யெகோவாவின் பலத்தால் அவலத்தை மேற்கொள்ளுதல்
ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்
இவ்வாண்டு பிப்ரவரியில், ஸ்பெய்னில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பைல் சபையிலிருந்து பலர், அருகிலுள்ள சியரா நிவாடா மலைப்பகுதியில் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நன்னாளை அனுபவித்தனர். ஆனால் அவர்கள் வந்துசேர வேண்டிய இடத்திலிருந்து ஐந்தே கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய பேருந்து வந்துகொண்டிருந்த சந்துக்குள் குறுக்கே நுழைந்துவிட்ட ஒரு கார், நேருக்குநேர் மோதிவிட்டது. அப்பொழுது ஒரு வெடிசப்தம் கேட்டது, அப் பேருந்து தீச்சுடரால் சூழப்பட்டது. சில பயணிகள் சரியான நேரத்தில் வெளியேற முடிந்தது, ஆனால் பேருந்தின் பின்புறத்தில் இருந்த பலர் புகையால் சூழப்பட்டு இறந்தனர்.
மொத்தத்தில், நான்கு முழுநேர ஊழியர்களும் பல சிறு பிள்ளைகளும் உட்பட, 26 சாட்சிகள்—கிட்டத்தட்ட பைல் சபையின் கால் பங்கு பேர்—தங்கள் உயிரை இழந்தனர். ஸ்பெய்ன் அரசர், குவான் கார்லோஸ் பைலின் மேயருக்குத் தான் அனுப்பிய தந்தியில்: “அவலமான விபத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எங்களுடைய உள்ளார்ந்த இரங்கலைக் குறித்து நிச்சயமாயிருங்கள். இத் துயரமான கணங்களில், எங்களுடைய மிக ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆதரவையும் விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தயவுசெய்து தெரிவியுங்கள்” என்று செய்தியனுப்பினபோது, பெரும்பான்மையான ஸ்பானியர்களின் உள்ளுணர்வுகளை எதிரொலித்தார்.
சவ அடக்க ஆராதனைக்கு ஆஜரான ஆயிரக்கணக்கானோரில் சிலரது மனங்களில் இருந்த ஒரு கேள்வியானது, ஏன் அப்படிப்பட்ட அவலங்கள் சம்பவிக்கின்றன? ‘சமயத்தாலும் எதிர்பாரா சம்பவத்தாலும்’ ஏற்படும் விபத்துகள், மற்ற எவரையும் பாதிப்பதுபோலவே யெகோவாவின் மக்களையும் பாதிக்கலாம் என்பது தெளிவாயுள்ளது. (பிரசங்கி 9:11, 12, NW) இருந்தபோதிலும், அப்படிப்பட்ட அவலங்கள் விரைவில் ஒழிந்துபோய்விடும் என்று யெகோவா வாக்களிக்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.
ஸ்பெய்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகக் குடும்ப அங்கத்தினரில் பலரும், நாட்டின் பிற பாகங்களிலுள்ள சாட்சிகளில் ஆயிரக்கணக்கானோரும் உள்ளூர் சகோதரர்களுக்கு ஆறுதலும் ஆதரவும் அளிக்க பைலுக்குப் பயணம் செய்தனர். பைலின் மக்களும், உள்ளூர் மற்றும் அதையடுத்த வட்டார அதிகாரிகளும் சாட்சி குடும்பங்களுக்கு நேரிட்ட துக்கத்தில் பங்கேற்கவும் செய்தனர். துக்கத்தில் இருந்த சாட்சிகளின் மனோபலத்தினால், பார்த்துக்கொண்டிருந்த அநேகர் கவரப்பட்டனர்.
“பல்லாண்டுகளாய் சாட்சிகளைப் பற்றி எனக்குத் தெரியும், அதோடு, நான் ஓர் அறியொணாமைக் கொள்கையாளனாய் இருந்தபோதிலும், உங்கள் விசுவாசத்தைப் பார்த்து நான் வியப்படைகிறேன். அவ் விபத்து சம்பவித்தபோது, மதத் தொடர்பாகவும், மனிதத் தொடர்பாகவும் உங்களுக்கிருக்கும் ஒத்திசைவு, பிற தொகுதிகளை விட மேம்பட்ட வகையில் நீங்கள் அந்த அவலத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவி செய்யும் என்று உடனடியாக நான் நினைத்தேன். துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு முழு நகரமும் ஆதரவு தெரிவித்திருப்பதை நான் பார்த்துவிட்டேன். ஒருவேளை முன்பு, உங்களின் நிலைநிற்கையைக் குறித்து மக்கள் தப்பபிப்பிராயம் உடையவர்களாய் இருந்திருக்கலாம், ஆனால் இவை யாவும் மறைந்துவிட்டன என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சாட்சியாய் இராத ஒருவர் புரிந்துகொள்வதற்குக் கடினமாயுள்ள ஓர் உள்பலம் உங்களுக்கிருக்கிறது” என்று பைலின் மேயர் ஆன்டோன்யோ கோமஸ் குறிப்பிட்டார்.
ஸ்பெய்ன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக சவ அடக்கத்துக்கு ஆஜராகியிருந்த பொதுநலத் துறையின் மந்திரியான ஜோஸ் ஹோசே போரெல் கூறினார்: “எதிர்பாரா சம்பவம் ஒன்றில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட தங்கள் குடும்பம் முழுவதையும் இழந்திருப்பவர்களுக்கு நீங்கள் என்ன ஆறுதல் கூற முடியும்? அவர்களுடைய விசுவாசத்திலிருந்து ஏற்கெனவே அவர்கள் பெற்றிருப்பதைவிட மேம்பட்ட ஆறுதலை ஒருவர் அளிக்க முடியாது. . . . வியக்கத்தக்க விசுவாசம் உங்களுக்கு இருக்கிறது.”
“ஒருவருக்கொருவர் ஆறுதல் செய்யுங்கள்”
அவர்கள், “தங்கள் விசுவாசத்திலிருந்து பெற்றிருந்தது” என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக, ‘எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் ஆறுதல் செய்யும் சகலவிதமான ஆறுதலின் தேவனாயிருக்கிற’ யெகோவாவிடமிருந்து ஆறுதலைக் கண்டடைந்தனர். (2 கொரிந்தியர் 1:3, 4) தாங்கள் துக்கமாயிருந்தபோதிலும், ‘ஒருவரையொருவர் ஆறுதல் செய்து ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்’ என்று தெசலோனிக்கேயருக்கு பவுல் கூறின வார்த்தைகளைத் தங்களுக்குப் பொருத்திக் கொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் ஆறுதல் செய்வதற்கு பலத்தைக் கண்டடைந்தனர்.—1 தெசலோனிக்கேயர் 5:11, NW.
தங்கள் உறவினர்களில் எட்டுப் பேர் வரை இழந்திருந்த சில கிறிஸ்தவ சகோதர சகோதரிகள், அச் சபையைச் சேர்ந்த, இழப்புக்காளான மற்றவர்களைச் சந்திக்கச் சென்றதைக் காண்பது நெகிழ்விக்கும் ஓர் அனுபவமாய் இருந்தது. “நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கையில், அழுதோம். ஆனால் அக் கண்ணீரின் மூலமாக, உயிர்த்தெழுதல் நம்பிக்கையை நாங்களே நினைப்பூட்டிக்கொண்டோம், அப்போது ஆறுதலைப் பெற்றோம்” என்று தனக்கிருந்த இரண்டு பிள்ளைகளையும் இழந்த, நடத்தும் கண்காணியான ஃபிரான்சிஸ்கோ சாயெஸ் கூறினார்.
“எங்கள் பிரசங்க நடவடிக்கையை நாங்கள் புறக்கணித்துவிடவில்லை, அதோடு, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி, இறந்தவர்களின் உறவினர்களாய் இருந்த, சாட்சிகளல்லாதவர்களைச் சந்திப்பதற்கு ஒரு விசேஷ முயற்சி எடுத்திருக்கிறோம். என்னைக் கேட்டால், பிரசங்கிக்க நான் விரும்பினேன், ஏனெனில் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன் மூலமாக நான் மேம்பட்ட வகையில் உணருவேன் என்று எனக்குத் தெரிந்தது. நிச்சயமாகவே, போகும்போது நான் அழுதுகொண்டே சென்றபோதிலும், ஆறுதல் அடைந்தவனாய் வீடு திரும்பினேன்” என்று ஃபிரான்சிஸ்கோ தொடர்ந்து கூறினார்.
பைல் மக்கள் இந்தச் சாட்சி பகரும் வேலைக்கு மிகவும் சாதகமாய்ப் பிரதிபலித்தனர். அந்த விபத்து நடந்து ஒரு வாரம் கழித்து, இரண்டு மகள்களையும் நான்கு பேரப்பிள்ளைகளையும் இழந்த துக்கத்தில் இருந்த என்கார்னா, சமீபத்தில் தான் ஒரு வேதப்படிப்பைத் துவக்கியிருந்த ஒரு பெண்ணைச் சந்தித்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்துவிட்டிருந்த இப் பெண்ணுக்கு வேதப்பூர்வமான ஆறுதலை என்கார்னா கொடுத்து வந்திருந்தார். நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டிலிருந்து தொடர்ந்து கலந்தாலோசித்து வருகையில், “இப்போது நாம் ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
உலகளாவிய சகோதரத்துவத்திலிருந்தும் ஆறுதல் உடனடியாக வந்தது. “நாங்கள் பெற்றிருக்கும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் தந்திகளால் முழு சபையும் அவ்வளவாய் உற்சாகமடைந்துள்ளது. அவற்றையெல்லாம் நேரடியாகவே எங்கள் வீட்டில் பட்டுவாடா செய்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு வேனை (van) அந்தத் தபால் நிலையம் அனுப்பவேண்டியுள்ளது. சகோதரர்களின் அன்பான அக்கறைக்காக நாங்கள் மிகவும் நன்றியுடனிருக்கிறோம்” என்று அச் சபையின் செயலர் ஃபிரான்சிஸ்கோ காப்பியா கூறினார்.
அவலத்திலிருந்து நம்பிக்கை
அப்படிப்பட்ட ஓர் அவலத்திலிருந்து ஏதாவது நன்மை வரக்கூடுமோ? “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்” என்று பண்டைய ராஜா சாலொமோன் எழுதினார். (பிரசங்கி 7:4) இந் நியமத்திற்கு ஒத்துப்போகும் வகையில், பைலில் சம்பவித்த அவலம், தங்கள் கடவுளுடன் உள்ள உறவைப் பற்றி இன்னும் உள்ளார்ந்த விதத்தில் சிலரைச் சிந்திக்க வைத்துள்ளது. விசுவாசத்தில் இல்லாத ஒரு கணவரும், தன் ஆறு பிள்ளைகளில் இருவரை அவ்விபத்தில் இழந்துவிட்டவருமான ஃபௌஸ்டினோ, தன் மனைவி டோலோரெஸிடம் கூறினார்: “நான் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். என் பிள்ளைகளைப் புதிய உலகத்தில் நான் பார்க்க விரும்புவதால், பைபிளைப் படிக்க ஆரம்பிக்கப் போகிறேன்.”
பைலில் உள்ள நம் சகோதரர்களும் சகோதரிகளும் தங்கள் துக்கத்திலிருந்து சீக்கிரமாய் மீள மாட்டார்கள் என்றாலும், அவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்தும், ஆறுதல் பெற்றும் வருகிறார்கள். தமது ஆவியைக் கொண்டும், அன்பான சகோதர சகோதரிகள் பலரின் ஆதரவைக் கொண்டும் யெகோவா அவர்களைப் பலப்படுத்தி வருகிறார். அவர்களுக்காக நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் தொடர்ந்து நம் பரம தகப்பனைச் சென்றடைகின்றன.
[பக்கம் 26-ன் படங்கள்]
இறந்தவர்களில் நால்வர்