ஆப்பிரிக்க சாண வண்டுகள் மீட்புதவியாக!
தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் கால்நடைகள் முதல்முதலாகக் கொண்டுவரப்பட்டபோது, அந்த நாட்டில் ஏற்படப்போகும் கடுமையான பிரச்சினைகளை யார்தான் முன்னறிய முடிந்தது?
காலம் செல்லச்செல்ல, புல்வெளிகள் மாட்டுச் சாணத்தால் நிரப்பப்பட்டு, சில இடங்களில் புல் வளருவதைத் தடுப்பதாக அல்லது அந்தப் புல் கால்நடைகளால் உண்ணத்தகாததாக ஆகும்படி செய்துவிட்டன. காலப்போக்கில், சாணக் குவியல்கள், தொந்தரவூட்டும் ஈக்கள் பெருகுவதற்கான பெரிய இடங்களாக ஆயின. உண்மையில், ஆப்பிரிக்கா—சுற்றுச்சூழலும் வனவாழ்வும் (ஆங்கிலம்) என்ற பத்திரிகை அறிக்கை ஒன்றின்படி, 1970-களுக்குள் அந்தப் பிரச்சினை “ஒரு பொருளாதார மற்றும் சூழலியல் நெருக்கடியாக மாறுமளவுக்கு” வளர்ந்திருக்கிறது. “ஒவ்வொரு வருடமும் 20 லட்ச ஹெக்டேருக்கும் [50 லட்ச ஏக்கருக்கும்] அதிகமான மேய்ச்சல் நிலம் விளைச்சலற்றதானது . . . , புதைக்கப்படாத சாணத்தின் காரணமாக பேரளவான நைட்ரஜன் மண்ணுக்குத் திரும்பிச் செல்லவில்லை, ஈக்களின் தொகை பெருவாரியான அளவுகளைச் சென்றெட்டின” என்பதாகக் கணக்கிடப்பட்டது.
என்ன தவறு நேர்ந்தது? ஆப்பிரிக்காவில் சாண வண்டுகள் வயல்களிலிருந்து சாணத்தை விரைவாகவும் திறம்பட்ட விதத்திலும் நீக்கும். புதைக்கப்பட்ட சாணம் மண்ணுக்கு உரமூட்டி, அதை அதிக நுண்துளைகளுள்ளதாக்கி, இவ்வாறு தாவர வளர்ச்சியை முன்னேற்றுவிக்கிறது. இவ்விதமாக, கேடுவிளைவிக்கும் ஈ இனங்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, ஒட்டுண்ணி முட்டைகள் அழிக்கப்பட்டு, பாக்டீரியாவால் பரவும் நோய்கள் தடுக்கப்படுகின்றன.
என்றபோதிலும், ஆஸ்திரேலிய சாண வண்டுகள், அந்நாட்டிலேயே இயல்பாகவுள்ள விலங்குகளின் சிறிய, கெட்டியான, சிறு குண்டு போன்ற சாணத்தை மட்டுமே உரமாக்க வல்லவையே தவிர, கால்நடைகளின் பெரிய, மென்மையான சாணங்களை அவற்றால் அகற்ற முடியாது என்பதை ஆஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் குடியேறியவர்கள் உணரவில்லை.
என்ன செய்யப்பட வேண்டும்? மற்ற நாடுகளிலிருந்து சாண வண்டுகளை இறக்குமதி செய்ய வேண்டும்! உதாரணமாக, ஆப்பிரிக்க வகை, (அதில் சுமார் 2,000 சிற்றினங்கள் இருக்கின்றன), யானைகளால் இடப்பட்டதைப் போன்ற பேரளவான மென்மையான சாணத்தையும் அகற்றிவிடுகின்றன. இந்த வண்டுகளுக்கு, மாட்டுச் சாணங்களை நீக்குவது எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்த வேலையைச் செய்வதற்கு எவ்வளவு பேரெண்ணிக்கையான வண்டுகள் தேவைப்படுகின்றன! ஒரு தேசிய பூங்காவில், “யானை லத்தி குவியல் ஒன்றில் மட்டும் 7,000 வண்டுகள் காணப்பட்டன,” என்றும் வேறொரு பூங்காவில், “7 கிலோகிராம் [15 பவுண்ட்] யானை லத்தி குவியல் ஒன்றில், 12 மணிநேரங்களில் 22,746 . . . சேர்ந்திருந்ததாகவும்” ஆப்பிரிக்கா—சுற்றுச்சூழலும் வனவாழ்வும் அறிக்கை செய்கிறது. ஆஸ்திரேலியாவின் அழிவுக்குரிய பிரச்சினையை சமாளிப்பதற்குத் தேவைப்படும் வண்டுகளின் பேரளவை சற்று கற்பனைசெய்து பாருங்கள்!
மகிழ்ச்சிக்குரிய விதத்தில், தற்போது நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது—ஆப்பிரிக்க சாண வண்டுகளின் உதவியால்.