உடல்நலம் பெறுவதற்கான வழி
மாரடைப்பு வந்ததன் பின்விளைவாக, ஒருவருக்கு பயமும் கவலையும் ஏற்படுவது வழக்கம். எனக்கு இன்னொரு முறை அதுபோன்று வருமா? பலத்தையும் சக்தியையும் இழப்பதனால் வேலை செய்ய முடியாதவனாகவோ, மட்டுப்படுத்தப்பட்டவனாகவோ இருப்பேனா?
எங்களுடைய இரண்டாவது கட்டுரையில் குறிப்பிடப்பட்டவரான ஜான், நாட்கள் செல்லச் செல்ல அன்றாடம் ஏற்படும் அசௌகரியமும் நெஞ்சுவலியும் மறைந்துவிடும் என்று நம்பினார். ஆனால் ஒருசில மாதங்களுக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறினார்: “இதுவரை அவை மறைந்துவிடவில்லை. அதுவும், அதோடுகூட சீக்கிரம் களைப்படைவதும் நெஞ்சு படபடப்பதும் நான் என்னிடமே, ‘எனக்கு இன்னொரு தடவை அதுபோன்று வரப்போகிறதா?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கும்படி செய்கிறது.”
ஐக்கிய மாகாணங்களில், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது ஓர் இளம் விதவையாய் இருந்த ஜேன் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “நான் பிழைக்கப்போவது இல்லை என்றோ, அல்லது இன்னொரு முறை அதுபோன்று வந்து சாகப்போகிறேன் என்றோ நினைத்தேன். பயத்தினால் நடுக்கம் குடிகொண்டது. ஏனெனில் என்னுடைய மூன்று பிள்ளைகளையும் நான் காப்பாற்ற வேண்டியிருந்தது.”
ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷீ கூறினார்: “என் இதயம் முன்பு வேலை செய்துவந்ததைப் போல் இனிமேலும் செய்ய முடியாது என்று எனக்குச் சொல்லப்படுவது ஓர் அதிர்ச்சியாய் இருந்தது. என் இதயம் இரத்தத்தை இறைக்கும் வேகம் 50 சதவீதம் குறைந்திருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய ஓர் ஊழியனாக நான் செய்துவந்த நடவடிக்கைகளில் சிலவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டியதிருக்கும் என்று கிட்டத்தட்ட நிச்சயமாகவே எனக்குத் தெரிந்தது. ஏனெனில் நான் முன்பு செய்துவந்த வேலைகளில் பாதிப் பங்குக்கும் குறைவாகவே செய்ய முடிந்தது.”
ஒருவருக்குக் குறைந்த பலமே இருக்கும் நிலையை எதிர்ப்படுகையில், மனச்சோர்வினால் ஏற்படும் பாதிப்புகளும் உதவாக்கரை என்ற உணர்வுகளும் குடிகொள்ளலாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 83 வயது மரீ, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு முழுநேரம் தன்னை அர்ப்பணித்தவர். அவர் இவ்வாறு புலம்பினார்: “நான் முன்பு சுறுசுறுப்பாய் செயல்பட்டு வந்ததைப்போல் இப்போது செயல்பட முடியாமற்போனது என்னை வருத்தமடையச் செய்தது. பிறருக்கு உதவுவதற்குப் பதிலாக இப்போது எனக்கு உதவி தேவைப்பட்டது.” தென் ஆப்பிரிக்காவில், ஹெரல்ட் இவ்வாறு குறிப்பிட்டார்: “மூன்று மாதங்களுக்கு என்னால் வேலை செய்ய முடியவில்லை. ரொம்பப்போனால், தோட்டத்திற்குள் நடமாடிக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது. அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை!”
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தாமஸுக்கு இரண்டாவது தடவை மாரடைப்பு வந்ததற்குப் பிறகு மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. அவர் இவ்வாறு கூறினார்: “எனக்கு வந்திருந்த வலியையே தாங்கிக்கொள்ள எனக்கு சக்தியில்லை. அப்படி இருந்தபோது, பெரிய அறுவை சிகிச்சை எனக்குச் செய்யப்படுவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கமுடியாததாகவே இருந்தது.” பிரேஸிலைச் சேர்ந்த ஸார்ஸா இதய அறுவை சிகிச்சையின் பின்விளைவைப் பற்றி இவ்வாறு கூறினார்: “என்னிடம் பணவசதி இல்லாதிருந்ததால், என் மனைவியைத் தனியேயும், எந்தவித உதவியில்லாமலும் விட்டுவிடுவேனோ என்று பயந்தேன். நான் ரொம்ப நாளைக்கு வாழப்போவதில்லை என்று நான் உணர்ந்தேன்.”
சுகமடைதல்
பலர் சுகமடைவதற்கும் அவர்களுடைய உணர்வுகளில் சமநிலையைத் திரும்பப் பெறுவதற்கும் எது உதவியிருக்கிறது? ஜேன் இவ்வாறு குறிப்பிட்டார்: “எனக்கு ஏற்படும் பயத்தால் நடுக்கமாய் உணர்ந்தபோது, நான் எப்போதும் யெகோவாவிடம் ஜெபம் செய்வேன், என் பாரங்களையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுவேன்.” (சங்கீதம் 55:22) ஒருவர் மிகவும் கவலை கொள்ளும் சூழ்நிலைகள் ஏற்படுகையில் அவருக்கு பலமும் மன சமாதானமும் மிகவும் தேவை. அதைப் பெற்றுக்கொள்வதற்கு ஜெபம் உதவி செய்கிறது.—பிலிப்பியர் 4:6, 7.
ஜானும் ஹிரோஷீயும் மறுசீரமைப்பு திட்டங்களில் சேர்ந்துகொண்டார்கள். நல்ல உணவும் உடற்பயிற்சியும் அவர்களுடைய இதயங்களைப் பலப்படுத்தின. அதன் காரணமாக அவர்கள் இருவரும் திரும்ப வேலைசெய்யத் தொடங்கினர். மனது மற்றும் உணர்ச்சிப்பூர்வ சமநிலையைத் திரும்பப் பெற்றதற்கு, கடவுளுடைய தாங்கும் சக்தியாகிய பரிசுத்த ஆவியையே காரணமாகக் கூறுகின்றனர்.
தன் கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் மூலம், தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு வேண்டிய தைரியத்தை தாமஸ் பெற்றார். அவர் கூறினார்: “அறுவை மருத்துவத்துக்கு முன்பு, ஒரு கண்காணி என்னைப் பார்க்க வந்தார். என்னோடு சேர்ந்து ஜெபித்தார். மிகவும் அனலுடன்கூடிய வேண்டுதல் செய்யும் பாணியில் என்னைப் பலப்படுத்தும்படி யெகோவாவிடம் அவர் கேட்டுக்கொண்டார். அன்று இரவு அவருடைய ஜெபத்தைப் பற்றியே நான் சிந்தித்துப் பார்த்து, மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். ஏனெனில் உணர்ச்சிவேகம் கொள்ளும்போது, தன்னை மற்றவரின் நிலையில் வைத்துப் பார்க்கும் அவரைப்போன்ற மூப்பர்களை உடையவர்களாய் இருப்பதே, நிவாரணமளிக்கும் ஏற்பாட்டில் ஒரு பாகமாய் இருக்கிறது.”
இத்தாலியில், ஆனா என்பவர் மனச்சோர்வை இவ்வாறு சமாளித்தார்: “நான் உற்சாகமிழக்கையில், கடவுளுடைய ஊழியர்களில் ஒருவனாக நான் ஏற்கெனவே பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வரவிருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்கிறேன். இது அமைதியைத் திரும்பப் பெறும்படி எனக்கு உதவுகிறது.”
மேரி யெகோவாவின் உதவிக்காக நன்றியுள்ளவளாய் இருக்கிறாள். அவளுடைய குடும்பம் அவளுக்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறது. அவள் இவ்வாறு கூறுகிறாள்: “அவரவருக்குப் பொறுப்புகள் இருந்தபோதிலும் என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் என்னைச் சந்திக்க நேரத்தை ஒதுக்கிவைத்தனர், தொலைபேசியில் அழைத்தனர், அல்லது கார்டுகள் அனுப்பினர். இப்படியெல்லாம் அன்பு காட்டப்பட்டதற்குப் பிறகும் நான் எப்படி விசனமாய் இருக்க முடியும்?”
தனிமை இதயங்கள் கூடாது
நிவாரணமடையும் இதயம் தனிமை இதயமாய் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. சொல்லர்த்தமாகவும் அடையாள அர்த்தமாகவும் சரிசெய்யப்பட வேண்டிய இதயமுள்ளவர்களின் சுகமடைவதில், குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு, பெரிய மற்றும் உடன்பாடான பங்கு வகிக்கிறது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கல் இவ்வாறு கூறினார்: “மிதமிஞ்சி மனச்சோர்வடைவது என்றால் எப்படியிருக்கும் என்பதை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்வது கடினம். ஆனால் நான் ராஜ்ய மன்றத்துக்குள் நடக்கும்போது, சகோதரர்கள் காட்டும் அக்கறை என் இதயத்துக்கு அனலூட்டுவதாயும் உற்சாகப்படுத்துவதாயும் இருக்கிறது.” ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹென்றியும், அவருடைய சபையார் காட்டின ஆழ்ந்த அன்பாலும் புரிந்துகொள்ளுதலாலும் பலப்படுத்தப்பட்டார். “உற்சாகப்படுத்தும் அந்த மென்மையான வார்த்தைகள் உண்மையிலேயே எனக்குத் தேவைப்பட்டது” என்று அவர் கூறினார்.
ஸார்ஸா தனக்கு வேலைபார்க்க முடியாமல் இருந்ததுவரை, தன் குடும்பத்துக்குத் தேவைப்படும் பணவசதி அளித்து உதவினதன் மூலம் பிறர் காட்டின ஆழ்ந்த அக்கறையைப் போற்றினார். அதேபோன்று, ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்கா, தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் பலரால் கொடுக்கப்பட்ட நடைமுறையான உதவியைப் போற்றினாள். சிலர் அவளுக்காக கடையிலிருந்து சாமான் வாங்கிவந்தனர், அதே சமயத்தில் மற்றவர்கள் அவளுடைய வீட்டை சுத்தம் செய்தனர்.
அடிக்கடி, இதய நோயாளிகள் தாங்கள் மிகவும் விருப்பத்துடன் செய்துவந்த நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வென் இவ்வாறு தெரிவித்தார்: வானிலை அதிகக் காற்று வீசிக்கொண்டோ அல்லது குளிராகவோ இருந்தால், அது இரத்தக்குழாயில் திடீர்ச் சுருக்கம் ஏற்படுவதற்குக் காரணமாவதால் சில சமயங்களில் ஊழியத்திற்குப் போக முடியாமல் போய்விடுகிறது. இந்த விஷயத்தில் என் உடன் சாட்சிகள் பலர் காட்டும் புரிந்துகொள்ளுதலை நான் போற்றுகிறேன்.” மேலும் படுத்தபடுக்கையாகி விடுகையில், ஸ்வென்னால் கூட்டங்களில் நடப்பவற்றை கேட்க முடிகிறது. ஏனெனில் சகோதரர்கள் அன்புடன் டேப்புகளில் அவற்றைப் பதிவு செய்கின்றனர். “சபை நிலவரத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ளும்படி செய்கின்றனர். அது, நானும் சபைக்கு நேரில் போய்ப் பங்கெடுப்பது போலவே என்னை உணரச் செய்கிறது.”
படுத்தபடுக்கையாகி இருக்கும் மேரி, தன்னுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருப்பவர்கள் தன்னிடம் வந்து பைபிள் படிப்பதை ஆசீர்வாதமாக உணருகிறாள். இந்த விதத்தில் அவளுக்கு, தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஆச்சரியமான எதிர்காலத்தைப் பற்றித் தொடர்ந்து கலந்தாலோசிக்க முடிந்திருக்கிறது. தாமஸ் தனக்குக் காட்டப்பட்ட அக்கறைக்காக நன்றியுள்ளவராய் இருக்கிறார்: “மூப்பர்கள் மிகவும் கரிசனையுள்ளவர்களாய் இருந்திருக்கின்றனர். எனக்குக் கொடுக்கும் பல நியமிப்புகளைக் குறைத்திருக்கின்றனர்.”
குடும்பங்களுக்கு ஆதரவு தேவை
உடல்நலத்தைத் திரும்பப் பெறுவதற்கான அந்த வழி, மாரடைப்புக்குப் பலியானவருக்கு சிரமமாய் இருப்பதைப் போலவே குடும்ப அங்கத்தினர்களுக்கும் சிரமமாய் இருக்கலாம். அவர்கள் அதிகளவு அழுத்தத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகின்றனர். தன் மனைவியின் கவலையைப் பற்றி, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ஃபிரட் குறிப்பிட்டார்: “நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியபோது, இரவு நேரங்களின்போது என் மனைவி என்னைப் பல தடவை எழுப்புவாள். நான் இன்னும் நன்றாகவே இருக்கிறேனா என்பதைப் பார்க்க அவ்வாறு எழுப்புவாள். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நான் செக்கப் செய்துகொள்வதற்காக அந்த டாக்டரைப் பார்க்கப் போகும்படி அவள் சொல்லிக்கொண்டே இருப்பாள்.”
‘மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்,’ என்று நீதிமொழிகள் 12:25 குறிப்பிடுகிறது. தனக்கு மாரடைப்பு வந்ததிலிருந்து, தன்னை நேசிக்கும் மற்றும் ஆதரவளிக்கும் மனைவி “மனச்சோர்வுக்கு உள்ளாகிவிட்டதாக” இத்தாலியைச் சேர்ந்த கார்லோ குறிப்பிடுகிறார். ஆஸ்திரேலியாவிலிருந்து லாரன்ஸ் இவ்வாறு கூறினார்: “நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயம், உங்கள் துணைவர் அல்லது துணைவி கவனிக்கப்பட்டு வருகிறார்களா என்பது. துணைவரின்மீதுள்ள அழுத்தம் மிக அதிகமாய் இருக்கலாம்.” இவ்வாறு, பிள்ளைகள் உட்பட குடும்பத்தில் இருக்கும் எல்லாருடைய தேவைகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையால் உணர்ச்சி மற்றும் உடல் சார்ந்த கடும் பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படலாம்.
எங்களுடைய இரண்டாவது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஜேம்ஸ், அவருடைய தந்தைக்கு மாரடைப்பு வந்ததற்குப் பிறகு, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். “நான் இனிமேலும் மகிழ்ச்சியான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று உணர்ந்தேன். ஏனெனில் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருந்துவிட்டால் போதும், அடுத்த நிமிடமே ஏதாவது கெட்டது நடக்கும்.” தனக்கிருந்த பயத்தைத் தன் தந்தையிடம் தெரிவித்ததும், பிறரோடு நல்ல பேச்சுத்தொடர்பை நிலைநாட்டிக் கொள்வதில் உழைத்ததும் அவருடைய கவலையிலிருந்து விடுபட உதவியது. அந்தச் சமயத்தின்போது தன் வாழ்க்கையில் மிகுந்த பலனை ஏற்படுத்தும் வேறொன்றை ஜேம்ஸ் செய்தார். அவர் கூறினார்: “தனிப்பட்ட பைபிள் படிப்பையும் நம் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தயாரித்தலையும் நான் அதிகரித்தேன்.” மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதலால் அதை அடையாளப்படுத்தினார். “அப்போதிலிருந்து, யெகோவாவுடன் ஒரு மிக நெருங்கிய உறவை நான் வளர்த்திருக்கிறேன். அதற்காக நான் உண்மையிலேயே அவருக்கு அதிகம் நன்றி தெரிவிக்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.
மாரடைப்பால் ஏற்படும் பின்விளைவில், வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வதற்கு ஒருவருக்கு நேரம் கிடைக்கிறது. உதாரணமாக, ஜானின் நோக்குநிலை மாறியது. அவர் கூறுகிறார்: “உலகப்பிரகாரமான நாட்டங்களின் வெறுமையை நீங்கள் பார்க்கிறீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களின் அன்பு எவ்வளவு முக்கியம் என்றும் யெகோவாவுக்கு நாம் எவ்வளவு மதிப்புவாய்ந்தவர்களாய் இருக்கிறோம் என்றும் உணருகிறீர்கள். யெகோவாவுடனும், என் குடும்பத்தினருடனும், என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடனும் இப்போது நான் கொள்ளும் உறவு, எல்லாவற்றையும்விட அதிமுக்கியமாகிவிட்டது.” தான் அனுபவித்த வலியைப் பற்றி அமைதியாய்த் திரும்பவும் நினைத்துப் பார்ப்பவராய், அவர் மேலும் கூறினார்: “இதுபோன்ற நோய்களெல்லாம் சரிசெய்யப்படும் ஒரு காலத்தைப்பற்றிய நம்பிக்கை நமக்கு இருந்திராவிட்டால், இதைச் சமாளிக்க முடிந்திருப்பதை என்னால் கற்பனையும்கூட செய்துபார்க்க முடியவில்லை. நான் மனச்சோர்வு அடைகையில், எதிர்காலத்தைப் பற்றியே நினைக்கிறேன். அவ்வாறு செய்யும்போது, இப்போது நடக்கும் காரியம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் தோன்றுகிறது.”
உடல்நலத்தைத் திரும்பப் பெறும் வழியில் நல்லதுகெட்டது மாறிமாறி வருகையில், மாரடைப்பு வந்து பிழைத்தவர்களாகிய இவர்கள் தங்கள் நம்பிக்கையை ராஜ்யத்தில் உறுதியாய் வைத்திருக்கின்றனர். அந்த ராஜ்யத்திற்காகவே இயேசு கிறிஸ்து ஜெபிக்கும்படி கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய ராஜ்யம் மனிதருக்கு ஒரு பரதீஸ் பூமியில் பரிபூரணநிலையில் நித்திய ஜீவனைத் தரும். அப்போது இதய நோயும் மற்றெல்லா சுகவீனங்களும் என்றென்றுமாக நீக்கப்பட்டிருக்கும். அந்தப் புதிய உலகம் சீக்கிரம் வரவிருக்கிறது. உண்மையில், வாழ்க்கையிலேயே மிகச்சிறந்தது இனிமேல் வரவிருக்கிறது!—யோபு 33:25; ஏசாயா 35:5, 6; வெளிப்படுத்துதல் 21:3-5.
[பக்கம் 13-ன் படம்]
சுகமடைவதில், குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு, பெரிய மற்றும் உடன்பாடான பங்கு வகிக்கிறது