பேச்சுரிமையின் வரலாற்றுப்பூர்வ வளர்ச்சி
வரலாறு முழுவதிலும், மனிதர் பேச்சுரிமையைப் பெறுவதற்காகப் போராடியிருக்கின்றனர். வெளிப்படையாக ஒரு கருத்தைத் தெரியப்படுத்துவதற்கான உரிமையின் பேரில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன, போர்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன, உயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன.
அவ்வளவு இயல்பானதாகத் தோன்றும் அந்த உரிமை, இரத்தம்சிந்துதலைக்கூட தூண்டும் அளவுக்கு, ஏன் சர்ச்சையைக் கிளப்பிவிட வேண்டும்? இந்த உரிமை பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த அல்லது தடைசெய்யவும்கூட, பண்டைய மற்றும் தற்கால சமுதாயங்கள் ஏன் அவசியமானதாகக் கண்டிருக்கின்றன?
காலக்கடிகாரத்தில் பெரியதோர் ஊசற்குண்டைப்போல், மக்களுக்கான பேச்சுரிமையினிடமாக மனநிலைகள் ஊசலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன. அனுபவித்து மகிழவேண்டிய ஒரு சிலாக்கியமாக பேச்சுரிமை சில சமயங்களில் கருதப்பட்டிருக்கிறது. மற்ற சமயங்களில் அது அரசாங்கங்களால் அல்லது மதங்களால் கையாளப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்பதாகக் கருதப்பட்டிருக்கிறது.
ஒரு கருத்தை வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதற்கான உரிமைக்காகப் போராடியவர்களைப் பற்றியதும், அவ்வாறு போராடியது அவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட அல்லது கொல்லப்பட பெரும்பாலும் வழிநடத்தியது பற்றியதுமான பதிவுகளால் வரலாறு நிறைந்திருப்பதால், இந்த நிகழ்வுகளில் சிலவற்றைக் குறித்து மறுபார்வை செய்வது அந்தப் பிரச்சினைக்கு உட்பார்வையை நமக்கு அளிக்க வேண்டும்.
கிரேக்க தத்துவமேதையாகிய ஸாக்ரட்டிஸை (பொ.ச.மு. 470-399) வரலாற்று மாணவர்கள் நினைவுகூரக்கூடும்; அவருடைய நோக்குநிலைகளும் போதனைகளும், ஆதன்ஸிலுள்ள இளைஞரின் ஒழுக்கங்கள்மீது கெடுதலான தாக்கத்தைக் கொண்டிருந்தவையாகக் கருதப்பட்டன. கிரேக்க படிநிலை அமைப்பிலுள்ள அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் மத்தியில் இது அதிக குழப்பத்தை ஏற்படுத்தி, அவருடைய மரணத்திற்கு வழிநடத்தியது. அவரைக் குற்றவாளியென தீர்த்த சான்றாயத்திற்கு முன் அவர் செய்த முறையிடுதல், பேச்சுரிமையின் மிகச் சிறந்த நயமான எதிர்வாதங்களில் ஒன்றாக இருக்கிறது: “ஞானத்திற்கான இந்தத் தேடுதலில், இனிமேலும் என் கருத்தை வெளிப்படுத்த எனக்கு அனுமதி இல்லை என்றும் இவ்வாறு செய்வதாகக் கண்டு நான் மீண்டும் பிடிபட்டால் மரணம் அடைவேன் என்ற நிபந்தனையின் பேரிலும் இந்த முறை என்னைக் குற்றவாளியில்லை என தீர்த்து விடுவித்தால், நான் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமென்றால், ‘ஆதன்ஸ் நாட்டவர்களே, நான் உங்களுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவேன். எனக்கு உயிரும் பலமும் இருக்கும் வரையிலும் நான் தத்துவ ஞானத்தைப் பின்பற்றுவதையும், மேலும் நான் சந்திக்கும் உங்களில் எவரையும் அறிவுறுத்துவதையும் இணங்குவிப்பதையும் நிறுத்த மாட்டேன். இவ்வாறு ஏன் செய்வேனென்றால், நிச்சயமாக இதைத்தான் கடவுள் கட்டளையிடுகிறார் . . .’ மேலும் அத்தீனியர்களே, நான் தொடர்ந்து சொல்லவேண்டியது என்னவென்றால், ‘என்னை குற்றவாளியென்று தீர்த்தாலும் சரி அல்லது தீர்க்காவிட்டாலும் சரி; ஆனால் நான் அதற்காக பலமுறை சாகவேண்டியதாக இருந்தாலும், ஒருபோதும் வித்தியாசமாக நடந்துகொள்ள மாட்டேன்.’ ”
காலம் கடந்துசென்று, குறைவான கட்டுப்பாடுகளிடமாக ஊசற்குண்டு சாய்வதை ரோமின் ஆரம்ப வரலாறு கண்டது, ஆனால் அந்தப் பேரரசு விரிவடைந்தபோது அது மீண்டுமாக அதிகப்படியான கட்டுப்பாடுகளிடமாகச் சாய்ந்தது. பேச்சுரிமையின் இருண்ட காலப்பகுதியின் தொடக்கத்தை இது குறித்தது. டைபிரியஸின் ஆட்சியின்போது (பொ.ச. 14-37), அரசாங்கத்திற்கோ அதன் செயல்திட்டங்களுக்கோ எதிராக வெளிப்படையாய்ப் பேசியவர்களிடமாக எவ்வித சகிப்புத்தன்மையும் காண்பிக்கப்படவில்லை. மேலும் ரோம் மட்டுமே பேச்சுரிமையை எதிர்ப்பதாக இருக்கவில்லை; இந்தச் சமயத்தில்தான், யூதத் தலைவர்கள், இயேசுவை அவருடைய போதனைக்காகக் கொல்லும்படி பொந்தியு பிலாத்துவை வற்புறுத்தவும், பிரசங்கிப்பதை நிறுத்தும்படி அவருடைய அப்போஸ்தலரைக் கட்டளையிடவும் செய்தார்கள். இவர்களும் அதை நிறுத்துவதைவிட சாவதற்கு மனமுள்ளவர்களாய் இருந்தனர்.—அப்போஸ்தலர் 5:28, 29.
வரலாற்றின் பெரும்பாலான காலப்பகுதிகளில், அரசாங்கங்களால் வழங்கப்பட்ட பொது உரிமைகள் அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டன அல்லது அவரவர் இஷ்டத்துக்கேற்ப திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன; இவை பேச்சுரிமை குறித்த தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிநடத்தின. இடைநிலைக்காலத்தில் தொடங்கி, சில மக்கள், தங்கள் உரிமைகளும் அந்த உரிமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு இருந்த வரையறைகளும் தெளிவாக வகுக்கப்பட்டு எழுதப்பட்ட விவரப்பதிவைக் கோரினர். அதன் விளைவாக, குறிப்பிடத்தக்க உரிமைகள் மசோதாக்கள் உருவாக்கப்பட தொடங்கின. இவற்றில் மாபெரும் பட்டயம் (Magna Carta) என்பவை, மனித உரிமைகள் பற்றிய துறையில் ஒரு முக்கியமான கட்டம். பின்னர், ஆங்கிலேய உரிமைகள் மசோதா (1689), அமெரிக்க வர்ஜீனியா மாநிலம் வரைந்த உரிமைகள் அறிவிப்பு (1776), பிரெஞ்சுப் புரட்சியாளர் விடுத்த மனித உரிமைகள் (1789), மற்றும் ஐக்கிய மாகாணங்களின் உரிமைகள் மசோதா (1791) ஆகியவை உருவாயின.
வரலாற்றின் பிரபல நபர்கள், கருத்தை வெளியிடும் உரிமையை ஆதரித்து எழுப்பிய குரல்களை 17, 18, மற்றும் 19-ம் நூற்றாண்டுகள் கேட்டன. 1644-ல் சுவர்க்க நீக்கம் (Paradise Lost) என்ற படைப்பால் நன்கு அறியப்பட்ட ஆங்கில கவிஞர் ஜான் மில்டன், எழுத்துச் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு தர்க்கத்தை பிரபல துண்டு பிரசுரமாகிய ஆரேயோபாயீடிகா என்பதில் எழுதினார்.
கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்தபோதிலும், இங்கிலாந்தில் பேச்சுரிமையின் வளர்ச்சியை 18-ம் நூற்றாண்டு கண்டது. அமெரிக்காவில் குடியேற்ற பகுதிகள், வாய்மொழியானதும் அச்சிடுவதுமான இரு அம்சங்களிலும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை வற்புறுத்தின. உதாரணமாக, பென்ஸில்வேனியாவின் மக்கட்பொதுவுரிமையரசின் அரசமைப்புச் சட்டம், செப்டம்பர் 28, 1776, என்பதன் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “பேச்சு, எழுத்து, மற்றும் தங்கள் உணர்வுகளை வெளியிடும் சுதந்திரத்திற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது; ஆகவே பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படக் கூடாது.”
1791-ல், ஐ.மா. அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்கு இக்கூற்று ஒரு தூண்டுதலாக இருந்தது; மக்களால் வாஞ்சையுடன் போற்றப்பட்ட உரிமைகளைக் குறித்து அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை நிறுவியவர்களின் எண்ணத்தைக் குறித்து அது இவ்வாறு அறிவித்தது: “ஒரு மதத்தை நிறுவுவது, அல்லது அதைத் தெரிவுசெய்து கடைப்பிடிப்பதைத் தடைசெய்வது, அல்லது பேச்சுரிமையையோ எழுத்துரிமையையோ குறைப்பது, அல்லது மக்கள் சமாதானமாக ஒன்றுகூடி வருவதற்கான உரிமையையும், தங்கள் மனக்குறைகளுக்கு தீர்வு கோரி அரசாங்கத்திடம் மனுசெய்வது ஆகியவற்றைக் குறித்தும் சட்டமாமன்றம் எந்தவிதமான சட்டத்தையும் உருவாக்காது.”
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேய தத்துவஞானி ஜான் ஸ்டுயர்ட் மில் 1859-ல், “விடுதலையைக் குறித்து” (ஆங்கிலம்) என்ற தன் கட்டுரையைப் பிரசுரித்தார். அது அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு, சுதந்திரமான பேச்சை ஆதரிக்கும் மிகச் சிறந்த வாசகங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது.
என்றபோதிலும், இந்த 20-ம் நூற்றாண்டின் அறிவொளியூட்டப்பட்ட வருடங்களாக எண்ணப்படுபவற்றின் வருகையுடன், வெளிப்படையாக சுதந்திரமாகப் பேசும் உரிமைக்கான போராட்டங்கள் முடிவுக்கு வரவில்லை. உதாரணமாக, அமெரிக்காவில் பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளின் காரணமாக, அந்தச் சுதந்திரத்தைக் காப்பது பற்றிய அறிவிப்புகள், ஐக்கிய மாகாணங்களின் கீழ் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகிய இருநிலை நீதிமன்றங்களிலிருந்தும் எதிரொலித்திருக்கின்றன.
ஐ.மா. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இளைய ஆலிவர் வென்டல் ஹோம்ஸ், சுதந்திரமான பேச்சில் தனக்கிருக்கும் நம்பிக்கையை, அநேக நீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிட்டார். சுதந்திரமான பேச்சிற்குரிய அடிப்படையை விவரிப்பவராய், அவர் சொன்னார்: “அரசமைப்புச் சட்டத்தின் நியமம் ஒன்று வேறெதையும்விட அதிக கண்டிப்பான பற்றை கேட்கிறதென்றால், அது கருத்து சுதந்திரத்தைப் பற்றிய நியமமாகும்—நம்முடன் ஒத்துப்போகிறவர்களுக்குக் கருத்து சுதந்திரம் அல்ல, ஆனால் நாம் வெறுக்கிற கருத்திற்கு சுதந்திரம்.”—ஷ்விம்மருக்கு எதிராக ஐக்கிய மாகாணங்கள் (ஆங்கிலம்), 1928.
இந்த நியமத்தைப் புறக்கணிப்பதுதானே, சுதந்திரத்திற்கும் தடைவிதிப்புக்கும் இடையே ஊசற்குண்டை ஊசலாடிக்கொண்டிருக்கச் செய்யும் நீதிமன்ற போராட்டங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. பெரும்பாலும் கருத்து என்னவென்றால், “பேச்சில் சுதந்திரம் எனக்கு—ஆனால் உங்களுக்கு அல்ல.” இந்தப் பெயருடைய தன் ஆங்கில புத்தகத்தில் நாட் ஹென்டஃப், அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்திற்காக ஆர்வமாக வழக்காடியவர்கள், தங்கள் நோக்குநிலைகளுக்கு ஏற்ப தீவிரமாகக் கருத்துகளை மாற்றிக்கொள்கிற சமயங்களை மேற்கோள் காட்டுகிறார். ஐ.மா. உச்ச நீதிமன்றம், தன் சொந்த தீர்ப்புகளையே நேர்மாறாக திருப்பிய உதாரணங்களை அவர் எடுத்துக் காண்பிக்கிறார்; அவற்றில் சில யெகோவாவின் சாட்சிகளையும், அவர்களுடைய மத நம்பிக்கைகளைக் குறித்து சுதந்திரமாகப் பேசுவதற்கான உரிமைக்காக அவர்களுடைய வருடக்கணக்கான போராட்டத்தையும் உட்படுத்திய வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவை. அவர்களைக் குறித்து அவர் எழுதினார்: “அந்த விசுவாசத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள், அரசமைப்புச் சட்டம்சார்ந்த வழக்குகள் மூலமாக மனச்சாட்சியின் சுதந்திரத்தை விரிவாக்குவதினிடமாக பத்தாண்டுகளினூடே முக்கியமான பங்கை வகித்திருக்கின்றனர்.”
அநேக சட்டப்பூர்வமான பகுத்தாய்வாளர்களும் நவீன வரலாற்றாசிரியர்களும், இந்தப் பிற்பட்ட 20-ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும், பேச்சுரிமையைப் பாதுகாப்பதற்காக போராடப்பட்ட எண்ணற்ற நீதிமன்ற வழக்குகளைப் பற்றி தாராளமாக எழுதியிருக்கின்றனர். பேச்சுரிமை ஒருபோதும் உறுதியளிக்கப்படவில்லை. அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு அளிக்கிற சுதந்திரத்தைக் குறித்து பெருமைப்பாராட்டக்கூடும்; அனுபவம் காண்பித்திருக்கிறபடி, அது ஓர் அரசாங்க மாற்றத்தில் அல்லது நீதிமன்ற நீதிபதிகளின் மாற்றத்தில் இழக்கப்படலாம். போற்றப்படும் இந்தச் சுதந்திரத்திற்காகப் போராடுவதில் யெகோவாவின் சாட்சிகள் முன்னணியில் இருந்திருக்கின்றனர்.
இவர்களும் நம்புகிறார்கள் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் பேராசிரியர் சி. எஸ். ப்ரோடன் எழுதுகிறார்: “அவர்கள் [யெகோவாவின் சாட்சிகள்], தங்கள் பொது உரிமைகளைக் காத்துக்கொள்வதற்காக மக்களாட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க சேவையைச் செய்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய போராட்டத்தில் அவர்கள் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு சிறுபான்மை தொகுதிக்குமுரிய உரிமைகளைப் பெறுவதற்கு அதிகத்தைச் செய்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு தொகுதியின் பொது உரிமைகள் தாக்கப்படுகையில், எந்தவொரு தொகுதியின் உரிமைகளும் பாதுகாப்பாக இல்லை. ஆகவே நம் மக்களாட்சியிலுள்ள மிக மதிப்புள்ள காரியங்களில் சில பாதுகாக்கப்படுவதில் அவர்கள் ஒரு திட்டவட்டமான பங்கை வகித்திருக்கின்றனர்.”
ஏன் சில அரசாங்கங்களும் மதங்களும் இந்தச் சுதந்திரத்தை தங்கள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கின்றன என்பதை சுதந்திரத்தை விரும்பும் மக்களால் புரிந்துகொள்ள முடிவதேயில்லை. அது அடிப்படை மனித உரிமை மறுப்பாக இருக்கிறது; இந்தச் சுதந்திரமின்றி அடக்கப்படுவதை உலகெங்கிலுமுள்ள அநேக மக்கள் அனுபவிக்கிறார்கள். பேச்சுரிமையின்பேரிலுள்ள மனப்பான்மைகள், இந்த அடிப்படை உரிமையை அனுபவிக்கும் நாடுகளில்கூட, ஊசற்குண்டைப் போல அது முன்னும்பின்னுமாக ஊசலாடிக்கொண்டிருக்குமா? ஒழுக்கங்கெட்ட அல்லது ஆபாசமான மொழியை நியாயப்படுத்துவதற்காக பேச்சுரிமை பயன்படுத்தப்படுமா? நீதிமன்றங்கள் ஏற்கெனவே இந்தச் சர்ச்சையுடன் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.
[பக்கம் 3-ன் படம்]
ஸாக்ரட்டிஸ் பேச்சுரிமைக்காக வாதிட்டார்
[படத்திற்கான நன்றி]
Musei Capitolini, Roma