டிஸ்லெக்ஸியாவின் மனமுறிவை மேற்கொள்ளுதல்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
“உங்க தொலைபேசி நம்பர் என்ன?” என்று ஜூலி கேட்கிறார். அழைக்கப்பட்டவர் பதில் கூறுகிறார். ஆனால் ஜூலி குறிப்பெடுக்கும் எண்கள் கொடுக்கப்பட்ட எண்களோடு சிறிதும் சம்பந்தமில்லாதவை.
‘நான் வரைந்த படத்தை என் ஆசிரியர் கிழித்தெறிந்து விட்டார்கள்’ என்று வனெஸா புலம்புவதோடு, ‘அவர் எதைச் செய்யச் சொன்னார் என்று எனக்கு நினைவேயில்லை,’ என்றும் கூறுகிறாள்.
தன் 70-களில், டேவிட், ஆறு பத்தாண்டுகளுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு தான் திறமையுடன் பயன்படுத்திய எளிய வார்த்தைகளை வாசிக்க மிகவும் சிரமப்படுகிறார்.
ஜூலி, வனெஸா, டேவிட் ஆகியோருக்கு—மனமுறிவை ஏற்படுத்தும் ஒன்றான—கற்கும் சிரமம் இருக்கிறது. அதுதான் டிஸ்லெக்ஸியா. இந்நிலையைத் தோற்றுவிப்பது எது? டிஸ்லெக்ஸியா உடையோர், அது தூண்டுவிக்கும் மனமுறிவை எப்படி மேற்கொள்ளலாம்?
டிஸ்லெக்ஸியா என்பது என்ன?
ஓர் அகராதி டிஸ்லெக்ஸியாவை, “வாசிக்கும் திறத்தின் ஒரு தொந்தரவு” என்று வரையறுக்கிறது. வாசிப்பு சீர்குலைவு என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், இன்னும் அதிகத்தை டிஸ்லெக்ஸியா உட்படுத்தக்கூடும். a
ஆங்கிலத்தில் இதன் மூல வார்த்தைகள், “சிரமமுடைய” என்ற பொருளுடைய டிஸ் (dys) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும், “சொல்” என்ற பொருளுடைய லெக்ஸிஸ் (lexis) என்ற வார்த்தையிலிருந்தும் தோன்றுகின்றன. சொற்கள் அல்லது மொழியோடுகூடிய சிரமங்களையும் டிஸ்லெக்ஸியா உட்படுத்துகிறது. ஒரு வாரத்தின் நாட்கள், ஒரு வார்த்தையிலுள்ள எழுத்துக்கள் ஆகியவற்றைப் போன்று, பொருட்களை அவற்றின் சரியான வரிசையில் வைப்பதிலும்கூட பிரச்சினையை உட்படுத்துகிறது. பிரிட்டன்ஸ் டிஸ்லெக்ஸியா இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் ஹெச். டி. சாஸ்ட்டி கூறுவதன்படி, டிஸ்லெக்ஸியா என்பது, “குறுகிய கால நினைவாற்றலை, புரிந்துகொள்ளுதலை, மற்றும் கைத்திறமைகளைச் சேதப்படுத்தும், ஒழுங்கமைக்க இயலாமையாகும்.” ஆகவே டிஸ்லெக்ஸியா உடையோர் அதனால் மனமுறிவடைவதில் ஆச்சரியமில்லை!
டேவிட்டின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு ஆர்வமாகவும் சரளமாகவும் வாசித்தவர், வாசிப்பதை மீண்டும் ஒருமுறை கற்றுக்கொள்வதில் தன் மனைவியின் உதவியை நாடும் அளவுக்கு என்ன நேர்ந்துவிட்டது? மொழியைப் பயன்படுத்துவதற்கென்று இணைக்கப்பட்டிருந்த டேவிட்டின் மூளையினுடைய ஒரு பகுதியை, ஒரு திடீர் உணர்விழப்பு சேதப்படுத்தியது, இதுவே வேதனைப்படுத்தும் வகையில், வாசிப்பதில் அவருடைய முன்னேற்றத்தை மெதுவாக்கியது. ஆனாலும், சிறிய வார்த்தைகளை வாசிப்பதில் இருந்த பிரச்சினையைவிட, பெரிய வார்த்தைகளை வாசிக்கும்போது பிரச்சினை குறைவாகவே இருந்தது. அவ்வாறு பெறப்பட்ட டிஸ்லெக்ஸியாவை உடையவராய் இருந்தபோதிலும், டேவிட்டின் உரையாடல் திறத்திலும், அவரது கூரிய அறிவிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மனித மூளை அவ்வளவு சிக்கலானதாய் இருப்பதால், அது பெறும் ஒலிகளை மற்றும் காட்சி சமிக்கைகளை செயல்முறைக்குள்ளாக்குவதில் உட்பட்டுள்ள அனைத்தையும் ஆய்வாளர்கள் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியவர்களாய் உள்ளனர்.
மறுபட்சத்தில், ஜூலிக்கும் வனெஸாவுக்கும், வளர்ந்துவரும் தன்மையுடைய டிஸ்லெக்ஸியா இருந்தது, அது அவர்கள் வளரவளர தெளிவாகத் தெரிந்தது. ஏழு அல்லது எட்டு வயது வாக்கில், சாதாரண புத்திநுட்பமுடைய பிள்ளைகள், வாசிப்பதில், எழுதுவதில், மற்றும் எழுத்துக்கூட்டுவதில் குறிப்பிட இயலாத சிரமத்தை வெளிக்காட்டுகையில், அவர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருக்கிறது என்று ஆய்வாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்கின்றனர். அடிக்கடி, டிஸ்லெக்ஸியாவைக் கொண்ட இளைஞர் தாங்கள் பார்த்தெழுத முயலும் வார்த்தைகளை, கண்ணாடியில் பார்க்கும்போது தெரிவதுபோல் தலைகீழாக எழுதுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் அவர்களை முட்டாள், மந்தம், சோம்பேறி என்றெல்லாம் தவறாகப் பெயர் சூட்டும்போது ஜூலியும் வனெஸாவும் உணர்ந்த மனமுறிவைக் கற்பனை செய்து பாருங்கள்!
பிரிட்டனில், 10 பேரில் ஒருவர் டிஸ்லெக்ஸியாவால் அவதிப்படுகிறார். அவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில் பிறருடைய பங்கில் தோல்வி இருப்பது, அவர்களின் மனமுறிவை கூட்டத்தான் செய்கிறது.—பக்கம் 14-ல் உள்ள பெட்டியைக் காண்க.
டிஸ்லெக்ஸியாவை எது தோற்றுவிக்கிறது?
மோசமான கண்பார்வை, கற்பதில் சிரமங்களை அடிக்கடி தோற்றுவிக்கிறது. பார்வைக் குறைபாட்டை சரிசெய்யுங்கள், அப்போது டிஸ்லெக்ஸியா மறைகிறது. வாசிக்கக் கற்றுக்கொள்வதில் சிரமம் உடையோரில் ஒரு சிறிய பகுதியினர், வாசிக்கும் பொருளின்மீது வண்ணம் தீட்டப்பட்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டை வைக்கையில், வார்த்தைகளின்மீது மேம்பட்ட வகையில் கவனம் செலுத்த முடிவதாகக் காண்கின்றனர். பிறருக்கு இவ்வாறு செய்வது பயனளிப்பதில்லை.
இந்நிலை குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட பண்பை ஏற்படுத்துவதைக் கவனிக்கையில், சிலர் மரபியல் சார்ந்த விளக்கத்தை அளிக்கின்றனர். உண்மையில், “ஒற்றைத்தலைவலி, ஆஸ்துமா போன்ற தன்னுடல் தாங்கு திறன்கொண்ட நோய்களில் உட்பட்டுள்ள ஜீன்களுக்கும் டிஸ்லெக்ஸியா ஏற்படுவதற்குக் காரணமான ஜீன்களுக்கும் இடையே இருப்பதாகத் தெரிந்த சம்பந்தத்தை முடிந்தளவுக்குப் பயன்படுத்தின” ஆய்வை நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை சமீபத்தில் அறிக்கை செய்தது. டிஸ்லெக்ஸியா உடையவர்களும் அவர்களின் உறவினர்களும் தன்னுடல் தாங்கு திறன்கொண்ட நோய்களால் அவதிப்படுவதற்கு அதிகமான சாத்தியம் இருப்பதன் காரணமாக, டிஸ்லெக்ஸியாவைத் தோற்றுவிக்கும் ஜீன்கள் இந்நோய்களைத் தோற்றுவிக்கும் ஜீன்களுக்கு இடமளிக்கும் மரபணுத்தொகுதி இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், நடத்தையியல் அறிவியலாளர் ராபர்ட் புளோமன் குறிப்பிடுவதுபோல், ஆய்வாளர்கள் “வாசிக்க இயலாமைக்கான ஒரு ஜீனையல்லாமல், ஒரு குரோமஸோம் பகுதியையே அடையாளம் கண்டுள்ளனர்.”
உடல் இருக்கைநிலை, சமநிலை, மற்றும் ஒத்திசைவைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி, சிறுமூளை என்றழைக்கப்படுகிறது. நம் சிந்தனையிலும் மொழியின் உருவாக்கத்திலும்கூட அது ஒரு பங்கை வகிக்கிறது என்று சில விஞ்ஞானிகள் உறுதியுடன் கூறுகின்றனர். அக்கறையூட்டும் விதத்தில், இங்கிலாந்திலுள்ள ஷெஃபீல்டு யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சமநிலை மற்றும் ஒத்திசைவை உட்படுத்தும் டிஸ்லெக்ஸியாவுக்கான ஒரு பரிசோதனையைப் படிப்படியாகத் தோற்றுவித்துள்ளனர். சிறுமூளையிலுள்ள குறைபாடுகள் மூளையிலுள்ள ஆரோக்கியமான பகுதிகளை இழப்பீடு செய்யத் தூண்டுகின்றன என்று பகுத்தாராய்கின்றனர். நேராக நின்று, ஒரு காலை மற்றொரு காலுக்கு முன் வைத்து, கைகளை விரித்து நீட்டிக்கொண்டிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட குழந்தைகள் பொதுவாக தங்கள் சமநிலையைக் காத்துக்கொள்வதைச் சிரமமாகக் காண்பதில்லை. ஆனால் அவர்களுடைய கண்களைக் கட்டிவிட்டால், டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளைகள் மிகவும் தள்ளாடுவர், ஏனெனில் தங்கள் சமநிலையைக் காத்துக்கொள்வதற்கு அவர்கள் பார்வையின்மீதே அதிகம் சார்ந்துள்ளனர்.
டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளைகளின் மூளைகள், உடல் உட்கூறு அமைப்பியல் சார்ந்த வேறுபாடுகளைக் காட்டுவதாக இன்னும் பிற ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். சாதாரணமாக, மூளையின் பின்புறத்தில் இடது பக்கம், வலது பக்கத்தைக் காட்டிலும் சற்று பெரியதாக இருக்கும், ஆனால் டிஸ்லெக்ஸியா உள்ளவரின் மூளையில் இடது மற்றும் வலது அரைப்பகுதிகள் சரிசமமாய் வளர்ந்திருப்பதாகக் காணப்படுகின்றன. மொழியைக் கையாளும் மூளையின் பகுதிகளிலுள்ள நரம்பணுக்களின் அமைப்பில் ஒரு குலைவைக் கண்டுபிடித்திருப்பதாக இன்னும் மற்றவர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.
தங்களது டிஸ்லெக்ஸியாவுக்கான இயற்பியல் சார்ந்த காரணத்தைப் பொறுத்தல்லாமல், அப் பிரச்சினையை உடையோர் எவ்வாறு மிகச் சிறந்த விதத்தில் உதவப்படக்கூடும்?
பெற்றோரிடமிருந்து உதவி
டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளையின் பெற்றோராயிருக்கும் சிலர் குற்றமுடையவர்களாக உணருகின்றனர்; அதோடு, தங்கள் பிள்ளைகளின் நிலைக்காகத் தங்கள்மீதே பழி சுமத்திக் கொள்கின்றனர். நீங்கள் இவ்விதம் உணர்ந்தால், நம்மில் எவருமே பரிபூரணராய் இல்லை என்றும் நாம் அனைவரும் வித்தியாசமானோர் என்றும் உணருவதன் மூலம் அம் மனச்சோர்வை விட்டொழியுங்கள். நிறக்குருடு உள்ள ஒரு பிள்ளைக்கு, அதன் குறைபாட்டுடன் வாழ்வதற்கு உதவி எவ்வாறு தேவைப்படுமோ, அவ்வாறே டிஸ்லெக்ஸியா உடைய ஒரு பிள்ளைக்கும் உதவி தேவை என்பதை உணர்ந்தவர்களாய் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளையின் கல்வியில், ஒரு பெற்றோராக நீங்கள் வகிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கிறது.
டிஸ்லெக்ஸியா தற்போது தடுக்கப்படவோ, நிவாரணமளிக்கப்படவோ முடியாவிட்டாலும், அது குறைக்கப்படலாம். எப்படி? அன்டர்ஸ்டேன்டிங் டிஸ்லெக்ஸியாவின் ஆசிரியரான பேராசிரியர் டி. ஆர். மைல்ஸ் டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளை எதைச் சிரமமாகக் காண்கிறது என்பதை முதலில் குறிப்பாகக் கண்டறியும்படி பெற்றோருக்கு ஆலோசனை கூறுகிறார். அப்போது தங்கள் பிள்ளையின் வரம்புகள் என்ன என்பதைக்குறித்தும் எதை எதிர்பார்க்கலாம் என்பதைக் குறித்தும் ஒரு நிஜமான மதிப்பீட்டை அவர்களால் செய்ய முடியும். “ஒரு பிள்ளையால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டுமே செய்யும்படி கேட்கப்பட வேண்டும், அதைவிட மேலாகச் செய்யும்படி கேட்கப்படக்கூடாது” என்று ரீடிங் அண்ட் தி டிஸ்லெக்ஸிக் சைல்ட் ஆலோசனை கூறுகிறது. பரிவு காட்டுபவராயும் உற்சாகமளிப்பவராயும் இருப்பதன்மூலமும், குறிப்பான விதத்தில், பொருத்தமான கல்விக்கான ஏற்பாட்டைச் செய்வதன்மூலமும், டிஸ்லெக்ஸியாவால் ஏற்படும் விளைவுகளைப் பெற்றோர் குறைக்கக்கூடும்; அதேசமயத்தில், டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளை உணரும் பளுவைக் குறைக்கக்கூடும்.
ஆசிரியர்களிடமிருந்து உதவி
டிஸ்லெக்ஸியா என்பது ஒரு கற்கும் சிரமம் என்பதை நினைவுகூருங்கள். ஆகவே ஆசிரியர்கள், டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளைகளிடம் தங்கள் வகுப்புகளில் நேரத்தை எடுத்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சியெடுக்கவும் வேண்டும். நீங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் காரியத்தில் யதார்த்தமாய் இருப்பதன் மூலம் அவர்களுடைய மனமுறிவைக் குறைத்திடுங்கள். மொத்தத்தில், டிஸ்லெக்ஸியா உள்ள ஒரு பிள்ளை பெரிதாக வளர்ந்தபிறகும்கூட இன்னும் சப்தமாக வாசிப்பதை ஒரு பிரச்சினையாகக் காண்கிறது.
தோல்வி மனப்பான்மை உள்ளவராய் ஆகிவிடாதீர்கள். மாறாக, அவர்கள் செய்யும் எந்த முன்னேற்றத்திற்காகவும்—நிச்சயமாகவே அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்காகவும்—பிள்ளைகளைப் போற்றுங்கள். பிறகு, கண்மூடித்தனமாகப் புகழ்வதையும்கூட தவிருங்கள். கொஞ்சம் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் கண்டாலும், டிஸ்லெக்ஸியா உடைய ஒரு மாணவனிடம், “ஆம், நீ சில தவறுகள் செய்திருக்கிறாய் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீ நன்றாகச் செய்திருக்கிறாய் என்றுதான் நான் சொல்வேன்; கடந்த வாரத்தைவிட அது முன்னேற்றம் அடைந்துள்ளது, உன் இயலாமையை வைத்துப் பார்க்கும்போது, அது திருப்திகரமான ஒரு முடிவே” என்று கூறும்படி பேராசிரியர் மைல்ஸ் சிபாரிசு செய்கிறார். ஆனால் முன்னேற்றம் இல்லாதபோது, “ஆம், இன்னின்ன காரியங்கள் இன்னும் உனக்கு சிரமத்தை உண்டாக்குவதாய்த் தெரிகிறது; உனக்கு உதவி செய்வதற்கென்று வேறு ஏதாவது வழி இருக்கிறதாவென்று அலசியாராயலாம்” என்று கூறும்படி ஆலோசனை கூறுகிறார்.
டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளையின் வாசிப்பைப் பற்றி இழித்துரைக்கும் குறிப்புகளைக் கூறுவதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். புத்தகங்களையும் வாசிப்பையும் அனுபவிக்கும் வகையில் ஆக்குவதற்கு முயலுங்கள். எப்படி? மிகவும் மெதுவாய் வாசிக்கும் பிள்ளையொன்று, சீக்கிரம் தன்னுடைய கவனம் சிதறுவதற்குத் தன்னை அடிக்கடி அனுமதிப்பதால், பிள்ளை வாசிக்கும் வரியின்கீழே ஒரு மார்க்கரை, ஒருவேளை ஒரு சிறிய ரூலரைப் பிடித்துக்கொள்ளும்படி பெற்றோர், ஆசிரியர் ஆகிய இருவருமே ஆலோசனை சொல்லக்கூடும். வார்த்தையிலுள்ள எழுத்துக்களைத் தவறான வரிசையில் வாசிக்கும் பிரச்சினை காணப்பட்டால், “முதல் எழுத்து எது?” என்று தயவுடன் கேளுங்கள்.
டிஸ்லெக்ஸியா உடைய ஒரு பிள்ளையிடம், அதன் விடைகள் தவறு என்று அடிக்கடி அதன் கணக்கு ஆசிரியர் கூறும்போது, அது எந்தளவு உற்சாகமிழக்கச் செய்யும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். சற்று எளிதான கணக்குகளைச் செய்யும்படி கொடுப்பதன் மூலம், தோல்வி ஏற்படுத்தும் மனமுறிவை, கணக்கைச் சரியாகச் செய்வதனால் ஏற்படும் திருப்தியால் மாற்றீடு செய்வது எவ்வளவு சிறந்ததாய் இருக்கும்.
“டிஸ்லெக்ஸியா உடையவருக்கு உறுதுணையாய் இருப்பது, அவர் எல்லா புலன்களையும் பயன்படுத்திக் கற்பதே ஆகும்” என்று ஒரு புலமை பெற்ற ஆசிரியர் கூறுகிறார். பிள்ளை சரியாக வாசிப்பதற்கும் வார்த்தைகளை சரியாக எழுத்துக்கூட்டுவதற்கும் உதவ, பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவற்றை இணையுங்கள். “அம் மாணவன் கவனமாகப் பார்க்க வேண்டும், கவனமாக செவிகொடுக்க வேண்டும், அவன் எழுதுகையில் தன் கை அசைவுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும், மேலும் அவன் பேசுகையில் தன் வாய் அசைவுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்,” என்று பேராசிரியர் மைல்ஸ் விளக்குகிறார். இவ்வாறு செய்வதன் மூலம், டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளை, எழுத்து வடிவில் உள்ள ஓர் எழுத்தை தான் எழுதுவதற்கு அதன் ஒலி மற்றும் கை அசைவு ஆகிய இரண்டையும் வைத்து சமப்படுத்தும். அப் பிள்ளைக்குக் குழப்பமுண்டாக்கும் எழுத்துக்களை வேறுபடுத்திப் பார்க்க உதவுவதற்கு, ஒவ்வொரு எழுத்தையும் அவ்வெழுத்தின் வெவ்வேறு புள்ளியில் இருந்து எழுத ஆரம்பிக்கும்படி கற்பியுங்கள். “நல்ல பலன் கிடைப்பதற்கு, ஒவ்வொரு [டிஸ்லெக்ஸியா உடைய] பிள்ளையும், ஒரு மாணவனுக்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்” என்று ரீடிங் அண்ட் தி டிஸ்லெக்ஸிக் சைல்ட் சிபாரிசு செய்கிறது. விசனகரமாக, இவ்வாறு செய்வதை சூழ்நிலைகள் அரிதாகவே அனுமதிக்கின்றன. இருந்தபோதிலும், டிஸ்லெக்ஸியா உடையவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ளலாம்.
சுய-உதவி
உங்களுக்கு டிஸ்லெக்ஸியா இருந்தால், நீங்கள் வாசிக்கவிருக்கும் அதிகப்படியான பகுதியை, உங்கள் சக்தி புதுப்பிக்கப்பட்ட நிலையில் நீங்கள் இருக்கும்போது செய்ய முயலுங்கள். டிஸ்லெக்ஸியா உடைய மாணவர்கள் சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்து வாசிக்கையில் நல்ல பலனைப் பெறுகின்றனர் என்றும், அதற்குப் பிறகு அவர்களது வாசிப்பு, தரத்தில் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். “ஒவ்வொரு நாளும் ஒழுங்காக, ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட படிப்பு, என்றாவது ஒரு நாள் கடின முயற்சி எடுத்துப் படிப்பதைக் காட்டிலும் பயனுள்ளதாய் இருப்பதாகத் தெரிகிறது” என்று டிஸ்லெக்ஸியா அட் காலெஜ் குறிப்பிடுகிறது. நீங்கள் நன்கு வாசிப்பதற்கும் எழுத்துக்கூட்டுவதற்கும் காலம் எடுக்கும் என்பது மெய்தான். ஆனால் விடாமுயற்சி செய்யுங்கள்.
கையடக்கமான டைப்ரைட்டரையோ, இன்னும் சிறந்த விதத்தில், நீங்கள் பதிவு செய்யும் எழுத்துக்களைச் சரிபார்க்க உங்களுக்கு உதவும்படியான ஒரு புரோகிராமுடன் கூடிய ஒரு கம்ப்யூட்டரையோ பயன்படுத்திக்கொள்ளுங்கள். தகவலை எப்படி ஒழுங்கமைப்பது என்றும் அதைத் திறமையுடன் எப்படி பயன்படுத்துவது என்றும் கற்றுக்கொள்வதோடு இதைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.—பக்கம் 13-ல் உள்ள பெட்டியைக் காண்க.
ஆடியோகேஸட்டுகளில் பதிவாகி இருப்பவற்றைக் கேட்பதன் மூலம் புத்தகங்களை அனுபவியுங்கள். உண்மையில், இப் பத்திரிகையும் அதன் துணைப்பத்திரிகையுமான காவற்கோபுரம், முழு பைபிள் வெளியிடப்படுவதைப் போலவே, கேஸட்டுகளில் ஒழுங்காக இப்போது பல மொழிகளில் வெளியிடப்படுகிறது.
பெட்டியில் கூறப்பட்டவற்றை வாசித்த பிறகு உங்களுக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதாக நீங்கள் நம்பினால், அப் பிரச்சினையை மறைக்காதீர்கள். அதை ஏற்றுக்கொண்டு, கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு தயார் செய்துகொண்டிருக்கலாம். பலரைப் போன்றே, அச் சூழலின் நெருக்கடிநிலை, நீங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவிப்பதைக் கடினமாக்குவதாகக் காணலாம். போவதற்கு முன்னதாகவே பயிற்சி நேர்காணல் சிலவற்றை ஏன் பழகிப்பார்க்க முயலக்கூடாது?
டிஸ்லெக்ஸியா ஏற்படுத்தும் சிரமங்களை எளிதில் சரிசெய்ய முடிவதில்லை. ஆனால் மூளையானது, அற்புதமான உறுப்பாய் இருப்பதால், அப் பிரச்சினையை இழப்பீடு செய்கிறது. ஆகவே நிரந்தரமாய் மகிழ்ச்சியின்றி இருக்கத் தேவையில்லை. ஜூலி, வனெஸா, டேவிட் ஆகிய அனைவருமே தங்களுக்கு ஏற்பட்ட மனமுறிவை மேற்கொள்வதில் கடினமாக உழைத்தனர். நீங்களும் அவ்விதமே செய்யலாம். உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட சிரமம் நீங்கள் கற்றுக்கொள்வதிலிருந்து உங்களைத் தடுக்கத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சரியாக வாசிக்க, எழுத, மற்றும் எழுத்துக்கூட்ட விடாமுயற்சி செய்யுங்கள். அவ்விதம் செய்வது டிஸ்லெக்ஸியாவின் மனமுறிவை நீங்கள் மேற்கொள்ள உங்களுக்கு உதவும்.
[பக்கம் 13-ன் பெட்டி]
சுய-ஒழுங்கமைப்புக்கான ஆலோசனைகள்
பின்வருபவற்றைப் பயன்படுத்துங்கள்:
• ஒரு தனிப்பட்ட அறிவிப்புப் பலகை
• ஒரு திட்ட காலண்டர்
• ஓர் இன்-டிரே
• ஒரு தனிப்பட்ட கோப்பு
• ஒரு டைரி
• ஒரு முகவரி புத்தகம்
[அடிக்குறிப்பு]
a எழுதுவதோடு தொடர்புடைய கற்கும் சிரமங்களை விவரிக்க “டிஸ்கிரேஃபியா” என்ற வார்த்தையையும், கணிதத்தோடு தொடர்புடையவற்றை விவரிக்க “டிஸ்கேல்குலியா” என்ற வார்த்தையையும் சில வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
[பக்கம் 14-ன் பெட்டி]
பிள்ளைகளில் டிஸ்லெக்ஸியாவை எப்படி கண்டுகொள்வது
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வயது தொகுதியினருக்கான கேள்விகளில் மூன்று அல்லது நான்குக்கு ஆம் என்று நீங்கள் பதிலளித்தால், சம்பந்தப்பட்ட பிள்ளைக்கு ஓரளவு டிஸ்லெக்ஸியா இருப்பது சாத்தியமாகும்.
8அல்லது அதற்கும் குறைந்த வயதுடைய பிள்ளைகள்:
பேசக் கற்றுக்கொள்வதில் அவர்கள் தாமதமாய் இருந்தார்களா?
வாசிப்பதில் அல்லது எழுத்துக்கூட்டுவதில் குறிப்பிட்ட சிரமம் இன்னும் அவர்களுக்கிருக்கிறதா? இது உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா?
வாசிப்பது மற்றும் எழுத்துக்கூட்டுவதோடு தொடர்பில்லாத காரியங்களில் அவர்கள் உற்சாகமானவர்களாயும் அறிவுள்ளவர்களாயும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?
எழுத்துக்களையும் எண்களையும் தவறான பக்கத்திலிருந்து மாற்றி எழுதுகிறார்களா?
கணக்குகள் செய்யும்போது, அவர்களுடைய வயதுக்குத் தேவைப்படுவதைவிட நீண்ட காலமாக கனசதுரக் கட்டைகளின், விரல்களின், அல்லது தாளின்மீது குறியீடுகள் போடுவதன் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறதா? பெருக்கல் வாய்ப்பாடுகளை நினைவில் வைப்பதற்கு வழக்கத்துக்கு மாறான சிரமம் அவர்களுக்கு இருக்கிறதா?
வலமிருந்து இடமாகக் கூறுவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கிறதா?
அவர்கள் வழக்கத்துக்கு மாறாக ஒழுங்கில்லாமல் இருக்கின்றனரா? (டிஸ்லெக்ஸியா உடைய பிள்ளைகள் அனைவரும் ஒழுங்கில்லாமல் இருப்பதில்லை.)
8 முதல் 12 வரையான வயதுப் பிள்ளைகள்:
எழுத்துக்கூட்டுவதில் வழக்கத்துக்கு மாறான பிழைகள் ஏற்படுகின்றனவா? சில சமயங்களில் அவர்கள் வார்த்தைகளிலிருந்து எழுத்துக்களை விட்டுவிடவோ, தவறான வரிசையில் எழுதவோ செய்கின்றனரா?
அவர்கள் வாசிப்பதில் தெளிவாய்த் தெரியும் கவனக்குறைவு பிழைகளை விடுகின்றனரா?
அவர்களது வயதுப் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப்படுவதைக் காட்டிலும் புரிந்து வாசிப்பதில் தாமதமாயிருப்பதாகத் தோன்றுகிறதா?
பள்ளியில் கரும்பலகையிலிருந்து பார்த்தெழுதுவதில் அவர்களுக்கு சிரமம் உள்ளதா?
உரக்க வாசிக்கும்போது, வார்த்தைகளையோ, அல்லது ஒரு வரி முழுவதையுமோ அவர்கள் விட்டுவிடுகின்றனரா, அல்லது அதே வரியை இரண்டு தடவை வாசிக்கின்றனரா? உரக்க வாசிப்பதை அவர்கள் வெறுக்கின்றனரா?
பெருக்கல் வாய்ப்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்வதை இன்னும் அவர்கள் சிரமமாகக் காண்கின்றனரா?
திசையைப் புரிந்துகொள்வதில் இடது மற்றும் வலதைக் குழப்பிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் மோசமாய் இருக்கின்றனரா?
அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவுபடுகிறதா, தாழ்ந்தளவு சுயமரியாதை இருக்கிறதா?
[படத்திற்கான நன்றி]
—பிரிட்டிஷ் டிஸ்லெக்ஸியா அசோஸியேஷனால் பிரசுரிக்கப்பட்ட அவேர்னஸ் இன்ஃபர்மேஷன், மற்றும் பிராட்காஸ்ட்டிங் ஸப்போர்ட் சர்வீஸஸ், சேனல் 4 டெலிவிஷன், லண்டன், இங்கிலாந்தால் தயாரிக்கப்பட்ட டிஸ்லெக்ஸியா.
[பக்கம் 12-ன் படம்]
கவனத்தை ஒருமுகப்படுத்த, வாசிக்க வேண்டிய வரியின்கீழே ஒரு மார்க்கரைப் பிடித்துக்கொள்ளுங்கள்