அது எந்த நாடாக இருக்கக்கூடும்?
வளர்ச்சியடைந்த நாடுகளிலுள்ள மக்கள், பொதுவாக லஞ்சம், ஊழல், வறுமை ஆகியவற்றை ஆப்பிரிக்க மற்றும் லத்தின்-அமெரிக்க நாடுகளுக்கே உரியவையாக நோக்குகின்றனர். ஆகவே பின்வரும் மேற்கோள் எந்த நாட்டிற்குப் பொருந்துகிறது?
“அரசு ஊழியர்கள் பொய் பேசுகின்றனர், ஊழல் காரணமாக தொழிலதிபர்கள் சிறைப்படுத்தப்படுகின்றனர். இராணுவத்தைச் சேராத துறையில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதற்காகப் பிடிக்கப்படுகின்றனர், அரசியல் தரக்குறைவாகப் பேசப்படுகிறது, [அரசியல்வாதிகள்] இழிவானவர்களாக, மதுவால் மதிமயங்கியவர்களாக, மற்றும் பாலின எண்ணமுடையவர்களாகவுமே காணப்படுகின்றனர். . . . நாடு முழுவதிலும், வழிப்பறிக்கொள்ளை மீண்டும் தலையெடுத்துவிட்டது. . . . பொதுவான குற்றத்தோடு சேர்ந்து தொழில் துறை, பொருள்வருவாய்த் துறை, மற்றும் பொதுநலத் துறை ஆகியவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது. . . . ஒரு கோடியே பத்து லட்சம் மக்கள் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட, வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இல்லாதவர்களாய் இப்போது இருக்கின்றனர், . . . கொடிய வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை—ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட அத்தியாவசியத் தேவைகள் இல்லாதோரின் எண்ணிக்கை—25 லட்சத்திலிருந்து 35 லட்சமாக உயர்ந்துவிட்டது.”—ஃபிலப் நைட்லீ, தி ஆஸ்திரேலியன் மேகஸீன்.
நீங்கள் சரியாக ஊகித்தீர்களா? பிரிட்டன் என்பதே விடை. மேற்கூறப்பட்டது டஜன்கணக்கான நாடுகளுக்குப் பொருந்தக்கூடும் என்பது நாம் வாழும் காலத்தைப் பற்றிய வருந்தத்தக்க உரையாகும். சிறந்த, நேர்மையான, நீதியான ஆட்சி நமக்கு எவ்வளவாய்த் தேவைப்படுகிறது! ஆம், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று தம்மைப் பின்பற்றுபவர்கள் ஜெபிக்கும்படி இயேசு கற்பித்த அந்த ராஜ்யத்தின் மூலமாக கடவுளின் ஆட்சி நமக்குத் தேவை.—மத்தேயு 6:10.