வறுமை ‘அறியப்படாத அவசரநிலை’
“புவி வெப்ப அதிகரிப்பு, ஓசோன் படலங்களின் அழிவு, கடல் மாசு போன்ற கவலைக்கிடமான அவசரநிலைகளைக் குறித்து நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம்,” என ஐக்கிய மாகாணங்களின் அறிவுரையாளரான டாக்டர் மெக்பூப் யல்ஹாக் சொன்னார்; ஆனால் கூடுதலாக அவர் இவ்வாறு சொன்னார்: “புவி வெப்ப அதிகரிப்பும் மற்ற அநேக கவலைக்கிடமான அவசரநிலைகளும் இனிதான் எவரையாவது கொல்லும், [ஆனால்] அறியப்படாத அவசரநிலைகள் வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொரு நாளும் அநேகம் பேரை கொன்றுவருகின்றன.” இப்படிப்பட்ட அறியப்படாத அவசரநிலைகளில் ஒன்றைப் பற்றி டாக்டர் யல்ஹாக் சொன்னார். “வறுமை உண்மையிலேயே மிகப் பெரிய கொலையாளி,” என அவர் சொன்னார். அது எப்படி?
நாளுக்கு ஒரு டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தும் 130 கோடி உலக மக்களில் அநேகருக்கு, வறுமை உண்மையில் ஒரு கொடிய ஆபத்தாகிறது. ஒவ்வொரு வருடமும் 1.8 கோடி மக்கள் “வறுமை சம்பந்தப்பட்ட காரணங்களால்” இறக்கின்றனர் என்பதாக UN க்ரானிக்கல் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. இந்த எண்ணிக்கை கதிகலங்க வைக்கிறது! உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து மக்களுமே, சுமார் 1.8 கோடியினர், ஒரு வருடத்திற்கு பட்டினிகிடந்தனர் என்ற “பரபரப்பான” தலைப்புச்செய்தியை சற்று கற்பனை செய்துபாருங்கள்! ஆனாலும், கோடிக்கணக்கான ஏழைகள் இறப்பது குறித்து “அதிகம் சொல்லப்படுவதில்லை” என ஒரு ஐமா ரேடியோ ஒலிபரப்பு குறிப்பிட்டது. இது உண்மையிலேயே ஒரு ‘அறியப்படாத பேராபத்து.’
இதை அம்பலமாக்க, சமூக வளர்ச்சிக்கான முதல் உலக மாநாட்டில் கலந்துகொண்ட 117 நாடுகளின் பிரதிநிதிகள், உலகின் வறுமைப் பிரச்சினையை சமாளிப்பதன் வழிகளைப் பற்றி பேசினார்கள். “நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பாக உலகம் அடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை ஆரம்பித்தது,” என்பதை ஐக்கிய மாகாணங்கள் வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகியான ஜேம்ஸ் குஸ்தேவ் ஸபெத் நினைப்பூட்டினார். “இன்று நாம் வறுமைக்கு எதிராக ஓர் உலகப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்,” என அவர் சொன்னார். ஏன் இந்தக் கவலை? வறுமை, “அவநம்பிக்கையையும் நிலையற்ற தன்மையையும் வளர்த்து நம் உலகை அபாயத்திற்கு ஆளாக்குகிறது,” என்பதாக அவர் எச்சரித்தார்.
எனினும், வறுமையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான வழிகளை பிரதிநிதிகள் கலந்தாலோசித்துக்கொண்டிருக்கையில், ஒவ்வொரு நாளும் ஏழ்மையான குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிக்கொண்டேவந்த ஒரு ‘வறுமைக் கடிகாரம்’ அங்கு வைக்கப்பட்டது; அது, உலகளாவிய வறுமை நிலை படுமோசமாகிக்கொண்டே சென்றதைக் காண்பித்தது. மாநாடு நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிகாரம், ஒருவாரம் நடைபெற்ற அந்த மாநாட்டின்போது, எப்போதுமே அதிகரித்துச் செல்லும் ஏழைகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6,00,000 குழந்தைகள் சேர்க்கப்பட்டிருந்தன என காண்பித்தது. மாநாட்டின் கடைசி நாளின் முடிவில், கடிகாரம் நிறுத்தப்பட்டது; ஆனால் உண்மையில் ஸபெத் சொன்னார், “அந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.” இப்போது கேள்வி என்னவென்றால், அந்த ஓசை காதுகளில் விழுமா?