பைபிளைப் படித்தல் மிருகக் காட்சி சாலையில்!
சில காலத்திற்கு முன்பு, எங்களுடைய வாராந்தர குடும்ப பைபிள் கலந்தாலோசிப்புக்காக ஓரளவு அசாதாரணமான இடத்தைத் தெரிந்துகொண்டோம்—நெதர்லாந்தில் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள யெமன் மிருகக் காட்சிசாலை. சீக்கிரத்தில் உங்களுக்குத் தெளிவாகிவிடும் மிக நல்ல ஒரு காரணத்துக்காகத்தான் இதைத் தெரிந்து கொண்டோம்.
உலகெங்குமுள்ள அநேக கிறிஸ்தவ குடும்பங்களைப் போல, நாங்களும் வாராந்தர பைபிள் படிப்பு ஒன்றை வைத்திருக்கிறோம். இந்தப் படிப்பின்போது, நல்ல மற்றும் கெட்ட பண்புகளின் அடையாளங்களாக பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள மிருகங்களைப் பற்றி அடிக்கடி வாசிப்போம். இந்த மிருகங்களைப் பற்றி இன்னுமதிகமாக தெரிந்துகொள்ள முடியுமாவென்று யோசித்து, அதை ஒரு குடும்ப முயற்சியாக்கும்படி தீர்மானித்தோம். குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட மிருகம் குறித்துக்கொடுக்கப்பட்டு, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வின் பவுண்ட் தொகுப்புகள் போன்ற பிரசுரங்களிலிருந்து இந்த மிருகத்தைக் குறித்துத் தகவலைச் சேகரிக்கும்படி சொல்லப்பட்டது.
யெமன் மிருகக் காட்சிசாலையின் வாயிலை நெருங்குகையில், எங்கள் பிள்ளைகளாகிய மாரி-க்ளெர், காரிஸா, பப்பேன் ஆகியோரின் கண்கள் எதிர்பார்ப்புடன் பிரகாசிக்கின்றன. நாங்கள் முதலைகளையும், கரடிகளையும், வரிக்குதிரைகளையும், எறும்புகளையும், பைபிளில் நாங்கள் வாசித்திருக்கும் மிருகங்களில் ஒருவேளை இன்னும் அதிகமானவற்றையுங்கூட பார்க்கப் போகிறோம். ஆனால் முதலாவதாக, இந்த அபூர்வமான மிருகக் காட்சிசாலையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறோம்.
கூண்டுகள் இல்லை, கம்பிகள் இல்லை
நோர்டர் டிரன்பார்க் என்பதாக டச் மொழியில் அழைக்கப்படும் யெமன் மிருகக் காட்சிசாலை, நவீன நியதிகளுக்கு இசைவாக அமைக்கப்பட்ட மிகவும் விசேஷித்த ஒரு மிருகப் பூங்கா. இங்கு எந்த மிருகங்களையும் கூண்டுகளிலோ கம்பிகளுக்குப் பின்னாலோ காண மாட்டீர்கள். மாறாக, முடிந்தவரை அந்த மிருகங்களின் இயற்கையான வாழ்விடத்தை நெருங்க ஒத்திருக்கும் ஒரு சூழலுக்குள் அவற்றைக் கொண்டுவருவதற்கான எல்லா முயற்சிகளும் யெமனில் எடுக்கப்பட்டிருக்கின்றன. “மிருகங்களுக்கு மாறாக, விஜயம் செய்பவர்தான் வேலிக்குப் பின்னால் நிற்கிறார்,” என்று அந்தப் பூங்காவின் உயிரியலாளர்களில் ஒருவராகிய வேப்ரன் லன்ட்மான் புன்சிரிப்புடன் கூறுகிறார்.
“அந்த மிருகங்கள் அவற்றின் இனவாரியாக ஒழுங்கமைக்கப்படாமல், அவை தோன்றிய இடவாரியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாகவே நீங்கள் இங்கு பார்க்கும் பெரிய ஆப்பிரிக்க சவானாவில், காட்டில் ஒருமித்து வாழும் மிருகங்களில் முடிந்தளவுக்கு அதிகமான மிருகங்கள் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கின்றன.” ஆம், அங்கே நாம் அவற்றைக் காண்கிறோம்—உலகிலேயே மிக நெட்டையான மிருகங்கள், ஆறு மீட்டர் உயரம் வரையாக வளரத்தக்க நீண்ட கழுத்துள்ள ஒட்டைச் சிவிங்கிகள். துள்ளு இரலைகள், தாண்டு இரலைகள், வரிக்குதிரைகள், நூக்கள், நீர் இரலைகள், ஒருசில காண்டா மிருகங்களோடும்கூட அவை ஒன்றாக இருக்கின்றன.
ஆனால் வேப்ரன், யெமன் சவானாவைப் பற்றி சொல்வதற்கு இன்னுமதிகத்தைக் கொண்டிருக்கிறார்: “இந்த மிருகங்களுக்கு இங்கு அவ்வளவு அதிக இடம் இருப்பதால் அவை கட்டுப்படுத்தப்பட்டவையாய் ஒருபோதும் உணருவதில்லை. இருந்தாலும், தப்பிச் செல்லும் சில மார்க்கங்களையும் வைத்திருக்கிறோம். அங்கு அந்தப் பெரிய கற்கள் உங்களுக்குத் தெரிகின்றனவா? துள்ளு இரலைகளை காண்டா மிருகம் தொந்தரவு செய்ய முடியாதபடிக்கு அவற்றிற்கு இடையில்போய் அவை தஞ்சம் புகலாம். அதோ அங்கு தெரிகிற குன்று, மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கவே முடியாத பகுதியில் இருக்க உதவுகிறது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த மிருகங்கள் அரிதாகவே ஒன்று மற்றொன்று இருப்பதை கவனிக்கின்றன. உண்மையில் இதில் ஆச்சரியமேதுமில்லை, ஏனென்றால் ஆயிரக்கணக்கான வருடங்களாக அவை ஆப்பிரிக்காவில் தங்கள் வாழ்விடத்தைப் பகிர்ந்து வந்திருக்கின்றன.”
தாகமுள்ள வரிக்குதிரைகள்
“அதோ! வரிக்குதிரைகள்!” காரிஸா கிளர்ச்சிமிக்கவளாக இருக்கிறாள். வரிக்குதிரைகளைப் பற்றி அவள் சில ஆர்வமூட்டும் தகவல்களைச் சேகரித்திருந்தாள். “வரிக்குதிரைகளுடைய உருவத்தின் வடிவையும் ஒத்திசைவையும் அந்த வரிகள் அந்த அளவுக்கு மாறாட்டம் செய்வதால், அவை வெறும் 40-லிருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கும்போதும் கூர்ந்த பார்வையுடைய உள்ளூர் இனத்தவர்கள்கூட அவை அங்கிருப்பதை அறிந்துகொள்வதில்லை. வரிக்குதிரைகளின் பார்வை மற்றும் மோப்பத்தின் கூருணர் திறன்களும் விரைந்து—ஒரு மணிநேரத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாகக்கூட—ஓடுவதற்கான அவற்றின் திறமையும் ஊனுண்ணும் மிருகங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக அமைகின்றன. சங்கீதம் 104:11 (NW) சொல்லுகிறதுபோல, வரிக்குதிரைகள் ‘தங்கள் தாகத்தை ஒழுங்காகத் தீர்த்துக்கொள்கின்றன.’ அதன் காரணமாகவே அவை தண்ணீர் கிடைக்கும் இடத்திலிருந்து எட்டு கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவில் அபூர்வமாகவே காணப்படுகின்றன.” மேலுமாக அவள் சொன்னாள்: “நாமும் சபையோடு நெருங்கி இருத்தல், பைபிள் படித்தல், கூட்டங்களுக்கு ஆஜராகுதல் ஆகியவற்றின் மூலம் நம்முடைய ஆவிக்குரிய தாகத்தை ஒழுங்காகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.”
ஆப்பிரிக்க சவானாவை எங்கள் பின்னால் விட்டுவிட்டு, பூமியிலுள்ள கொன்று தின்னிகளுக்குள் மிகப் பெரிய ஒன்றாகிய கோடியாக் கரடி இருக்கும் திசையில் நடந்துசெல்கிறோம். கரடிகளிலெல்லாம் பெரியதாகிய இது, மூன்று மீட்டர் நீளம் வரையாக வளர்ந்து, 780 கிலோகிராம் எடை வரையானதாகலாம். இங்கு அவை அடைக்கப்பட்டுள்ள இடம் முடிந்தவரை இயற்கையானதாக இருப்பதற்காக, நீரோடைகளுடனும் பெரிய பாறைகளுடனும் அழகாகத் திட்டமைக்கப்பட்டுள்ளது. கோடியாக் கரடியானது, பைபிள் காலங்களில் இஸ்ரவேலில் வாழ்ந்த சிரியாவைச் சேர்ந்த பழுப்புநிற கரடியின் பெரிய சகோதரன். மாரி-க்ளெர் கண்டறிந்தபடி, கரடிகள் பல்வகைப்பட்ட உணவில் பிழைக்கின்றன. தாவரங்களின் இலைகள் மற்றும் வேர்களையும், பழங்கள், பெரிகள், கொட்டைப்பருப்புகள், முட்டைகள், பூச்சிகள், மீன்கள், கொறித்துத் தின்னும் மிருகங்கள் போன்றவற்றையும் உண்கின்றன; தேன்மீது அவற்றிற்கு விசேஷித்த பிரியம். பண்டைய இஸ்ரவேலில் கரடியின் உணவில் தாவர உணவுப் பொருட்கள் போதாமல் இருந்தபோது, கரடிகளின் அட்டூழியத்திற்கு எதிராக மேய்ப்பர்கள் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டியிருந்தது. இளைஞனாயிருந்தபோது தாவீது தன் தந்தையின் மந்தையைப் பாதுகாப்பதற்காக ஒரு கரடியின் தாக்குதலை தைரியத்துடன் எதிர்க்க வேண்டியிருந்தது.—1 சாமுவேல் 17:34-37.
“அதன் நாசிகளிலிருந்து புகை புறப்படும்”
ஆனால் நாம் நிச்சயமாகவே பார்க்க விரும்புகிற அதிகமான மிருகங்கள் இருக்கின்றன. அன்றொரு நாள் எங்கள் பைபிள் படிப்பில் “லிவியாதானை” பற்றி படித்தோம். முதலில், அதை ‘ஒரு வகையான மீன் என்றும், ஆனால் பின்னர், மிகப் பெரிய ஒன்று!’ என்றும் பப்பேன் விவரித்தான். வெப்பநிலை மாற்றங்களுக்கு முதலைகள் மிகவும் கூருணர்வு உள்ளவையாய் இருப்பதால், அவை வெப்பமண்டல தட்பவெப்ப நிலை காக்கப்படுகிற ஆப்பிரிக்க வீடு என்பதில் வைக்கப்பட்டிருக்கின்றன. அதனுள் நுழைந்ததும், அங்கிருக்கும் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் நாங்கள் எதிர்ப்படுகிறோம்; அவை எங்கள் கண்ணாடிகளில் ஆவி படிய வைக்கின்றன. அதோடுகூட, அந்த இருட்டுடன் நாங்கள் பழக்கப்பட வேண்டியுள்ளது. மரத்தாலான தொங்குபாலத்தின் குறுக்கே நடக்கும்போது, பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சேற்றிடத்தைக் காவல் காத்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றும் இரண்டு பெரிய முதலைகளை நாங்கள் திடீரென்று நேருக்கு நேராகப் பார்க்கிறோம். அவை எவ்வித அசைவுமின்றி அங்கு கிடப்பதால், “அவை நிஜமானவை அல்ல” என்று பப்பேனை சொல்ல வைக்கின்றன.
இப்போது இருக்கும் மிகவும் பெரிய ஊரும் பிராணிகளில் முதலைகள் இடம்பெறுகின்றன. சில ஆறு மீட்டர் நீளம் வரையாக எட்டக்கூடும்; 900 கிலோகிராம் வரையான எடையுள்ளவையாயும் இருக்கக்கூடும். அவற்றின் தாடைகளின் பலம் மலைப்பூட்டுவதாக இருக்கிறது—50 கிலோகிராம் எடையுள்ள, ஓரளவுக்கு சிறிய ஒரு முதலைகூட 700-க்கும் மேலான கிலோகிராமுக்கு சமமான அளவு பலத்தைச் செலுத்த முடிகிறது. சற்று நேரம் நீரில் மூழ்கியிருந்தபின் ஒரு முதலை மேலெழும்புகையில், அதன் நாசிகளின் வழியே விரைவாக வெளிவிடப்படும் மூச்சுக்காற்று ஒரு தெளிப்பை ஏற்படுத்த முடியும்; அதுவே காலை கதிரவனின் கூசும் ஒளியில், யோபு புத்தகம் விவரிக்கிற ‘ஒளி வீசுதலாகவும் அதன் நாசிகளிலிருந்து புறப்படுகிற புகையாகவும்’ இருக்கக்கூடும்.—யோபு 41:1, 18-21.
‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாய்’
அந்த முதலைகளை எங்களுக்குப் பின்னால் விட்டுவந்திருப்பதை உணருவதற்குள், அந்த இருட்டில்—அனுகூலமான விதத்தில், கண்ணாடி தடுப்புகளுக்குப் பின்னால்—விரும்பத்தக்கதும் விரும்பத்தகாததுமான இருவித பண்புகளையுமே அடையாளமாகக் குறிப்பிடுவதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பிராணியின் பல வகைகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். பைபிளில் பெயரிட்டு குறிப்பிடப்பட்ட முதல் விலங்காகிய சர்ப்பத்தைப் பற்றியே நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். (ஆதியாகமம் 3:1) இயேசு தம்முடைய சீஷர்களிடம், ஓநாய் போன்ற எதிர்ப்பவர்களின் மத்தியில் அவர்களுடைய நடத்தையைக் குறித்து அறிவுரை கூறுகையில் சர்ப்பத்தின் எச்சரிக்கையுள்ள தன்மையை ஓர் உதாரணமாகக் கூறினார். (மத்தேயு 10:16) ஆனாலும், வழக்கமாக சர்ப்பமானது பிசாசாகிய சாத்தான் என்னும் ‘பழைய பாம்புடன்’ அடையாளம் காட்டப்படுகிறது; அவன் 2 கொரிந்தியர் 11:3-ல் சர்ப்பத்தைப்போல வஞ்சனையும் தந்திரமும் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகிறான்.—வெளிப்படுத்துதல் 12:9.
“எறும்பினிடத்தில் போய், . . . ஞானத்தைக் கற்றுக்கொள்”
மிருகப் பூங்காவில் எதிர்பாராத ஒரு காட்சி என்னவென்றால், நாங்கள் காண்கிற பெரிய எறும்புப் புற்று; இலை வெட்டி எறும்புகளின் மூன்று காலனிகள் அதில் இடம்கொள்கின்றன. எறும்புகளின் மத்தியில் இவை தோட்டக்காரர்கள். ஒரு கண்ணாடி தடுப்புக்குப் பின்னால் அந்தக் காலனியை நாம் பார்க்கலாம்: இந்தச் சிறிய பிராணிகளின் வாழ்க்கை பழக்கவழக்கங்களை ஆராய இது நமக்கு உதவுகிறது. ஊக்கத்திற்கும் இயல்புணர்வாகவுள்ள ஞானத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாக பைபிளில் எறும்புகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவை நமக்கு அக்கறைக்குரியவையாக இருக்கின்றன.—நீதிமொழிகள் 6:6.
வேப்ரன் லன்ட்மான், பூச்சிகளின் நிபுணர் ஒருவர். அவர் விவரிக்கிறார்: “கணக்கிடப்பட்ட 100 கோடியை பத்து லட்சத்தால் பெருக்கினால் கிடைக்கக்கூடிய எண்ணிக்கையான எறும்புகள் பூமியின் மேற்பரப்பில் உழைக்கின்றன; அப்படியானால், ஒவ்வொரு மனிதனுக்கும் 2,00,000-க்கு குறையாத எறும்புகள் இருப்பதாக அர்த்தப்படுகின்றன! துருவ மண்டலங்களைத் தவிர எல்லா கண்டங்களிலும் பரவியிருக்கும் 15,000-க்கும் அதிகமான வகைகளில், எந்த இரண்டு வகைகளும் ஒரேபோல் காணப்படுவதில்லை. அவை அனைத்தும் வெவ்வேறு வகைகளான தங்குமிடங்களைக் கட்டுகின்றன, வெவ்வேறு வகைகளான உணவை உண்ணுகின்றன, ஆனால் அவையனைத்தும் ஏறக்குறைய ஒரேவிதத்திலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.
“மனிதர்கள் காளான்களை வளர்ப்பதுபோல இலை வெட்டி எறும்புகள் உண்ணத்தக்க பூசணத்தை வளர்க்கின்றன. இங்கு நாங்கள் பார்க்கிறபடி, இந்த வளர்ப்பு, நிலத்தடியில் நடக்கிறது, ஆனால் அந்தப் பூசணத்திற்கான உணவு, நிலத்திற்கு மேலிருந்து வருகிறது. நாள் முழுவதும், உழைப்பாளி எறும்புகள் இலைகளை தங்கள் கூட்டிற்கு சுறுசுறுப்பாகக் கொண்டுசெல்கின்றன. அவை ஒரு மரத்தில் அல்லது ஒரு புதரில் ஏறி ஒரு இலையைத் தெரிந்துகொள்கின்றன. பின்னர், தங்கள் தாடைகளை கத்தரிக்கோலைப்போல் பயன்படுத்தி, அந்த இலையிலிருந்து அரை வட்ட வடிவ துண்டுகளை விரைவாக வெட்டி எடுத்து, அவற்றைத் தங்கள் தலைமீது ஒருவகையான குடையைப் போல் பிடித்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் தங்கள் கூட்டிற்குக் கொண்டுசெல்கின்றன. அவ்வாறு பிடித்துக்கொண்டு செல்வதுதானே அவற்றின் இரண்டாம் பெயரான குடை எறும்புகள் (parasol ants) என்பதை விளக்குகிறது. வெட்டுதல் அவ்வளவு விரைவாக நடப்பதால், தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில், அவை முழு புதர்களில் அல்லது மரங்களில் உள்ள இலைகளை ஒருசில மணிநேரங்களில் முழுமையாக நீக்கிவிடுகின்றன. அவை அங்கு மிகவும் ஏற்கப்பட்டவையாய் இல்லை என்பதில் ஆச்சரியமேதுமில்லை! கூட்டில் மற்ற உழைப்பாளிகள், இந்த இலைத் துண்டுகளை மெல்லுவதற்கு முன் அவற்றைக் கவனமாக சுத்தம் செய்கின்றன. அதற்குப்பின், மென்றதிலிருந்து விளைவடைந்த கூழ், எறும்புகள் வெளியேற்றும் என்ஸைம்கள் மற்றும் அமினோ அமிலங்களுடன் கலக்கப்படுகிறது. அப்போதுதான் அந்தக் கூழ், பூசணத்திற்கு உணவாகப் பயன்பட தயாராக இருக்கிறது; இவ்வாறாக அந்த முழு காலனிக்கும் தொடர்ச்சியான பூசண வரத்து இருக்கும்படி உறுதி செய்துகொள்ளப்படுகிறது.”
படைப்பின் முடிவுறா பல்வகைமையில் காணப்படுகிற ஞானம் மற்றும் படைப்பாற்றல் திறத்தால் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டவர்களாய் நாங்கள் எறும்பு நகரை விட்டு வருகிறோம். அது பிந்திய பிற்பகலாக இருந்தது; நாங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆனால் நாங்கள் பார்ப்பதற்கு இன்னும் அதிகமானவை இருக்கின்றன. கோட்டான்களையும் (ஏசாயா 13:21), சீல்களையும் (யாத்திராகமம் 35:23, NW), நீர்யானைகளையும் (“பிகெமோத்,” யோபு 40:15), நெருப்புக்கோழிகளையும் (எரேமியா 50:39, NW), அல்லது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவையும் இங்கு வாழ்கிறவையுமான மற்ற பல மிருகங்களையும் நாங்கள் சந்திக்கவில்லை. ஒவ்வொன்றும் ஆய்வு செய்வதற்குத் தகுந்தவை. நாங்கள் நிச்சயமாகவே யெமன் மிருகக் காட்சிசாலைக்குத் திரும்பி வருவோம்!—அளிக்கப்பட்டது.