லைம் வியாதி—நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?
எய்ட்ஸ் அதிக பிரபலமாகி வருகிற அதே சமயத்தில், லைம் வியாதி குறிப்பிடப்படுகிறதும்கூட இல்லை. ஆயினும், லைம் வியாதி வேகமாக பரவிவருகிறது. உண்மையில், சில வருடங்களுக்கு முன்பு, இதை, “எய்ட்ஸ் நோயிற்கு அடுத்து [ஐக்கிய மாகாணங்களில்] மிகவிரைவாக பரவிவரும் தொற்றுநோய்” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அழைத்தது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும்கூட இந்த வியாதி பரவிவருவதாக மற்ற நாடுகளிலிருந்து வரும் அறிக்கைகள் காண்பிக்கின்றன.
லைம் வியாதி என்பது என்ன? அது எவ்வாறு பரவிவருகிறது? நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்களா?
உண்ணிகளும் மானும் நீங்களும்
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, ஐக்கிய மாகாணங்களின் வடகிழக்கு பகுதியில் கனெக்டிகட்டில் அமைந்திருக்கும் பட்டணமாகிய லைமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விளங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்தது. பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பிள்ளைகளாக இருந்தனர். தடிப்புகள், தலைவலி, மூட்டுகளில் வலி ஆகியவற்றுடன் அவர்களது மூட்டு அழற்சி ஆரம்பமானது. சீக்கிரத்தில் தன் “கணவரும் இரண்டு பிள்ளைகளும் ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று” என்பதாக அங்கு வசிக்கும் ஒருவர் குறிப்பிட்டார். விரைவில், அந்தப் பகுதியிலிருந்த 50-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர், சில வருடங்களுக்குள்ளாக ஆயிரக்கணக்கானோர் வலியுண்டாக்கும் அதே அறிகுறிகளால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த உடல்நலக் குறை மற்ற வியாதிகளிலிருந்து வித்தியாசப்பட்டது என்பதை உணர்ந்தவர்களாக, ஆராய்ச்சியாளர்கள் இதை லைம் வியாதி என்பதாக பெயரிட்டார்கள். இந்த வியாதி வருவதற்கான காரணம் என்ன? உண்ணிகளில் வாழும் தக்கைத்திருகி-வடிவான போர்ரீலியா பர்க்டோர்ஃபெரி என்ற பாக்டீரியாவே இதற்கு காரணம். அது எவ்வாறு பரவுகிறது? ஒரு நபர் காடுகள் வழியாக நடந்துசெல்லும்போது கிருமிகளைக் கொண்ட ஓர் உண்ணி அவர்மீது ஒட்டிக்கொள்ளலாம். உண்ணி, அவரது தோலைத் துளைத்து, சாவகாசமாக நடந்துசெல்லும் அந்த அபாக்கியவானுக்குள் வியாதியை உண்டுபண்ணும் பாக்டீரியாவை உட்புகுத்துகிறது. கிருமிகளைக் கொண்டிருக்கும் இந்த உண்ணிகள் அடிக்கடி மானின்மீது தொற்றிக்கொண்டு, போஷிக்கப்பட்டு, இனப்பெருக்கம் செய்வதாலும், மான்கள் அபிவிருத்தியடையும் நாட்டுப்புறப் பகுதிகளில் அநேக ஜனங்கள் குடியேறுவதாலும், லைம் வியாதி அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை அளிப்பதில்லை.
அறிகுறிகளும் கோளாறுகளும்
லைம் வியாதியின் முதல் அறிகுறியானது பொதுவாக (எரிதீமா மைக்ரன்ஸ், அல்லது EM என்பதாக அறியப்படும்) ஒரு தோல் தடிப்பாகும். இது ஒரு சிறிய சிகப்பு புள்ளியுடன் ஆரம்பமாகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கோ வாரங்களுக்கோ பிறகு, அந்த அடையாளப் புள்ளி, ஒருவேளை ஒரு சிறிய நாணய அளவில் இருக்கும் வட்டமான, முக்கோண வடிவான அல்லது முட்டை வடிவான தடிப்பாக பெரியதாகும் அல்லது ஒருவருடைய முதுகு முழுவதிலும் அது ஒருவேளை பரவலாம். காய்ச்சல், தலைவலி, கழுத்து விறைப்பு, உடம்பு வலி, சோர்வு ஆகியவை பொதுவாக தடிப்புடன் சேர்ந்து வருகின்றன. ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் அதிகமானோர், பல மாதங்கள் தொடர்ந்திருக்கும் வலியும் வீக்கமுமுள்ள மூட்டுகளால் வேதனைப்படுகின்றனர். சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகளில் 20 சதவீதத்தினர் நீடித்த மூட்டு அழற்சியினால் இறுதியில் பாதிக்கப்படுகின்றனர். அவ்வளவு பொதுவானதாக இல்லாதபோதிலும், இந்த வியாதி நரம்பு மண்டலத்தைப் பாதித்து, இருதய கோளாறுகளை ஒருவேளை உண்டுபண்ணவும் கூடும்.—உடன்வரும் பெட்டியைக் காண்க.
லைம் வியாதியின் ஆரம்ப, ஃபுளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள், மற்ற தொற்றுநோய்களைப் போன்றே இருப்பதன் காரணமாக அநேக வல்லுநர்கள் அதைக் கண்டுபிடிப்பதைக் கடினமாக காண்கின்றனர். கூடுதலாக, நோய்த்தொற்றப்பட்ட ஒவ்வொரு நான்கு நபர்களில் ஒருவர், லைம் வியாதிக்கே உரித்தான ஒரே அடையாளமான தடிப்பை பெறுவதில்லை. மேலும் உண்ணியின் கடி பொதுவாக வலியுண்டாக்காததன் காரணமாக அநேக நோயாளிகள் உண்ணி கடித்ததை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
தற்போது கிடைக்கக்கூடிய எதிர்ப்புப்பொருள் இரத்த பரிசோதனைகள் நம்பத்தகாததாய் இருப்பதன் காரணமாக இந்த வியாதியைக் கண்டுபிடிப்பது இன்னும் இடையூறுக்குள்ளாகிறது. நோயாளியின் இரத்தத்திலிருக்கும் எதிர்ப்புப்பொருட்கள், உடம்பின் தடுப்பாற்றல் சக்தி கிருமிகளின் படையெடுப்பைக் கண்டுபிடித்திருப்பதாக காண்பிக்கிறது, ஆனால் படையெடுத்திருக்கும் அந்தக் கிருமிகள் லைம் வியாதி பாக்டீரியாவா என்று சில பரிசோதனைகளால் காண்பிக்க முடியாது. ஆகவே ஒரு நோயாளிக்கு லைம் வியாதி இருப்பதாக பரிசோதனை ஒருவேளை காண்பிக்கலாம், ஆனால் உண்மையில் அவரது அறிகுறிகள் மற்ற பாக்டீரியாக்களின் தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, ஐக்கிய மாகாணங்களில் உள்ள தி நாஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்த் (NIH), உண்ணி கடித்ததாக அந்த நபருக்கு நினைவு இருக்கிறதா என்பதையும், நோயாளியின் அறிகுறிகளையும், ஒருவேளை அந்த அறிகுறிகளை ஏற்படுத்தியிருக்கும் மற்ற வியாதிகளுடன் சம்பந்தப்படுத்திப் பார்த்து ஒவ்வாததை ஒதுக்குவதையும் அடிப்படையாகக்கொண்டு நோயைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு ஆலோசனை அளிக்கிறது.
சிகிச்சையும் தடுப்பும்
சரியான நேரத்தில் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், எதிர்ப்புப்பொருட்களைப் பயன்படுத்தி பெரும்பான்மையான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படலாம். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சை ஆரம்பமாகிறதோ அவ்வளவு சீக்கிரத்திலும் அவ்வளவு முழுமையாகவும் நோயிலிருந்து மீள முடியும். சிகிச்சைக்குப் பிறகு பல மாதங்களுக்கு சோர்வும் வலியும் ஒருவேளை தொடர்ந்திருக்கலாம், ஆனால் எதிர்ப்புப்பொருள் மருத்துவத்திற்கான எந்தவிதமான தேவையும் இனியில்லாமல் இந்த அறிகுறிகள் குறைந்துவிடும். எனினும், “லைம் வியாதியால் தாக்கப்படுவதுதானே எதிர்காலத்தில் அதே உடல்நலக் குறை வராதபடி தடுக்கப்படும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை,” என்பதாக NIH எச்சரிக்கிறது.
அந்தக் கவலையுண்டாக்கும் எதிர்பார்ப்பு எப்போதாவது மாறுமா? ஐக்கிய மாகாணங்களில் உள்ள யேல் யூனிவர்ஸிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிஸின் வெளியிட்ட ஒரு செய்தி, லைம் வியாதியை ஒருவேளை தடுக்கும் ஆய்வுதடுப்பு மருந்து ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தோற்றுவித்திருப்பதாக அறிவித்தது. இந்த “இரட்டை-செயலாற்றல்” தடுப்பு மருந்து, தாக்கவரும் லைம் பாக்டீரியாவை எதிர் தாக்கி கொன்றுபோடும் எதிர்ப்புப்பொருட்களை உண்டுபண்ணும்படி மனித தடுப்புச் சக்தியை உந்துவிக்கிறது. அதே சமயத்தில், தடுப்பு மருந்தை ஏற்றுக்கொண்டிருக்கும் ஒருவரை கடிக்கும் உண்ணிகளுக்குள் வாழும் பாக்டீரியாவையும் அது அழிக்கிறது.
“இந்தத் தடுப்பு மருந்தைப் பரிசோதிப்பது, லைம் வியாதியினால் நிகழப்போகும் ஆபத்தான விளைவுகளிலிருந்து ஜனங்களைப் பாதுகாக்க நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் மிகப் பெரிய ஒரு வளர்ச்சியாகும்,” என்பதாக 1975-ல் லைம் வியாதியைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் ஸ்டிவன் இ. மாலவிஸ்டா சொல்கிறார். வியாதியைப் பற்றிய பயம் ஜனங்களை வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும்படி செய்திருக்கும் பிராந்தியங்களில், “இந்தத் தடுப்பு மருந்து, உண்ணிகளின் பயமின்றி மனிதர்கள் வனாந்தரத்தில் நடந்து செல்வதை சாத்தியமாக்கும்” என்று விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது.
இதற்கிடையில், எனினும், நீங்களே சொந்தமாக சில தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். NIH இவ்வாறு பரிந்துரைக்கிறது: உண்ணிகள் ஏராளமாக இருக்கும் இடங்கள் வழியாக நடந்து செல்லும்போது, தடத்தின் நடுவிலேயே செல்லுங்கள். நீளமான கால்சட்டைகளையும், முழுக் கை சட்டையையும், ஒரு தொப்பியையும் அணிந்துகொள்ளுங்கள். கால்சட்டையின் கீழ்ப்பகுதியை காலுறைகளுக்குள் செருகுங்கள், பாதத்தை முழுவதுமாக மூடும் ஷூக்களை அணிந்துகொள்ளுங்கள். வெளிர் நிறமுள்ள ஆடைகளை அணிந்துகொள்வது உண்ணிகளை கண்டுபிடிப்பதை சுலபமாக்கும். ஆடைகளின்மீதும் தோலின்மீதும் பயன்படுத்தப்படும் பூச்சிவிரட்டும் பொருட்கள் பயனுள்ளவை, ஆனால் அவை ஆபத்தான பக்கவிளைவுகளைக் குறிப்பாக பிள்ளைகளுக்கு உண்டுபண்ணலாம். NIH இவ்வாறு எச்சரிக்கிறது: “லைம் வியாதி அதிகமுள்ள பகுதிகளில் வாழும் கர்ப்பிணிகள் உண்ணிகளைத் தவிர்ப்பதில் முக்கியமாக கவனமாயிருக்க வேண்டும், ஏனென்றால் பிறவாத பிள்ளையை நோய் தொற்றிக்கொண்டு,” கருச்சிதைந்து வெளியேறுவதன் சாத்தியத்தையோ குழந்தை இறந்து பிறப்பதன் சாத்தியத்தையோ ஒருவேளை அதிகரிக்கலாம்.
நீங்கள் வீட்டிற்குள் வந்தவுடன், உங்கள்மீதும் உங்கள் பிள்ளைகள்மீதும் உண்ணிகள் இருக்கின்றனவா என்று முக்கியமாக உடம்பில் முடி இருக்கும் பகுதிகளில் தேடிப்பாருங்கள். இதைக் கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் முதிர்ச்சியடையாத உண்ணிகள், இந்த வாக்கியத்தின் முற்றுப்புள்ளியைப் போல் அவ்வளவு சிறியதாக கிட்டத்தட்ட இருக்கின்றன, அவற்றை தூசியின் ஒரு துகள் என்பதாக நீங்கள் சுலபமாக நினைத்துவிடலாம். உங்களுக்கு செல்லப் பிராணிகள் இருந்தால், அவை வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை சோதித்துப் பாருங்கள்—அவையும்கூட லைம் வியாதியால் பாதிக்கப்படலாம்.
ஓர் உண்ணியை நீங்கள் எப்படி அகற்றலாம்? கையுறையில்லாத உங்களது விரல்களால் அல்ல ஆனால் நுனி மழுங்கிய ட்வீஸர்களால் அதைச் செய்யுங்கள். தோலின்மீதுள்ள பிடிப்பை உண்ணி விடும்வரை அதன் தலைப் பக்கத்தை மெதுவாக ஆனால் உறுதியாக பிடித்து இழுங்கள், ஆனால் அதன் உடம்பை நசுக்கிவிடாதீர்கள். பின்பு கடித்த இடத்தை கிருமிநாசினியில் ஒற்றி எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். உண்ணியை 24 மணிநேரத்திற்குள் அகற்றுவது, லைம் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் என்பதாக தொற்றுநோய் வியாதிகளின் அமெரிக்க நிபுணரான டாக்டர் காரி வார்ம்சர் சொல்கிறார்.
உண்ணிகள் அதிகமாக நிரம்பியிருக்கும் பகுதிகளிலும்கூட முடமாக்கும் லைம் வியாதியால் பாதிக்கப்படுவதன் சாத்தியம் குறைவு என்பது உண்மைதான். ஆயினும், அந்த எளிய முன்னெச்சரிக்கைகளை எடுப்பது அந்தச் சிறிதளவு சாத்தியத்தையும் இன்னும் குறைக்கும். இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொந்தரவின் மத்தியிலும் பயனுள்ளவைதானா? லைம் வியாதியால் துன்பப்படும் எவரையாவது கேளுங்கள்.
[பக்கம் 14-ன் பெட்டி]
லைம் வியாதியின் அறிகுறிகள்
நோய்தொற்றிய ஆரம்ப நிலை:
○ தடிப்பு
○ தசை மற்றும் மூட்டு வலி
○ தலைவலி
○ கழுத்து விறைப்பு
○ குறிப்பிடத்தக்க சோர்வு
○ காய்ச்சல்
○ முக வாதம்
○ மூளை உழையழற்சி
○ மூட்டு வலி மற்றும் வீக்கத்தின் சுருக்க தொடர்நிகழ்வு
அதிகமாக காணப்படாத அறிகுறிகள்:
○ கண் வீக்கம்
○ மயக்கம்
○ மூச்சுத்திணறல்
நோய்தொற்றிய பிற்பட்ட நிலை:
○ இடைப்பட்ட அல்லது நாள்பட்ட மூட்டு அழற்சி
அதிகமாக காணப்படாத அறிகுறிகள்:
○ ஞாபக மறதி
○ கவனம் செலுத்துவதில் கடினம்
○ மனோநிலையிலோ அல்லது தூங்கும் பழக்கங்களிலோ மாற்றம்
நோய் தொற்றியிருக்கும்போது இந்த அறிகுறிகளில் ஒன்றோ அல்லது அதிகமானவையோ வித்தியாசமான சமயங்களில் காணப்படலாம்.—லைம் வியாதி—உண்மைகளும் சவாலும், (ஆங்கிலம்) தி நாஷனல் இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் ஹெல்தினால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 15-ன் படம்]
காட்டுவழியாக சாவகாசமாக நடந்துசெல்வது உங்களை அபாயத்திற்குள்ளாக்கும்
[பக்கம் 16-ன் படம்]
ஓர் உண்ணி (மிகப் பெரிதாக்கிக் காட்டப்பட்டிருக்கிறது)
[படத்திற்கான நன்றி]
Yale School of Medicine
[பக்கம் 16-ன் படம்]
உண்ணி (உண்மையான அளவு)