வானொலி உலகை மாற்றியஒருகண்டுபிடிப்பு
இத்தாலியிலிருந்துவிழித்தெழு!நிருபர்
சுழல் துப்பாக்கிச்சூடு ஒன்று, இத்தாலிய நாட்டுப்புறத்தின் அமைதியை ஊடுருவியது. கூல்யெல்மோ மார்கோனி பயன்படுத்தி வந்த புராதன கருவி வேலை செய்தது என்பதை அந்தக் குறியீடு உறுதி செய்தது. ஓர் அலை செலுத்தியால் பிறப்பிக்கப்பட்டு வான்வெளிக்குச் செலுத்தப்பட்ட மின்காந்த அலைகள், இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் ஓர் அலை வாங்கியால் ஏற்கப்பட்டன. அப்போது 1895. அந்தச் சோதனை உள்ளடக்கிய அனைத்தையும் அப்போது எவராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அந்தச் சுழல் துப்பாக்கிச்சூடு, அப்போதிருந்து நம் உலகில் புரட்சிசெய்திருக்கிற ஒரு தொழில்நுட்பத்துக்கு—வானொலி தொடர்புக்கு—வழிதிறந்து வைத்தது.
மின்காந்த அலைகளின் இயல்புகள் ஏற்கெனவே பல அறிவியலாளர்களால் ஆராயப்பட்டிருந்தன. மின் சக்தியானது காந்த புலத்தை உண்டாக்கி முதலாவதிலிருந்து தனித்து ஆனால் அதற்கு அருகில் வைக்கப்பட்ட இரண்டாவது மின்வட்டத்தில் மின் சக்தியைத் தூண்ட முடியும் என்று 1831-ல், ஆங்கிலேய இயற்பியலாளர் மைக்கல் ஃபாரடே செய்து காட்டினார். அப்படிப்பட்ட காந்தப் புலங்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி, அலைகளாக—ஒரு குளத்தின் மீதுள்ள சிற்றலைகளைப்போல—ஆனால் ஒளியின் வேகத்தில் பரவ முடியும் என்ற கோட்பாட்டை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளராகிய ஜேம்ஸ் மாக்ஸ்வெல் 1864-ல் உருவாக்கினார். பின்னர், ஜெர்மானிய இயற்பியலாளராகிய ஹைன்ரிக் ஹெர்ட்ஸ், மின்காந்த அலைகளை உருவாக்கி, குறைந்த தொலைவிலிருந்து அவற்றை உணர்வதன்மூலம், நியூ ஜிலாந்தைச் சேர்ந்த ஏர்னஸ்ட் ரதர்ஃபர்ட் (பின்னாளைய, ரதர்ஃபர்ட் பிரபு) செய்ததைச் செய்து மாக்ஸ்வெல்லின் கோட்பாட்டை ஊர்ஜிதப்படுத்தினார். ஆனால் அப்போதிருந்த கருவியை மாற்றியமைத்து, அதில் திருத்தங்களைச் செய்து, தானாகவே செய்த செம்மையற்ற ஆண்டென்னாவையும் அதோடு இணைத்து, மார்கோனி ஒரு தந்தி குறியை குறிப்பிடத்தக்களவு தொலைவிற்கு அனுப்பிவிட்டார். கம்பியில்லாத் தந்திமுறை முன்னேற்றப் பாதையில் இருந்தது!
1896-ல், 21 வயதான மார்கோனி இத்தாலியிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்; அங்கு பொது அஞ்சலகத்தின் தலைமை பொறியாளராகிய உவில்லியம் ப்ரிஸுக்கு முன் அவர் அறிமுகப்படுத்தப்பட்டார். மார்கோனியின் அமைப்புமுறையை கடல்சார்ந்த தகவல் தொடர்புகளுக்கு, தந்தி கம்பியால் இணைக்க முடியாத இடங்களுக்கு இடையில் பயன்படுத்துவதில் ப்ரிஸ் அக்கறை உள்ளவராக இருந்தார். அவர் மார்கோனிக்கு தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை அளித்து, அவருடைய பரிசோதனைகளுக்காக ஆய்வுக்கூடங்களைப் பயன்படுத்தவும் அனுமதித்தார். ஒருசில மாதங்களில், அந்தக் குறியீடுகள் பத்துக் கிலோமீட்டர் தொலைவுவரை அனுப்பப்படும் அளவுக்கு அவற்றின் சக்தியை அதிகரிப்பதில் மார்கோனி வெற்றி கண்டார். 1897-ல், கம்பியில்லாத் தந்தி முறையை வர்த்தக ரீதியில் சாத்தியமான அமைப்பு முறையாக மாற்றும் நோக்கத்துடன் மார்கோனி, கம்பியில்லா தந்தி மற்றும் குறியீட்டு நிறுவனம், லிமிட்டட் (Wireless Telegraph and Signal Company, Ltd.) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
1900-ல், கார்ன்வாலுக்கும் தெற்கு இங்கிலாந்திலுள்ள உவைட் தீவுக்கும் இடையே 300 கிலோமீட்டருக்கு கம்பியில்லாத் தந்தி தொடர்பு ஏற்படுத்தப்பட்டது; ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதை—பூமியின் வளைவைக் கடந்து ரேடியோ அலைகளை அனுப்புவதை—மெய்ப்பித்துக் காட்டியது. மின்காந்த அலைகள் நேர்கோடுகளில் பயணம் செய்வதால், குறியீடுகள் தொடுவானத்திற்கு அப்பால் பெறப்பட முடியாது என்பதாகக் கருதப்பட்டிருந்தது. a பின்னர் வானொலிகளுக்கான முதல் முக்கியமான ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. 26 கப்பல்களில் வானொலிகளைப் பொருத்தும்படியும் ஆறு தரை நிலையங்களைக் கட்டுதல் மற்றும் பராமரித்தலைச் செய்யும்படியும் பிரிட்டிஷ் கடற்படை ஆட்சிக்குழு கட்டளையிட்டது. அதற்கடுத்த வருடம், மார்ஸ் குறியீட்டு முறையில் S என்ற எழுத்தைக் குறிக்கும் மூன்று புள்ளிகளின் மங்கலான குறியீட்டை வைத்து அட்லான்டிக்கைக் கடப்பதிலும் மார்கோனி வெற்றி கண்டார். அந்தக் கண்டுபிடிப்பின் எதிர்காலம் உறுதியானது.
தொழில்நுட்ப வளர்ச்சி
முதலில் கம்பியில்லாத் தொலைதந்தி முறை வார்த்தைகளையோ இசையையோ அனுப்ப முடியவில்லை, வெறும் மார்ஸ் குறியீடுகளை மட்டுமே அனுப்பியது. என்றபோதிலும், டையோடின் வரவுடன் 1904-ல் முன்னேற்றத்தில் ஒரு பெரிய அடி எடுத்து வைக்கப்பட்டது; குரல் அனுப்புதலையும் வாங்குதலையும் சாத்தியமாக்கின முதல் வெற்றிட குழல் வால்வ் அதுதான். இது கம்பியில்லாத் தந்தி முறையை இன்று நாம் அறிந்திருக்கிற வானொலியாக மாற்றி அமைத்தது.
1906-ல், ஐக்கிய மாகாணங்களில், ரெஜனல்ட் ஃபெஸன்டன் இசையை ஒலிபரப்பினார்; அது 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கப்பல்களால் கேட்கப்பட்டன. 1910-ல், பிரபல இத்தாலிய உச்சக் குரல் பாடகராகிய என்ரிகோ கரூஸோவின் இசைக் கச்சேரி ஒன்றை, நியூ யார்க்கிலுள்ள வானொலி ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களின் நன்மைக்காக லி டிஃபாரஸ்ட் நேரடி ஒலிபரப்பு செய்தார். கடிகாரங்களைச் சரிப்படுத்தி வைப்பதற்கான குறியீடுகள், ஒரு வருடத்திற்கு முன்பு, முதல் முறையாக பிரான்ஸில், பாரிஸிலுள்ள ஐஃபல் டவரிலிருந்து ஒலிபரப்பப்பட்டன. அதே வருடத்தில், 1909-ல், அட்லான்டிக்கில் ஃப்ளாரிடா மற்றும் ரிப்பப்ளிக் என்ற நீராவிக் கப்பல்கள் மோதியிருந்தபோது பிழைத்தவர்களைக் காப்பாற்றுவதில், முதல்முதலாக, வானொலி உதவியால் காப்பாற்றுதல் செய்யப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின், டைட்டானிக் பெருஞ்சேதத்தின்போது பிழைத்த 700-க்கும் அதிகமானோரும், உடனடியாக காப்பாற்றும்படியாக வானொலியால் அனுப்பப்பட்ட SOS செய்தியின் காரணமாகக் காப்பாற்றப்பட்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வானொலி இருப்பதற்கான சாத்தியம் 1916-லேயே எதிர்நோக்கப்பட்டது. வால்வுகளைப் பயன்படுத்துவது, திறம்பட்ட, குறைந்த விலையுள்ள ஒலிவாங்கிகளின் உற்பத்தியைச் சாத்தியமாக்கியது; அது வர்த்தக வானொலியின் பரவலான வளர்ச்சிக்கு வழிதிறந்து வைத்தது. விரைவான வளர்ச்சி முதலில் ஐக்கிய மாகாணங்களில் ஏற்பட்டது; அங்கு 1921-ன் முடிவிற்குள் 8 நிலையங்கள் இருந்தன; நவம்பர் 1, 1922-ற்குள் 564 நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தன! அநேக வீடுகளில், மின் விளக்கு அமைப்புமுறை நீங்க, மின் வழங்கீட்டுடன் இணைக்கப்பட்ட முதல் சாதனம் வானொலிதான்.
ஒழுங்கான வர்த்தக ஒலிபரப்பு தொடங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குள், அப்போது யெகோவாவின் சாட்சிகள் அழைக்கப்பட்டபடி பைபிள் மாணாக்கர் என்பவர்களும் தங்கள் செய்தியை ஒலிபரப்ப வானொலியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1922-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரெஸிடென்ட் ஜே. எஃப். ரதர்ஃபர்ட், கலிபோர்னியாவில் தன் முதல் வானொலி பேச்சைக் கொடுத்தார். இரண்டு வருடங்கள் கழித்து, உவாட்ச் டவர் சொஸைட்டியால் கட்டப்பட்டதும் அதற்குச் சொந்தமானதுமான நிலையமாகிய WBBR, நியூ யார்க்கிலுள்ள ஸ்டாட்டன் தீவிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கியது. முடிவில், பைபிள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக சொஸைட்டி, உலகளாவிய வலைப்பின்னல் அமைப்புமுறைகளை ஒழுங்கமைத்தது. 1933-க்குள், உச்ச எண்ணிக்கையாக 408 நிலையங்கள் கடவுளுடைய ராஜ்ய செய்தியை எடுத்துச்சென்றுகொண்டிருந்தன.—மத்தேயு 24:14.
என்றாலும், பல தேசங்களில், வானொலி, அரசின் பிரத்தியேக உரிமை உடையதாக ஆனது. இத்தாலியில், முசோலினியின் அரசாங்கம், அரசியல்பூர்வ பிரச்சாரம் செய்வதற்கான ஒரு சாதனமாக வானொலியைக் கண்டு, அயல்நாட்டு ஒலிபரப்புகளைக் கேட்பதிலிருந்து அதன் குடிமக்களைத் தடை செய்தது. வானொலியின் மாபெரும் சக்தி 1938-ல் போதியளவு நிரூபிக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களில், ஒரு விஞ்ஞான புனைகதையின் ஒலிபரப்பின்போது, ஆர்ஸன் வெல்ஸ் மக்களின் மத்தியில் பீதியைக் கிளப்பிவிட்டார்; அவர்களில் சிலர் என்ன நினைத்தார்கள் என்றால், செவ்வாய் கிரகத்திலுள்ள மக்கள் நியூ ஜெர்ஸியில் வந்திறங்கியிருந்து, தங்களை எதிர்த்த அனைவரையும் கொல்லும்படி கொடிய “வெப்ப கீற்று” ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதாக!
நூறு ஆண்டுகளாக வானொலி
1954-ல், இத்தாலிய மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு வானொலி கேட்பதாகும். தொலைக்காட்சி வெற்றியின் மத்தியிலும், வானொலி இன்னும் மிகப் பிரபலமாக இருக்கிறது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில், 50-லிருந்து 70 சதவீதம் வரையான மக்களால், தகவலுக்காக அல்லது பொழுதுபோக்கிற்காக வானொலி கேட்கப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில், 95 சதவீத வாகனங்களிலும், 80 சதவீத படுக்கையறைகளிலும், 50 சதவீதத்துக்கும் அதிகமான சமையலறைகளிலும் ஒரு வானொலி இருக்கிறதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்தத் தொலைக்காட்சி சகாப்தத்தில்கூட, வானொலியின் பிரபலத்திற்கான காரணங்களில் ஒன்று என்னவென்றால், அது எடுத்துச்செல்லத்தக்கதாக இருப்பதேயாகும். மேலுமாக, ஒரு சுற்றாய்வின்படி, வானொலியானது, “தொலைக்காட்சியைவிடவும் மேம்பட்டதான உணர்ச்சிப்பூர்வ மற்றும் கற்பனைத்திறமுள்ள ஈடுபாட்டுச் சக்தியை” கொண்டிருக்கிறது.
1995-ல், இத்தாலியில், மார்கோனியின் சோதனையுடைய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், வானொலியில் செய்யப்பட்ட முன்னேற்றத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வாய்ப்பு அளித்தன. ஆரம்பத்தில் செய்யப்பட்ட செம்மையற்ற சாதனங்கள் இன்றைய முன்னேற்றமடைந்த அமைப்புகளாக உருப்பெறுவதற்கு எண்ணற்ற அறிவியலாளர்கள் பங்களித்திருக்கின்றனர். இப்போதும், டிஜிட்டல் ஒலிபரப்பின் மூலமாக சிறந்த ஒலி தரம் உறுதியளிக்கப்படுகிறது; அது குறியீட்டை, இலக்கக் குறியீடுகளாக்கும் ஓர் அமைப்பு முறையாகும். ஆனால், வானொலியின் எண்ணற்ற தினசரி பயன்களோடுகூட, அந்தக் கண்டுபிடிப்புத்தானே டிவி, ரடார், மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு ஆரம்ப நிலையாக இருந்தது.
உதாரணமாக, கதிர்வீச்சு வானியல், வான்சார்ந்த பொருட்களால் வெளிவிடப்பட்ட ரேடியோ அலைகளை வாங்குவதையும் ஆராய்வதையும் அடிப்படையாகக் கொண்டதாகும். வானொலியின்றி, விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமற்றதாக இருந்திருக்கும். செயற்கைக்கோளின் பயன்பாடுகள் அனைத்தும்—தொலைக்காட்சி, தொலைபேசி, விவரங்கள் சேகரித்தல்—ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதைச் சார்ந்திருக்கின்றன. மின்மப்பெருக்கிகள் நுண்சில்லுகளாக உருவான தொழில்நுட்ப வளர்ச்சியானது முதலில் பாக்கட் கால்குலேட்டர்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் பின்னர் சர்வதேச தகவல் வலைப்பின்னல் அமைப்புகளுக்கும் வழிநடத்தியது.
பூமியில் எந்த இரு முனைகளையும் அல்லது ஏறக்குறைய எந்த இரு முனைகளையும் இணைக்கவல்ல நடமாடும் தொலைபேசிகள் ஏற்கெனவே ஒரு மெய்ம்மையாகிவிட்டன. உள்ளங்கையளவான கம்பியில்லா ஏற்பிகளின்—டிவி, தொலைபேசி, கம்ப்யூட்டர், ஃபேக்ஸ் ஆகியவற்றின் ஓர் ஒருங்கிணைப்பின்—வரவே இப்போதைய எதிர்நோக்கு. இந்த ஏற்பிகள், நூற்றுக்கணக்கான வீடியோ, ஆடியோ, மற்றும் டெக்ஸ்ட் சானல்களுக்கு இசைவித்துக் கேட்பதைச் சாத்தியமாக்கி, பயன்படுத்துகிறவர்கள் மற்றவர்களுடன் மின்னணு தபால்களைப் பரிமாறிக்கொள்ளவும் அனுமதிக்கும்.
இந்தத் துறையில் எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி ஒருவர் நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால் வானொலி தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், வேறு குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
[அடிக்குறிப்பு]
a மின்காந்த அலைகளைப் பிரதிபலித்த வளிமண்டல அடுக்கு ஒன்று—அயனி மண்டலம்—இருப்பதைக் குறித்து இயற்பியலாளர்களாகிய ஆர்தர் கெனலியும் ஆலவர் ஹெவிஸைடும் கூறியபோது 1902-ல் அந்த நிகழ்வுக்குரிய விளக்கம் கிடைத்தது.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
தொலைக்காட்சி வெற்றியின் மத்தியிலும், வானொலி இன்னும் மிகப் பிரபலமாக இருக்கிறது
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
Top left and right, bottom left: “MUSEO della RADIO e della TELEVISIONE” RAI--TORINO; bottom right: NASA photo