ஒரு குளிர்காலப் போர்வை
நீங்கள் எப்போதாவது பொழியும் பனிமழையை கூர்ந்து நோக்கியிருக்கிறீர்களா? அந்தக் காட்சியாலே மெய்மறந்து போனதுண்டா? அப்படியிருந்தால், மிக அழகான மற்றும் அமைதியான காட்சிகளில் இது ஒன்று என்பதை சந்தேகமில்லாமல் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்—குறிப்பாக நீங்கள் வீடுகளில் பாதுகாப்பாகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கும்போதும் பயணம் செய்வதற்காக எந்த ஒரு அவசரத்தேவையோடு இல்லாதிருக்கும்போதும் இது உண்மையாயிருக்கும். அந்த வெண்மையான போர்வை தடிப்பாகும்போது, ஆழ்ந்த சமாதானத்தையும் அமைதியையும் எங்கும் அது பரவச்செய்வதாகக் காணப்படுகிறது. அந்த மிருதுவான பனித்துகள்கள் கோடிக்கணக்கில் விழும்போது நகரத்தின் கூச்சலும்கூட தளர்ச்சியடைகிறது.
எனினும், பனிமழையைப்போன்ற அவ்வளவு மிருதுவாகத் தோன்றக்கூடிய ஒன்று எவ்வாறு அழிவை உண்டுபண்ணக்கூடும் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? பனி உயரமாகக் குவிந்தால் “எப்போதுமே உறங்காத நகரம்” என்பதாக அடிக்கடி விவரிக்கப்படும் நியூ யார்க்கைப் போன்ற இப்படிப்பட்ட பரபரப்பான நகரங்களும்கூட ஒரு இழிவான நிறுத்தத்திற்கு கொண்டுவரப்படக்கூடும்.
ஆகவே, உண்மையுள்ள மனிதனாகிய யோபுவைப் பார்த்து கடவுள் இவ்வாறு கேட்டது ஆச்சரியமல்லவே: “உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.” (யோபு 38:22, 23) அதனுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனின் கரங்களில், பனி உண்மையில் ஒரு பயங்கரமான ஆயுதமாக இருக்கக்கூடும்.
எனினும், பனி அழிவைக் கொண்டுவருவதற்கு மாறாக ஜீவனைப் பாதுகாப்பதில் அடிக்கடி பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு, கடவுள் “பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்” என்பதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 147:16) எவ்வாறு பனி பஞ்சைப்போல் உள்ளது? வெண்மையையும் தூய்மையையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக பனி மற்றும் பஞ்சு ஆகிய இரண்டையும் பைபிள் பயன்படுத்துகிறது. (ஏசாயா 1:18) ஆனால் மற்றுமொரு முக்கியமான ஒப்புமை இருக்கிறது. பனி மற்றும் பஞ்சு ஆகிய இரண்டுமே காப்புப்பொருளாக செயல்படுகிறது. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது: “பஞ்சு . . . குளிர் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டுக்கு எதிராகவும் காப்பீடு செய்கிறது.” பனியைக் குறித்ததில், அதுவும்கூட “ஒரு நல்ல காப்புப்பொருளாக சேவிக்கிறது. குளிர்ச்சியான கோடைகால காற்றிலிருந்து செடிகளையும் மாரிக்காலத்தைத் தூக்கத்தில் கழிக்கக்கூடிய மிருகங்களையும் பாதுகாக்க பனி உதவுகிறது,” என்று உவர்ல்ட் புக் குறிப்பிடுகிறது.
ஆகவே வானத்திலிருந்து பனி பொழிவதை அடுத்த முறை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய பிரமிப்பூட்டும் வல்லமையை யோசித்துப்பார்க்க நீங்கள் விரும்பலாம். அல்லது ஒரு அன்பான பெற்றோர் பிள்ளையை பாதுகாப்பாக படுக்கையில் வைத்து போர்த்துவதுபோலவே, தம்முடைய சிருஷ்டிப்பின் மீது ஒரு வெண்மையான போர்வையை போர்த்தும்போது அவர் அளிக்கும் மிருதுவான பாதுகாப்பைக் குறித்து யோசித்துப்பார்ப்பதை நீங்கள் தெரிவுசெய்யலாம்.