எரிமலைகள்—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?
வெடிக்கும் எரிமலைகள், சூடான சாம்பலையும் கனல் வீசும் குழம்பின் பாய்வுகளையும் பீறிட்டு வெளிவரச் செய்வது, பூமியிலுள்ள இயற்கை ஆற்றலின் மிகச் சிறந்த காட்சி பகட்டான நிகழ்வுகளில் சிலவற்றை உருவாக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நீங்கள் ஒருவேளை தனிப்பட்டவராக கண்டிருக்கவில்லை என்றாலும், எரிமலையிலிருந்து ஏற்பட்ட வெப்ப நீரூற்றுகளில் குளிப்பதை அனுபவித்திருக்கலாம் அல்லது எரிமலை சாம்பலாலான செழிப்பான மண்ணில் விளைந்த உணவை உண்டு மகிழ்ந்திருக்கலாம். சிலர் தங்கள் வீடுகளில் நிலவெப்ப ஆற்றலின் பயன்களைக்கூட பெறுகின்றனர்.
என்றபோதிலும், சமீபத்தில், செயல்படும் எரிமலைகளுக்கு அருகில் வாழ்கிற அநேகர் எரிமலை பேரழிவுகளால் ஏற்படுத்தப்பட்ட மரணத்தையும் அழிவையும் நேரில் கண்டிருக்கின்றனர். மே 18, 1980-ல், அ.ஐ.மா.-வினுடைய வாஷிங்டன் மாகாணத்தின் தென்மேற்கிலுள்ள செ. ஹெலன்ஸ் சிகரத்தின் உக்கிரமான வெடிப்பு ஏற்பட்டது முதற்கொண்டு, உலகின் பல்வேறு பகுதிகள், சாவுக்கேதுவான உக்கிரமுள்ளவையாய்த் தோன்றிய எரிமலை வெடிப்புகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காலப்பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்பு, முந்தின ஏழு பத்தாண்டுகளில் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்டிருந்த மொத்த உயிரிழப்பையும்விட அதிகரித்திருக்கிறது; மேலும் பொருள் சேதம், கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு ஏற்பட்டது. காற்றில் பரவிய எரிமலை சாம்பல், விமானங்களை சக்தியிழக்கச் செய்து, அவற்றை அவசரமாக தரையிறங்க வைத்தபோது, பேரழிவுகள் நேரிடப்போன சமயங்களும் இருந்திருக்கின்றன.
பிலிப்பீன்ஸில், பின்னடூபோ சிகரத்தில் ஏற்பட்ட வெடிப்புகளும்அதைத் தொடர்ந்துவந்த சேறு வழிதல்களும் ஆயிரக்கணக்கான வீடுகளை அழித்தும், கொலம்பியாவில் நெவாடா டெல் ருயிஸில் ஏற்பட்டவை 22,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றும்மிகவும் அழிவுக்கேதுவானவையாக இருந்திருக்கின்றன. இன்னுமதிகமான பேரழிவுகள் நிகழும் சாத்தியம் இருக்கிறது. “2000-ம் வருடத்திற்குள், எரிமலை அபாயங்களின் காரணமாக ஆபத்திலிருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 50 கோடிக்காவது பெரும்பாலும் அதிகரிக்கும்,” என்று ஐ.மா. நில இயல் சார் அளக்கை கழகத்தைச் சேர்ந்த எரிமலை நிபுணர்களாகிய ராபர்ட் டில்லிங் மற்றும் பீட்டர் லிப்மான் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே இவ்வாறு கேட்பதை நீங்கள் ஞானமானதாகக் காணக்கூடும்: ‘செயல்படும், அல்லது செயல்படும் சாத்தியத்திலிருக்கும் எரிமலைக்கு அருகில் நான் வாழ்கிறேனா? எந்த வகையான வெடிப்புகள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன, மேலும் மற்ற சாவுக்கேதுவான வகையான வெடிப்புகளுக்கும்கூட அவை வழிநடத்த முடியுமா? எரிமலை சம்பந்தமாக அபாயகரமான ஒரு பகுதியில் வாழ்கிறேனென்றால், அந்த ஆபத்தைக் குறைக்க நான் என்ன செய்யலாம்?’
செயல்படும் எரிமலைகள்—அவை எங்கே இருக்கின்றன?
உறங்கும் எரிமலை ஒன்றின் அருகில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றும் அது மீண்டும் வெடிக்க நேர்ந்தால் தவிர்க்கமுடியாதபடி நீங்கள் பாதிக்கப்படுவீர்கள் என்றும் அறியவந்தால் ஆச்சரியப்படக்கூடும். (எரிமலை ஆய்வாளர்கள் என்பதாக அறியப்படும்) எரிமலைகளைப் பற்றி ஆராயும் அறிவியலாளர்கள், செயல்படும் எரிமலைகள் மற்றும் உறங்கும் எரிமலைகளை அடையாளம் காண்பதில் மட்டுமல்ல, ஆனால் எரிமலைகள் ஏன் குறிப்பிட்ட இடங்களில் சம்பவிக்க நேருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதிலும் சமீபத்திய பத்தாண்டுகளில் வெற்றி கண்டிருக்கின்றனர்.
செயல்படுபவை என்பதாகப் பதிவுசெய்யப்பட்ட 500-க்கும் அதிகமான எரிமலைகள் சிலவற்றின் இடங்களைக் காண்பிக்கிற அந்த வரைபடத்தைப் (பக்கம் 17) பாருங்கள். அப்படிப்பட்ட ஒன்றிற்கு அருகில் நீங்கள் வாழ்கிறீர்களா? மற்ற இடங்களில், கொதிநீர் ஊற்றுகளும், ஆவி வெளிப்படும் பிளவுகளும், வெந்நீரூற்றுகளும், வேறு உறங்கும் எரிமலைகள் இருப்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன; இவையும் எதிர்காலத்தில் செயல்படுவதற்கான சாத்தியத்தை உடையவை. பாதிக்கு மேலான செயல்படும் எரிமலைகள், பசிபிக்கின் ஓரங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன; நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறதை இவை உருவாக்குகின்றன. இந்த எரிமலைகளில் சில, வட அமெரிக்காவில் காஸ்கேட் தொடரிலும் தென் அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைத்தொடரிலும் இருப்பதுபோல கண்டங்களில் இருக்கின்றன; அதேநேரத்தில் மற்றவை, சமுத்திரத்தில், அலூஷியன் தீவுகள், ஜப்பான், பிலிப்பீன்ஸ், மற்றும் தெற்கு இந்தோனீஷியா போன்ற தீவுகளாலான சங்கிலித்தொடர் அமைப்பை உருவாக்குகின்றன. மத்தியதரைக் கடலிலும் அதற்கு அருகிலும்கூட எரிமலைகள் சாதாரணமாகக் காணப்படுகின்றன.
புவிமேலோட்டின் நகர்கிற பெரிய பாளங்கள், அல்லது அடுக்குகளுடைய எல்லைகளின் நெடுக, குறிப்பாக ஒரு கண்டத்திட்டு அடுக்கிற்கு அடியில் ஒரு சமுத்திர திட்டு அடுக்கு மூழ்கும்போது எரிமலைகள் ஏற்படுவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிகழ்வு, நில அடுக்கு இறக்கம் எனப்படுகிறது. இந்த நிகழ்வால் உருவாக்கப்பட்ட வெப்பம், மேற்பரப்பு வரையாக மேலெழும்புகிற குழம்பை (பாறைக் குழம்பை) வெளிக்கொணர்கிறது. மேலுமாக, அடுக்குகளின் மத்தியிலுள்ள திடீர் அசைவுகள், எரிமலை வெடிப்புகள் ஏற்படுகிற அதே பகுதிகள் பலவற்றில் பலத்த நிலநடுக்கங்களை ஏற்படுத்துகின்றன.
சமுத்திரத்திட்டு அடுக்குகள் அகன்று போகுமிடத்திலும் எரிமலைகள் உருவாகக்கூடும். இந்த வெடிப்புகளில் பல, சமுத்திர அடித்தளத்தில் நடப்பதால், மனிதன் காண்பதில்லை. என்றபோதிலும், ஐஸ்லாந்து என்னும் தீவு நாட்டில் நீங்கள் வாழ்ந்தால், மத்திய அட்லான்டிக் தொடர் முகடுடன் இணைக்கிற ரேக்கியானஸ் மலைத்தொடரின் உச்சியில் நீங்கள் இருக்கிறீர்கள்; மத்திய அட்லான்டிக் தொடர் முகடில், வட மற்றும் தென் அமெரிக்காவை உட்படுத்துகிற அடுக்குகள், ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் உட்படுத்துகிற அடுக்குகளிடமிருந்து அகன்று நகர்கின்றன. வேறு ஒருசில இடங்களில், புவிமேலோட்டைச் சார்ந்த அடுக்குகளின் கீழே ஆங்காங்கேயுள்ள உயர் வெப்ப புள்ளிகள் ஹவாயிலும் ஆப்பிரிக்க கண்டத்திலும் பெரிய எரிமலைகளை உருவாக்கி இருக்கின்றன.
ஆபத்துக்கள் யாவை?
ஒரு எரிமலை ஏற்படுத்தக்கூடிய அபாய அளவு, எரிமலை வெடிப்புகள் மற்றும் அதோடு தொடர்புடைய அபாயங்கள் உட்பட அதன் சமீபத்திய செயல்பாட்டு வரலாற்றைப் பொறுத்திருக்கிறது. அபாய அளவு என்பது ஓர் அபாயப் பகுதியில் வாழ்கிறவர்களுடைய எண்ணிக்கை மற்றும் தயார்நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. முதலாவதாக, அபாயங்களை ஆராய்வோம்.
பொதுவாக, சிலிகா நிறைந்துள்ள பாறைக் குழம்புகளால் அதிக ஆபத்தான வெடிக்கும் தன்மையுள்ள கக்குதல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வகையான குழம்பு, விறைப்பான பாகுநிலையை உடையதாய் இருக்கிறது; மேலுமாக அது, அந்த எரிமலையை வெடிக்கச் செய்யும் அளவுக்குப் போதுமான அழுத்தத்தை உடையதாகும் வரையாக அந்த எரிமலையைத் தற்காலிகமாக அடைத்துக்கொள்ள முடியும். சிலிகா நிறைந்துள்ள பாறைக் குழம்பு மங்கின நிறமுள்ள பாறைகளாக கெட்டியாகின்றன; அடுக்குகளின் எல்லையோரங்களின் நெடுக உள்ள எரிமலைகளில் இது சாதாரணமாக நிகழ்கிறது. மேலெழும்பும் பாறைக் குழம்பு, தண்ணீரை எதிர்ப்பட்டு, அதைத் திடீரென்று நீராவியாக்கும்போதும் வெடிப்புகள் ஏற்படலாம். வெடிக்கும் தன்மையுள்ள கக்குதல்களால் வெளியேற்றப்பட்ட சூடான சாம்பலும் சாவுக்கேதுவானதாக இருக்கலாம்—1902-ல், கரிபியன்-மைய அமெரிக்க பகுதியிலுள்ள மூன்று எரிமலைகள், ஒரு ஆறுமாத காலப்பகுதியில் 36,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுவிட்டன.
மறுபட்சத்தில், சமுத்திரம் சார்ந்த உயர் வெப்ப புள்ளி எரிமலைகளும் அடுக்குகள் அகன்று செல்வதால் ஏற்படும் எரிமலைகளும் மற்றும் பலவும், சிலிகா செறிவில் குறைவுள்ளதும் ஆனால் இரும்பு மற்றும் மக்னீஷியத்தின் செறிவு நிறைந்துள்ளதுமான கரிய திண்ணிய தீக்கல் பாறைகளால் பெரிதும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. திண்ணிய தீக்கல் பாறைக் குழம்பு திரவநிலையில் உள்ளதாய் இருந்து, பொதுவாக, லேசாக வெடிக்கும் தன்மையுள்ள அல்லது வெடிக்கும் தன்மையற்ற கக்குதல்களிலும், மக்கள் தவிர்ப்பதற்கு ஓரளவு சுலபமானவையாய் இருக்கிற மெதுவாக நகர்ந்துசெல்லும் எரிமலைக் குழம்பு வழிதல்களிலும் விளைவிடைகிறது. இருந்தாலும், இந்தக் கக்குதல்கள் நீண்ட நாள் செயல்படுபவையாக இருக்கக்கூடும்—ஹவாய் தீவிலுள்ள கிலாயுயா எரிமலை, ஜனவரி 1983 முதற்கொண்டு தொடர்ச்சியாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வெடிப்புகளின் விளைவாக மிகுதியான பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறபோதிலும், அவை அரிதாகவே காயமடைதலில் அல்லது மரணத்தில் விளைவடைகின்றன.
சில வெடிப்புகள் ஒரு எரிமலையின் பக்கவாட்டில் பேரளவானஉதிரி சாம்பலைக் குவித்துவிடுகின்றன; இவை நிலச்சரிவுகளில் அல்லது, பெரும் அளவான பனி, பனிக்கட்டி, அல்லது தண்ணீருடன் கலந்துவிடுகையில், கனத்த நீர்மக் கலவைகளாக உருவாகி, பள்ளத்தாக்குகளின் வழியாக விரைவாக அடித்துச்செல்லப்படலாம். (ஆங்கில லாவா [எரிமலைக் குழம்பு] என்ற பதத்திற்கான இந்தோனீஷிய பதத்திலிருந்து லாஹார்கள் என்றும் அழைக்கப்படும்) அப்படிப்பட்ட சேறு வழிதல்கள், ஒருவேளை அந்த வெடிப்புகள் ஏற்படுவது நின்று வெகுகாலத்திற்குப் பின்னும் ஒரு எரிமலையிலிருந்து அநேக கிலோமீட்டர் வரையாக சென்றெட்ட முடியும்.
குறிப்பாக பரந்த செயல்விளைவை உடையவையாயும் ஆனால் வரலாற்றுப்பூர்வமாக அரிதானவையாயும் இருப்பவை சூனாமிகள்—கடலில் ஒரு எழுச்சி வெடிப்பின் காரணமாக அல்லது புடைத்திருக்கும் எரிமலையின் பக்கவாட்டின் நெடுக அடிக்கடலில் நடக்கும் நிலச்சரிவின் காரணமாக உருவாக்கப்படும் மிகப் பெரிய கடல் அலைகள் அவை. இந்த ஆற்றல்வாய்ந்த அலைகள் ஒரு மணிநேரத்துக்கு நூறு கிலோமீட்டர் வேகங்களில் செல்லலாம். சூனாமிகள் ஆழ்கடலில் மிகத் தாழ்வாக இருந்து, கடந்து செல்லும் கப்பல்களுக்கு உண்மையில் எவ்வித அச்சுறுத்தலாகவும் இல்லாதபோதிலும், அவை கரைக்கருகே வருகையில் விரைவாக உயர்ந்து எழும்புகின்றன. இந்த அலைகள் வீடுகள் மற்றும் அநேக கட்டடங்களின் உயரத்தைவிடவும் உயரமாக எழுகின்றன. 1883-ல், க்ரகடௌ வெடித்தபோது, ஜாவா மற்றும் சுமத்ரா கரையோரங்களில் சூனாமிகள் அடித்ததால் 36,000 பேர் உயிரிழந்தனர்.
உயிர் வாழ்வுக்கு ஊறு அல்லது கேடு விளைவிக்கக்கூடிய எரிமலை சார்ந்த மற்ற அபாயங்கள், வெடிக்கும் தன்மையுள்ள வெடிப்புகள், நச்சுப் புகைகள், அமில மழை, மற்றும் நிலநடுக்கங்களால் உருவாக்கப்பட்ட வீழும் எரிமலை சாம்பல் மற்றும் துண்டுகள், வளிமண்டலம் சார்ந்த அதிர்ச்சி அலை வீச்சுகள் ஆகியவற்றை உட்படுத்துகின்றன. உயரளவு அபாயமுள்ள எண்ணற்ற எரிமலைகள் உலகெங்கிலும் கண்டறியப்பட்டும், சாத்தியமான ஆபத்துக்கள் ஆயிரக்கணக்கானவையாயும் இருப்பதால், எரிமலை அபாயங்களைக் குறித்து அர்த்தமுள்ள மதிப்பிடுதலைச் செய்வது உண்மையிலேயே சிக்கல்வாய்ந்ததும் சவாலானதுமான ஒரு வேலையாக இருக்கிறது.
அபாயத்தை உங்களால் குறைக்க முடியுமா?
உலக மக்கள்தொகை அதிகரித்து வருகையில், எரிமலை சார்ந்த ஆபத்துக்கள் சாத்தியமான பகுதிகளில் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இதன் காரணமாகவும், உலகெங்குமுள்ள எரிமலை செயல்பாட்டின் சமீபத்திய அதிகரிப்பின் காரணமாகவும், எரிமலை சார்ந்த அபாயத்தை அகற்றுவதற்கான தங்கள் முயற்சிகளை எரிமலை ஆய்வாளர்கள் தீவிரப்படுத்தி வந்திருக்கின்றனர். சில சம்பவங்களில், வெடிப்பு பற்றிய முன்கணிப்புகளும் முன்னறிவிப்புகளும் வெற்றிகரமாக இருந்திருப்பதால், உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட முன்னறிவிப்புகளுக்கு எது அடிப்படையாக இருக்கிறது?
பாறைக் குழம்பு மேலெழுந்து வருவதை உணர்த்தும்வண்ணம், எரிமலையில் அல்லது அதற்குள்ளாக இருக்கும் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கங்களைப் பின்தொடர்ந்தே வெடிப்புகள் பொதுவாக ஏற்படுகின்றன. ஒரு எரிமலையில் பாறைக் குழம்பு உயரளவில் திரண்டுவருகையில், அழுத்தம் உருவாகிறது. வளிமங்கள் விடுவிக்கப்படுகின்றன; நிலத்தடி நீர், வெப்பத்திலும் அமிலத்தன்மையிலும் அதிகரிக்கக்கூடும். பெரிய வெடிப்பிற்கு முன், சிறிய வெடிப்புகளும் ஏற்படக்கூடும். இந்த செயல்பாடுகள் அத்தனையும் கண்டுணரப்பட முடியும்.
ஒரு வெடிப்பு ஏற்படுவதற்கு வெகு முன்னரே, அந்தப் பாறையைப் பற்றிய பதிவை ஆராய்வதன்மூலம், சாத்தியமான அபாயங்களைப் பற்றிய ஒரு கருத்தை நிலவியலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அநேக நிகழ்வுகளில் எரிமலை வழிதல்களின் வகைகளும், உபவிளைவாக ஏற்படும் அபாயங்களும், ஏற்கெனவே சம்பவித்தவற்றைப் போலவே இருக்கின்றன அல்லது ஆய்வுகள் செய்யப்பட்ட மற்ற எரிமலைகளுடையவற்றை ஒத்தே இருக்கின்றன. அப்படிப்பட்ட விவரங்களை அடிப்படையாக வைத்து, மிக அதிக அபாயமுடைய பகுதிகளைக் காண்பிக்கும் வரைபடங்கள், பல எரிமலைகளுக்கு வரையப்பட்டிருக்கின்றன.
ஆகவே எரிமலை அபாயங்களிலிருந்து உயிர்களைப் பாதுகாப்பதற்கான முக்கிய அம்சங்கள், எரிமலை ஆய்வாளர்களால் அபாய மதிப்பீடு செய்யப்படுதல் மற்றும் எரிமலை செயல்பாட்டை கணித்துணருதல் ஆகியவற்றோடுகூட வரப்போகும் பேரழிவைப் பற்றி முன்னதாகவே உள்ளூர் அதிகாரிகளால் கொடுக்கப்படும் எச்சரிக்கையும் உட்பட்டிருக்கின்றன. முன்னறிவிப்புகளுக்கும் பிடிகொடுக்காமல் பெரிதும் இன்னும் ஏய்த்துச் செல்கிற நிலநடுக்கங்களுக்கு மாறுபட்டவையாய், வெடிக்கும் எரிமலைகள் பல, அவற்றால் கேடுவிளைவிக்கப்படும் மக்கள் அந்த அழிவுக்குரிய நிகழ்வு ஏற்படுவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு போதுமான அளவில் திருத்தமாக கணித்துணரப்பட முடியும். அபாயப் பகுதியை விட்டுச்செல்வது முக்கியமானது; ஏனென்றால், மனிதனால் கட்டப்பட்ட கட்டமைப்புகள் பொதுவாக, எரிமலை வழிதல்கள் மற்றும் வெடிப்புகளின் சீற்றத்திற்கும் வெப்பத்திற்கும் எதிராகவும், நிலச்சரிவுகள், சேறு வழிதல்கள் மற்றும் சூனாமிகளின் அழிவுக்குரிய சக்திகளுக்கு எதிராகவும் குறைந்தளவு பாதுகாப்பை அளிக்கின்றன அல்லது எவ்வித பாதுகாப்பையுமே அளிப்பதில்லை.
எரிமலை வெடிப்புகளாலும் அவற்றோடு தொடர்புடைய அபாயங்களாலும் கொள்ளை கொள்ளப்பட்ட மனிதரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மெச்சத்தக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறபோதிலும், எரிமலை அபாயங்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக மனிதன் அந்த வெடிப்புகளையும் அவற்றுடன் தொடர்புடைய பேரழிவுக்குரிய செயல்பாட்டையும் முழுமையான துல்லியத்துடன் முன்னறிவிக்க முடியாதவனாகவே இருக்கிறான். எரிமலைகளைக் குறித்து கணித்துணரக்கூடியவர்களில் சிலர்கூட எதிர்பாராத ஒரு வெடிப்பில் சிக்குண்டதால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும், செயல்படும் எரிமலையாகும் சாத்தியமுள்ள ஒரு எரிமலையின் அருகில் நீங்கள் வாழ்கிறீர்களென்றால், உள்ளூர் அதிகாரிகளால் கொடுக்கப்படும் எந்த எச்சரிக்கைக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம் எரிமலை சார்ந்த ஒரு பேரழிவைத் தப்பிப்பிழைப்பதற்கான உங்கள் வாய்ப்புகளை நீங்கள் பெரிதும் அதிகரித்துக்கொள்வீர்கள்.—ஒரு வான்நிலவியலாளரால் அளிக்கப்பட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி]
எரிமலை வெடிப்புகளை முன்னறிவித்தல்—விண்வெளியிலிருந்தா?
பூமிக்கு மேல் 20,000 கிலோமீட்டர் தொலைவில்—ஒரு வினாடிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்திற்குக் குறையாமல் செல்லும்—துணைகோள்களிலிருந்து, எரிமலைகளின் மேற்பரப்பு நகர்வுகளை ஒரு சென்டிமீட்டர் துல்லியம் வரையாக அளப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! பூமியில் கவனமாகத் திட்டமிடப்பட்ட இடங்களில் வைத்திருக்கும் ரேடியோ ஏற்பிகளுடன்கூட பல துணைக்கோள்களைக் கொண்டிருக்கும் க்ளோபல் பொஸிஷனிங் ஸிஸ்டம் (GPS) மூலமாக இது சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொரு அளப்புக்கும், குறைந்தபட்சம் நான்கு துணைகோள்கள் செல்லும் பாதையின் நிலைகளாவது நுட்பமாக கவனிக்கப்படுகிறது. மிகவும் துல்லியமாக இருக்கும் அணு கடிகாரங்களை வைத்து நேரம் அளக்கப்படுகிறது. பெரும்பாலான வானிலைகளில் சாத்தியமான இந்த அளக்கைகள், நில அடிப்படையிலான அளக்கை முறைகளைவிடவும் பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. GPS அளக்கைகள், எரிமலை வெடிப்புகள் முன்னறிவிக்கப்படுவதை குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றுவிக்கக்கூடும்; அந்த எரிமலை விரிவடைவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இது செய்யப்படக்கூடும். ஐஸ்லாந்து, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களிலுள்ள எரிமலைகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
[பக்கம் 17-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலகிலுள்ள செயல்படும் எரிமலைகளும் புவிமேலோட்டு அடுக்குகளும்
செயல்படும் எரிமலைகள்
அடுக்குகளின் எல்லைகள்
500-க்கும் அதிகமான செயல்படும் எரிமலைகள் சில மேலே சித்தரிக்கப்பட்டுள்ளன
[பக்கம் 16-ன் படம்]
ஜப்பானிலுள்ள உன்ஸன் எரிமலையிலிருந்து சாம்பல் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாய்தல்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps™ copyright © 1993 Digital Wisdom, Inc.
[பக்கம் 16-ன் படம்]
செ. ஹெலன்ஸ் சிகரம் வெடித்தல்
[படத்திற்கான நன்றி]
USGS, David A. Johnston, Cascades Volcano Observatory
[பக்கம் 16-ன் படம்]
சமீபத்தில், சிசிலியிலுள்ள எட்னா சிகரம் 15 மாதங்களுக்கு எரிமலைக் குழம்பைக் கக்கியது
[படத்திற்கான நன்றி]
Jacques Durieux/Sipa Press
[பக்கம் 17-ன் படம்]
ஹவாயிலுள்ள கிலாயுயா சிகரம், அந்தத் தீவிற்கு சுமார் 200 ஹெக்டேர் நிலத்தைக் கூட்டியிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
©Soames Summerhays/Photo Researchers