உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 4/8 பக். 23-25
  • உலகின் மிகத் தனிமையான பறவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகின் மிகத் தனிமையான பறவை
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இறங்குமுகக் கணிப்பு தொடங்குகிறது
  • ஆச்சரியமும் நம்பிக்கையும்
  • பொருத்தமான நிலைக்கு வருதலும் தொடர்பு கொள்ளுதலும்
  • ஆசிரியரும் தகப்பனும் . . .
  • . . . வரலாறு படைத்தவனும்
  • பேசும் கிள்ளைகள் ஆபத்தில்!
    விழித்தெழு!—2002
  • பறவைகளைப் பார்வையிடுதல்—எல்லாருக்குமே இனியதோர் விருப்பவேலையா?
    விழித்தெழு!—1998
  • சிங்கப்பூரின் பறவை உலகம்
    விழித்தெழு!—1988
  • பறவைகள் கட்டிடங்களில் மோதுகையில்
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 4/8 பக். 23-25

உலகின் மிகத் தனிமையான பறவை

பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்

புள்ளி ஆந்தையும் வழுக்கை கழுகும் அருகிவரும் ஆபத்தில் இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள் என்றால், ஷ்பிக்ஸ் மக்காவின் கதையை நீங்கள் கேட்டிருக்கவில்லை என்று தெரிகிறது. இந்த பிரேஸிலிய பறவை, “அருகிவரும் உயிரினங்கள்” பற்றிய கருத்துக்கு முற்றிலும் புதிய ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது. என்றபோதிலும், உலகிலேயே மிகத் தனிமையான பறவையைக் குறித்து முழுமையான விவரங்களைத் தர, நாம் 17-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கலாம்.

அப்போது, டச் குடியிருப்பாளராக இருந்து, பிரேஸிலில் வாழ்ந்து வந்த ஜார்ஜ் மார்க் க்ராவ், இந்தப் பறவை இருப்பதையும் அதன் விவரத்தையும் குறித்து முதல்முறையாகப் பதிவுசெய்து வைத்தார். சீக்கிரத்தில், உள்ளூர் மக்கள் அதற்கு ஆராரின்யா ஆஸூல், அல்லது சிறிய நீல மக்கா என்ற எளிய ஆனால் பொருத்தமான பெயரை வைத்தனர். அந்தப் பறவை நீலமும் கொஞ்சம் சாம்பல் நிறமும் உடையதாய் இருக்கிறது. அதன் 35 சென்டிமீட்டர் நீள வால் உட்பட 55 சென்டிமீட்டர் அளவுடைய அது பிரேஸிலின் நீல மக்காக்களிலேயே மிகச் சிறியதாகவும் இருக்கிறது.

“பின்னர், 1819-ல், அந்தப் பறவையின் முறைப்படியான பெயராகிய ஸியானோஸிட்டா ஷ்பிக்ஸீ (Cyanopsitta spixii) என்பதை அறிவியலாளர்கள் வைத்தனர்,” என்பதாக கிளிகளைப் பற்றிய முதன்மைவாய்ந்த நிபுணராகிய உயிரியலாளர் கார்லோஸ் யாமாஷிடா குறிப்பிடுகிறார். ஸியானோ என்றால் “நீலம்” என்பது பொருள்; ஸிட்டா என்பது “கிளி” என்பதைக் குறித்துக்காட்டுகிறது. ஷ்பிக்ஸீ என்றால் என்ன? அந்தக் கூட்டிச்சேர்ப்பானது, ஜெர்மானிய இயற்கை உயிரியலாளராகிய யோஹான் பாப்டிஸ்ட் ஷ்பிக்ஸ் என்பவருக்கு மதிப்பளிக்கும் வகையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அந்த உயிரியலாளர் விளக்குகிறார். அதன் இயல்பான வாழ்விடமாகிய, வடகிழக்கு பிரேஸிலில் ஒருசில மரங்களை ஓரத்தில் கொண்ட சிறிய நீரோடைகளில், இந்த இனத்தை முதலில் ஆராய்ந்தவர் அவரே.

இறங்குமுகக் கணிப்பு தொடங்குகிறது

சொல்லப்போனால், ஷ்பிக்ஸின் மக்காக்கள் ஒருபோதும் வானத்தை நிரப்பியதில்லை. ஷ்பிக்ஸின் நாட்களில்கூட, அவற்றின் கணக்கிடப்பட்ட என்ணிக்கை 180 மட்டுமே; ஆனால் அப்போதிருந்து அவற்றின் நிலைமை நிலையாக மோசமாகி வந்திருக்கிறது. அங்கு குடியேறியவர்கள், அந்தப் பறவைகள் வாழ்ந்துவந்த கானகங்களை எந்தளவுக்கு அழித்தார்கள் என்றால், மத்திப 1970-களில் 60-க்கும் குறைவான மக்காக்களே இன்னும் உயிர் பிழைத்திருந்தன. அவ்வாறிருந்த மோசமான நிலையில், அது இறங்குமுகக் கணிப்பின் வெறும் ஒரு தொடக்கமே.

அங்கு குடியேறியவர்கள், மூன்று நூற்றாண்டுகளாக செய்துமுடிக்காததை, பறவை பிடிப்பவர்கள் ஒருசில வருடங்களில் நிறைவேற்றிவிட்டனர்—அவர்கள் உண்மையில் ஷ்பிக்ஸின் மக்காக்களை முழுமையாகத் துடைத்தழித்துவிட்டனர். 1984-ல், அந்த 60 பறவைகளில் 4 மட்டுமே இன்னும் சுதந்திரமாய் பறந்துதிரிபவையாய் தப்பிப்பிழைத்திருந்தன; ஆனால் அதற்குள் “அவ்வினத்தின் கடைசி பறவைக்குரிய விலை”—என்பதாக ஒரு பறவைக்கு $50,000 வரையாக—கொடுக்க பறவை வளர்ப்பாளர்கள் மனமுள்ளவர்களாக இருந்தனர். சுதந்திரமாகப் பறக்கும் கடைசி பறவைகளை ஆய்வாளர்கள் பார்த்து ஒரு வருடம் இருக்கும் என்று மே 1989-ல், விலங்குலகம் (ஆங்கிலம்) பத்திரிகை அறிவித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மீதமிருந்த பறவைகள் அனைத்தையும் பறவை பிடிப்பவர்கள் பிடித்துவிட்டார்கள் என்பதாக ஒருசில மாதங்கள் கழித்து அறிக்கை செய்யப்பட்டது. ஷ்பிக்ஸின் மக்கா “மரண அடி”யை பெற்றுவிட்டதாக விலங்குலகம் வருத்தம் தெரிவித்தது.

ஆச்சரியமும் நம்பிக்கையும்

உயிரியலாளர்கள் கிட்டத்தட்ட ஷ்பிக்ஸ் மக்காவின் அத்தியாயத்தை மூடிவிடும் நிலையை எய்திவிட்டார்கள்; என்றாலும், அந்தப் பறவையின் வாழ்விடத்திற்கு அருகில் வாழும் மக்கள், தாங்கள் ஆராரின்யா ஆஸூல் ஒன்றைக் கண்டிருந்ததாகச் சொன்னார்கள். அது தென்பட்டதைக் குறித்து மேலுமான அறிக்கைகள் தொடர்ந்தன. இன்னும் ஒரு தப்பிப்பிழைத்த பறவை இருக்கக்கூடுமா? அதைக் கண்டுபிடிப்பதற்காக, 1990-ல், ஐந்து ஆய்வாளர்கள், கூடாரம் போட்டுத் தங்குவதற்கான சாதனங்கள், பைனாக்குலர்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஷ்பிக்ஸ் மக்கா இருக்கும் பிராந்தியத்தை நோக்கிச் சென்றனர்.

அந்தப் பகுதியை இரண்டு மாதங்களுக்கு பயனின்றி அலசி ஆராய்ந்த பின்னர், பச்சை நிறமுள்ள பாப்பாகையோஸ் மாராகானாஸ் அல்லது இல்லிங்கர்ஸ் மக்கா பறவைகளின் கூட்டம் ஒன்றை அந்த ஆய்வாளர்கள் கண்டனர்; ஆனால் வழக்கத்திற்கு மாறான ஏதோவொன்றைக் கவனித்தார்கள். அந்தப் பறவைக் கூட்டத்திலுள்ள ஒரு பறவை வித்தியாசமாக—பெரியதாகவும் நீல நிறமுள்ளதாகவும்—இருந்தது. சுதந்திரமாகப் பறந்து திரிந்த ஷ்பிக்ஸ் மக்காக்களின் கடைசி பறவை அதுவே! அவர்கள் அதை ஒரு வாரம் கவனித்து, என்ன அறிந்துகொண்டார்கள் என்றால், கூடிவாழும் இயல்புடையதாக இருக்கும் ஷ்பிக்ஸ், அவனது தனிமையை சமாளிப்பதற்காகவும் ஒரு துணையைக் கண்டுபிடிப்பதற்காகவும் இல்லிங்கர்களுடன் சேர்ந்து பறந்துகொண்டிருந்தான். இப்போது, விடாப்பிடியாக தொடரும் இந்த நீல மக்காவை ஒரு சிநேகிதனாக ஏற்றுக்கொள்வதை அந்தப் பச்சை பறவைகள் பொருட்படுத்தவில்லை—ஆனால் அவனுடன் கூடி இணைவதற்கோ? நிச்சயமாகவே, பண்பட்ட இல்லிங்கர் மக்கா சமுதாயத்தில் வரையறைகள் இருக்கின்றன!

ஆகவே, நிராகரிக்கப்பட்டவனாய், ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின்போது, அந்த ஷ்பிக்ஸ் மக்கா தன் கூட்டாளிகளிடமிருந்து பிரிந்து தானும் தனது முந்தைய ஷ்பிக்ஸ்-மக்கா துணையும்—தன் வாழ்நாள் துணையை பறவை பிடிப்பவர்கள் பிடித்து கூண்டிலடைக்கப்படுவதற்காக விற்ற 1988 வரையாக—வருடக்கணக்காக ஒன்றுசேர்ந்து தூங்கிய அந்த மரத்திற்குப் பறந்து சென்றான். அப்போதிருந்து, அவன் அங்கே—சின்னஞ்சிறிய, தனிமையான நீல இறகு மூட்டை ஒன்றாக, உயரத்தில் உள்ளதும் பலனற்றுதுமான ஒரு கிளையில்—தன்னந்தனியாக தூங்குகிறான். இப்போது, ஓர் அதிசயம் ஏற்பட்டாலொழிய, சுதந்திரமாகத் திரிந்து தப்பிப்பிழைக்க அறிந்திருந்திருக்கும் அந்தக் கடைசி ஷ்பிக்ஸ் மக்கா—அவனுக்கு கூட்டிணையான துணையை யாராவது கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால்—காலப்போக்கில் டோடோவைப் போலவே அழிந்துபோய்விடும். அந்தக் கருத்து பிரபலமாகி, 1991-ல் ப்ரோஷிடோ ஆராரின்யா ஆஸூல் (ஷ்பிக்ஸ்-மக்கா திட்டம்) தொடங்கப்பட்டது. அதன் நோக்கம்? தப்பிப்பிழைத்திருக்கும் ஆண் பறவையைப் பாதுகாத்து, அவனுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்து, மணவுறவை ஏற்படுத்தி, அந்தச் சுற்றுவட்டாரத்தில் அவை மீண்டும் பெருகும் என்று எதிர்நோக்குவதாகும். அந்தத் திட்டம் வெற்றி அடைகிறதா?

முன்னேற்றம் அடைந்து வருகிறது. பிரேஸிலிய தபால் அலுவலகம் அதைக் கௌரவிக்கும் நோக்கில் ஒரு தபால் தலையை வெளியிடுவதன்மூலம், இந்தக் கிரகத்திலேயே மிகவும் அருகிவரும் இந்தப் பறவைக்கு நிகழவிருக்கும் முடிவை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. அதே நேரத்தில், தப்பிப்பிழைத்திருக்கும் அந்த ஷ்பிக்ஸ் மாக்காவிற்கு ஆதரவாக, வட பாஹியாவில் அந்தப் பறவையின் வாழ்விடத்திற்கு அருகிலுள்ள கெராஸாவின் 8,000 குடியிருப்பாளர்களை உயிரியலாளர்கள் வெற்றிகரமாக ஒன்றுதிரட்டினார்கள். ஸெவெரீனோ என்று செல்லப்பெயரிட்டு “தங்கள்” பறவையை அந்த நகரத்தார் காத்துவந்ததால், பறவை பிடிப்பவர்கள் தற்போது கையும்களவுமாக பிடிபடும் அபாயத்தை எதிர்ப்படுகின்றனர். இந்தச் சூழ்ச்சித்திறம் வெற்றிகரமானதாக நிரூபிக்கிறது. ஸெவெரீனோ இன்னும் பறந்து திரிகிறது. அடுத்தத் தடையும் சமாளிக்கப்பட்டு வருகிறது—பிரேஸிலில் இன்னும் வாழ்ந்துவரும் கூண்டிலடைக்கப்பட்ட ஆறு பறவைகளில் ஒன்றை விட்டுவிடும்படி பறவை வளர்ப்பாளர்களைத் தூண்டுவதாகும். (பெட்டியைப் பார்க்கவும்.) பறவையை வைத்திருந்த ஒருவர் ஒத்துக்கொண்டார்; கூட்டிலிருந்து பறவை பிடிப்பாளர்களால் சிறைகொண்டுச் செல்லப்பட்ட இளம் பெண் பறவை விடுவிக்கப்பட்டு மீண்டும் தனது இயல்பான வாழ்விடத்தில் வாழும்படியாக ஆகஸ்ட் 1994-ல், கெராஸாவுக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது.

பொருத்தமான நிலைக்கு வருதலும் தொடர்பு கொள்ளுதலும்

ஆண் பறவையின் வாழ்விடத்திலே இடம்கொண்டுள்ள ஒரு பெரிய பறவைக்கூடத்தில் இந்தப் பெண் மக்கா வைக்கப்பட்டு, மீண்டும்-இயல்-அடிப்படை உணவு கொடுக்கப்பட்டது. இயற்கையில் வாழ்வதற்குப் பொருத்தமான நிலைக்குக் கொண்டுவருவதற்காக, அவளை வளர்த்தவர்கள்—அவள் கூண்டுக்குள் இருந்தபோது வழக்கமாக உட்கொண்ட—சூரிய காந்தி விதைகளை மறக்க வைத்து, பைன் விதைகளையும் காட்டில் வளர்கிற உள்ளூர் முட்பழங்களையும் அளித்தார்கள். அவள் வயிறு அதற்கிசைய நன்கு மாற்றியமைத்துக்கொண்டது.

அந்தப் பயிற்றுவிப்பு திட்டத்தில் தினசரி பயிற்சிகளும் மற்றொரு பாகமாக ஆயின—நல்ல காரணத்துக்காகவே. கூண்டில் வளர்க்கப்பட்ட பறவையை ஒரு நாளில் சுமார் 50 கிலோமீட்டர் பறக்க விரும்பும் ஒரு துணைக்கு ஏற்றபடி பறந்து செல்வதற்கு ஏதுவாக ஒரே நாளில் மாறும்படி எதிர்பார்ப்பது, சோம்பேறியாக நேரம்போக்கும் ஒருவரை மாரத்தான் ஓடச் சொல்வது போல் இருக்கும். ஆகவே அவளுடைய தசைகளைக் கட்டியமைப்பதற்காக, அந்தக் கூண்டுப்பறவையைக் கவனித்து வரும் உயிரியலாளர்கள் அந்தப் பறவைக்கூடத்திற்குள் தன்னால் முடிந்தவரைக்கும் சுற்றிப் பறந்து வரும்படி அவளுக்கு உற்சாகம் அளித்தார்கள்.

ஸெவெரீனோ அந்தப் பறவைக்கூடத்தைக் கண்டுபிடிப்பதற்கு அதிக காலம் எடுக்கவில்லை. அந்தப் பெண் பறவையைக் கண்டதும், அவன் கீச்சிட்டு, அவளை அழைத்து, அந்தப் பறவைக்கூடத்திற்கு 30 மீட்டர் தொலைவிற்குள் வந்துவிட்டான். “அந்தப் பெண் பறவை” அதற்குப் பிரதிபலித்து, தன்னை சந்திக்கவந்த ஆண் சந்திப்பாளரை அவள் கவனித்தபோது “அதிக கிளர்ச்சியைக் காண்பித்தாள்” என்று அந்தத் திட்டத்தில் வேலை செய்த உயிரியலாளர் மார்க்கோஸ் டா ரே சொல்லுகிறார். அவளுடைய கிளர்ச்சி “எங்களுக்கு நம்பிக்கை அளித்தது” என்று அவர் சொல்லுகிறார்.

ஆசிரியரும் தகப்பனும் . . .

முடிவாக, அந்த நாள் வந்தது: பறவைக்கூடத்தின் கதவு தாராளமாகத் திறந்தது. அரை மணிநேர தயக்கத்திற்குப் பின்னர், அந்தப் பெண் பறவை வெளியே பறந்து சென்று, பறவைக்கூடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. ஆனால் ஸெவெரீனோ எங்கிருந்தான்? அவன் 30 கிலோமீட்டர் தொலைவில், மீண்டும் இல்லிங்கர் மக்காக்களைத் துரத்திக்கொண்டு இருந்தான். அவன் ஏன் போய்விட்டான்? மாதக்கணக்கில் சுற்றிச்சுற்றிக் காத்திருந்த பின்னர், முடிவாக இனப்பெருக்கக் காலம் வந்தபோது, அவனுடைய துணையாக வேண்டியவள் இன்னும் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தாள். “சிறைப்பட்டிருக்கும் ஆராரின்யாவைவிட வெளியில் சுதந்திரமாகத் திரியும் மாராகானாவே மேல்” என்று அவன் ஒருவேளை நினைத்திருப்பான் என்கிறார் உயிரியலாளர் டா ரே. இந்த முறை ஸெவெரீனோவின் விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்தது. பெண் இல்லிங்கர் மக்கா ஒன்று விட்டுக்கொடுத்து, அவனை ஒரு துணையாக ஏற்றுக்கொண்டது.

என்றாலும், இனச்சேர்க்கையின் காலம் முடிவடைகிறபோது, ஸெவெரீனோ தன் காதலை நிறுத்திவிட்டு, தன் சொந்த வாழ்விடத்திற்கு திரும்பி, விடுவிக்கப்பட்ட ஷ்பிக்ஸ் மக்காவைக் கண்டுபிடித்து, அவளைத் தன் துணையாக ஏற்பான் என்று உயிரியலாளர்கள் நம்புகின்றனர். அதற்குப் பின்னர், அவன் ஆசிரியர் மற்றும் தகப்பனார் என்ற இரு பாகங்களையும் ஏற்கும்படி எதிர்பார்க்கப்படுகிறான். வெளியில் சுதந்திரமாகத் திரிந்து பிழைப்பது எப்படி என்று அறிந்திருக்கிற ஷ்பிக்ஸ் மக்கா, இந்த உலகிலேயே அவன் ஒருவனாக மட்டும் இருப்பதால், பிரேஸிலின் மிகவும் வறண்ட பகுதிகளில் உணவையும் உறைவிடத்தையும் கண்டுபிடிப்பது எப்படி என்று அவனே அவனுடைய கூட்டாளிக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

. . . வரலாறு படைத்தவனும்

மீண்டும் இனப்பெருக்க காலம் தொடங்கும்போது, ஸெவெரீனோ இல்லிங்கர் மக்காக்களைப் பின்தொடருவதை நிறுத்திவிட்டு, தன் துணைக்கு தங்குமிடமாகச் சேவிக்கக்கூடிய உட்குழிவுள்ள மரம் ஒன்றைத் தேடுவதில் கவனம் செலுத்துவான் என்று ஷ்பிக்ஸ் மக்கா திட்டத்தின் உயிரியலாளர்கள் வாழ்த்திக்கொண்டிருப்பார்கள். எல்லா நிலைமைகளும் சரியாக இருந்தால், பெண் ஷ்பிக்ஸ் மக்கா இரண்டு சிறிய முட்டைகளையிடுவாள்; பின்னர் ஒருசில மாதங்கள் கழித்து, ஸெவெரீனோ தப்பிப்பிழைக்கும் முறைகளை மூன்று பேர் அடங்கிய ஒரு வகுப்பிற்குக் கற்றுக்கொடுப்பான். அந்த அளவுக்கு காரியங்கள் முன்னேறுமா?

“அந்தப் பதிலை அறிந்துகொள்ள காலம் செல்லும், ஆனால் வெளியில் சுதந்திரமாகத் திரியும் ஷ்பிக்ஸ் மக்காவும் வரலாற்றின் மற்றொரு புரட்டப்பட்ட பக்கமாவதைத் தடுப்பதற்கு ஒரே வழி இந்தத் திட்டமாகவே இருக்கக்கூடும்,” என்கிறார் உயிரியலாளர் யாமாஷிடா. தற்போது வாய்ப்பைப் பற்றிக்கொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவது ஸெவெரீனோவைப் பொறுத்ததே. இந்த இணைவு வெற்றிகரமானதென்றால், இயற்கையை நேசிப்பவர்களும்—இல்லிங்கர் மக்காக்களும்—நிம்மதிப் பெருமூச்சை விடுவார்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி]

பறவைகள் கூண்டுக்குள்ளே

கணக்கிடப்பட்டுள்ள 30 ஷ்பிக்ஸ் மக்காக்கள் கூண்டுக்குள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பிரேஸிலிய பறவைகளில் ஒரு டஜனுக்கும் அதிகமானவை, பிலிப்பீன்ஸிலுள்ள ஒரு பறவை வளர்ப்பாளரால் வளர்க்கப்பட்டு இன்னும் அந்த ஆசிய நாட்டிலேயே வாழ்கின்றன. கூண்டுக்குள் இருக்கும் மற்ற பறவைகள் பிரேஸில், ஸ்பெய்ன், ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. என்றபோதிலும், கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் இந்தப் பறவைகள் அனைத்தும், ஸெவெரீனோவுக்கு மட்டுமே இருக்கிற ஒரு தன்மையில்—அதாவது வெளியில் சுதந்திரமாகத் திரிந்து பிழைப்பது எப்படி என்று அறிந்திருப்பதில்—குறைவுபடுகின்றன.

[பக்கம் 25-ன் படம்]

பாதுகாக்கப்பட்டுள்ளது—ஒரு தபால் தலையிலாவது

[படத்திற்கான நன்றி]

Empresa Brasileira de Correios e Telégrafos

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்