பேரழிவின் விளைவு
ஓர் அகதியாக இருப்பதென்பது எதைப்போன்றதாய் இருக்கும்? இவ்வாறு கற்பனை செய்து பார்க்க முயலுங்கள்: நீங்கள் சமாதானமாக வாழ்ந்துவருகிறீர்கள், ஆனால் திடீரென உங்களது முழு உலகமே மாறிவிடுகிறது. ஒரே இரவில், அண்டை வீட்டுக்காரர்கள் விரோதிகளாகின்றனர். உங்களது வீட்டைக் கொள்ளையடித்து, எரித்துப்போடப்போகும் ராணுவ வீரர்கள் வருகிறார்கள். மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு உயிருக்காக தப்பி ஓடுவதற்கு உங்களுக்குப் பத்து நிமிடம் இருக்கிறது. ஒரே ஒரு சிறிய பையை மட்டும்தான் உங்களால் எடுத்துக்கொண்டு போக முடியும், ஏனெனில் பல கிலோமீட்டருக்கு நீங்கள் அதைச் சுமந்து செல்ல வேண்டியதாயிருக்கும். அதில் எவற்றைப் போடுவீர்கள்?
துப்பாக்கிக் குண்டு மற்றும் பீரங்கியினுடைய சத்தத்தின் மத்தியில் நீங்கள் அவ்விடத்தை விட்டுச் செல்கிறீர்கள். தப்பி ஓடும் மற்றவர்களோடு நீங்கள் சேர்ந்துகொள்கிறீர்கள். நாட்கள் கடந்து செல்கின்றன; பசியோடும் தாகத்தோடும் மிதமிஞ்சிய சோர்வோடும் கால்களைத் தேய்த்தபடி நடந்து செல்கிறீர்கள். களைப்புற்றிருந்தாலும், தப்பிப்பிழைப்பதற்கு நீங்கள் உங்களது உடலை வலுக்கட்டாயமாக தள்ளிச்செல்ல வேண்டும். தரையில் தூங்குகிறீர்கள். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று வயல் ஒன்றில் தேடுகிறீர்கள்.
பாதுகாப்பான ஒரு நாட்டிற்கு வந்து சேருகிறீர்கள், ஆனால் எல்லைக் காவலாளிகள் உங்களை கடந்து செல்ல அனுமதிப்பதில்லை. உங்கள் பையைக் குடைந்து பார்த்து விலைமதிப்புள்ள எல்லாவற்றையும் அபகரித்துவிடுகிறார்கள். நீங்கள் மற்றொரு செக் பாயின்ட்டை கண்டுபிடித்து, எல்லையைக் கடக்கிறீர்கள். முட்கம்பியால் வேலியிடப்பட்ட அழுக்கடைந்த அகதி முகாம் ஒன்றில் நீங்கள் போடப்படுகிறீர்கள். உங்களைப்போன்ற அதே அவல நிலையிலிருக்கும் மற்றவர்களால் நீங்கள் சூழப்பட்டிருந்தாலும், தனிமையாகவும் குழப்பமாகவும் உணருகிறீர்கள்.
உங்களது குடும்பத்தின் தோழமையும் நண்பர்களின் தோழமையும் இல்லாமல் தவிக்கிறீர்கள். வெளி உதவியின்பேரில் முழுமையாகவே சார்ந்திருப்பதாக உங்களையே நீங்கள் காண்கிறீர்கள். வேலையும் இல்லை, செய்வதற்கும் எதுவுமே இல்லை. நம்பிக்கையற்ற தன்மை, மனமுறிவு, கோபம் ஆகிய உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுகிறீர்கள். முகாமில் இருப்பது அநேகமாய் தற்காலிகமானது என்பதை அறிந்து உங்களது எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படுகிறீர்கள். என்னயிருந்தாலும், முகாம் ஒரு வீடு அல்ல. எவருமே விரும்பாத வெயிட்டிங் ரூமைப்போலவோ ஜனக்கிடங்கைப்போலவோ அது இருக்கிறது. நீங்கள் புறப்பட்டுவந்த இடத்திற்கே மறுபடியும் சென்றுவிடும்படி நிர்ப்பந்திக்கப்படுவீர்களோ என்று யோசிக்கிறீர்கள்.
இதுதான் கோடிக்கணக்கானோரின் இன்றைய அனுபவம். ஐநா அகதிகள் ஹை கமிஷனின்படி (UNHCR), உலகம் முழுவதுமாக இரண்டு கோடியே எழுபது லட்சம் ஜனங்கள் போரிலிருந்தோ துன்புறுத்துதலிலிருந்தோ தப்பி ஓடியிருக்கிறார்கள். கூடுதலான இரண்டு கோடியே முப்பது லட்சம் ஜனங்கள் தங்களது சொந்த நாடுகளிலேயே இடம் பெயர்ந்திருக்கின்றனர். மொத்தத்தில், பூமியிலுள்ள ஒவ்வொரு 115 நபர்களுக்கும் ஒருவர், தப்பி ஓடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். பெரும்பான்மையோர் பெண்களும் பிள்ளைகளும் ஆவர். போரினாலும் பேரழிவினாலும் அகதிகளான அவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதன் காரணத்திற்காக அல்லாமல் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை விரும்பாத உலகத்தில், அவர்களைப் புறக்கணிக்கும் உலகத்தில், சூழ்நிலைமையின் கைகளில் திக்கற்று விடப்படுகின்றனர்.
அவர்களது பிரசன்னம் உலகளாவிய தீவிர எழுச்சியின் அடையாளம். UNHCR இவ்வாறு குறிப்பிடுகிறது: “அகதிகள், சமூக சிதைவின் இறுதியான அறிகுறியாக இருக்கின்றனர். நாட்டின் சமூக மற்றும் அரசியல் சிதைவின் அளவைத் தீர்மானிக்கும், ஏது மற்றும் விளைவு சங்கிலியின் மிகத் தெளிவான கடைசி இணைப்பாக அவர்கள் இருக்கின்றனர். உலகளாவிய விதத்தில் பார்க்கும்போது, மனித நாகரிகத்தின் தற்கால நிலையைச் சுட்டிக்காட்டுபவர்களாக இருக்கின்றனர்.”
பிரச்சினை, முன்னொருபோதும் இராத அளவில் இருப்பதாகவும், முடிவடையும் எந்த அறிகுறியும் இல்லாதபடி வளர்ந்துவருவதாகவும் நிபுணர்கள் சொல்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கியிருப்பது எது? ஏதேனும் தீர்வு இருக்கிறதா? பின்வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளை ஆராயும்.