இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் பாவ அறிக்கை செய்ய வேண்டுமா?
“எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு, எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. என் அப்பாம்மாட்ட சொல்லணும்போல இருக்கு, ஆனா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு.”—லைஸா.a
மனப்போராட்டத்திலிருந்த ஓர் இளம் பெண் அப்படி எழுதினார். விசுவாசத்தில் இல்லாத ஒருவருடன் ஒருசில ஆண்டுகளாக காதலீடுபாடு வைத்திருந்தார். ஒரு நாள், மதுவின் செல்வாக்கினால், அவருடன் பாலுறவு கொண்டுவிட்டார்.
கிறிஸ்தவ இளைஞருக்கு மத்தியிலும் அவ்வப்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழுவதைக் குறிப்பிடுவது விசனமாய் உள்ளது. எந்தளவுக்கு நாம் இளைஞராகவும் அனுபவமில்லாதவராகவும் இருக்கிறோமோ, அந்தளவுக்கு அதிக தவறுகள் செய்யும் சாத்தியம் இருக்கிறது. சிறிய தவறு செய்துவிடுவது ஒருபுறமிருக்க, பாலின ஒழுக்கக்கேடு போன்ற படுமோசமான குற்றத்தில் ஈடுபடுவது மற்றொரு விஷயமாய் இருக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) அப்படி சம்பவிக்கும்போது, உதவியை நாடவேண்டியது ஓர் இளைஞருக்கு அவசியம். ஒருவருடைய தவறுகளை அறிக்கை செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதே பிரச்சினை.
ஒரு கிறிஸ்தவ இளம்பெண் திருமணத்துக்கு முன்பு பாலுறவில் ஈடுபட்டார். அவருடைய சபை மூப்பர்களிடம் அறிக்கை செய்யத் தீர்மானித்தார். அதற்கென்று ஒரு நாளையும்கூட குறித்துவிட்டார். ஆனால் அந்த நாளைத் தள்ளிப்போட்டார். பிறகு, அந்த நாளை மறுபடியும் தள்ளிப்போட்டார். இப்படியாக, ஒரு முழு ஆண்டு கடந்துவிட்டது!
“வெளிக்குவராத மறைபொருளுமில்லை”
நீங்கள் படுமோசமான பாவத்துக்குள் விழுந்துவிட்டால், அமைதியாய் இருந்துவிடுவது ஞானமற்றது என்பதை உணருவது அவசியம். ஒரு காரணம், எப்படியாவது உண்மை வெளியே தெரிந்துவிடும். ஒரு சிறு பிள்ளையாக மார்க், மண்ணால் செய்யப்பட்ட சுவரை அலங்கரிக்கும் கலைப்பொருள் ஒன்றை உடைத்துவிட்டார். “அதை மறுபடியும் கவனமாய் ஒட்ட முயன்றேன், ஆனால் சீக்கிரத்தில் என் பெற்றோர் அந்தக் கீறல்களைக் கண்டுபிடித்துவிட்டனர்” என்று அவர் நினைவுகூருகிறார். நீங்கள் இன்னும் ஒரு சிறுபிள்ளையாக இல்லை என்பது மெய்யே. ஆனால் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால் பொதுவாக அதைக் கண்டுபிடித்துவிடுகின்றனர்.
“பொய் சொல்லி என் தப்பிதங்களை மறைக்கப் பார்த்தேன்,” என்று 15 வயது ஆன் ஒப்புக்கொள்கிறார். “ஆனால் நிலைமை மோசமாகும்படியே நான் செய்தேன்.” பெரும்பாலும் பொய் வெளியே தெரிந்துவிடுகிறது. அதுவும் உங்கள் பெற்றோரிடம் நீங்கள் பொய்சொன்னதை அவர்கள் கண்டுபிடிக்கையில், அவர்கள் நிலைகுலைவதற்கான சாத்தியம் ஏற்படுகிறது—நீங்கள் அவர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் ஏற்பட்டிருக்கும் நிலைகுலைவைக் காட்டிலும் அதிகமாய் நிலைகுலைகின்றனர்.
அதைவிட முக்கியமானது, பைபிள் கூறுகிறது: “வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.” (லூக்கா 8:17) நாம் என்ன செய்திருக்கிறோம் என்றும் என்ன செய்துவருகிறோம் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். ஆதாமால் தன் தவற்றை மறைக்க முடியாமல் போனது போலவே உங்களாலும் உங்கள் தவற்றை மறைக்க முடியாது. (ஆதியாகமம் 3:8-11) காலப்போக்கில், உங்கள் பாவங்களும் பிறருக்குத் தெரியவந்துவிடும்.—1 தீமோத்தேயு 5:24.
அமைதியாய் இருந்துவிடுவது வேறு வழிகளிலும் உங்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம். சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார்: ‘நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்தது.’ (சங்கீதம் 32:3, 4) ஆம், இரகசியத்தை மறைத்துவைக்கும்போது, உணர்ச்சிப்பூர்வமாக அது பாரமான விசனத்தை உண்டாக்கலாம். கவலையும் குற்றவுணர்வும், வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயமும், உங்கள் இதயத்தில் சோர்வை ஏற்படுத்தலாம். உங்கள் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் உங்களை நீங்கள் விலக்கி வைத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம். கடவுளிடமிருந்தும்கூட நீங்கள் பிரித்துவைக்கப்பட்டிருப்பதாக உணரலாம்! “யெகோவாவை விசனப்படுத்தியதற்காக ஒரு குற்ற மனச்சாட்சியுடன் போராடிக் கொண்டிருந்தேன்” என்று ஆண்ட்ரூ என்ற இளைஞன் எழுதினார். “அது என்னை கவலைக்குள் ஆழ்த்தியது.”
அமைதியைத் தவிருங்கள்
இந்த உணர்ச்சிப்பூர்வ குழப்பத்திலிருந்து விடுதலை பெற ஏதாவது வழி இருக்கிறதா? ஆம், வழி இருக்கிறது! சங்கீதக்காரன் கூறினார்: “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; . . . தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” (சங்கீதம் 32:5; 1 யோவான் 1:9-ஐ ஒப்பிடுக.) ஆண்ட்ரூவும் அதைப்போலவே தன் பாவத்தை அறிக்கை செய்ததிலிருந்து உண்மையான விடுதலையைக் கண்டார். அவர் நினைவுகூருகிறார்: “நான் யெகோவாவை அணுகி அவர் என்னை மன்னிப்பதற்காக உருக்கமாய் ஜெபித்தேன்.”
நீங்களும் அப்படியே செய்யலாம். யெகோவாவிடம் ஜெபியுங்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை யெகோவா அறிவார். ஆனால் ஜெபத்தில் அதைத் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ளுங்கள். உதவி பெற முடியாத அளவுக்கு உங்களைப் பொல்லாதவர்களாய் நீங்கள் நினைப்பதன் காரணமாக அதை மறைத்துவிடாமல், மன்னிப்பு கேளுங்கள். நாம் அபூரணராய் இருந்தபோதிலும், கடவுளுடன் ஒரு நல்ல நிலைநிற்கையை நாம் அனுபவிப்பதற்காக இயேசு மரித்தார். (1 யோவான் 2:1, 2) தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு பலம் தரும்படியும் நீங்கள் ஜெபிக்கலாம். சங்கீதம் 51-ஐ வாசிப்பது இந்த விதத்தில் கடவுளை அணுகுவதற்கு உங்களுக்கு குறிப்பாக உதவியாய் இருக்கலாம்.
உங்கள் பெற்றோரிடம் சொல்வது
என்றபோதிலும், கடவுளிடம் வெறுமனே அறிக்கை செய்வதைக் காட்டிலும் அதிகம் அவசியப்படுகிறது. உங்கள் பெற்றோரிடம் சொல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது. “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” உங்களை வளர்க்க கடவுளால் அவர்கள் ஒப்புவிக்கப்பட்டுள்ளனர். (எபேசியர் 6:4) உங்கள் பிரச்சினைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரிந்தால்தான் அவர்கள் இதைச் செய்ய முடியும். மறுபடியும், உங்கள் பெற்றோரிடம் சொல்வது அவ்வளவு எளிதானதோ, இன்பமானதோ அல்ல. ஆனால் ஆரம்பத்தில் அவர்களுடைய உடனடியான பிரதிபலிப்பிற்குப் பிறகு, பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அவர்கள் முயலுவர். உங்கள் பிரச்சினையை அவர்களிடம் சொல்லுமளவுக்கு நீங்கள் அவர்களை நம்பியிருக்கிறீர்கள் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியடையவும் செய்வர். கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமை, பாலின ஒழுக்கக்கேட்டிற்குள் விழுந்த ஓர் இளம் மனிதனைப் பற்றிக் கூறுகிறது. முடிவில் அவன் அறிக்கை செய்தபோது, அவனுடைய தகப்பன் இரு கைகளையும் நீட்டி அவனை வரவேற்றார்! (லூக்கா 15:11-24) உங்கள் பெற்றோரும் அதைப்போலவே உங்களுக்கு உதவ முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்ன இருந்தாலும், அவர்கள் உங்களை இன்னும் நேசிக்கின்றனர்.
உங்கள் பெற்றோரைப் புண்படுத்துவீர்கள் என்ற பயம் உங்களுக்கு இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் பாவ அறிக்கை செய்வது உங்கள் பெற்றோரைப் புண்படுத்துவதில்லை; பாவம் செய்வதே உங்கள் பெற்றோரைப் புண்படுத்துகிறது! புண்ணை ஆற்றுவதற்கு எடுக்கும் முதல் படியே அறிக்கை செய்வது. முன்பு குறிப்பிடப்பட்ட ஆன், தன் பெற்றோரிடம் சொன்ன பிறகு, மிகவும் நிம்மதியாய் இருந்ததை உணர்ந்ததாகச் சொல்கிறார்.b
அறிக்கை செய்வதற்கு மற்றொரு தடையாய் இருப்பது வெட்கமும் தர்மசங்கடமும். உண்மையுள்ள வேதபாரகன் எஸ்றா தான் பாவம் செய்திராதபோதிலும், தன் உடன் யூதர்களின் பாவங்களை அறிக்கை செய்தபோது, இவ்வாறு கூறினார்: “என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்.” (எஸ்றா 9:6) உண்மையில், நீங்கள் குற்றம் செய்திருக்கையில் வெட்கப்படுவது சரியானது. உங்கள் மனச்சாட்சி இன்னும் வேலை செய்துவருகிறது என்பதை அது குறிக்கிறது. காலப்போக்கில், அந்த வெட்க உணர்வுகள் மறைந்துவிடும். ஆண்ட்ரூ இவ்வாறு கூறுகிறான்: “அறிக்கை செய்வது மிகவும் சிரமமாகவும் தர்மசங்கடமாகவும் இருக்கிறது. ஆனால் யெகோவா மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் என்பதை அறிவது நிம்மதியாய் இருக்கிறது.”
உதவியைப் பெற மூப்பர்களிடம் செல்வது
நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருந்தால், உங்கள் பெற்றோரிடம் சொல்வதோடு விஷயம் முடிந்துவிடுவதில்லை. ஆண்ட்ரூ கூறுகிறார்: “என் பிரச்சினையை மூப்பர்களிடம் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. அவர்கள் எனக்கு உதவி செய்ய தயாராய் இருந்தார்கள் என்பதை அறிந்தது எவ்வளவு நிம்மதியைத் தந்தது!” ஆம், யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள இளைஞர் உதவிக்காகவும் உற்சாகத்திற்காகவும் மூப்பர்களிடம் செல்லலாம், செல்லவும் வேண்டும். ஆனால் ஏன் நீங்கள் வெறுமனே யெகோவாவிடம் ஜெபம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடக்கூடாது? ஏனெனில், மூப்பர்கள் ‘உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கும்படி’ யெகோவா அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். (எபிரெயர் 13:17) நீங்கள் மறுபடியும் பாவத்துக்குள் விழுந்துவிடுவதைத் தடுக்க அவர்கள் உங்களுக்கு உதவலாம்.—யாக்கோபு 5:14-16-ஐ ஒப்பிடுக.
உங்களுக்கு நீங்களே உதவிக்கொள்ளலாம் என்று நியாயங்காட்டுவதன் மூலம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். அப்படிச் செய்யுமளவுக்கு நீங்கள் உண்மையிலேயே பலமுள்ளவர்களாய் இருந்திருந்தால், முதலில் பாவத்துக்குள் நீங்கள் விழுந்திருப்பீர்களா? உங்களைத் தவிர மற்றொருவரிடமிருந்து உதவியை நாடுவது உங்களுக்குத் தேவை என்பது தெளிவாய் இருக்கிறது. ஆண்ட்ரூ தைரியத்துடன் அவ்வாறு உதவியை நாடினார். அவர் கூறும் ஆலோசனை? “படுமோசமான ஒரு பாவத்தில் ஈடுபடும், அல்லது ஈடுபட்டிருக்கும் எவராவது, யெகோவாவிடமும் அவருடைய மேய்ப்பர்களாயிருக்கும் ஒருவரிடமும் தன் இதயத்தைத் திறக்கும்படி நான் உற்சாகமளிக்கிறேன்.”
ஆனால் எப்படித்தான் நீங்கள் ஒரு மூப்பரை அணுகுவது? நியாயமான அளவுக்கு நீங்கள் சௌகரியமாய் உணரும் ஒருவரைத் தெரிவு செய்யுங்கள். “நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்” என்றோ, அல்லது “எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது” என்றோ, அல்லது “எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது, உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது” என்றோகூட நீங்கள் சொல்வதன் மூலம் ஆரம்பிக்கலாம். நீங்கள் நேர்மையாயும் மனந்திறந்து பேசுவது, நீங்கள் மனந்திரும்புகிறீர்கள் என்பதையும் மனம்மாற விரும்புகிறீர்கள் என்பதையும் வெளிக்காட்டுவதில் அதிகத்தைச் செய்யக்கூடும்.
‘சபைநீக்கம் செய்யப்பட்டுவிடுவதைப் பற்றி நான் பயப்படுகிறேன்’
அந்தச் சாத்தியத்தைப் பற்றி என்ன? படுமோசமான ஒரு பாவத்தைச் செய்வதால், ஒருவர் சபைநீக்கம் செய்யப்படலாம் என்பது உண்மையாய் இருந்தாலும், ஒருவர் பாவம் செய்துவிட்டால் உடனடியாக சபைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தப்படுத்துவதில்லை. சபைநீக்கம் என்பது, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கே—மனம்மாறாமல் பிடிவாதமாய் இருப்பவர்களுக்கே—உரியது. நீதிமொழிகள் 28:13 இவ்வாறு கூறுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” உதவிக்காக மூப்பர்களை நீங்கள் அணுகியிருக்கிறீர்கள் என்ற உண்மையே, நீங்கள் மனம்மாற விரும்புகிறீர்கள் என்பதற்கான அத்தாட்சியாய் இருக்கிறது. மூப்பர்கள், முதன்மையாக, குணமாக்குபவர்களாய் இருக்கிறார்கள், தண்டிப்பவர்களாய் இல்லை. கடவுளுடைய ஜனங்களை தயவுடனும் கௌரவத்துடனும் நடத்தும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ‘உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துவதற்கு’ உதவ அவர்கள் விரும்புகின்றனர்.—எபிரெயர் 12:13.
ஏமாற்றுதலும், தொடர்ச்சியாய் படுமோசமான குற்றம் இழைத்துவருவதும் எங்கு இருக்கிறதோ, அங்கு, ‘மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்வதில்’ உறுதியாய் இருப்பது தவறலாம். (அப்போஸ்தலர் 26:20) சில சமயங்களில் சபைநீக்கம் செய்யப்படுகிறது. மேலும் குற்றம் செய்தவர் மனந்திரும்பினபோதிலும், சிட்சிப்பதன் சில முறைகளைக் கையாள மூப்பர்கள் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் தீர்மானத்தால் நீங்கள் கோபப்படவோ கசப்படையவோ வேண்டுமா? எபிரெயர் 12:5, 6-ல் பவுல் இவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்: “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்.” நீங்கள் எப்படிப்பட்ட சிட்சையைப் பெற்றாலும், கடவுள் உங்களை நேசிப்பதன் அடையாளமாய் அதை நோக்குங்கள். உண்மையான மனந்திரும்புதல், நம் இரக்கமான தகப்பனாகிய யெகோவா தேவனோடு ஒரு சரியான உறவை வைத்துக்கொள்ள மறுபடியும் புதுப்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் தப்பிதங்களை ஒப்புக்கொள்வதற்கு தைரியம் தேவை. ஆனால் அவ்வாறு ஒப்புக்கொள்வதன் மூலம், உங்கள் பெற்றோருடன் மட்டுமல்ல, யெகோவா தேவனிடமும்கூட நீங்கள் விஷயங்களை சரிசெய்யலாம். பயம், பெருமை, அல்லது தர்மசங்கடம் ஆகியவை நீங்கள் உதவியைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். யெகோவா “மன்னிப்பதற்குத் தயை பெருத்திருக்கிறார்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.—ஏசாயா 55:7.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b உங்கள் பெற்றோரை அணுகுவதைப் பற்றிய தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில் 2-வது அதிகாரத்தைக் காண்க.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
‘பாவத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் யெகோவாவிடம் தங்கள் இதயத்தைத் திறக்கும்படி நான் உற்சாகமளிக்கிறேன்.’—ஆண்ட்ரூ
[பக்கம் 11-ன் படம்]
உங்கள் பெற்றோரிடம் அறிக்கை செய்வது ஆவிக்குரிய சுகத்தை மீண்டும் பெறுவதற்கு வழிநடத்தலாம்