மருந்துகளை ஞானமாய் பயன்படுத்துவீர்
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
தனக்கு தலைவலியும் வயிற்றுவலியும் இருப்பதாய் அப் பெண் கூறினாள். அம் மருத்துவர் சுருக்கமாய் அவளோடு பேசினார். பிறகு அவர் மலேரியாவுக்கென்று மூன்றுநாட்களுக்குத் தொடர்ச்சியாக எடுக்கத் தேவைப்படும் ஊசியையும், தலைவலியை நிறுத்துவதற்கென பாரா அஸிட்டமால் (அஸிட்டமினோஃபென்) மருந்தையும், ஒருவேளை வயிற்றுப்புண்ணாய் இருந்திருக்கலாம் என்பதால் அதற்கு நிவாரணம் பெறுவதற்கென இரு மருந்துகளையும், அவள் படும் கவலையிலிருந்து விடுபடுவதற்கென உள அமைதியூக்கிகளையும், முடிவாக, மேற்கூறப்பட்ட எல்லாவற்றோடும் சேர்த்து, மல்ட்டிவிட்டமின்களையும் எழுதிக் கொடுத்தார். அதிக பணம் செலவானது, ஆனால் அப் பெண் ஆட்சேபிக்கவில்லை. தன் பிரச்சினைகளை அம் மருந்துகள் தீர்க்கும் என்ற நம்பிக்கையில், மகிழ்ச்சியுடன் அவள் புறப்பட்டாள்.
அப்படிப்பட்ட அணுகுதல்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் புதிதானவையல்ல. பொது உடல்நல மையங்களைச் சேர்ந்த உடல்நல பணியாளர்கள், ஒரு நோயாளியைச் சந்திக்கும் ஒவ்வொரு சமயத்திலும் சராசரியாக 3.8 வெவ்வேறு மருந்துகளை எழுதிக்கொடுப்பதாய் அங்குள்ள ஒரு பெரிய தேசத்தில் எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. உண்மையில், பலருக்கு, மிகுதியான மருந்துகளை எழுதிக்கொடுப்பவரே ஒரு நல்ல மருத்துவர் ஆவார்.
ஆரோக்கியச் சூழ்நிலை என்னவாயிருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, மேற்கு ஆப்பிரிக்கர் மருந்தின்மீது நம்பிக்கை கொள்வது ஒருவேளை புரிந்துகொள்ளத்தக்கதே. 40-க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் ஜான் கந்தர் முந்தைய காலங்களைப் பற்றி எழுதினார்: “இந்த ஸ்லேவ் கோஸ்ட் . . . கறுப்பர்களை மட்டும் கொல்லவில்லை; அது வெள்ளையர்களையும் கொன்றது, மேலும் ‘வெள்ளையனின் கல்லறை’ என்ற பட்டப்பெயர் பெற்றிருக்கும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாய் உள்ளது. பல நூற்றாண்டுகளாக, கினீ கோஸ்ட்டின் வெல்ல முடியாத அரசனாக கொசு இருந்தது. மஞ்சள் காய்ச்சல், கருநீர்க் காய்ச்சல், மலேரியா ஆகியவை இந்த அரசனின் தெரிந்தெடுக்கப்பட்ட மற்றும் தீய ஆயுதங்களாக இருந்தன. வெஸ்ட் கோஸ்ட்டின் நாசகரமான அழிவை ஏற்படுத்தும் சூழ்நிலை எக்காலத்தையோ பற்றிய பதிவல்ல, ஆனால் வாழ்ந்துவரும் ஆட்களைப் பற்றிய நினைவு. சமீபத்தில், நைஜீரியாவுக்கு நியமிக்கப்பட்டிருந்து, தனது ஓய்வூதியத்தைப் பற்றி விசாரித்த ஓர் அயல்நாட்டுப் பிரதிநிதியைப் பற்றி ஆர்வத்தைத் தூண்டும் செய்தித் துணுக்கு ஒன்று விளக்குகிறது. ‘ஓய்வூதியமா?’ என்று குடியேற்ற நாட்டு அலுவலகத்தைச் சேர்ந்த அவரது மேலதிகாரி பதிலுரைத்தார். ‘அன்பரே, நைஜீரியாவுக்குச் செல்பவரில் எவருமே ஓய்வு பெறும் வரையில் வாழ்வதில்லை.’ ”
சூழ்நிலை மாற்றமடைந்துள்ளது. இன்று, கொசுவால் பரவும் நோய்களை மட்டுமல்லாமல், பிற நோய்கள் பலவற்றையும்கூட எதிர்க்கும் மருந்துகள் உள்ளன. தட்டம்மை, கக்குவான் இருமல், டெட்டனஸ், டிப்தீரியா ஆகியவற்றால் இறந்தோரின் எண்ணிக்கையை தடுப்பு மருந்துகள் மட்டுமே தீவிரமாய்க் குறைத்திருக்கின்றன. பெரியம்மை ஒழிக்கப்பட்டிருப்பதற்காக தடுப்பு மருந்துகளுக்கு நன்றி. போலியோவும்கூட விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும்.
இன்று ஆப்பிரிக்கர் பலர் மருந்தின் பயன்பாட்டில் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமாயில்லை. மேற்கு ஆப்பிரிக்காவோடு அப்படிப்பட்ட நம்பிக்கை மட்டுப்பட்டதாயில்லை என்பது மெய்யே. ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு ஆண்டும் 5,500 கோடி மருத்துவக் குறிப்புகளை மருத்துவர்கள் எழுதுகின்றனர். பிரான்ஸில் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 பெட்டி மருந்துகளை வாங்குகின்றனர். ஜப்பானில் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 400 (ஐ.மா.) டாலருக்கும் மேல் மருந்துகளுக்காகச் செலவிடுகிறார்.
நன்மைகளுக்கு எதிராக தீமைகள்
மனிதகுலத்துக்கு உதவ நவீன மருந்துகள் அதிகத்தைச் செய்திருக்கின்றன. சரியாக உபயோகிக்கப்பட்டால், அவை நல்ல ஆரோக்கியத்தை முன்னேற்றுவிக்கும்; தவறாக உபயோகிக்கப்பட்டால், அவை தீங்கு விளைவிப்பதோடு, கொல்லவும் செய்யும். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில், மருந்துகளின் எதிர்விளைவால் சுமார் 3,00,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகின்றனர்; 18,000 பேர் இறக்கின்றனர்.
மருந்துகளை ஞானமாய் உபயோகிப்பதற்கு, எப்போதுமே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை உணர வேண்டியது அவசியம். எந்த மருந்தும், ஆஸ்பிரின்கூட, தீமைதரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒரே சமயத்தில் பல வகை மருந்துகளை உட்கொண்டால், பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகிறது. ஒரு மருந்து உங்கள் உடலில் வேலை செய்யும் விதத்தை உணவும் நீரும்கூட செல்வாக்கு செலுத்துகின்றன, மேலும் அதன் விளைவை அதிகரிக்கவோ செயலிழக்கச் செய்யவோ முடியும்.
பிற ஆபத்துகளும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட மருந்து உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எழுதிக்கொடுக்கப்பட்டபடி நீங்கள் மருந்து உட்கொள்ளாவிடில்—சரியான காலப்பகுதிக்கு சரியான அளவை உட்கொள்ளாவிடில்—அவை ஒருவேளை உங்களுக்கு உதவாமல் போகலாம், தீங்கும் விளைவிக்கலாம். உங்கள் மருத்துவர் தவறான மருந்தையோ, அனாவசியமான மருந்துகளையோ எழுதிக்கொடுத்தாலும் அதுவே ஏற்படலாம். நாள்பட்ட, தரக்குறைவான, அல்லது போலி மருந்துகளை எடுத்தாலும் உங்களுக்குத் தீங்கு ஏற்படும் ஆபத்திருக்கிறது.
ஆபத்துகளைக் குறைப்பதற்கு, நீங்கள் உட்கொள்ளும் மருந்து எதுவானாலும் அதைப் பற்றி முடிந்தவரை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். உண்மைகளை அறிவதன் மூலம் உங்களுக்கு அதிக நன்மை விளையலாம்.
நுண்ணுயிர்க் கொல்லிகள்—நன்மைகளும் தீமைகளும்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர்க் கொல்லிகளின் முன்னேற்றம் ஏற்பட்டதிலிருந்து, அவை கோடிக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றன. தொழுநோய், காசநோய், நிமோனியா, செங்காய்ச்சல், மேகநோய் போன்ற பயங்கரமான நோய்களை அவை வென்றிருக்கின்றன. பிற தொற்றுகளையும் குணமாக்குவதில் அவை ஒரு முக்கிய பாகத்தை வகிக்கின்றன.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த பேராசிரியரான மருத்துவர் ஸ்டூயர்ட் லீவீ கூறினார்: “[நுண்ணுயிர்க் கொல்லிகள்] மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. அவை மருத்துவ வரலாற்றைப் பெருமளவு மாற்றியிருக்கும் தனிக்காரணியாய் உள்ளன.” மற்றொரு மருத்துவ அதிகாரி கூறுகிறார்: “அவை நவீன மருத்துவம் கட்டப்படும் மூலைக்கல்லாய் உள்ளன.”
என்றபோதிலும், உங்கள் மருத்துவரிடம் அவசரமாகக் கேட்டு வாங்குவதற்கு முன்பு, அதன் எதிர்மறையான அம்சங்களை எண்ணிப்பாருங்கள். தவறாகப் பயன்படுத்தப்படும்போது, நுண்ணுயிர்க் கொல்லிகள் நன்மையைவிட தீமையையே அதிகம் ஏற்படுத்தும். ஏனெனில் நுண்ணுயிர்க் கொல்லிகள் உடலிலுள்ள பாக்டீரியாவைத் தாக்கி அழிப்பதன் மூலம் வேலை செய்கின்றன. ஆனால் அவை எப்பொழுதும் எல்லா தீய பாக்டீரியாவையும் அழிப்பதில்லை; சில வகை பாக்டீரியாக்கள் தாக்குதலை எதிர்த்து நிற்கலாம். எதிர்த்து நிற்கும் இவ் வகை பாக்டீரியாக்கள் தப்புவதோடு மட்டுமன்றி, பெருகி, ஆளுக்கு ஆள் கடந்துசெல்லலாம்.
உதாரணமாக, ஒரு காலத்தில் தொற்றிலிருந்து நிவாரணமளிப்பதில் பெனிசிலின் மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. இப்போது, எதிர்த்து நிற்கும் திறனுள்ள பாக்டீரியா வகைகள் அதிகமாகிவருவதன் காரணமாக, மருந்து நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பெனிசிலின் வகைகளை விற்பனை செய்கின்றன.
பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கு உண்மையிலேயே நுண்ணுயிர்க் கொல்லிகள் தேவைப்பட்டால், ஒரு தகுதிபெற்ற மருத்துவரால் எழுதிக்கொடுக்கப்பட்டவையா என்றும், ஒரு சட்டரீதியான இடத்திலிருந்து பெறப்படுகின்றனவா என்றும் நிச்சயப்படுத்திக்கொள்வீர். நுண்ணுயிர்க் கொல்லிகளை எழுதிக்கொடுக்கும்படி உங்கள் மருத்துவரை வற்புறுத்தாதீர்—எழுதிக்கொடுக்கப்பட்ட மருந்து உங்கள் நோய்க்கேற்றதுதானா என்பதை நிச்சயப்படுத்துவதற்காக சோதனைக்கூட ஆய்வுகளைச் செய்யும்படி ஆண் மருத்துவரோ அல்லது பெண் மருத்துவரோ விரும்பலாம்.
நீங்கள் சரியான காலப்பகுதிக்கு சரியான அளவை எடுக்க வேண்டியதும் முக்கியம். முடிவதற்கு முன்பே நீங்கள் நிவாரணமடைந்துவிட்டதுபோல் உணர்ந்தாலும்கூட, குறித்த காலத்துக்குத் தொடர்ச்சியாக எடுப்பதற்கென்று எழுதிக்கொடுத்த நுண்ணுயிர்க் கொல்லிகளின் அளவு முழுவதையும் நீங்கள் எடுக்க வேண்டும்.
ஊசிகள் மாத்திரைகளைவிட மேம்பட்டவையா?
“எனக்கு ஊசி போடணும்!” வளர்முக நாடுகளில் பணிபுரியும் உடல்நல பணியாளர் பலரால் இவ்வார்த்தைகள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு கேட்டுக்கொள்வதன் அடிப்படையானது, மருந்து நேரடியாக இரத்த ஓட்டத்தில் செலுத்தப்பட்டு, மருந்துகளையோ மாத்திரைகளையோவிட மிக சக்திவாய்ந்த நிவாரணமளிக்கிறது என்ற நம்பிக்கையாகும். சில நாடுகளில் உரிமம் பெறாத ‘ஊசிபோடும் மருத்துவர்களை’ சந்தைகளில் காண்பது பொதுவாயுள்ளது.
மருந்துகளும் மாத்திரைகளும் ஏற்படுத்தாத ஆபத்துகளை ஊசிகள் ஏற்படுத்துகின்றன. ஊசி சுத்தமாய் இராவிட்டால், மேகநோய், டெட்டனஸ், மற்றும் எய்ட்ஸாலும்கூட நோயாளி தொற்றப்படலாம். சுத்தமாயிராத ஊசியால் வலிமிகுந்த சீழ்க்கட்டியும் ஏற்படலாம். தகுதிபெறாத நபரால் ஊசிபோடப்பட்டால், அபாயங்கள் அதிகரிக்கின்றன.
உங்களுக்கு உண்மையிலேயே ஊசிபோடுவது தேவைப்பட்டால், மருத்துவரீதியில் தகுதிபெற்றவரால் போடப்படுகிறதா என்பதை நிச்சயப்படுத்துவீர். உங்களின் பாதுகாப்பிற்காக, ஊசி, ஊசிக்குழல் ஆகிய இரண்டுமே தூய்மையாக்கப்படுகின்றனவா என்பதை எப்பொழுதும் நிச்சயப்படுத்துவீர்.
போலி மருந்துகள்
உலகளாவிய மருந்து வழங்கீடு விற்பனை சார்ந்த தொழில்துறை, ஆண்டுக்கு சுமார் 17,000 கோடி டாலர் (ஐ.மா.) தரும் ஒரு பெரிய வணிகம் என்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. சூழ்நிலையைத் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆவலுடன், பழிபாவத்துக்கு அஞ்சாதோர் போலி மருந்தை உற்பத்தி செய்திருக்கின்றனர். போலி மருந்துகள் உண்மை மருந்துகளைப்போலவே இருக்கின்றன—அவற்றின் லேபல்களும் பேக்கேஜ்களும்கூட அப்படியே இருக்கின்றன—ஆனால் அவை ஒன்றுக்கும் உதவாதவை.
போலி மருந்துகள் எங்கும் இருக்கின்றன, குறிப்பாக அவை வளர்முக உலகில் பொதுவாய் உள்ளன; அவை அவல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நைஜீரியாவில், தொழில் சம்பந்தமான கரைப்பான் கலந்த வலிநீக்கும் தண்ணீர்மருந்தைக் குடித்தபிறகு, சிறுநீரகம் தோல்வியடைந்ததால் 109 பிள்ளைகள் இறந்தனர். மெக்ஸிகோவில், தீயில் சிக்கியோர், நிவாரணிகளாய்க் கருதப்பட்டவற்றில் அடங்கியிருந்த மரத்தூள், காப்பி, தூசி ஆகியவற்றால் வலிமிகுந்த தோல் தொற்றுகள் ஏற்பட்டு துன்புற்றனர். பர்மாவில், மலேரியா காய்ச்சலை எதிர்த்துப் போராடாத ஒரு போலி மருந்தை எடுத்ததன் விளைவாக கிராமத்தினர் அடங்கிய தொகுதிகள் மலேரியாவால் இறந்திருக்கலாம். “மிகவும் ஆபத்தில் இருப்பவர்கள், மீண்டும், நன்மதிப்புள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட திறன்மிக்க ஒரு மருந்தாகத் தோன்றியதை வாங்கும்போது, அது அதிக லாபகரமானது என்பதாக சில சமயங்களில் நினைப்பவர்களான மிகவும் ஏழையாய் இருப்பவர்கள்” என்று WHO கூறுகிறது.
போலி மருந்துகளிலிருந்து உங்களை எவ்வாறு நீங்கள் காத்துக்கொள்ள முடியும்? நீங்கள் வாங்குவது, ஆஸ்பத்திரியைச் சேர்ந்த மருந்துக் கடையைப் போன்ற பிரசித்திபெற்ற ஓர் இடத்திலிருந்து வருவதா என்பதை நிச்சயப்படுத்துவீர். தெருக்கடைகளில் கலப்படக்காரர்களிடமிருந்து வாங்காதீர். பெனின் சிட்டி, நைஜீரியாவைச் சேர்ந்த ஃபார்மசிஸ்ட் ஒருவர் எச்சரிக்கிறார்: “தெருக்கடைகளில் கலப்பட மருந்துகளை விற்பவர்களுக்கு, மருந்துகள் விற்பது வெறும் ஒரு தொழிலே. ஏதோ இனிப்பு வகைகள் அல்லது பிஸ்கட்டுகளைப் போன்றிருப்பதாய் அவர்கள் மருந்துகளை வழங்குகின்றனர். அவர்கள் கலப்படம் செய்யும் மருந்துகள் அடிக்கடி நாள்பட்டவையாய் அல்லது போலியாய் இருக்கின்றன. தாங்கள் விற்பனை செய்யும் மருந்துகளைப் பற்றி இவர்கள் ஒன்றும் அறியார்கள்.”
வறுமை பிரச்சினை
ஒருவர் பெறும் மருத்துவ சிகிச்சை, அவரிடமுள்ள பணத்தை வைத்து அடிக்கடி தீர்மானிக்கப்படுகிறது. பணத்தைச் சிக்கனப்படுத்துவதற்காகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், வளர்முக நாடுகளிலுள்ள மக்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே நேரடியாக மருந்துக் கடைகளுக்குச் சென்று, சட்டப்படி ஒரு மருத்துவக் குறிப்புச் சீட்டை அவசியப்படுத்தும் மருந்துகளை வாங்குகின்றனர். ஏனெனில் அந்த மருந்தை அவர்கள் முன்பு பயன்படுத்தியிருப்பதாலோ, அல்லது நண்பர்கள் அதை சிபாரிசு செய்வதாலோ, அவர்களுடைய நோய்க்குத் தேவையான மருந்து எது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விரும்புவது ஒருவேளை அவர்களுக்குத் தேவையான மருந்தாய் இராமலிருக்கலாம்.
மக்கள் பிற வழிகளிலும் சிக்கனமாயிருக்க முயலுகின்றனர். ஒரு மருத்துவர், ஆய்வுக்கூட பரிசோதனைக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட மருந்தை எழுதிக் கொடுக்கிறார். நோயாளி அச் சீட்டை மருந்துக் கடைக்கு எடுத்துச் செல்கிறார், ஆனால் விலை அதிகமாய் இருப்பதாகக் காண்கிறார். ஆகவே, குறைவுபடும் பணத்திற்கான வழியைத் தேடாமல், விலை குறைவாயுள்ள மருந்தை வாங்கலாம், அல்லது எழுதிக்கொடுக்கப்பட்ட மருந்துகளில் சிலவற்றை மட்டுமே வாங்கலாம்.
நீங்கள் உண்மையில் மருந்து உட்கொள்ள வேண்டுமா?
உங்களுக்கு உண்மையிலேயே மருந்து தேவைப்பட்டால், எதை எடுக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பீர். எழுதிக் கொடுக்கப்படும் மருந்தைப் பற்றி மருத்துவரிடமோ, மருந்துக் கடைக்காரரிடமோ கேள்விகள் கேட்க சங்கடப்படாதீர். அதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. எப்படியிருந்தாலும், சிரமத்துக்குள்ளாவது உங்கள் உடலாகவே இருக்கலாம்.
நீங்கள் உட்கொள்ளவேண்டிய மருந்தை சரியாக பயன்படுத்தாவிடில், நீங்கள் குணமடையாமற்போகலாம். எவ்வளவு உட்கொள்ள வேண்டும், எப்பொழுது உட்கொள்ள வேண்டும், எவ்வளவு காலத்துக்கு உட்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருப்பது அவசியம். அவ்வாறு உட்கொள்ளுகையில் என்ன வகையான உணவுகள், பானங்கள், பிற மருந்துகள், அல்லது நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்திருப்பது அவசியம். சாத்தியமான பக்க விளைவுகளைப் பற்றியும் அவ்வாறு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.
மருந்துகள், ஒவ்வொரு மருத்துவ பிரச்சினைக்கும் நிவாரணம் அளிப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்வீர். உங்களுக்கு மருந்து தேவைப்படாமலேயும் இருக்கலாம். WHO-வின் ஒரு பிரசுரமான உவர்ல்ட் ஹெல்த் பத்திரிகை கூறுகிறது: “தேவைப்படும்போது மாத்திரமே ஒரு மருந்தை உபயோகிப்பீர். ஓய்வும், நன்கு உண்பதும், நிறைய பருகுவதும் ஒரு நபர் நிவாரணமடைய அவருக்கு உதவ அடிக்கடி போதுமானதாய் இருக்கின்றன.”
[பக்கம் 12-ன் பெட்டி/படம்]
“ஆயிரம் நோய்க்குத் தேவை ஆயிரம் நிவாரணம்” என்று ஒரு ரோமப் புலவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இக்காலத்திலோ, ‘ஆயிரம் நோய்க்குத் தேவை ஆயிரம் மருந்துகள்’! என்று அப்புலவர் எழுதியிருந்திருக்கலாம். உண்மையில், நிஜமாகவோ, கற்பனையாகவோ, கிட்டத்தட்ட ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்து இருப்பதாய்த் தோன்றுகிறது. 5,000 முக்கியப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட, சுமார் 1,00,000 வகை மருந்துகள் உலகளவில் இருப்பதாக உலக வங்கி கூறுகிறது.
[பக்கம் 13-ன் பெட்டி/படம்]
மருந்தை மிதமாய் உட்கொள்ளல்
1. நாள்பட்ட மருந்துகளை உபயோகிக்காதீர்.
2. பிரசித்திபெற்ற ஓர் இடத்திலிருந்து வாங்குவீர். தெருக்கடையின் கலப்படக்காரர்களிடமிருந்து வாங்காதீர்.
3. விவரக் குறிப்புகள் உங்களுக்குப் புரிகிறதாவென்றும் அதைப் பின்பற்றுகிறீர்களாவென்றும் நிச்சயப்படுத்துவீர்.
4. மற்றொருவருக்கென எழுதிக்கொடுக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக்காதீர்.
5. ஊசிபோடும்படி வற்புறுத்தாதீர். வாய்வழியே எடுக்கப்படும் மருந்துகளும் அடிக்கடி அதேபோன்று வேலை செய்கின்றன.
6. மருந்துகளைக் குளிர்ச்சியான ஓரிடத்தில், சிறார்களுக்கு எட்டாதபடி வைப்பீர்.