அருகிவரும் உயிரினங்கள்—நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்
புலிகள், ஆமைகள், காண்டாமிருகம், வண்ணத்துப்பூச்சிகள்—ஏன், அச்சுறுத்தப்பட்டுவரும் உயிரினங்களின் பட்டியல் முடிவற்றதாகத் தோன்றுகிறது! அதிகளவான குற்றச்சாட்டை மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது உங்களை எப்படி பாதிக்கிறது?
உலகின் பொருளாதார நிலையை முன்னிட்டுப் பார்க்கையில், தங்கள் சொந்த நலத்தைப் பற்றியே கவலையுற்ற மக்கள், எவ்வளவுதான் சிறப்புடையவையாய் பாதுகாப்பு செயற்திட்டங்கள் இருந்தாலும், அவற்றிற்கு ஆதரவளிக்கும்படி எதிர்பார்ப்பது நியாயமாய் உள்ளதா? “லட்சக்கணக்கான மக்கள் அரசியல் கிளர்ச்சி, இனப் போராட்டம், பஞ்சம் மற்றும் தொற்றுநோயை எதிர்ப்படும், சஹாரா பாலைவனத்தைக் கொண்ட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில், சுற்றுச்சூழலியலைக் குறித்துக் கவலைப்படுவதும் அதற்கு ஆதரவளிப்பதும் நிச்சயமாகவே எளிதானதல்ல” என்று டைம் குறிப்பிடுகிறது. பிற இடங்களிலும் அதுவே உண்மையாய் இருக்கிறது.
அருகிவரும் உயிரினங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் அடிப்படை மாற்றங்கள் தேவை. இம் மாற்றங்கள், “அவ்வளவு பெரியதாய் இருப்பதால் அரசாங்கங்கள் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும்” என்று தி அட்லஸ் ஆஃப் என்டேஞ்சர்ட் ஸ்பீஷீஸ் கூறுகிறது. பிறகு அது சிபாரிசு செய்கிறது: “தேர்தல் முறைப்படியான அரசாங்கங்கள் உள்ள இடங்களிலெல்லாம், 2000 ஆண்டு வாக்கில் சுற்றுச்சூழலைக் குறித்த உணர்வுள்ள அரசியல்வாதிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை நிச்சயப்படுத்த வேண்டியது ஒவ்வொரு தனி நபரின் பொறுப்பாய் உள்ளது.”
இது ஒரு நிஜமான எதிர்பார்ப்பா? வரலாற்றின் நிரூபணத்தைக் கொண்டு தீர்மானிக்கையில், ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்’ என்றும்,— வனவிலங்குகளையும் அவ்விதமே ஆளுகிறான் என்றும்—நாம் முடிவெடுக்க வேண்டும். (பிரசங்கி 8:9) உண்மையில், பூமியின் தாவர இனங்களும் விலங்கினங்களுமே சுற்றுச்சூழலியல் சார்ந்த இன்டிகேட்டர்களாய் இருப்பதாய் பாதுகாப்பியலர்கள் பலர் நம்புகின்றனர். இவை அச்சுறுத்தப்படுகையில், மனிதர்களாகிய நாமும் அச்சுறுத்தப்படுகிறோம். ஆனால் பூமியில் வாழ்பவை அற்றுப்போகும் அளவிற்கு அச்சுறுத்தப்பட்டிருப்பது மனித வரலாற்றில் இதுவே முதல் தடவையல்ல.
“வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப் பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்” என்று வரலாற்றுப் புத்தகங்களில் மிகப் பழமையான புத்தகம் ஒன்று பதிவு செய்கிறது. (ஆதியாகமம் 6:17) ஆனாலும், எல்லா மனிதருமோ, எல்லா மாம்சஜந்துக்களுமோ அழியவில்லை, ஏனெனில் தப்பிப்பிழைப்பதற்கான ஒரு வழியைக் கடவுள் ஏற்பாடு செய்தார்.
தப்பிப்பிழைப்பதற்கு ஒரு பேழை
இன்றைய அருகிவரும் உயிரினங்கள் பிரச்சினைக்கு மிகச் சிறந்த தீர்வு, அவற்றின் வாழிடங்களைக் காப்பதில் உள்ளடங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதைப் பற்றி நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்வதோடு, பாதுகாப்பியலர்கள், “நோவாவின் பேழையாகிய உருவகத்தைப்” பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுக் காட்டுவது அக்கறையூட்டுவதாய் இருக்கிறது. நோவாவின் நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திலிருந்து மனிதரும் விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்கான ஒரே வழியாக நோவாவின் பேழை இருந்தது.
அந்தப் பேழைக்கான உருவமைப்பை நோவாவுக்குக் கடவுள் அளித்தார், அது ஜலப்பிரளயத்தின் மேற்பரப்பின்மீது மிதக்கவிருந்த ஒரு பெரிய மரப்பெட்டியாய் இருந்தது. நோவா, அவர் மனைவி, அவர்களுடைய மூன்று மகன்கள், மற்றும் மகன்களின் மனைவிகள் ஆகியோரும், வெவ்வேறு வகையான வீட்டு விலங்குகளும், காட்டு விலங்குகளும்—உண்மையில், “ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களெல்லாம்”—பாதுகாக்கப்படும்படி இது செய்தது. (ஆதியாகமம் 7:15) இன்று ஜீவஜந்துக்களின் பல்வேறு வகைகள் பலுகியிருப்பது, அப்பேழை அதன் நோக்கத்தை எவ்வளவு நன்றாய் நிறைவேற்றினது என்பதை நிரூபிக்கிறது.
என்றாலும், தப்பிப்பிழைத்தல், முழுவதும் மனித முயற்சிகளைச் சார்ந்ததாய் இல்லை என்பதைக் கவனியுங்கள். நோவாவும் அவருடைய குடும்பத்தினரும், தங்களை உயிருடன் காப்பாற்றும் வல்லமையை உடையவராய் இருந்த கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களாய் இருந்தனர். ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்த, அந்தக் கலகத்தனமான, வன்முறையான, மற்றும் பேராசை நிறைந்த உலகை அழித்தது கடவுள்.—2 பேதுரு 3:5, 6.
புதிய உலகத்தில் விலங்குகள்
தமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது, மூர்க்க வெறிகொண்ட, பெரு வேட்கையுடைய கொன்றுதின்னிகளைப் போன்றிருந்த மனிதர்களை, பணிவான, அமைதியான விலங்குகளைப் போன்றவர்களாய் மாறும்படி செய்யும் என்று யெகோவா தேவன் வாக்களித்துள்ளார். (ஏசாயா 11:6-9; 65:25) இப்போதும்கூட, இதன் எடுத்துக்காட்டுகள் ஏராளமாய் இருக்கின்றன. உங்களுக்கு அருகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் கூட்டங்களுக்கு ஆஜராகையில், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். யெகோவா அப்பேர்ப்பட்ட அடிப்படை மாற்றங்களை மனிதர் மத்தியில் நிறைவேற்ற முடிந்தால், அவற்றின் தற்போதுள்ள குணங்களை மாற்றுவதையே இது அர்த்தப்படுத்தினாலும்கூட, விலங்கினங்கள் சமாதானத்திலும் பாதுகாப்பிலும் ஒன்றாய்ச் சேர்ந்து வாழும்படியும் ஏற்பாடு செய்ய அவரால் முடியாதா? உண்மையில், “அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை பண்ணி, . . . அவர்களைச் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருக்கப்பண்ணுவேன்” என்று அவர் வாக்களிக்கிறார்.—ஓசியா 2:18.
“தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்” ஒன்று எதிர்காலத்தில் வரவிருப்பதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:7) கடவுளுடைய கட்டுப்படுத்தப்பட்ட தலையீடு தேவபக்தியில்லாதவர்களை மட்டுமே அழிக்கும். கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்.’—வெளிப்படுத்துதல் 11:18.
உயிரினங்கள் இனிமேலும் அச்சுறுத்தப்படாத ஓர் உலகில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியானது என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அப்போது நம்மைச் சுற்றியுள்ள வனவிலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவு காரியம் இருக்கும்! ஆம், புலிகள், சிங்கங்கள், யானைகள், தொந்தரவு செய்யப்படாமல் சுற்றித்திரியும். கடல்வாழ் பிராணிகள் நிறைந்திருக்கும், அதேவிதமாக, ஊர்வன, பூச்சிகள், மற்றும் மக்காக்கள் உள்ளிட்ட பல்வகைப்பட்ட பறவைகள்—அனைத்தும் சரியான சமநிலையில் இருக்கும். மேசியானிய ராஜ்யத்தின்கீழ், மனித பரிபூரணத்துக்கு நிலைநாட்டப்பட்ட கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திடம் ஒரு பூரண சூழலியல் வாசம் செய்யும்.