எமது வாசகரிடமிருந்து
உங்கள் பிள்ளைகளை பாதுகாத்திடுங்கள் பாலியல் துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட சில பிள்ளைகளுக்கு தங்குமிடம் அளித்திருக்கும் ஒரு இளம் பெண்ணை நான் சந்தித்தேன். “உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்!” என்ற கட்டுரைத்தொடர் பிரசுரிக்கப்பட்டிருந்த அக்டோபர் 8, 1993-வது பிரதியை (ஆங்கிலம்) நான் அவர்களுக்குக் கொடுத்தேன். மறுபடியும் அவரை நான் சந்தித்தபோது, இவ்வாறு சொன்னார்: “இந்தப் புதிய சூழ்நிலையை கையாள இந்தக் கட்டுரைகள் எனக்கு உதவியளித்திருக்கின்றன. இளம் குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் நான் ஒரு வேலையாக சென்றபோது அந்தப் பத்திரிகையை எடுத்துச்சென்று குற்றவியல் வழக்கறிஞரிடம் காண்பித்தேன். அவரும் நீதிபதியும் அந்தக் கட்டுரைகளால் கவரப்பட்டு, மற்ற வழக்கறிஞர்களுக்கு அவற்றை கொடுக்க விரும்பினர்.” இந்த இளம் பெண் இன்னுமநேக பிரசுரங்களைக் கேட்டார், இப்போது எங்களுடன் பைபிளைப் படித்துவருகிறார்.
இ. டி. வி., பிரேஸில்
குறுக்குநெடுக்கு புதிர்கள் சில நாட்களுக்கு முன்பு, என் பேத்தியும் நானும் டிசம்பர் 8, 1995, விழித்தெழு!-வை (ஆங்கிலம்) பார்த்துக்கொண்டிருந்தபோது, குறுக்குநெடுக்கு புதிரைக் கவனித்தோம். “எனக்கு குறுக்குநெடுக்கு புதிர்கள் மிகவும் பிடிக்கும்!” என்பதாக அவள் சப்தமிட்டாள். ஆகவே நாங்கள் இருவருமாக சேர்ந்து வசனங்களைப் பார்த்தோம், அவளே பதில்களைக் கண்டுபிடிக்கும்படி நான் விட்டுவிட்டேன். அந்த அரை மணிநேரத்தை நாங்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்தோம். தொடர்ந்து அவற்றை வெளியிடுங்கள்! அடுத்த குறுக்குநெடுக்கு புதிருக்காக நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
எம். ஜி., கனடா
எனக்கு ஒன்பது வயதாகிறது. உங்களது பத்திரிகையை நான் விரும்புகிறேன், ஆனால் எல்லாவற்றையும்விட குறுக்குநெடுக்கு புதிர்களை நான் அதிகமாக விரும்புகிறேன், ஏனென்றால் அவை பைபிள் சம்பவங்களையும் ஜனங்களையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள எனக்கு உதவுகின்றன. இந்த அம்சத்திற்காக மிகவும் நன்றி.
ஜே. எம். டி., பிரேஸில்
உயிர்க்கொல்லி நோய்கள் “உயிர்க்கொல்லி நோய்கள்—மனிதனுக்கும் நுண்ணுயிரிக்கும் இடையிலான போர்” (பிப்ரவரி 22, 1996) என்ற விரிவான, தெளிவான, திருத்தமான கட்டுரைத்தொடருக்காக நன்றி. நுண்ணுயிரி அந்தளவுக்கு அதிக சிக்கலானது என்பதும் எவ்வளவு சரீர சேதத்தை அதனால் உண்டாக்கக்கூடும் என்பதும் எனக்கு முன்பு தெரியவே தெரியாது.
சி. எல்., ஐக்கிய மாகாணங்கள்
நான் நுரையீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, நுண்ணுயிர் எதிர்மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்ததன் காரணமாக, அந்தப் பத்திரிகை சரியான நேரத்திற்கு வந்துசேர்ந்தது. முதன்முதலில் அந்த மருந்தை உட்கொண்டதும் குணமடைவதாய் உணருவதற்குப் பதிலாக ஏன் இன்னும் மோசமடைவதாய் உணர்ந்தேன் என்பதைப் புரிந்துகொள்ள அந்தக் கட்டுரைகள் எனக்கு உதவி செய்தன. சுலபமாக புரிந்துகொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டிருந்த இந்தத் தகவலுக்காக நான் நன்றியுள்ளவளாயிருக்கிறேன்.
ஐ. டபிள்யூ., ஜெர்மனி
எதியோபியா “வசீகரிக்கும் எதியோபியா” (பிப்ரவரி 22, 1996) என்ற கட்டுரையை வாசித்த பிறகு, என் இருதயம் நன்றியுணர்ச்சியால் நிரம்பியிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத அநேக எதியோபிய உறவினர்கள் எனக்கு இருக்கின்றனர். இந்தக் கட்டுரை அவ்வளவு அருமையானதாக இருந்ததன் காரணமாக, நமது மாபெரும் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள அவர்களது அக்கறையைத் தூண்டும் என்பதில் நான் நிச்சயமாயிருக்கிறேன்.
ஜே. ஆர்., லக்ஸம்பர்க்
முன்னாளைய கேய்ஷா “ஒரு தவளையின் குழந்தை” (பிப்ரவரி 22, 1996) என்ற கட்டுரையால் நான் மிகவும் கவரப்பட்டேன். என் தாயின் செல்வாக்கினால், சிறுவயது முதற்கொண்டே க்ளாஸிகல் பாலே நடனத்தை நான் கற்றுக்கொண்டேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவளாக ஆனபோது, பாலேயை நான் விரும்பினாலும் அதை விட்டுவிட தீர்மானித்தேன். இந்தக் கட்டுரை என்னை உற்சாகப்படுத்தியது. அதேபோன்ற தியாகங்களைச் செய்திருக்கும் மற்ற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர அது எனக்கு உதவியது. முழு இருதயத்தோடு உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன்.
ஒய். எஸ்., ஜப்பான்
சந்தோஷமான தேவராஜ்ய குடும்பத்துடன் சாவாக்கோ டாகாஹாஷியின் புகைப்படத்தைப் பார்த்தபோது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. முன்பு நான் அனுபவித்திருந்த துன்பங்கள் என் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்திவந்திருக்கின்றன; பாதிக்கப்பட்ட உணர்ச்சி அவ்வளவு துயரத்தை எனக்கு கொண்டுவந்திருக்கிறது. நான் முன்பு செய்த தவறுகளை யெகோவா மன்னிப்பார் என்பதை உணர்ந்திருப்பது ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவளாவதற்கு உழைக்கும்படி எனக்கு தைரியத்தைக் கொடுத்திருக்கிறது.
எம். கே., ஜப்பான்
நான் வாசித்ததிலேயே மிகவும் தகவலளிக்கும் ரம்மியமான சரிதை அது. மூதாதையார் வணக்கம் எதை உட்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் அது எனக்கு உதவியிருக்கிறது. இந்த சுயசரிதையை வாசிப்பதற்கு முன்பு இந்த வகையான வணக்கத்தை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
பி. ஒய்., ஐக்கிய மாகாணங்கள்