பைபிளின் கருத்து
உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்க்கலாமா?
உடன் வணக்கத்தாருக்கு நிவாரண உதவி பொருட்களைக் கொடுக்கச் செல்கையில், கிறிஸ்தவர்கள், ஜெபத்திற்குப் பின், தாங்கள் கொல்லப்படுவதற்கான சாத்தியம் இருந்த போர் நிறைந்த பகுதிக்கு, பயணப்பாதுகாப்பைக் கொண்டிருக்கும்படி ஒரு தொகுதியாகச் சென்றார்கள். போரிட்டுக்கொண்டிருக்கும் படைகளும் பெரிதும் ஆச்சரியப்படத்தக்கதாக, அவர்கள் பத்திரமாகச் சென்று சேர்ந்தார்கள். கடவுளுடைய தூதன் அவர்களைப் பாதுகாத்தாரா?
அநேக வருடங்களாய் ஊழியர்களாக சேவை செய்த ஒரு கிறிஸ்தவ தம்பதி, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருக்கும் இடத்தில், ஒரு விமானம் நொறுங்கி விழுந்தபோது கொல்லப்பட்டார்கள். குறிப்பிட்ட அந்தக் கணத்தில், அவர்களையோ அல்லது அந்த விமானத்தையோ கடவுளுடைய தூதன் ஏன் வேறெங்காவது செல்லும்படி வழிநடத்தவில்லை?—அப்போஸ்தலர் 8:26-ஐ ஒப்பிடுக.
இந்த நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில், நாம் இவ்வாறு கேட்கக்கூடும்: கடவுளுடைய சித்தத்தைச் செய்கையில் ஏன் சில கிறிஸ்தவர்கள் சாகிறார்கள், அதேநேரத்தில் பெரும்பாலும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கும் மற்றவர்கள் ஏன் பிழைக்கிறார்கள்? முக்கியமாக இந்தக் கொடிய “கடைசிநாட்களில்” கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்க்க முடியுமா?—2 தீமோத்தேயு 3:1.
கடவுளிடமிருந்து பாதுகாப்பு கிடைப்பதன் நோக்கம்
யெகோவா தேவன் தம்முடைய மக்களை ஆசீர்வதித்து, பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறார். (யாத்திராகமம் 19:3-6; ஏசாயா 54:17) கிறிஸ்தவ சபை அதன் தொடக்க நிலையில் இருந்த முதல் நூற்றாண்டில் அவர் முனைப்பான விதத்தில் அவ்வாறு செய்தார். எல்லா வகையான அற்புதங்களும் மிகுந்து காணப்பட்டன. இயேசு ஆயிரக்கணக்கானோருக்கு உணவளிக்கும் வகையில் உணவை பெருக்கினர்; அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் எல்லா விதமான நோயையும் ஊனத்தையும் குணப்படுத்தினர், பேய் பிடித்தவர்களிடமிருந்து மனித ஆற்றலுக்கு மேற்பட்ட ஆவிகளை வெளியேற்றினர், செத்தவர்களையும்கூட உயிரோடு எழுப்பினர். கடவுளுடைய வழிநடத்துதலுடன் அந்த இளம் சபை வளர்ந்து, உறுதியாக நிலைநாட்டப்பட்டது. இருந்தாலும், கடவுளுடைய தெளிவான ஆதரவு இருந்தபோதிலும், அகால மரணம் எனப்படுவதை அநேக உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அனுபவித்தார்கள்.—சங்கீதம் 90:10-ஐ ஒப்பிடுக.
செபதேயுவின் குமாரராகிய யாக்கோபையும் யோவானையும் பற்றி சிந்தியுங்கள். அப்போஸ்தலராகத் தெரிந்துகொள்ளப்பட்டதோடு, அவர்களும் பேதுருவும் கிறிஸ்துவின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.a ஆனால் பொ.ச. 44-ல், யாக்கோபு உயிர்த்தியாகியாக்கப்பட்டார்; அவருடைய சகோதரனாகிய யோவானோ முதல் நூற்றாண்டின் முடிவு வரையாக வாழ்ந்தார். தெளிவாகவே இருவரும் கடவுளுடைய சித்தத்தை செய்து வந்தனர். யோவான் வாழ்கையில், யாக்கோபு ஏன் சாகும்படி அனுமதிக்கப்பட்டார்?
சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு யாக்கோபின் உயிரைப் பாதுகாக்கும் திறமை நிச்சயமாகவே இருந்தது. உண்மையில் யாக்கோபின் உயிர்த்தியாகத்திற்கு சற்று பின்னர், யெகோவாவின் தூதனால் பேதுரு மரணத்திலிருந்து காக்கப்பட்டார். அந்த தூதன் ஏன் யாக்கோபை விடுவிக்கவில்லை?—அப்போஸ்தலர் 12:1-11.
கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றுதலில் பயன்படுத்தப்படுதல்
கடவுளிடமிருந்து பாதுகாப்பு ஏன் கொடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அது வெறுமனே தனிநபர்களை நீண்ட நாள் வாழவைப்பதற்காகக் கொடுக்கப்படுவதில்லை, ஆனால் அதைவிட மிக முக்கியமானதொன்றை பாதுகாப்பதற்காக, அதாவது, கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தைப் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, கிறிஸ்தவ சபையானது முழுமையாக தப்பிப்பிழைப்பது உறுதியளிக்கப்படுகிறது, ஏனென்றால் அந்த நோக்கம் நிறைவேறுவதுடன் அது நெருங்கிய தொடர்புடையதாய் இருக்கிறது. என்றபோதிலும், கிறிஸ்துவின் சீஷர்கள் தனிநபர்களாக அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக மரணத்தை எதிர்ப்படலாம் என்று அவர் அவர்களிடம் தெளிவாகச் சொன்னார். இதைக் குறிப்பிட்ட பிறகு, அற்புதகரமான விடுவிப்பை அல்ல, ஆனால் ‘முடிவுபரியந்தம் நிலைநிற்பதையே’ இயேசு வலியுறுத்திக் கூறினார். (மத்தேயு 24:9, 13) சிலர் பாதுகாக்கப்படுகிறார்கள், மற்றவர்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற உண்மை, கடவுள் பட்சபாதமுள்ளவர் என்பதை உணர்த்துவதில்லை. கடவுள், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த நிலையில் இருப்பவரை வெறுமனே பயன்படுத்தினார்; அது முடிவில் மனிதவர்க்கம் முழுவதற்கும் நன்மை பயக்கும்.
கடவுளுடைய ஊழியத்தில் இருக்கையில் அகால மரணம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிஜமானதாக இருப்பதால், கடவுளை வணங்கியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று உண்மையுள்ள எபிரெயர்களின் சமநிலையான மனப்பான்மையையே கிறிஸ்தவர்களும் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் பாபிலோனின் அரசரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.”—தானியேல் 3:17, 18.
யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் பேதுருவுக்கும் யோவானுக்கும் இருந்த முக்கியமான பங்கின் காரணமாக அவர்களுடைய உயிரை அவர் பாதுகாத்தார். மேய்ப்பு வேலையைச் செய்வதன்மூலம் சபையை “ஸ்திரப்படுத்து”வதற்காக பேதுரு பயன்படுத்தப்பட்டார்; கடவுளால் ஏவப்பட்ட இரண்டு பைபிள் புத்தகங்களை எழுதுவதையும் இது உட்படுத்தியது. (லூக்கா 22:32) யோவான் ஐந்து பைபிள் புத்தகங்களை எழுதினார்; மேலும் ஆரம்ப சபையில் ஒரு ‘தூணாக’ இருந்தார்.—கலாத்தியர் 2:9; யோவான் 21:15-23.
சரியாக எப்போது மற்றும் என்ன வகையில் யெகோவா அவருடைய ஊழியர்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டும் என்று தீர்மானிக்கிறார் என்பதை முன்னறிந்து கூறவே முடியாது. நிச்சயமாகச் சொல்லமுடிந்ததெல்லாம் என்னவென்றால், கிறிஸ்து அவரைப் பின்பற்றுகிறவர்களுடன்கூட ‘இந்த காரிய ஒழுங்குமுறையின் முடிவுபரியந்தம் இருப்பதாக’ வாக்களித்தார். (மத்தேயு 28:20, NW) குறிப்பாக, பிரசங்க வேலைக்கான தேவதூதருடைய வழிநடத்துதலின் வாயிலாக அவர் ‘நம்முடன்’ இருப்பார். (மத்தேயு 13:36-43; வெளிப்படுத்துதல் 14:6) இந்தப் பொதுவான குறிப்புகளைத் தவிர, கடவுளுடைய உதவி சரியாக எப்படி காண்பிக்கப்படும் அல்லது கடவுளிடமிருந்து யார் பாதுகாப்பைப் பெறக்கூடும் என்று நாம் தெரிந்து எதிர்பார்க்க முடியாது. கடவுளுடைய பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் ஒரு கிறிஸ்தவன் கொண்டிருப்பதாக உணர்ந்தால் அப்போது என்ன? இதை முடிவாக ஆம் என்றோ இல்லை என்றோ நிரூபிக்க முடியாததால், அப்படிப்பட்ட ஒருவர் உண்மையாகச் சொல்பவற்றைக் குறித்து எவரும் நியாயந்தீர்க்கக் கூடாது.
கடவுள் உணர்ச்சியற்றவராக இருக்கிறாரா?
கிறிஸ்தவர்களின் மரணத்தை கடவுள் அனுமதிக்கிறார் என்ற உண்மைதானே அவர் எப்படியோ உணர்ச்சியற்றவராக இருக்கிறார் என்று காண்பிக்கிறதா? இல்லவே இல்லை. (பிரசங்கி 9:11, NW) வெறும் ஒருசில வருடங்களுக்கோ அல்லது பத்தாண்டுகளுக்கோ அல்ல, ஆனால் நித்தியத்திற்கு நம் உயிரைக் காத்துக்கொள்ள யெகோவா திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய மேம்பட்ட நோக்குநிலையிலிருந்து, அவரை நேசிக்கிற அல்லது அவரிடம் நெருங்கி வருகிற ஒவ்வொரு நபரின் நித்திய நலனுக்கும் ஏற்றவாறு காரியங்கள் நடைபெறும்படி பார்த்துக்கொள்கிறார். (மத்தேயு 18:14-ஐ ஒப்பிடுக.) அவருடைய நோக்கத்தின் நிறைவேற்றுதல் என்பது இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நாம் அனுபவித்திருக்கிற துன்பம் எதுவும்—மரணமும்கூட—முழுமையாக நீக்கப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்தும். கடவுள் செயல்தொடர்பு கொள்ளும் முறைகள் அவ்வளவு நுணுக்கமானவையாயும் பரிபூரணமானவையாயும் இருப்பதால் அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு வியந்து கூறும்படி தூண்டப்பட்டார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”—ரோமர் 11:33.
கடவுளுடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் கேட்க வேண்டிய கேள்வி ‘கடவுளிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கிடைக்குமா?’ என்பதல்ல, ஆனால் ‘யெகோவாவின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறதா?’ என்பதே. அவ்வாறு இருக்கிறது என்றால், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நமக்கு என்ன நடந்தாலும் சரி, அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருவார். பரிபூரண ஜீவனின் நித்திய தன்மையுடன் ஒப்பிடுகையில், இந்த ஒழுங்குமுறையில் எந்தவொரு துன்பமும்—மரணமும்கூட—“அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான”தாகத் தோன்றும்.—2 கொரிந்தியர் 4:17.
[அடிக்குறிப்பு]
a பேதுருவும் யாக்கோபும் யோவானும் இயேசுவின் மறுரூபமாகுதலையும் (மாற்கு 9:2) யவீருவின் மகளுடைய உயிர்த்தெழுதலையும் (மாற்கு 5:22-24, 35-42) கண்டார்கள்; இயேசுவின் தனிப்பட்ட விசாரணையின்போது அவர்கள் கெத்செமனே தோட்டத்தில் அருகில் இருந்தார்கள் (மாற்கு 14:32-42); அவர்கள் அந்திரேயாவுடன்கூட இயேசுவிடம், எருசலேமின் அழிவு, அவருடைய எதிர்கால வந்திருத்தல், காரிய ஒழுங்குமுறையின் முடிவு ஆகியவற்றைக் குறித்து வினவினார்கள்.—மத்தேயு 24:3, NW; மாற்கு 13:1-3.