அந்த அருவருக்கத்தக்க ஈக்கள்—நீங்கள் நினைப்பதைவிட அதிக பயனுள்ளவையா?
நம்மில் பெரும்பாலானோர் ஈக்களை ஒரு தொந்தரவாக அல்லது சமுதாயத்திற்கு முற்றிலும் ஒரு ஆபத்தாகக் கருதுகிறோம். ஆனால் ஈக்கள், எவ்வளவு தொந்தரவு தரக்கூடியவையாய் இருக்கக்கூடுமென்றாலும், நாம் நினைப்பதைவிட அதிக பயனுள்ளவையாய் இருப்பதாக உயிரியலாளர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
அவற்றின் அநேக சிற்றினங்கள், பூக்களை விஜயம் செய்தே ஒரு நாளின் பெரும்பகுதியை செலவிடுகின்றன; இந்தப் பூக்கள், தங்கள் பூச்சி வாடிக்கையாளர்களுக்கு தேனையும் மகரந்தத்தையும் ஒருங்கே வழங்கும் உடனடி உணவு வடிகால்கள். மகரந்தத்திலிருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுக்கக்கூடிய பெரும் சாகசம் புரியும் சில ஈக்கள், தங்கள் முட்டைகளை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த உயராற்றல் உணவைச் சார்ந்திருக்கின்றன.
ஒரு மலரிலிருந்து வேறொன்றிற்குத் தாவுகையில், தவிர்க்கமுடியாதபடி அவற்றின் உடல்களில் தங்களை ஒட்ட வைத்துக்கொள்கிற பிசுபிசுப்புள்ள மகரந்தப் பொடிகளை இந்த ஈக்கள் எடுத்துச் செல்கின்றன. உயிரியலாளர்களால் கவனமாக பரிசோதிக்கப்பட்ட ஒரு ஈ, அதன் உடலில் 1,200 மகரந்த பொடிகளைக் கொண்டிருந்தது! மகரந்தச் சேர்க்கையில் ஈக்கள் வகிக்கும் பாகத்தைக் குறித்து அதிகமான ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகையில், சில பூக்கள் தங்கள் தப்பிப்பிழைப்பிற்கு அவற்றையே சார்ந்திருக்கின்றன என அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வட அமெரிக்காவில் கொலராடோவில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளை இயற்கை வரலாறு (ஆங்கிலம்) பத்திரிகை விளக்குகிறது. வீட்டு ஈக்களைப் போலிருக்கும், சாதாரண மஸ்காய்ட் ஈக்கள், அவற்றை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக அவற்றின்மீது பளிச்சிடும் நிறங்கள் தூவப்பட்டன. அவற்றின் தினசரி நடவடிக்கையை கவனித்த பிறகு, சில காட்டுப் பூக்களுக்கு தேனீக்களைவிட ஈக்களே மிக முக்கியமான மகரந்த சேர்க்கை உண்டுபண்ணுபவை என்றும் அவை தேனீக்களைவிட மிகவும் அதிகமாய் இங்குமங்குமாக திரிகின்றன என்றும் கண்டறிந்தது ஆய்வாளர்களுக்கு வியப்பூட்டியது.
இந்த ஈக்களின் வேலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில மலர்கள் விஜயம் செய்யப்படாதபடிக்கு வலைப்பின்னலமைப்பால் போர்த்தப்பட்டிருந்தன. இந்த மலர்கள் எவ்வித விதையையும் விளைவிக்கவில்லை—ஈக்களால் மகரந்த சேர்க்கை செய்யப்படுகிற அருகிலுள்ள பலனளிக்கும் மலர்களிலிருந்து முற்றிலும் முரண்பட்டவையாய் நிற்கின்றன இவை. சில மலர்கள் முக்கியமாக தேனீக்களால் மகரந்த சேர்க்கை செய்யப்படுகிறபோதிலும், காட்டுச் சணல் அல்லது காட்டு ஜெரேனியம் போன்ற மற்ற இனங்களைப் பொறுத்தவரையில், சில உயரங்களில், இந்த வேலையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானதை ஈக்கள் செய்தன.
காரல் கெர்ன்ஸ் மற்றும் டேவிட் இனோயுயி என்ற இரு ஆய்வாளர்கள் என்ன முடிவுக்கு வந்தார்கள்? “அப்படியானால், கொலராடோ ராக்கீஸிலுள்ள அநேக காட்டு மலர்களுக்கு, தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், மற்றும் தேன்சிட்டுகள் ஆகியவற்றை ஈக்கள் விஞ்சி நிற்கின்றன . . . அநேக மக்கள் சற்று வெறுப்பூட்டத்தக்கவையாகக் காண்கிற இந்த பூச்சிகள் இல்லை என்றால், மலைப்பாங்கான இடத்திலுள்ள பசும்புல்தரையை விஜயம் செய்வதை அவ்வளவு வனப்பூட்டுவதாக்கும் காட்டு மலர்களில் எத்தனையோ, விதையைப் பிறப்பிக்காது.” ஈக்களும் பயனுள்ளவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!