மின்னலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபர்
மின்னல் ஒருமுறை தாக்குகையில், சராசரியாக பத்தாயிரக்கணக்கான ஆம்பியர்கள் மின்னோட்டமுடைய கோடிக்கணக்கான வோல்ட்டுகள் மின்சாரத்தை உண்டாக்கலாம். ஒப்பிடுகையில், வீடுகளில் அதைப்போன்ற மின்சுற்று பொதுவாக 15 ஆம்பியர்கள் அளவே உடையது என்பதாக மதிப்பிடப்படுகிறது.a மின்னலால் தாக்கப்படும் அபாயத்தைக் குறைப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பின்வரும் ஆலோசனைகளைக் கவனியுங்கள்.
• எப்படியாவது முடிந்தவரை, வீட்டிற்குள் போய்விடுங்கள். காருக்குள் போய்விடுவதும்கூட சிறந்தவிதத்தில் பாதுகாப்பைத் தரலாம். ஓர் உயரமான கட்டடத்தினுள்ளே இருப்பதைப் பற்றியென்ன? மின்னலால் ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்கும் தன்மையுடைய கம்பி இணைக்கப்பட்ட ஓர் உயரமான கட்டடம் ஒரு பாதுகாப்பான இடமாய் இருக்கலாம். உதாரணமாக, நியூ யார்க் சிட்டியிலுள்ள எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் ஒவ்வொரு வருடமும் சுமார் 25 தடவைகள் மின்னலால் தாக்கப்படுகையில் தப்பிப்பிழைக்கிறது. என்றபோதிலும், உலோகத்தகடு கொண்ட அமைப்புடைய, நிலத்தோடு இணைக்கப்படாத அமைப்புகளையும், ஆன்டெனாவுக்கு அருகிலுள்ள இடங்களையும், உலோகத்தால் அமைக்கப்பட்டிருக்கும் வேலிக்கு அருகிலுள்ள இடங்களையும் தவிர்ப்பது மிகச்சிறந்தது.
• ஏரிகள், வயல்கள், குழிப்பந்து விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளியை விட்டுப் போய்விடுங்கள். தனியே நிற்கும், உயர்ந்த மரங்களும்கூட ஆபத்தானவையாய் இருக்கலாம். பல மரங்களுடைய ஒரு பகுதியில் நீங்கள் இருந்தால், குறைந்த உயரத்திலிருக்கும் மரங்களுக்கருகில் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள். அப்புயல் அபாயகரமான அளவுக்கு மிக அருகில் தாக்கும்போதும், நீங்கள் ஒரு திறந்தவெளியை விட்டுப் போய்விட முடியாதிருக்கையிலும், தரையின்மீது உட்கார்ந்துகொண்டு உங்கள் முழங்கால்களைக் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். மல்லாக்கப் படுக்காதீர்கள், ஏனெனில், அவ்வாறு படுக்கையில் தாக்கும் பரப்பு அதிகரிப்பதால், அப்பரப்பை முடிந்தளவு குறைப்பதற்கு முயற்சியெடுப்பது அவசியம்.
• வீட்டிற்குள் இருந்தாலும்கூட, நீங்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம். பின்வரும் ஒருசில ஆலோசனைகளாவன: மின்சார அடுப்புகள், உலோகக் குழாய் இணைப்புகள் போன்ற மின்கடத்திகளுடன், தொடர்பு இருப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். ஷவர் அல்லது குளிக்கும் தொட்டி ஆகியவற்றிலிருந்து தூரமாகச் சென்றுவிடுவது ஞானமானதாயிருக்கலாம், மேலும், ஃபோனை உபயோகப்படுத்த முயற்சி செய்வதைத் தவிருங்கள். கம்ப்யூட்டர்கள், தொலைக்காட்சிகள், மற்றும் பிற கருவிகளை மின்சார இணைப்பிலிருந்து அகற்றிவிடுங்கள், ஏனெனில் ஒருவேளை அந்த வீடு மின்னலால் தாக்கப்படுகையில், அத்தகைய பொருள்கள் சேதப்படுத்தப்படலாம்.
• எவரேனும் மின்னலால் தாக்கப்பட்டால், உடனடியாக இதயநுரையீரல் சார்ந்த மறு உயிர்விப்பு முறையின்படி (cardiopulmonary resuscitation [CPR]) சிகிச்சை செய்வது மிகவும் அத்தியாவசியம். பல சந்தர்ப்பங்களில், மின்னலால் தாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டது போலத் தோன்றியபோதும், CPR முறையால் மறு உயிர்விப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பதாக ஸ்வீடனிலுள்ள அப்ஸலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹை வோல்ட்டேஜ் ரிசர்ச் டிபார்ட்மென்ட்டின் பேராசிரியர் விக்டர் ஷூக்கா கூறுகிறார். “ஆனால், மூளை சேதமடைவதைத் தவிர்ப்பதற்கு, அந்தச் சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும்” என்று அவர் எச்சரிக்கிறார்.
ஒரு மின்னற்புயலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், இங்கே கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றும்படி கவனமாயிருங்கள். அப்போது, நீங்கள் இந்த பயமுறுத்தும் எதிர்பாரா சம்பவத்தின் ஒரு பலியாளாகாமல் இருக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a ஒரு ஆம்பியர் என்பது, மின்சாரம் பாய்தலின் மின்னோட்டம் பயன்படுத்தப்படும் அளவின் ஓர் அலகு ஆகும். வோல்ட்டுகள் என்பது மின்னோட்டத்தின் சக்தியைக் குறிப்பிடுகிறது. விழித்தெழு! பிப்ரவரி 22, 1985, பக்கங்கள் 26-7-ஐக் காண்க.