நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?
இயேசுவின் தாயாகிய மரியாளைப் பற்றி உண்மையில் பைபிள் என்ன சொல்லுகிறது? கிறிஸ்தவமண்டலத்திலுள்ள விசுவாசிகளில் பெரும்பாலானோர், பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், என்றாலும் அவர்கள் மூன்று கடவுட்கள் அல்ல, ஆனால் ஒருவரில் மூவர் என்று உறுதியாக நம்புகின்றனர். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் திரித்துவம். ஆகவே இயேசுவின் தாயாகிய மரியாள் “தேவ மாதா” என்ற நம்பிக்கைக்கு இந்தப் போதகம், கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பகுதியினரை (கத்தோலிக், ஆங்கிலிக்கன், ஆர்த்தடாக்ஸ்) வழிநடத்தியது. உண்மையிலேயே அவ்வாறு இருக்கிறதா? இயேசு தம்முடைய தாயாரை எவ்வாறு கருதினார்? சீஷர்கள் இயேசுவின் தாயாரை எப்படி கருதினர்? பைபிள் எவ்வாறு பதிலளிக்கிறது என்று பார்ப்போம்:
1. மரியாளைப் பற்றி எப்போது பைபிளில் முதல் முறையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது?—மத்தேயு 1:16.
2. இயேசுவுடைய பிறப்பின்போது மரியாள் என்ன மதத்தை அப்பியாசித்து வந்தார்?—லூக்கா 2:39, 41.
3. மரியாள் தன்னுடைய பாவங்களுக்காக பலி செலுத்தினாரா?—லூக்கா 2:21-24; ஒப்பிடுக: லேவியராகமம் 12:6, 8.
4. இயேசுவைக் கருத்தரித்தபோது, மரியாள் கன்னியாக இருந்தாரா? அது ஏன் முக்கியமானதாக இருந்தது?—மத்தேயு 1:22, 23, 25; லூக்கா 1:34; ஏசாயா 7:14; எபிரெயர் 4:15.
5. மரியாள் எப்படி கருத்தரித்தார்?—லூக்கா 1:26-38.
6. மரியாள் தன்னுடைய தனித்தன்மைவாய்ந்த சூழ்நிலைகளுக்கு எப்படி பிரதிபலித்தார்?—லூக்கா 1:46-55.
7. மரியாள், தான் ஒரு அக்கறையுள்ள தாய் என்பதை எப்படி காண்பித்தார்?—லூக்கா 2:41-51.
8. பின்னர், மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்தனரா?—மத்தேயு 13:55, 56; மாற்கு 6:3; லூக்கா 8:19-21; யோவான் 2:12; 7:5; அப்போஸ்தலர் 1:14; 1 கொரிந்தியர் 9:5.
9. இயேசுவின் சகோதரர்களும் சகோதரிகளும் உண்மையில் அவருடைய பெற்றோரின் உடன்பிறந்தாருடைய பிள்ளைகள் அல்ல என்று நமக்கு எப்படி தெரியும்?—ஒப்பிடுக: மாற்கு 6:3; லூக்கா 14:12; கொலோசெயர் 4:10.
10. இயேசு மரியாளை “தேவ மாதா”வாகக் கருதினாரா?—யோவான் 2:3, 4; 19:26.
11. மரியாள் தன்னை “தேவ மாதா”வாகக் கருதினாரா?—லூக்கா 1:35; யோவான் 2:4, 5.
12. இயேசு தம்முடைய தாயாருக்கு எவ்வித விசேஷித்த முகஸ்துதியையோ வணக்கத்தையோ செலுத்தினாரா?—மாற்கு 3:31-35; லூக்கா 11:27, 28; யோவான் 19:26.
13. யெகோவாவுடைய நோக்கங்களில் மரியாள் தன்னுடைய பங்கை எவ்வாறு கருதினார்?—லூக்கா 1:46-49.
14. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் மரியாள் ஒரு பெண் மத்தியஸ்தரா?—1 தீமோத்தேயு 2:5, 6.
15. பைபிளின் 66 புத்தகங்களில் எதில் மரியாள் குறிப்பிடப்பட்டிருக்கிறார்?
16. கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களிலும் கடிதங்களிலும் மரியாளை உயர்த்திப் பேசினார்களா?—யோவான் 2:4; 2 கொரிந்தியர் 1:1, 2; 2 பேதுரு 1:1.
17. பவுல், பேதுரு, யாக்கோபு, யோவான், யூதா ஆகியோரால் எழுதப்பட்ட 21 கடிதங்களில் மரியாளின் பெயர் எத்தனை முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது?
18. இயேசுவைப் பின்பற்றுபவராக இருந்த மரியாளுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?—1 பேதுரு 2:5; வெளிப்படுத்துதல் 14:1, 3.
19. ஆதியாகமம் 3:15-லும் வெளிப்படுத்துதல் 12:3-6-லும் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பெண் மரியாளா?—ஏசாயா 54:1, 5, 6; கலாத்தியர் 4:26.
20. மரியாளின் தற்போதைய தகுநிலை என்ன?—2 தீமோத்தேயு 2:11, 12.
பைபிளின் பதில்கள்
1. “யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.”—மத்தேயு 1:16.
2. “கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.” (லூக்கா 2:39, 41) யூதர்களாக இருந்ததால், அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றினார்கள்.
3. “மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், . . . அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.” (லூக்கா 2:22-24) “அவள் ஆண்பிள்ளையையாவது பெண் பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாகுஞ்சையாவது காட்டுப் புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள். ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.”—லேவியராகமம் 12:6, 8.
4. “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் [யோசேப்பு] அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1:25) “அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.” (லூக்கா 1:34) “ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.” (ஏசாயா 7:14) “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”—எபிரெயர் 4:15.
5. “தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.”—லூக்கா 1:35, 37.
6. “அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.”—லூக்கா 1:46, 47, 49.
7. “தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.”—லூக்கா 2:48, 49.
8. “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?” (மத்தேயு 13:55, 56) “அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் [கிரேக்கில், அடெல்ஃபோய் (a·del·phoi ʹ)] அவருடைய சீஷரும் [கிரேக்கில், மத்திடோய் (ma·the·tai ʹ)] கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.”—யோவான் 2:12.
9. சகோதரன் என்பதற்கும் பெற்றோரின் உடன்பிறந்தாருடைய பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட கிரேக்க வார்த்தைகள் இருக்கின்றன. “இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் [கிரேக்கில், அடெல்ஃபோஸ் (a·del·phosʹ)] அல்லவா? இவன் சகோதரிகளும் [கிரேக்கில், அடெல்ஃபாய் (a·del·phai ʹ)] இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.” (மாற்கு 6:3) “உன் பந்து ஜனங்களையாகிலும் [கிரேக்கில், ஸிக்கினிஸ் (syg·ge·neisʹ)] . . . அழைக்கவேண்டாம்.” (லூக்கா 14:12) “பர்னபாவுக்கு இனத்தானாகிய [கிரேக்கில், அனெப்ஸியாஸ் (a·ne·psi·osʹ)] . . . மாற்கு.” (கொலோசெயர் 4:10)—தி கிங்டம் இன்டர்லீனியர் ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் தி கிரீக் ஸ்க்ரிப்சர்ஸ் என்பதைக் காண்க.
10. “அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.” “இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.” (யோவான் 2:4; 19:26) “ஸ்திரீயே” என்று இயேசு பயன்படுத்தியது அந்த காலத்து வழக்கின்படி மரியாதையற்றதாக இல்லை.
11. எந்த பைபிள் வசனமும் “தேவ மாதா” என்ற கூற்றைப் பயன்படுத்துவதில்லை.
12. “ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.”—லூக்கா 11:27, 28.
13. “அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.”—லூக்கா 1:46, 48.
14. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. . . . மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.”—1 தீமோத்தேயு 2:5, 6.
15. ஐந்து—மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலருடைய நடபடிகள். அவர் “மரியாள்” என்பதாக 19 தடவையும், இயேசுவின் “தாய்” என்பதாக 24 தடவையும், “ஸ்திரீ” என்பதாக இரண்டு தடவையும் குறிப்பிடப்படுகிறார்.
16. சுவிசேஷ எழுத்தாளர்கள் நால்வரைத் தவிர, மரியாள் வேறெங்கும்—அப்போஸ்தலருடைய கடிதங்களின் முன்னுரைகளில்கூட—குறிப்பிடப்படவில்லை. “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், . . . எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” (2 கொரிந்தியர் 1:1, 2) “நம்முடைய தேவன் மற்றும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியால் . . . இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு.”—2 பேதுரு 1:1, NW.
17. ஒரு முறையும் இல்லை.
18. “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.” (1 பேதுரு 2:5) “பின்பு நான் பார்த்தபோது, இதோ சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், . . . புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.”—வெளிப்படுத்துதல் 14:1, 3.
19. “பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.” (ஏசாயா 54:1, 5) “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.” (கலாத்தியர் 4:26) கடவுளுடைய அடையாளப்பூர்வ ஸ்திரீ, பரலோக சீயோன், யெகோவாவின் பரலோக அமைப்பு, ஒரு மனைவி மற்றும் தாயுடன் ஒப்பிடப்படுகிறது; மேலும் அவளே இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள “ஸ்திரீ.”
20. “இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.” (2 தீமோத்தேயு 2:11, 12) மரியாள் மரணம் வரையாக உண்மையாக நிரூபித்திருந்தால், தற்போது அவர் பரலோகத்தில், 1,44,000 பேரைச் சேர்ந்த மற்றவர்களுடன்கூட கிறிஸ்துவுடன் ஆட்சிசெய்கிறார்.—வெளிப்படுத்துதல் 14:1, 3.