உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 1/8 பக். 26-27
  • பூமி அக்கினிக்கு இரையாகுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி அக்கினிக்கு இரையாகுமா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
  • “முந்தின பூமி”
  • “ஒரு புதிய பூமி”
  • பூமி
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • பூமி அழிக்கப்படுமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?
    புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல்
  • உலகம் அழியுமா?
    விழித்தெழு!—2015
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 1/8 பக். 26-27

பைபிளின் கருத்து

பூமி அக்கினிக்கு இரையாகுமா?

அணு ஆற்றல் படுகொலையால் கருகிப்போதல், பெரிதாகிவரும் சூரியனால் எரிந்து சாம்பலாதல், அல்லது ஒரு கோபமான கடவுளின் அக்கினிக்கு இரையாதல்—அழியும் முறை வேறுபடலாம், ஆனால் மனிதகுலத்தின் வீடாகிய பூமிக் கோளம், எரிந்தழியும் ஓர் அழிவை அடையும் என்று பலர் நம்புகின்றனர்.

பூமிக்கு எதிராக மனிதன் செய்துள்ள பாதகங்களுக்காகக் கடவுளிடமிருந்து தண்டனை வரும் என்றும், அத் தண்டனை தெய்வீக வழிநடத்துதலால், பட்சிக்கும் அக்கினியாய் இருக்கும் என்றும் முன்குறித்துள்ள பைபிள் வசனங்களை சிலர் இடக்குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். மற்றவர்கள் பால் டேவிஸ் என்ற, ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரின் கருத்தையே பிரதிபலிக்கின்றனர். அவர், அக்கினியால் வரவிருக்கும் அழிவுக்குள் இந்தப் பூமி மூழ்குவதைத் தவிர்க்கமுடியாது என்று தான் கருதுவதைப் பற்றி எழுதுகிறார். த லாஸ்ட் த்ரீ மினிட்ஸ் என்ற தன்னுடைய புத்தகத்தில் அவர் கற்பனை வாதம் செய்கிறார்: “சூரியன் பெரிதாகி வரவர, அது தன்னுடைய அக்கினி உறையினுள் பூமியை வளைந்துகொள்ளும். நமது கோளம் ஒரு தணலாகிவிடும்.” பூமியின் முடிவைப் பற்றிய உண்மை என்ன? அக்கினியால் அழிக்கப்படுவதைப் பற்றி முன்குறிப்பதுபோல் காணப்படும் பைபிள் வசனங்களை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?

எரேமியா 10:10-12-ல், நமக்குத் தெரிவிக்கப்படுகிறது: “கர்த்தரோ மெய்யான தெய்வம்; . . . அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.” கடவுள் பூமியை உண்டாக்கி அதை உறுதியாய் ஸ்தாபித்தார். ஆகவே ஞானம், அன்பு, புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுடன், மனிதகுலத்துக்காக ஓர் அழகிய வீடாக முடிவின்றி நிலைத்திருக்க பூமியை அவர் கவனத்துடன் ஸ்தாபித்தார்.

மனிதகுலத்தை கடவுள் படைத்ததைப் பற்றி பைபிள் அறிக்கை செய்கிறது: ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை ஆசீர்வதித்து அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்திக் கொள்ளுங்கள்’ (ஆதியாகமம் 1:27, 28) என்று சொன்னார். தம் சிருஷ்டிப்பு வேலையை அவர் முடித்தபோது, “அது மிகவும் நன்றாயிருந்தது” என்று சந்தேகத்துக்கிடமின்றி அவரால் சொல்ல முடிந்தது. (ஆதியாகமம் 1:31) அது அவ்வாறே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தாங்கள் பெற்றோராகப்போவதை எதிர்பார்த்திருக்கும் சிலர் தங்களுடைய பிறக்கப்போகும் பிள்ளையின் படுக்கையறையை திட்டமைத்து, தேவையான பொருட்களால் எவ்வாறு நிரப்புவார்களோ, அவ்வாறே கடவுள் ஓர் அழகிய தோட்டத்தை நாட்டி, ஆதாம் என்ற மனிதனை அதை விருத்தி செய்யும்படியும் பராமரிக்கும்படியும் அதிலே வைத்தார்.—ஆதியாகமம் 2:15.

ஆதாம் பரிபூரணத்தையும், பூமியைப் பராமரிக்கும் தன்னுடைய கடமையையும் தவறவிட்டுவிட்டான். ஆனால் படைப்பாளர் தம் நோக்கத்தைத் தவறவிட்டுவிட்டாரா? இல்லை என்பதாக ஏசாயா 45:18 அர்த்தப்படுத்துகிறது: “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.” (ஏசாயா 55:10, 11-ஐயும் காண்க.) மனிதன் தன்னுடைய பராமரிக்கும் பொறுப்பை அசட்டை செய்தபோதிலும், கடவுள் பூமிக்கும் அதன்மீதுள்ள உயிர்களுக்கும் தான் செய்யவேண்டியதை தொடர்ந்து நிறைவேற்றிவந்தார். பண்டைய இஸ்ரவேல் தேசத்தாருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், ‘ஏழாம் ஆண்டு நிலத்திற்கு ஓய்வு’ கொடுக்கும்படி செய்தது. அது, விலங்குகளுக்கும் ஓரளவு பாதுகாப்பை அளித்த மனிதாபிமான சட்டங்களை உட்படுத்தியது. (லேவியராகமம் 25:4, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்; யாத்திராகமம் 23:4, 5; உபாகமம் 22:1, 2, 6, 7, 10; 25:4; லூக்கா 14:5) இவையெல்லாம், மனிதகுலத்தைப் பற்றியும், மனிதன் அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும்படி அவர் ஒப்படைத்த எல்லாவற்றைப் பற்றியும் கடவுளுக்கு மிக அதிக அக்கறை இருக்கிறது என்றும் பைபிளில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதற்கான ஒருசில உதாரணங்களேயாகும்.

“முந்தின பூமி”

ஆகவே முரண்பாடானதாய்த் தோன்றும் பைபிள் வசனங்களை நாம் எப்படி ஒத்துப்போகும்படி செய்ய முடியும்? அப்படிப்பட்ட ஒரு வசனம் 2 பேதுரு 3:7. யூனியன் மொழிபெயர்ப்பின்படி அந்த வசனம் சொல்வதாவது: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.” மற்றொரு வசனம் வெளிப்படுத்துதல் 21:1. அது கூறுவதாவது: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின.”

பேதுருவின் வார்த்தைகளைச் சொல்லர்த்தமாய் எடுத்துக்கொண்டாலும், பூமிக் கோளம் உண்மையாகவே அக்கினியால் பட்சிக்கப்பட்டாலும், அந்த சொல்லர்த்தமான வானங்களும்—நட்சத்திரங்களும் மற்ற வானியற் பொருட்களும்—சேர்ந்து அக்கினியால் அழிக்கப்படவிருக்கின்றன. என்றபோதிலும், “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று கூறும் மத்தேயு 6:10 மற்றும் “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று கூறும் சங்கீதம் 37:29 ஆகிய வசனங்களில் காணப்படும் உறுதியுடன் இந்த விளக்கம் முரண்பட்டு இருக்கிறது. மேலும், அணு ஆற்றல் வெடிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திவருபவையும், ஏற்கெனவே கொடிய வெப்பமாய் இருப்பவையுமான சூரியன், நட்சத்திரங்களின்மீது அக்கினி என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

மறுபட்சத்தில், “பூமி” என்பதை பைபிள் பெரும்பாலும் ஓர் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. உதாரணமாக, ஆதியாகமம் 11:1 கூறுகிறது: ‘பூமியெங்கும் ஒரே பாஷை இருந்தது’ இங்கு, “பூமி” என்ற வார்த்தை பொதுவான மனிதவர்க்கத்தை, அல்லது மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. (1 இராஜாக்கள் 2:1, 2; 1 நாளாகமம் 16:31-ஐயும் காண்க.) 2 பேதுரு 3:5, 6-ன் சூழமைவும், “பூமி” என்ற வார்த்தைக்கான அதே அடையாள அர்த்தத்தைக் குறிக்கிறது. அது, ஒரு பொல்லாத மனித சமுதாயம் வெள்ளத்தில் அழிக்கப்பட்டு, அதே சமயத்தில் நோவாவும் அவருடைய வீட்டாரும் அந்தக் கோளமும் மட்டுமே காக்கப்பட்ட நோவாவின் நாளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (ஆதியாகமம் 9:11) அதுபோலவே, 2 பேதுரு 3:7-ல் “தேவபக்தியில்லாதவர்கள்” மட்டுமே அழிக்கப்படப்போவதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்து பைபிளின் ஏனைய பகுதிகளோடு ஒத்திருக்கிறது. அழிவுக்கென்று வைக்கப்பட்டுள்ள இந்தப் பொல்லாத சமுதாயம், “முந்தின பூமி” என்று வெளிப்படுத்துதல் 21:1-ல் முன்பு மேற்கோள் காட்டப்பட்டதையே குறிக்கிறது.

உண்மையில், அக்கறையுள்ள ஒரு பூமிக்குரிய தகப்பன், தன் வீட்டுக்குத் தீங்கு வராதபடி தன்னால் முடிந்தளவு நடவடிக்கை எடுப்பது எப்படியோ, அப்படியே யெகோவா தேவனும் தம்முடைய படைப்பைப் பற்றி மிகவும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர் ஒருமுறை ஒழுக்கக்கேடான மற்றும் பொல்லாத மக்களை வளமான யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றினார். அந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக வேறு மக்களை வைத்தார். அவர்கள் அவருடன் ஓர் உடன்படிக்கை செய்தவர்களாய் இருந்தனர். அதாவது, அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால், ‘உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்ய வேண்டாம்.’—லேவியராகமம் 18:24-28.

“ஒரு புதிய பூமி”

இன்று, பாலினம் சம்பந்தமாக மோசமானதாயும், வன்முறை நிறைந்த மிருகத்தனமானதாயும், அரசியல் ரீதியில் ஊழல் நிறைந்ததாயும் இருக்கும் ஒரு சமுதாயம் பூமியைக் கெடுத்துள்ளது. கடவுள் மட்டுமே அதைக் காப்பாற்ற முடியும். அவர் அதைத்தான் செய்வார். வெளிப்படுத்துதல் 11:18-ல், ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பதாக’ அவர் வாக்கு கொடுக்கிறார். திரும்பவும் நிலைநாட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பூமி, கடவுளுக்குப் பயந்தவர்களாலும், தங்கள் உடன் மனிதரை உள்ளார்ந்து நேசிப்பவர்களாலும் நிறைந்திருக்கும். (எபிரெயர் 2:5; லூக்கா 10:25-28-ஐ ஒப்பிடுக.) கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின்கீழ் ஏற்படப்போகும் மாற்றங்கள் அவ்வளவு ஆழ்ந்த கருத்துள்ளவையாய் இருப்பதால் “ஒரு புதிய பூமி” என்பது ஒரு புதிய மனித சமுதாயத்தைக் குறிப்பதாய் பைபிள் பேசுகிறது.

சங்கீதம் 37:29 போன்ற வசனங்களை நாம் வாசிக்கையிலும், மத்தேயு 6:10-ல் கிறிஸ்து கூறியவற்றை நாம் புரிந்துகொள்ளும்போதும், கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாத இயற்கை சக்திகளோ, அழிக்கும் சக்தியனைத்தையும் கொண்ட மனிதனோ நம் கோளத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது என்று நாம் உறுதியுடன் இருக்கிறோம். அவர்கள் கடவுளுடைய நோக்கத்தை அவமாக்கிவிடமாட்டார்கள். (சங்கீதம் 119:90; ஏசாயா 40:15, 26) உண்மையுள்ள மனிதவர்க்கம் எல்லையற்ற அழகும் முடிவற்ற மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலையின் மத்தியில் பூமியில் வாழும். பூமிக்கு வரப்போகும் முடிவைப் பற்றிய உண்மை இதுவே. ஏனெனில் மனிதவர்க்கத்தினுடைய அன்பான படைப்பாளரின் நோக்கம் இதுவாகவே இருக்கிறது; எப்பொழுதும் அவ்வாறே இருந்துவந்துமிருக்கிறது.—ஆதியாகமம் 2:7-9, 15; வெளிப்படுத்துதல் 21:1-5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்