கொல்லும் வைரஸ் ஜயரைத் தாக்குகிறது
ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஜயரிலுள்ள கிக்விட் நகரம், வெப்பமண்டல மழைக்காடு ஒன்றின் விளிம்பிலுள்ள ஆங்காங்கே வளர்ச்சியடைந்துவரும் நகரமாகும். அந்த நகருக்குப் புறம்பே வாழ்ந்துவந்த நாற்பத்திரண்டு வயதான காஸ்பார் மெங்கா கிட்டாம்பாலா; அவருடைய குடும்பத்தில் அவர் ஒருவரே யெகோவாவின் சாட்சி. மெங்கா, கரி விற்பவராக இருந்தார். அவர் காட்டின் உட்பகுதியில், கரியைத் தயாரித்து, அதை மூட்டையாகக் கட்டி, தன் தலையில் சுமந்து கிக்விட்டுக்குக் கொண்டுவந்தார்.
ஜனவரி 6, 1995 அன்று, அவர் சுகமில்லாதவராக உணர்ந்தார். காட்டிலிருந்து வீட்டிற்கு வருகிற வழியில் அவர் இருமுறை விழுந்துவிட்டார். அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, தலைவலியும் காய்ச்சலும் இருப்பதாகச் சொன்னார்.
அடுத்த ஒருசில நாட்களில் அவருடைய நிலைமை மோசமடைந்தது. ஜனவரி 12 அன்று, அவருடைய குடும்பத்தினர் அவரை கிக்விட் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரைக் கவனிப்பதில் மெங்காவின் சபையிலுள்ள சாட்சிகள் அவருடைய குடும்பத்தினருக்கு உதவி செய்தனர். கவலைக்குரிய விதத்தில், அவருடைய நிலைமை மோசமானது. அவர் இரத்த வாந்தியெடுக்க ஆரம்பித்தார். அவருடைய மூக்கிலிருந்தும் காதுகளிலிருந்தும் கட்டுக்கடங்காமல் இரத்தம் ஒழுகியது. ஜனவரி 15 அன்று அவர் இறந்துவிட்டார்.
சீக்கிரத்தில், மெங்காவின் உடலைத் தொட்ட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சுகமில்லாமல் ஆனார்கள். மார்ச் துவக்கத்தில், மெங்காவின் மனைவியும், அவர்களது ஆறு பிள்ளைகளில் இருவர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர் 12 பேர் இறந்துவிட்டனர்.
மத்திப ஏப்ரலுக்குள், மருத்துவமனை பணியாளர்களும் மற்றவர்களும் மெங்காவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அதே விதத்தில் நோய்வாய்ப்பட்டு இறக்கத் தொடங்கினர். விரைவில் அந்த நோய், அந்தப் பகுதியிலுள்ள மேலும் இரண்டு நகரங்களுக்குப் பரவியது. தெளிவாகவே, வெளியுதவி தேவைப்பட்டது.
ஜயரின் பிரபல வைரஸ் ஆய்வாளராகிய பேராசிரியர் மூயிம்பி மே 1 அன்று கிக்விட்டுக்குச் சென்றார். அவர் பின்னர் விழித்தெழு!-விடம் சொன்னார்: “இரண்டு கொள்ளைநோய்களால் கிக்விட் அவதிப்படுகிறது என்று நாங்கள் முடிவு செய்தோம்: ஒன்று, பாக்டீரியாவால் ஏற்படுத்தப்பட்ட பேதி, மற்றொன்று, ஒரு வைரஸால் ஏற்படுத்தப்பட்ட கடுமையான இரத்தப்போக்குடன்கூடிய காய்ச்சல். நிச்சயமாக, இந்த நோய் அறிதலை நாங்கள் உறுதி செய்யவேண்டியது அவசியம். ஆகவே, நோயாளிகளிடமிருந்து கொஞ்சம் இரத்தத்தை சேகரித்து, அ.ஐ.மா.-விலுள்ள அட்லான்டாவின் நோய் கட்டுப்பாட்டு மையங்களுக்கு (Centers for Disease Control [CDC]) பரிசோதனைக்காக அனுப்பினோம்.”
மூயிம்பியும் ஜயரிலுள்ள மற்ற மருத்துவர்களும் ஏற்கெனவே சந்தேகித்ததை CDC உறுதி செய்தது. அந்த நோய் இபோலா.
சாவுக்கேதுவான ஒரு நோய்
இபோலா வைரஸ் கொடியது. இது விரைவில் கொல்லக்கூடியது. அதற்கெதிராக தடுப்பு மருந்து எதுவும் இல்லை; அதனால் தாக்கப்பட்டவர்களுக்கு, அறியப்பட்ட எவ்வித சிகிச்சையும் இல்லை.
இபோலா முதன்முதலாக 1976-ல் கண்டறியப்பட்டது. ஜயரிலுள்ள ஒரு நதியின் பெயரால் அறியப்பட்ட அந்த நோய், தெற்கு சூடானில் தாக்கி, பின்னர் சிறிது காலத்தில் வட ஜயரையும் தாக்கியது. மீண்டும் சூடானில், 1979-ல், அந்த நோய் சிறியளவில் திடீரென்று தாக்கி பரவியது. அதற்குப் பின்னர், இபோலா போன்ற அறிகுறிகளால் ஆங்காங்கே ஒரு சிலர் இறந்துபோன சம்பவங்களைத் தவிர, அந்த நோய் வருடக்கணக்காக மறைந்துவிட்டது.
இபோலா வைரஸ் அந்தளவுக்குக் கொல்லும் தன்மை உடையதால், அட்லான்டாவில் அதைக் குறித்து ஆராயும் அறிவியலாளர்கள், காற்றால் பரவும் நுண்ணுயிரி எதுவும் தப்பிச்செல்வதைத் தடுக்கும் காற்றோட்ட அமைப்புமுறையுடன் கட்டப்பட்ட அதிகபட்ச பாதுகாப்புள்ள சோதனைக்கூடத்தில் அதை ஆராய்கின்றனர். சோதனைக்கூடத்தினுள் நுழைவதற்கு முன், அறிவியலாளர்கள் பாதுகாப்பான “விண்வெளி உடைகளை” அணிந்துகொள்கின்றனர். அங்கிருந்து செல்லுகையில் தொற்றுநீக்கம் செய்யும் மருந்துகளில் குளித்துவிட்டு வெளியேறுகிறார்கள். கிக்விட்டுக்கு வந்த மருத்துவர்களின் குழுக்கள், பாதுகாப்புக்குரிய சாதனங்களை—பயன்படுத்தியபின் தூக்கியெறியக்கூடிய கையுறைகளையும் தொப்பிகளையும், கண்ணாடிகளையும், வைரஸ் உட்புகுதலை அனுமதிக்காத முழுமையாக மூடக்கூடிய விசேஷித்த ஆடைகளையும்—தங்களுடன் கொண்டுவந்தனர்.
இதற்கு எதிர்மாறாக, கிக்விட்டின் குடிமக்களுக்குத் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் அறிவும் இல்லை, சாதனங்களும் இல்லை. மற்றவர்கள், நோய்வாய்ப்பட்டிருக்கும் அன்பானவர்களைக் கவனிக்கும் பணியில், அறிந்தே தங்கள் உயிரை ஆபத்திற்குள்ளாக்கினார்கள் அல்லது உயிரிழந்தார்கள். நண்பர்களும் குடும்பத்தினரும், நோய்வாய்ப்பட்டவர்களையும் இறந்தவர்களையும் எவ்வித பாதுகாப்புமின்றி தங்கள் முதுகில் அல்லது தோள்களில் சுமந்து சென்றார்கள். அதன் விளைவு, பயங்கரமான உயிரிழப்பாக இருந்தது; அந்த வைரஸ் முழு குடும்பங்களை சீரழித்தது.
நோயின் திடீர் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல்
உதவியை நாடி கிக்விட் எழுப்பிய கூக்குரலுக்கு பணம் மற்றும் மருத்துவ கருவிகளின் நன்கொடைகளுடன் சர்வதேச சமுதாயம் பிரதிபலித்தது. ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய மாகாணங்களிலிருந்து விசாரிப்பாளர்களின் குழுக்கள் விமானத்தில் வந்திறங்கினர். அவர்கள் வந்ததன் நோக்கம் இரண்டு அம்சங்களை உடையதாய் இருந்தது: முதலாவது, நோயின் திடீர்தாக்குதலை கட்டுப்படுத்துதல்; இரண்டாவது, கொள்ளைநோய்களாக வெளிப்படுவதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த வைரஸ் எங்கே இருந்தது என்பதைக் கண்டுபிடித்தல்.
அந்தக் கொள்ளைநோயை நிறுத்துவதற்கு உதவும்படி, அந்த நோயின் அறிகுறிகளைக் காண்பிக்கும் யாராவது இருக்கிறார்களா என்று தெருத்தெருவாகச் சென்று உடல்நல ஊழியர்கள் தேடினார்கள். நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்; அங்கே அவர்கள் தனியாக விலக்கிவைக்கப்பட்டு பத்திரமாகக் கவனிக்கப்பட முடியும். இறந்தவர்கள் பிளாஸ்டிக் ஷீட்டுகளால் சுற்றப்பட்டு சீக்கிரமாகப் புதைக்கப்பட்டார்கள்.
உடல்நல கவனிப்பு ஊழியர்களுக்கும் பொதுவாக மக்களுக்கும் அந்த நோயைப் பற்றிய திருத்தமான தகவலை அளிப்பதற்காக ஒரு தீவிரமான பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்தச் செய்தியின் பாகமாக, குடும்பங்கள் ஆசார முறையில் இறந்தவர்களைக் கையாளுவது, கழுவுவது போன்ற பாரம்பரிய புதைக்கும் பழக்கங்களுக்கு எதிராக பலமான எச்சரிப்பு கொடுக்கப்பட்டது.
மூலத்தைத் தேடுதல்
அந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடிக்க விரும்பினார்கள். இதுவரைக்கும் நமக்குத் தெரிந்திருப்பது இது: வைரஸ்கள் சொந்தமாக சாப்பிட்டு, குடித்து, தங்களைப் பெருக்கிக்கொண்டு, தானாக வாழும் உயிரிகள் அல்ல. பிழைப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும், அவை உயிரணுக்களின் சிக்கலான அமைப்புமுறையை ஆக்கிரமித்து, அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது அவசியமாக இருக்கிறது.
ஒரு வைரஸ், விலங்கு ஒன்றைத் தொற்றும்போது, பெரும்பாலும் அந்த உறவானது பரஸ்பர கூட்டு வாழ்வாகவே இருக்கிறது—அந்த விலங்கு வைரஸைக் கொல்வதுமில்லை, அந்த வைரஸ் அந்த விலங்கைக் கொல்வதுமில்லை. ஆனால் தொற்றப்பட்ட அந்த விலங்குடன் ஒரு மனிதனுக்கு தொடர்பு வரும்போது, அந்த வைரஸ் எப்படியாவது அந்த மனிதனுக்குள் சென்றுவிடுகிறது; அந்த வைரஸ் கொல்லும் தன்மையுள்ளதாகவும் ஆகக்கூடும்.
இபோலா வைரஸ் மக்களையும், குரங்குகளையும், அவ்வளவு விரைவில் கொல்லுவதால், அந்த வைரஸ் வேறொரு உயிரியில் பிழைத்திருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் ஊகிக்கின்றனர். எந்த வகையான உயிரி அந்த வைரஸைத் தாங்கி செல்கிறது என்று உடல்நல அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள் என்றால், அப்போது எதிர்காலத்தில் நோயின் திடீர்தாக்குதலைத் தவிர்ப்பதற்கு, திறம்பட்ட கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கக்கூடும். இபோலாவைப் பற்றி பதிலளிக்கப்பட முடியாத கேள்வி என்னவென்றால், மனிதரில் கொள்ளைநோயாய் வெளித்தோன்றுவதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த வைரஸ் எங்கே தங்குகிறது?
அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதற்கு, ஆய்வாளர்கள் அந்த வைரஸுடைய மூலம் வரையாகச் சென்று தேட வேண்டும். இபோலாவின் முந்தைய திடீர்தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குரிய ஓம்புயிரியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் பயனற்றவையாய் நிரூபித்திருக்கின்றன. ஆனால் கிக்விட் கொள்ளைநோய் ஒரு புதிய வாய்ப்பை அளித்தது.
கிக்விட் கொள்ளைநோயின் முதல் பலியாள் காஸ்பார் மெங்கா என்று அறிவியலாளர்கள் எண்ணினர். ஆனால் அவர் எவ்வாறு நோய் தொற்றப்பட்டார்? ஏதாவதொரு விலங்கின் மூலமாக என்றால், எந்த இனத்தைச் சேர்ந்த விலங்காக அது இருந்தது? நியாயமாகவே, மெங்கா வேலை செய்த காட்டில் அதற்கான பதில் காணப்படக்கூடும். ஆய்வு பொருட்களைச் சேகரிக்கும் குழுக்கள், கரியைத் தயாரிப்பதற்காக மெங்கா வேலைசெய்த இடங்களில் 350 கண்ணிகளை அமைத்தார்கள். கொறி விலங்குகள், மூஞ்சுறுகள், தேரைகள், பல்லிகள், பாம்புகள், கொசுக்கள், மணல் பூச்சிகள், உண்ணிகள், மூட்டை பூச்சிகள், பேன்கள், சிகர்கள், தெள்ளுப்பூச்சிகள் ஆகியவற்றை—மொத்தமாக 2,200 சிறிய விலங்குகளையும் 15,000 பூச்சிகளையும்—அவர்கள் பிடித்தனர். பாதுகாப்பு சாதனங்களை அணிந்திருக்கும் அறிவியலாளர்கள், மயக்கமருந்து வளிமத்தைப் பயன்படுத்தி அந்த விலங்குகளைக் கொன்றுவிட்டனர். திசு மாதிரிகளை ஐக்கிய மாகாணங்களுக்கு அனுப்பினர்; அங்கே அவை அந்த வைரஸுக்காகப் பரிசோதிக்கப்படும்.
வைரஸ் மறைந்திருப்பதற்கான மறைவிடங்கள் ஏறக்குறைய வரையறையற்றவையாக இருந்தாலும், அதனுடைய மூலம் கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு எவ்வித நிச்சயமும் இல்லை. CDC-ன் விசேஷித்த நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்கள் பிரிவை தலைமைதாங்கும் டாக்டர் சி. ஜே. பீட்டர்ஸ் இவ்வாறு சொன்னார்: “இபோலா வைரஸின் ஓம்புயிரியை இந்த முறை கண்டுபிடிப்பதற்கு 50-50 விகித வாய்ப்பைவிட அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.”
அந்தக் கொள்ளைநோய் மறைகிறது
ஆகஸ்ட் 25 அன்று, அந்தக் கொள்ளைநோய் மறைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது; ஏனென்றால், அதிகபட்ச நோய் அடைவுகாலத்தின் இருமடங்கு அதிக காலமாகிய 42 நாட்களாக, அந்த நோயால் புதிதாகத் தொற்றப்பட்டவர்கள் எவரும் இல்லை. அந்த நோய் ஏன் பரந்தளவில் பரவவில்லை? அந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட சர்வதேச மருத்துவ முயற்சிகள் ஒரு காரணமாகும். அந்த நோயின் கடுமை, குறைந்தளவில் இருந்ததுதானே அந்தக் கொள்ளைநோயின் காலப்பகுதி குறைவுக்கு மற்றொரு காரணமாகும். அது அவ்வளவு சீக்கிரமாகத் தோன்றி, நெருங்கிய தொடர்பின் மூலமாக மட்டுமே கடத்தப்பட்டதால், பேரெண்ணிக்கையான மக்களிடம் பரவவில்லை.
315 மக்கள் அந்நோயால் தொற்றப்பட்டார்கள் என்றும் அவர்களில் 244 பேர் இறந்தனர் என்றும் அதிகாரப்பூர்வ பதிவுகள் காண்பிக்கின்றன—77 சதவீத இறப்பு விகிதம். இபோலா தற்போது செயலற்று இருக்கிறது. யெகோவாவின் புதிய உலகில் அது என்றென்றைக்குமாக செயல்படாதபடி ஆக்கப்படும். (ஏசாயா 33:24-ஐக் காண்க.) அதற்கிடையில், மக்கள் யோசிக்கின்றனர், ‘இபோலா கொல்லும்படி மீண்டும் வருமா?’ ஒருவேளை வரலாம். ஆனால் எங்கே, எப்போது என்று எவருக்கும் தெரியாது.
[பக்கம் 25-ன் படம்]
மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தக் கொள்ளைநோய்
இபோலா ஒரு கொலையாளி, இருந்தாலும் ஆப்பிரிக்கர்களுக்கு இதைவிட குறைந்தளவு முக்கியத்துவமுடைய நோய்களிலேயே அதிக அச்சுறுத்தல் இருக்கிறது. இபோலா திடீரென்று தாக்கியபோது, மற்ற நோய்கள் அமைதலாக அவற்றின் பலியாட்களைக் கொள்ளை கொண்டன. கிக்விட்டிற்கு கிழக்கே, ஒருசில கிலோமீட்டருக்கு அப்பால், 250 மக்கள் சமீபத்தில் இளம்பிள்ளைவாதத்தால் தாக்கப்பட்டனர் என்று அறிக்கை செய்யப்பட்டது. வடமேற்கில், காலராவின் சாவுக்கேதுவான சிற்றின வகைகளில் ஒன்று மாலியை நாசமாக்கியது. தெற்கில், அங்கோலாவில், 30,000 மக்கள் தூக்க நோயால் தாக்கப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் ஓர் அகன்ற பகுதியில், மூளை உறையழற்சி கொள்ளைநோயால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு குறிப்பிட்டது: “ஆப்பிரிக்கர்களுடைய மனதில் எழும்புகிற குழப்பமூட்டும் கேள்வி என்னவென்றால், [ஆப்பிரிக்காவில்] பெரும்பாலும் தடுக்கக்கூடிய நோய்களின் காரணமாக தினசரி எதிர்ப்படும் சாவுக்கேதுவான நிகழ்வுகள் எதுவும், உலகின் மனச்சாட்சி திரையில் எவ்வித அதிர்ச்சியையும் அரிதாகவே ஏற்படுத்துவதேன் என்பதே.”
[பக்கம் 24-ன் படம்]
கொல்லும் வைரஸுடைய மூலத்தை அறிவியலாளர்கள் தேடுகின்றனர்