போட்டு அணைக்கப்படவேண்டும். இச்செயல்கள் உடனடித் தகவல்களைக் கொண்டுவருகின்றன, ஆனாலும் அவை அவர்களை நம்பச்செய்கிறதில்லை.”
சுத்தம் அவ்வளவு சுத்தம் அல்ல
சால்ஸ் என்ற ஒரு 14-வயதுப் பையன் நோய்க்கிருமிகளால் தொற்றப்படும் பயத்தால் மன உறுத்தல் அடைந்தார். அவரது தாய் அவர் தொடவிருந்த எல்லாவற்றையும் ஆல்கஹால் கலந்த திரவத்தால் சுத்தம் செய்யவேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, வீட்டிற்கு வருபவர்கள் தெருவிலிருந்து தொற்றுக்கிருமிகளைக் கொண்டுவந்துவிடுவார்களோ என்றும் சால்ஸ் பயந்தார்.
ஃப்ரான் தன் துணிகளைத் துவைக்கையில் பயமுற்றிருந்தார். “நான் வெளியே எடுக்கும்போது துணிகள் வாஷிங் மெஷினின் ஒரு பக்கத்தைத் தொட்டுவிட்டால் மறுபடியும் அவையனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது” என்பதாக அவர் கூறுகிறார்.
சால்ஸையும் ஃப்ரானையும் போல, OCD உள்ள பலர் நோய்க்கிருமிகளையும் தூய்மைக்கேட்டையும் மையமாகக் கொண்ட மன உறுத்தல்களைக் கொண்டிருக்கின்றனர். இது, மிதமிஞ்சிக் குளித்துக்கொண்டேயிருப்பதிலோ அல்லது கைகழுவிக்கொண்டேயிருப்பதிலோ விளைவடையலாம். சில சமயங்களில் புண் ஏற்படும் அளவுக்குக்கூடச் சென்றுவிடலாம்—ஆனாலும் துன்புறுபவர் இன்னும் தான் சுத்தமாயிருப்பதாய் உணருகிறதில்லை.
மனதால் வதைக்கப்படுதல்
இலேன் கடவுளைப்பற்றி, தன்னிச்சையல்லாத அவமரியாதையான எண்ணங்களால் தொல்லைபடுத்தப்படுகிறார். “இதெல்லாம் நான் ஒருக்காலும் நினைக்காதவை. அப்படி நினைக்கிறதவிட செத்துப்போய்விடலாம்” என்று கூறுகிறார். ஆனாலும் அந்த எண்ணங்கள் தொடர்ந்திருக்கின்றன. “சில சமயங்களில் இதுபோன்ற எண்ணங்களைக் கட்டுப்படுத்துறதுக்காகப் போராடுறதனால், நான் தினமும் இரவில் நிஜமாகவே களைப்பாயிடுறேன்.”
ஸ்டீவன் தன் தவறுகளைப் பற்றிய குற்ற உணர்வுகளால் தூண்டப்பட்டு, கடவுளுக்குப் “பிரதிக்ஞை” செய்கிறார். “என் விருப்பத்துக்கு எதிரா வருவதுபோலத் தோன்றதனால இந்த மனோபாவம் என்னை விசனப்படுத்துது” என்று அவர் கூறுகிறார். “அதுக்குப்பிறகு, நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற என் மனசாட்சி என்னைக் குத்துது. இதனாலேயே, நான் ஒருமுறை உயர்ந்த மனோபாவத்துடன்கூடிய ரொம்ப மதிப்புடைய ஏதோவொன்னை அழித்துப்போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன்.”
இலேன், ஸ்டீவன் ஆகிய இருவருமே பெரியளவில் மனதில் நடைபெறும் மன உறுத்தல்களைக் கொண்டுள்ளனர். அவர்களது அறிகுறிகள் சீக்கிரமாய்க் கண்டுணரப்பட முடியாவிட்டாலும், மன உறுத்தலின் எண்ணங்களை உடையவர்கள் குற்றமும் பயமும் மாறிமாறி வரும் சுற்றுமுறையால் சிறைப்படுத்தப்படுகின்றனர்.
இவை OCD-யின் பல அறிகுறிகளில் வெறும் சிலவேயாகும்.c இச்சீர்குலைவுக்குக் காரணம் யாது? அது எப்படி குணமாக்கப்படக்கூடும்?
கட்டுப்படுத்த முடியாததைக் கட்டுப்படுத்துதல்
ஒரு மருத்துவர் OCD நடத்தையை, புலனுணர்வின் தகவல்கள் பதியாமல், “காரியத் திட்டங்கள் திரும்பத்திரும்ப நடைபெறும் மூளை சம்பந்தமான மிகுதடை”யின் விளைவால் ஏற்படுவதாக விவரிக்கிறார். வலுக்கட்டாயப்படுத்தி நிறுத்தாவிட்டாலொழிய நிற்காத தொடர்ச்சியான இக்கட்டளைகள் எதனால் ஏற்படுகின்றன? எவருக்கும் சரியாகத் தெரியாது. நரம்புக்கடத்தியாகிய சிரட்டோனன் உட்பட்டிருப்பதாகத் தெரிகிறது, ஆனால் மூளையின் பிற அம்சங்களும் கருத்திற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை ஒரு மரபியல் சார்ந்த மனச்சாய்வோடு சேர்ந்து இளம்பருவ அனுபவங்கள் OCD-ஐ செயற்படத் தூண்டலாமென சிலர் கூறுகின்றனர்.
என்றபோதிலும், காரணம் எதுவாயிருந்தாலும், ஓர் உண்மை தெளிவாயுள்ளது: OCD உள்ளவரிடம் வெறுமனே சுத்தம் செய்வதை நிறுத்தவோ அல்லது சரிபார்ப்பதை நிறுத்தவோ சொல்வது தோல்வியுறுவதாகவே முடியலாம். மனோதிடத்தைக் காட்டிலும் அதிகம் உட்பட்டுள்ளது.
பலருக்கு மருத்துவம் பலனுள்ளதாக நிரூபித்திருக்கிறது. மற்றொரு முறையானது, பயப்படும் சூழ்நிலையை நோயாளிக்கு வெளிக்காட்டி, அதன்பிறகு வழக்கமான எதிர்ச்செயலைத் தடுப்பதாகும். உதாரணமாக, சுத்தம் செய்வதைப் பழக்கமாய்ச் செய்துவரும் ஓர் ஆளுக்கு, அழுக்கான ஏதோவொன்றைப் பிடித்துக்கொண்டு அதைச் சுத்தம் செய்யாமல் இருப்பது தேவைப்படலாம். உண்மைதான், அத்தகைய சிகிச்சை ஒரே நாளில் குணமாக்காது. ஆனால் விடாமல் தொடர்ந்து செய்வதன்மூலம், நிவாரணமளிக்கக்கூடும் என்று சிலர் உணருகின்றனர்.
குறைந்தபட்சம் சிலரது விஷயங்களில், OCD இளம்பருவ வாழ்க்கை அனுபவங்களில் வேர்கொண்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் நிபுணர்கள் துருவி ஆராய்ந்துள்ளனர். தவறாகக் கையாளப்பட்டிருந்த பிள்ளைகள் பலர், இயல்பாகவே தகுதியற்றவர்களாக அல்லது அழுக்கானவர்களாக உணருபவர்களாய் வளருவதாக கவனிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களில் சிலரே கட்டுப்படுத்த இயலா சுத்தம் செய்யும் பழக்கத்தைப் படிப்படியாய் வளர்த்திருக்கின்றனர்.
மன உறுத்தல்களிலிருந்தும் கட்டுப்படுத்த இயலாமையிலிருந்தும் நிவாரணம்
நீங்கள் OCD-யால் துன்புற்றால், வித்தியாசமானவர்களாகவோ அல்லது ஒருவேளை மனநோயாளியாகிக் கொண்டிருப்பதாகவோ உணராதீர்கள். “தங்களது குறிப்பிட்ட பயங்களைத் தவிர,” டாக்டர் லீ பாயர் எழுதுகிறார், “OCD-யுடைய மக்கள் தங்கள் வாழ்வின் மற்ற எல்லா அம்சங்களிலும் நிஜத்தை அறிந்தவர்களாயுள்ளனர்.” நீங்கள் உதவப்படலாம்! OCD என்பது அபூரணத்தின் ஒரு விளைவே என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அது ஒழுக்கம் சார்ந்த பலவீனம் அல்லது ஆவிக்குரிய தோல்வியின் ஓர் அடையாளம் அல்ல! அது கடவுளின் தயவின்மையைக் குறித்துக்காட்டுவதும் அல்ல. “கர்த்தர் [“யெகோவா,” NW] உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:8, 14.
ஆனால் மன உறுத்தலின் எண்ணங்கள் பக்தியில்லாததாகவோ அல்லது தேவதூஷணமானதாகவோ தோன்றினால் என்னவாகும்? OCD-யாகவிருந்தால், அருவருப்பான எண்ணங்கள் குற்றத்தைத் தீவிரப்படுத்துகின்றன, மேலும் குற்றங்கள் இன்னும் அதிகளவில் அருவருப்பான எண்ணங்களைத் தீவிரப்படுத்தலாம். “அது என்னை எளிதில் கோபப்படச் செய்கிறது” என்று இலேன் கூறுகிறார். “அது என்னை விறைப்பாகவும் மனநிம்மதியில்லாதவளாகவும்—யெகோவா என்மீது கோபமாக இருக்கலாம் என்று எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருப்பவளாகவும்—இருக்கச் செய்கிறது.” சிலர் தங்கள் எண்ணங்கள் மன்னிக்கமுடியாத பாவத்திற்குச் சமமானதாகவும் உணரலாம்!
என்றபோதிலும், மன்னிக்கமுடியாத, கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு எதிரான பாவத்தைக்குறித்த இயேசுவின் குறிப்பானது, யோசனையற்ற, மன உறுத்தலுடைய எண்ணங்களைக் குறிப்பிடுவனவாய் இல்லை. (மத்தேயு 12:31, 32) இயேசு பரிசேயர்களைப்பற்றி தம் விளக்கத்தைக் கூறினார். அவர்களது தாக்குதல்கள் அனைத்தும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாயிருந்தனவென்பதை இயேசு அறிந்திருந்தார். வேண்டுமென்று செய்த அவர்களது செயல்கள் வெறுப்பால் நிறைந்த இருதயங்களிலிருந்து வந்தன.
உண்மையில், கடவுளைப் புண்படுத்தியதைப் பற்றிய கவலைதானே, ஒருவர் மன்னிக்கமுடியாத வகையில் பாவம்செய்திருக்கவில்லை என்பதன் சரியான நிரூபணமாயிருக்கலாம். (ஏசாயா 66:2) மேலுமாக, படைப்பாளர் இச்சீர்குலைவைப் புரிந்துகொள்கிறார் என்றறிவது திரும்ப உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது. அவர் இரக்கமுள்ளவராயும் “மன்னிப்பதற்குத் தயாராயும்” (NW) இருக்கிறார். (சங்கீதம் 86:5; 2 பேதுரு 3:9) நம் சொந்த இருதயங்கள் நம்மைக் கண்டனம் செய்தாலும், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (1 யோவான் 3:20) தாங்கள் மட்டான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள சீர்குலைவிலிருந்து எந்தளவுக்கு எண்ணங்களும் கவலைகளும் உருவாகும் என்பதன் வரம்பை அவர் அறிகிறார். இதை உணரும் OCD-யால் துன்புறுபவர், மிதமிஞ்சிய குற்றத்தால் தன்னையே தொந்தரவு செய்துகொள்வதிலிருந்து விலகியிருப்பார்.
எல்லாவித சரீரப்பிரகாரமான, மனதின்பிரகாரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பெருந்துன்பங்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் ஒரு புதிய உலகை யெகோவா வாக்களிக்கிறார் என்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கக்கூடும்! (வெளிப்படுத்துதல் 21:1-4) அதற்கிடையில், இச்சீர்குலைவைப் பொறுத்துக்கொள்ள வேண்டியவர்கள் தங்கள் துன்பங்களைக் குறைப்பதற்கு நடைமுறையான படிகளை எடுக்கக்கூடும்.
[அடிக்குறிப்புகள்]
a இக்கட்டுரையிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b எந்தக் குறிப்பிட்ட சிகிச்சையையும் பற்றி விழித்தெழு! கருத்து தெரிவிப்பதில்லை. இச்சீர்குலைவைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் எந்த சிகிச்சையாவது பைபிள் நியமங்களுக்கு முரணாயிராதவாறு கவனத்துடன் இருக்க விரும்புவார்கள்.
c எண்ணற்ற பிற அறிகுறிகளில் ஒருசில, எண்ணுவதையோ அல்லது தேவைக்குமேல் அதிகப் பொருட்களைக் குவிப்பதையோ அல்லது சமச்சீர்மையுடன்கூடிய மன உறுத்தலையோ உட்படுத்துகிறது.
[பக்கம் 22-ன் பெட்டி]
ஆதரவளிக்க
ஒரு நண்பராகவோ அல்லது ஒரு குடும்ப அங்கத்தினராகவோ, மன உறுத்தலுடைய-கட்டுப்படுத்த இயலா சீர்குலைவால் (OCD) போராடும் ஒரு நபருக்கு ஆதரவளிக்க நீங்கள் அதிகத்தைச் செய்யக்கூடும்.
• முதலாவதாக, உங்கள் சொந்த மனோபாவத்தைச் சரிபாருங்கள். துன்புறுபவர் பலவீனமாய், சோம்பேறியாய் அல்லது பிடிவாதமாய் இருப்பதாக நீங்கள் நம்பினால், அவன் அல்லது அவள் இதையே நிலையாக உணருவார், மேலும் முன்னேறுவதற்குத் தூண்டப்படமாட்டார்.
• துன்புறுபவரோடு பேசுங்கள். அவன் அல்லது அவள் எதனோடு போராடிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். கபடமற்றவராயும் நேர்மையானவராயும் உள்ள அந்தரங்க சிநேகிதரைக் கொண்டிருப்பது பொதுவாக துன்புறுபவர் OCD அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்படியாகும்.—நீதிமொழிகள் 17:17.
• ஒப்பிடாதீர்கள். துன்புறாதவர்களால் உணரப்படுவதைப் போன்றதல்லாத, தடுக்கமுடியாத கவலைகளை OCD உண்டாக்குகிறது. ஆகவே நீங்கள் எப்படி உங்கள் மனதின் புறத்தூண்டுதலை எதிர்த்துச் சமாளிக்கிறீர்கள் என்பதை விவரிப்பது பொதுவாக பலனற்றதாகும்.—நீதிமொழிகள் 18:13-ஐ ஒப்பிடுக.
• துன்புறுபவர் நிஜமான இலக்குகளை வைக்கவும் அதை எட்டவும் உதவுங்கள். ஓர் அறிகுறியைத் தெரிவு செய்யுங்கள், அதை மேற்கொள்வதற்காக தொடர்ச்சியான இலக்குகளை சுருக்கமாய்க் குறிப்பிடுங்கள். அடைவதற்கு எளிதான இலக்கோடு ஆரம்பியுங்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்டளவு நேரத்திற்குமேல் குளிக்காதிருப்பது ஓர் இலக்காயிருக்கலாம்.
• முன்னேற்றத்திற்கான போற்றுதல் தெரிவியுங்கள். புகழ்தல், சரியான நடத்தையை பலப்படுத்துகிறது. அபிவிருத்தியின் ஒவ்வொரு படியும்—எவ்வளவு சிறிதாயினும்—குறிப்பிடத்தக்கது.—நீதிமொழிகள் 12:25.
OCD-யால் துன்புறுவோருடன் வாழ்வது குடும்ப அங்கத்தினர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக ஆற்றல் இழக்கச் செய்வதாய் இருக்கக்கூடும். ஆகவே, நண்பர்கள் என்னென்ன நடைமுறையான வழிகளில் தங்களால் முடியுமோ, அவ்வழிகளில் புரிந்துகொள்பவர்களாயும் ஆதரவளிப்பவர்களாயும் இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 18:24ஆ.
[பக்கம் 14-ன் படங்கள்]
மிதமிஞ்சி சுத்தம் செய்வதும் சரிபார்ப்பதும் —OCD-யின் இரு அறிகுறிகள்