பைபிளின் கருத்து
ஜலப்பிரளயம்—நிஜமா, கட்டுக்கதையா?
‘எல்லா மிருகங்களும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன.’—ஆதியாகமம் 7:8, 9.
நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தைப் பற்றி யார்தான் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்? ஒருவேளை அந்தக் கதையை நீங்கள் பிள்ளைப்பருவத்திலிருந்தே அறிந்திருக்கலாம். உண்மையில், ஜலப்பிரளயத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்காக உள்ளூர் நூல்நிலையம் ஒன்றுக்கு நீங்கள் சென்றால், பெரியவர்களுக்கென்று எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தைவிட சிறுவர்களுக்கென்று அந்த விஷயத்தில் அதிக புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இவ்வாறு, ஜலப்பிரளயத்தைப் பற்றிய பதிவு வெறும் ஒரு படுக்கை நேரக் கதையே என்று நினைக்க நீங்களும் தீர்மானிக்கலாம். பைபிளின் பிற பதிவுகளோடு சேர்ந்து, மூதாதை நோவாவின் நாளைய ஜலப்பிரளயமும் வெறும் ஒரு கட்டுக்கதையே அல்லாமல் வேறில்லை என்றும், ரொம்பப்போனால், மனிதரால் கற்பனைசெய்து எழுதப்பட்ட ஒரு நன்னெறியே என்றும் பலர் உணருகின்றனர்.
ஆச்சரியமூட்டும் வகையில், பைபிளை அடிப்படையாகக்கொண்ட மத நம்பிக்கைகளை உடையவர்களாய் உரிமைபாராட்டுபவர்களும்கூட, அந்த ஜலப்பிரளயம் உண்மையிலேயே நிகழ்ந்ததா என்று சந்தேகிக்கின்றனர். நோவாவைப் பற்றிய கதை சரித்திரமாக இல்லாமல் “ஓர் உருவகமாகவோ, இலக்கியப் படைப்பாகவோ” விளக்கப்பட வேண்டும் என்று கத்தோலிக்க குரு எட்வர்ட் ஜே. மக்லேன் ஒரு தடவை கூறினார்.
என்றபோதிலும், பைபிளில் உள்ள ஜலப்பிரளயத்தைப் பற்றிய விவரப்பதிவு வெறும் ஓர் உருவகமா, அதை ஒருபோதும் சொல்லர்த்தமானதாக புரிந்துகொள்ள முடியாதா? அப்படிப்பட்ட நோக்குநிலையை பைபிளே அனுமதிக்கிறதா?
நம்பத்தகுந்த விவரங்கள்
ஆதியாகம புத்தகத்தில் மோசேயால் பதிவு செய்யப்பட்ட பதிவை முதலில் எண்ணிப்பாருங்கள். அதில், அந்த வெள்ளப்பெருக்கு தொடங்கியது எப்போது என்பதைப் பற்றியும் அந்தப் பேழை தங்கியது எப்போது என்பதைப் பற்றியும், பூமி உலர்ந்தது எப்போது என்பதைப் பற்றியும் திட்டவட்டமான ஆண்டு, மாதம், நாள் ஆகியவை பதிவாகியிருப்பதை நாம் காண்கிறோம். (ஆதியாகமம் 7:11; 8:4, 13, 14) ஆதியாகமத்தில் வேறு இடங்களில் எப்பொழுதுமே திட்டவட்டமான தேதிகள் பதிவாகியிராவிட்டாலும், மோசே அந்த ஜலப்பிரளயத்தை உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகத்தான் கருதினார் என்ற உண்மையை இந்தத் தேதிகள் அழுத்திக் காட்டுகின்றன. பொதுவாக ஒரு கட்டுக்கதையில் கூறப்படும், “முன்னொரு காலத்தில் . . . ” என்ற ஆரம்ப வார்த்தைகளுடன் பைபிளில் உள்ள சத்தியத்தின் தொனியை முரண்படுத்திப் பாருங்கள்.
மற்றொரு உதாரணமாக, அந்தப் பேழையையே எடுத்துக்கொள்ளுங்கள். நீள-உயர வீதம் 10-க்கு 1 என்ற அளவிலும், நீள-அகல வீதம் 6-க்கு 1 என்ற அளவிலும் சுமார் 133 மீட்டர் நீளமுள்ள ஒரு பேழையைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. (ஆதியாகமம் 6:15) நோவா கப்பல் கட்டுபவராய் இருக்கவில்லை. மேலும், நினைவில் வையுங்கள், இது 4,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்! ஆனாலும், அந்தப் பேழை, மிதக்கும் பேழையாய் நன்கு செயல்படுவதற்கு ஏற்ற வகையிலான அளவுகளில் கட்டப்பட்டது. உண்மையில், இதைப்போன்ற விகிதங்கள் பரந்தகன்ற கடலில் மிதப்பதற்கேற்ற வலுவான கட்டமைப்பிற்கும், உறுதியான சமநிலைக்கும் பொருத்தமாய் இருப்பதாக நவீனகால கப்பல் கட்டும் நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். நோவா பேழையைக் கட்டுவதற்கு எவ்வளவு காலம் எடுத்தார் என்று குறிப்பாக பைபிள் கூறாவிட்டாலும், கட்டுமானத்திற்கு 50 அல்லது 60 ஆண்டுகள் எடுத்திருப்பதை பதிவு எடுத்துக்காட்டுகிறது. (ஆதியாகமம் 5:32; 7:6) இந்த அம்சங்கள், கில்காமேஷில் தோன்றிய பாபிலோனிய புராணத்தில் காணப்படும் நன்கறியப்பட்ட கதைக்கு நேர் முரணாக இருக்கிறது. அந்தப் புராணக்கதை, சுமார் 60 மீட்டர் பக்க அளவுள்ள ஒரு பெரிய நயமற்ற கனசதுரப் பெட்டி ஏழே நாட்களில் கட்டப்பட்டதாகக் கூறுகிறது. அந்தப் பாபிலோனிய புராணக்கதையைப் போலல்லாமல், பைபிளின் ஜலப்பிரளய பதிவு அதன் திருத்தமான தன்மையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
ஆதியாகமப் பதிவைத் தவிர, நோவா அல்லது பூகோள ஜலப்பிரளயத்தைப் பற்றிய வேத வசனங்கள் பத்து தடவை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகள் ஏவப்பட்ட எழுத்தாளர்கள் ஜலப்பிரளயத்தை உண்மையான சரித்திரமாகக் கருதினதாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனவா, அல்லது ஒரு கட்டுக்கதையாகக் கருதினதாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனவா?
உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது
வேதாகமங்களில், இஸ்ரவேலின் இரண்டு வம்சாவளி பட்டியல்களில் நோவா தோன்றுகிறார். இரண்டாவது, இயேசு கிறிஸ்துவில் உச்சக்கட்டம் அடைகிறது. (1 நாளாகமம் 1:4; லூக்கா 3:36) இந்த வம்சாவளியைத் தொகுத்தவர்களான எஸ்றா, லூக்கா ஆகிய இருவருமே திறமை வாய்ந்த சரித்திராசிரியர்களாக இருந்தார்கள். ஆகவே நோவா ஒரு உண்மையான நபராய் இருந்தார் என்று அவர்கள் நம்பியிருந்திருக்க வேண்டும்.
பைபிளின் மற்ற இடங்களில், சரித்திர நபர்களோடு சேர்த்து நோவா வரிசைப்படுத்தப்படுகிறார்; நீதிமானாகவும் விசுவாசியாகவும் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறார். (எசேக்கியேல் 14:14, 20; எபிரெயர் 11:7) ஒரு கற்பனையான நபரை நாம் பின்பற்றத் தகுந்த ஒரு முன்மாதிரியாக பைபிள் எழுத்தாளர்கள் உட்படுத்துவது அர்த்தமுள்ளதாகுமா? ஆகாது, ஏனெனில் இது, விசுவாசம் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றும் கதைப்புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களால் மட்டுமே வெளிக்காட்டப்பட முடியும் என்றும் எளிதில் முடிவெடுக்க பைபிள் வாசிப்போரை வழிநடத்தலாம். நோவாவும் விசுவாசிகளான மற்ற ஆண்களும் பெண்களும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது ஏனெனில் அவர்கள் நம்மைப்போன்ற பலவீனமும் உணர்வுகளும் உடைய மனிதர்களாகவே இருந்தனர்.—எபிரெயர் 12:1; யாக்கோபு 5:17-ஐ ஒப்பிடுக.
மற்ற வேதாகமக் குறிப்புகளில், நோவாவும் ஜலப்பிரளயமும் நோவாவைச் சுற்றியிருந்த விசுவாசமற்ற சந்ததியை அழிப்பதற்காக அதன்மீது கடவுள் கொண்டுவந்த அழிவைப் பற்றிப் பேசும் சூழமைவில் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. லூக்கா 17:26, 27-ல் பதிவாகியுள்ள, ஜலப்பிரளயத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்டுக் காட்டுவதைக் கவனியுங்கள்: “நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.”
தாம் விளக்கின நிகழ்ச்சிகளுக்கு இயேசு கிறிஸ்து கண்கண்ட சாட்சியாய் இருந்தார். ஏனெனில் பூமியில் தம் வாழ்க்கையைத் துவங்குவதற்கு முன்பு அவர் பரலோகத்தில் வாழ்ந்துவந்தார். (யோவான் 8:58) அந்த ஜலப்பிரளயம் வெறும் ஒரு கட்டுக்கதையாய் இருந்திருந்தால், தம்முடைய எதிர்கால வருகை, கற்பனையான ஒன்றுதான் என்பதை இயேசு அர்த்தப்படுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும், அல்லது அவர் உண்மைக்கு மாறான ஒன்றைப் பேசிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இவற்றில் எந்த முடிவும் வேதாகமத்தின் மற்ற பாகங்களோடு இசைந்திருப்பதாய் இல்லை. (1 பேதுரு 2:22; 2 பேதுரு 3:3-7) ஆகவே, தாம் நேரில் கண்டிருந்ததன் பயனாக, உலகளாவிய ஜலப்பிரளயத்தைப் பற்றிய பைபிள் பதிவை நம்பத்தக்க வரலாறாக இயேசு கிறிஸ்து நம்பினார். இது உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு, சந்தேகமின்றி, நோவாவின் நாளைய ஜலப்பிரளயம் நிஜமே, கட்டுக்கதை அல்ல என்பதற்கான மிகத் தீர்மானமான நிரூபணமாக இருக்கிறது.
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
L. Chapons/Illustrirte Familien-Bibel nach der deutschen Uebersetzung Dr. Martin Luthers