எமது வாசகரிடமிருந்து
என்றும் வாழ்தல் “ஏன் இவ்வளவு குறுகிய வாழ்நாள்?—இது எப்போதாவது மாறுமா?” (அக்டோபர் 22, 1995) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. ஒரு பரதீஸிய பூமியில் பரிபூரண மனிதராக இருப்பதற்கான எதிர்பார்ப்பை மேம்பட்ட விதத்தில் புரிந்துகொள்வதற்கு எனக்கு உதவியது மாத்திரமல்லாமல் இந்தக் கட்டுரைகள் அறிவியல் வகுப்பிலும் எனக்கு உதவின. இந்தக் கட்டுரைகள் வெளியிடப்பட்ட அந்தச் சமயத்தில், செல்களின்பேரில்—அவற்றின் பாகங்கள் மற்றும் செயல்கள் பேரில்—எங்களுக்கு ஒரு பரீட்சை இருந்தது. எவ்வளவு தெளிவாக நீங்கள் விளக்கியிருந்தீர்கள்! நல்ல கிரேடைப் பெற உதவியதற்காகவும் சரியான நேரத்தில் ஆவிக்குரிய உணவைக் கொடுத்ததற்காகவும் நன்றி.
பி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
கண்ணாடி “கண்ணாடி—அதை முதலில் உருவாக்கியவர்கள் நெடுங்காலத்துக்குமுன் வாழ்ந்தனர்” (நவம்பர் 22, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. என் அப்பா கண்ணாடியை வைத்து வேலை செய்கிறார், ஆகவே எங்கள் வீட்டில் அநேக கண்ணாடிகளை வைத்திருக்கிறோம். எவ்வளவு அழகாக இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. கண்ணாடியை உருவாக்குவதில் இத்தனை வித்தியாசமான கலாச்சாரங்கள் சம்பந்தப்பட்டிருந்தன என்பதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. மறுபடியுமாக நன்றி.
எம். பி., ஐக்கிய மாகாணங்கள்
ஹங்கேரியின் திராட்சை தோட்டங்கள் அநேக மாதங்களாக லக்ஸம்பர்கிலுள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டின் ஒயின் செக்ஷனில் நான் வேலை செய்துவருகிறேன். ஆகவே “ஹங்கேரியின் திராட்சை தோட்டங்களுக்கு எங்களோடு வாருங்கள்!” (செப்டம்பர் 8, 1995) என்ற கட்டுரையை மிகுந்த ஆர்வத்தோடு நான் படித்தேன். எனினும், கட்டுரை திருத்தமானதாக இருந்தபோதிலும், திராட்சைப் பழங்களின்மேல் வளர்கிற பூஞ்சணம் (போட்ரிட்டிஸ் சினெரியா), ஒயின் கிடங்குகளில் வளரும் அதே பூஞ்சணம்தான் என்பதாக நீங்கள் சொல்வதாகத் தோன்றியதை என் சூப்பர்வைஸர்களில் ஒருவர் கவனித்தார். ஒயின் கிடங்குகளில் வளரும் பூஞ்சணம், உண்மையில் க்ளாடோஸ்போரியம் சில்லேர் (Cladosporium cellare) என்று அழைக்கப்படும் ஒன்று என்பதாக அவர் சொல்கிறார்.
பி. பி., பிரான்ஸ்
உங்களது சூப்பர்வைஸர் சொல்வது சரியானது, இதைத் தெளிவுபடுத்தியதற்கு அவருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்.—ED.
கடவுளின் நண்பர் “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுளின் நண்பனாக இருப்பது எனக்கு உதவுமா?” (நவம்பர் 22, 1995) என்ற கட்டுரையால் நான் எந்தளவுக்கு கவரப்பட்டேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இந்த வருடத்தில் பெரும்பாலான காலம், மிஞ்சியிருக்கும் என் சுயமரியாதையையும் அழித்துப்போடுகிற மனச்சோர்வுடன் இருளின் பள்ளத்தாக்கிலே நடந்து வந்திருக்கிறேன். ஜெபிப்பதற்கோ பைபிளை படிப்பதற்கோகூட எனக்கு பலம் இருக்கவில்லை. என் கிறிஸ்தவ சகோதரர்கள் கொடுத்த உற்சாகம் என் உணர்ச்சிகளை எட்டவேயில்லை. இந்தக் கட்டுரையை நான் வாசித்தபோது, வெகுநாளுக்கு பின்பு முதல்முறையாக நான் அதிக நேரத்திற்கு சந்தோஷத்தை உணர்ந்தேன்.
எஸ். கே., ஜெர்மனி
இளைஞர்களின் பேரில் எந்தளவுக்கு யெகோவா அக்கறையும் அன்பும் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது ஆறுதலளிப்பதாய் இருக்கிறது. குறுகிய காலத்திற்குள்ளாக, கற்பழிப்பு, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், கருச்சிதைவு, உணர்ச்சி சம்பந்தமான மற்றும் வாய்மொழி சம்பந்தமான துர்ப்பிரயோகம் ஆகியவற்றை நான் எதிர்ப்பட்டிருக்கிறேன். ஒருமுறை தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றிருக்கிறேன். எனினும், கடைசியில் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு மறுபடியும் செல்ல ஆரம்பித்தேன். ஜெபத்தில் தரித்திருந்து யெகோவாவை மறுபடியும் அணுகியதன் மூலமாக அவருடைய அமைப்பில் நான் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். எந்தப் போதைப்பொருளைப் பார்க்கிலும் யெகோவாவின் வார்த்தை அதிக மன சமாதானத்தை எனக்கு கொண்டுவந்திருக்கிறது.
டபிள்யூ. பி., ஐக்கிய மாகாணங்கள்
போட்டி “பைபிளின் கருத்து: விளையாட்டில் போட்டி தவறானதா?” (டிசம்பர் 8, 1995) என்ற கட்டுரை, பத்து வயதுள்ள என் மகனுக்கு ஆறுதல் அளித்தது. சில வயதுவந்த பையன்கள் பந்து விளையாட இவனை அழைத்தனர். இவன் அந்தளவுக்கு கேலி செய்யப்பட்டதன் காரணமாக மிகவும் சோர்வடைந்துவிட்டான். நாங்கள் அந்தக் கட்டுரையைப் படித்து, கிறிஸ்தவர்கள் விளையாட்டின்பேரில் ஒரு சமநிலையான நோக்கை காத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளையாட்டு சோர்வூட்டுவதாய் இருப்பதற்கு மாறாக புத்துணர்ச்சியூட்டுவதாய் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து ஆறுதலடைந்தோம். சில விளையாட்டுகள் அவ்வளவு வன்முறைமிக்கதாய் ஆகிவிட்டிருப்பதன் காரணமாக எல்லா இளைஞர்களும் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
எஸ். ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்
பள்ளியில் விளையாட்டு அணி ஒன்றில் சேருவதைக் குறித்து நான் ஒரு தீர்மானம் எடுக்க இந்தக் கட்டுரை உண்மையிலேயே எனக்கு உதவியது. இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த வசனங்கள் உண்மையிலேயே நேரடியாக இருந்தன. கடினமாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பதாக பயிற்றுவிப்பவர்கள் பொதுவாக சொல்வதன் காரணமாக இந்தக் குறிப்பிட்ட அணியில் சேர்வது அதிகளவான போட்டியை உட்படுத்தியிருந்திருக்கும். அறிவொளியூட்டும் இந்தக் கட்டுரைக்காக நன்றி, ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்க மற்ற இளைஞர்களுக்கு இது உதவிசெய்யும் என எதிர்பார்க்கிறேன்.
எல். எம்., ஐக்கிய மாகாணங்கள்