உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 2/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • ஆப்பிரிக்காவில் காதுகேளாதோருக்கு உதவி
  • கைகளைக் கழுவவும்!
  • சிரித்தால் தீர்க்காயுசா?
  • கத்தோலிக்க சர்ச் “இக்கட்டான நிலையில்”
  • பின்னோக்கிப் பார்த்து முன்னேறுதல்
  • டால்ஃபின் மெய்க்காப்பாளர்கள்
  • “விரைவு-உணவு” நற்கருணை
  • புறாக்களின் போக்குவரத்து
  • கருணை கொலையை ஆஸ்திரேலிய அரசு சட்டப்பூர்வமாக்குகிறது
  • சர்ச்சுகள் மாற்றியமைக்கப்படுதல்
விழித்தெழு!—1997
g97 2/22 பக். 28-29

உலகை கவனித்தல்

ஆப்பிரிக்காவில் காதுகேளாதோருக்கு உதவி

“யெகோவாவின் சாட்சிகள் சங்கேத மொழியைக் கற்றுக்கொள்வதில் காண்பிக்கும் தன்னலமற்ற அக்கறையையும் முயற்சிகளையும் குறித்து UNAD நியூஸ் போற்றுதல் தெரிவிக்கிறது,” என்பதாக காது கேளாதோருக்கான உகாந்தா தேசிய கழகத்தின் (UNAD [Uganda National Association of the Deaf]) பத்திரிகை குறிப்பிட்டது. உகாந்தாவில் கம்பாலாவிலுள்ள காது கேட்கும் சாட்சிகள் சிலர், அந்த நாட்டில் காது கேட்பதில் குறைபாடுள்ளவர்களுக்கு ஆவிக்குரிய கவனிப்பை அளிக்கும் நோக்கில் சங்கேத மொழியைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அந்தப் பத்திரிகை அறிவித்தது. நம்பிக்கையளிக்கும் சங்கேதமொழி மொழிபெயர்ப்பாளர்கள் இருவர், “உலகில் மிக விரைவாக வளர்ந்துவருவதும், உயர்வாக மதிக்கப்பட்டதும், பைபிள் போதனைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்காக சர்வதேச அளவில் அறியப்பட்டிருப்பதுமான ஒரு மதத்தில் ஒழுங்கான பயனியர்கள் அல்லது முழு நேர [ஊழியர்கள்]” என்று அந்த அறிக்கை மேலுமாகக் கூறியது.

கைகளைக் கழுவவும்!

பொது கழிப்பிடத்தைப் பயன்படுத்திவிட்டு வந்து, எத்தனை பேர் தங்கள் கைகளைக் கழுவுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க ஆய்வுத் திட்டம் ஒன்றை நுண்ணுயிரியலுக்கான அமெரிக்க சங்கம் சமீபத்தில் முன்னேற்றுவித்ததாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கைகளைக் கழுவ வேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லாரும் அறிந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. வயதுவந்தவர்கள் 1,004 பேரை வைத்து தொலைபேசி மூலம் சுற்றாய்வு நடத்தியதில், பொது கழிப்பிடத்தைப் பயன்படுத்தியபின் எப்போதுமே கைகளைக் கழுவுவதாக 94 சதவீதமானோர் கூறினர். ஆனால் அவர்கள் செய்கிறார்களா? ஐந்து பெரிய அமெரிக்க நகரங்களில், 6,333 பேர்களில், 61 சதவீதம் ஆண்களும் 74 சதவீதம் பெண்களும் மட்டுமே கழிப்பிடத்தைப் பயன்படுத்தியபின் கைகளைக் கழுவியதாக கழிப்பிடங்களை கவனித்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அழுக்கான கைகள் நோய்களை எளிதில் பரப்புகின்றன; உணவுப் பொருட்களைத் தொட்டு வேலைசெய்யும் ஒரே ஒரு நபர் கை கழுவாவிட்டாலும், அதனால் டஜன்கணக்கான மக்கள் நோய்வாய்ப்படலாம். பெற்றோரின் வழிநடத்துதல் இல்லாமையே பிரச்சினைக்கு ஓரளவு காரணமாக இருக்கக்கூடும். “இன்று பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளைக் கை கழுவும்படி சொல்வதில்லை,” என்று குறிப்பிட்டார் டாக்டர் கேயல் காஸல். “பள்ளிகளும் அதைப் பற்றி பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. இது முக்கியமானதென்று நாம் நினைவூட்டப்பட வேண்டும்.”

சிரித்தால் தீர்க்காயுசா?

சிரிப்பு ஒரு நல்ல மருந்து என்பதாக நெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நியூ யார்க்கின் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், இது ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதைக் கண்டறிய தீர்மானித்தனர். ஒருவரின் நோய்த் தடுப்பாற்றல் அமைப்பிற்கு சக்தியளிக்கும் பலமான ஹார்மோன்கள் சுரக்கப்படுவதை சிரிப்பு தூண்டிவிடுவதாக அவர்கள் கண்டுபிடித்ததை சமீபத்தில் வெளியிட்டனர். சைட்டகைன் என்று அழைக்கப்பட்ட ஒரு வகை ஹார்மோன்கள், இரத்தத்திலுள்ள வெள்ளணுக்களின் செயலைப் பெருக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது; இந்த அணுக்கள் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளை அகற்றுவதற்கும் புற்றுநோய்க்கு சாத்தியமான அணுக்களை அழிப்பதற்கும் தேவைப்படுகின்றன. “சிரிக்கையில் இரத்தத்திலுள்ள அவற்றின் அளவுகள் அதிகரிக்கப்படுகிற பொருட்களில் ஒன்றே” இந்த சைட்டகைன்கள் என்பதாக லண்டனின் தி ஸன்டே டைம்ஸ் சொல்லுகிறது. சிரிப்பிற்கும் சைட்டகைன்களுக்குமுள்ள தொடர்பானது, அவற்றை சந்தோஷ ஹார்மோன்கள் என்று குறிப்பிடும்படி சில ஆய்வாளர்களைத் தூண்டியிருக்கிறது. இதனால், அந்தச் செய்தித்தாள் சிரிப்பை “தீர்க்காயுசின் சூத்திரம்” என்றழைக்கிறது.

கத்தோலிக்க சர்ச் “இக்கட்டான நிலையில்”

ஏழு பிஷப்புகள் அடங்கிய ஒரு குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, கத்தோலிக்க சர்ச் ஒரு “இக்கட்டான நிலையில்” இருப்பதாக விவரிக்கிறது என்று டெக்ஸஸிலுள்ள ஆர்லிங்டனின் ஸ்டார்-டெலிகிராம் தெரிவிக்கிறது. “சர்ச் தன்னுடைய பெரும் பிரிவினைகளைச் சரிப்படுத்திக்கொள்ளும்படி அழைப்புவிடுக்கிறது,” அந்த அறிக்கை என்பதாக அந்தச் செய்தித்தாள் எடுத்துக்கூறுகிறது. குருவர்க்கத்தின் மணத்துறவு மற்றும் பெண்களுக்கு ஊழிய விலக்களித்தல் போன்ற சர்ச் போதனைகளை ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஆறு கோடி கத்தோலிக்கரில் பலர் ஒத்துக்கொள்வதில்லை என்று கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. அந்த அறிக்கையை வெளியிடும் செய்தியாளர் கூட்டம் ஒன்றில், காலஞ்சென்ற கார்டினல் ஜோஸஃப் பெர்னார்டென் “சர்ச்சுக்குள் அதிகரித்துவரும் பிரிவினையும், சில வேளைகளில் காணப்படும் தன்னலமும்” சர்ச் செய்ய வேண்டிய வேலையில் குறுக்கிடுவதைக் குறித்து கவலை தெரிவித்தார். “அதன் விளைவாக சர்ச்சின் ஒற்றுமை அச்சுறுத்தப்படுகிறது,” என்றார் அவர். “சர்ச்சின் உண்மையுள்ள அங்கத்தினர்கள் சோர்ந்துபோய்விட்டார்கள்; அரசாங்கத்துக்கும், சமுதாயத்திற்கும், பண்பாட்டுக்கும் எங்கள் வாக்குமூலம் செல்லாததாகிவிடுகிறது.”

பின்னோக்கிப் பார்த்து முன்னேறுதல்

டிரான்சிஸ்டர்களுக்கு முன்பு வெற்றிடக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது ஆராய்ச்சியாளர்கள் பின்னோக்கிப் பார்க்கிறார்கள். “வெற்றிடக் குழாய்களை 1940-களிலிருந்த நிலையிலிருந்து நாங்கள் மீண்டும் பரிசோதிக்கிறோம்,” என்கிறார் வட கரோலினா அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் க்ரிஃப் எல். பில்ப்ரோ. “ஆனால் ரடார் மற்றும் செலுலார் தொலைபேசிகளில் அவற்றைப் பயன்படுத்துவதற்காக, இப்போதிருக்கும் புதிய மூலப்பொருள்கள் மற்றும் கம்ப்யூட்டர் உதவியுடன் திட்டமைப்பு செய்யும் ஏதுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மிக உயர்ந்த அதிர்வெண்களில் வெற்றிட குழாய்களின் செயல்பாட்டை முன்கணிக்க முயலுகிறோம்.” பழைய குழாய்களுக்கும் புதிய குழாய்களுக்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம் அவற்றின் அளவு. புதிய குழாய்கள் சிறியவையாய் இருக்கின்றன; ஒரு தீக்குச்சி நுனியை ஒத்த அளவுகளில் வருகின்றன. “எலக்ட்ரோடுகளை டயமண்டில் பொதிந்து, பின்னர் உள்ளிருந்து காற்றை வெளியேற்றுவதன்” மூலம் அவை உண்டாக்கப்படுகின்றன என்று ஸயன்ஸ் நியூஸ் பத்திரிகை சொல்லுகிறது. “புதிய டயமண்ட் வெற்றிட குழாய்களுக்கும் 50 வருடங்களுக்கு முன்னிருந்த பெரிய கண்ணாடி பல்புகளுக்கும் இடையேயுள்ள பெரிய வித்தியாசம் வெப்பம். பழைய குழாய்கள் மின்னணுக்களை வெளிவிட வேண்டுமானால் செந்தழல் வெப்பத்தில் இருக்க வேண்டும். புதிய குழாய்கள் அறை வெப்பத்திலேயே மின்னோட்டத்தை ஏற்படுத்துகின்றன.” அரைக்கடத்திகள் மற்றும் கம்ப்யூட்டர் சில்லுகளைவிடவும் நீடித்து உழைப்பவையாய் இருப்பதோடுகூட, இந்தப் புதிய குழாய்கள், உயர் வெப்ப அளவுகளிலும், மின்னழுத்தத்திலும், கதிர்வீச்சிலும் அவற்றைவிட சிறந்ததாகச் செயல்படுகின்றன.

டால்ஃபின் மெய்க்காப்பாளர்கள்

செங்கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்த ஒருவர் டால்ஃபின் கூட்டம் ஒன்றால் காக்கப்பட்டிருக்கலாம் என்பதாக ஜர்னல் ஆஃப் காமர்ஸ் அறிக்கை செய்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த மார்க் ரிச்சர்ட்ஸன், எகிப்திய கரைக்கு அப்பால் நீச்சலடிக்கையில் ஒரு சுறாவால் தாக்கப்பட்டார். அவருடைய உடலின் ஒரு பக்கத்திலும் கையிலும் கடிக்கப்பட்ட பின்னர், மூன்று குமிழ்-மூக்கு டால்ஃபின்கள் (bottle-nosed dolphins), “சுறாவைப் பயமுறுத்தி விரட்டுவதற்காக தங்கள் துடுப்புகளையும் வால்களையும் படபடவென்று அடித்துக்கொண்டு” அவரைச் சூழ்ந்துகொண்டன. பின்னர் அந்த டால்ஃபின்கள், “திரு. ரிச்சர்ட்சனின் நண்பர்கள் அவருடைய உதவிக்காக வரும் வரையிலும் அவரைச் சுற்றியே வட்டமிட்டன.” “தாய் டால்ஃபின்கள் தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கையில் அப்படி நடந்துகொள்வது டால்ஃபின்களின் மத்தியில் பொதுவானதே,” என்று அந்த ஜர்னல் சொல்லுகிறது.

“விரைவு-உணவு” நற்கருணை

சர்ச்சின் நற்கருணை ஆராதனைகளில் பயன்படுத்துவதற்கான அடையாளச் சின்னங்களை சாப்பிட்டபின் தூக்கியெறியத்தக்க பொதிகளில் அமெரிக்க தொழில் நிர்வாகியாகிய ஜிம் ஜாண்சன் தயாரிப்பதாக இன்றைய கிறிஸ்தவம் (ஆங்கிலம்) அறிக்கை செய்கிறது. கப்பைப் போன்ற மிகச் சிறிய ஊதா நிற பாக்கெட்டுகள், ஒரு மடக்கு திராட்சரசத்தை அல்லது ஒய்னை கொண்டிருக்கின்றன. இரட்டை அடைப்புகளில் ஒன்றிற்குள் புளிப்பில்லாத அப்ப வேஃபர் ஒன்றும் மற்றதில் ஒய்னும் வைத்து அடைக்கப்பட்ட வண்ணம் அந்த கப்புகள் வருகின்றன. விரைவான தயாரிப்பு, சுத்தம் செய்ய குறைவான நேரம், சிக்கனம், சுகாதாரம் ஆகிய நன்மைகளை இந்தச் சாதனம் கொண்டிருப்பதாக ஜாண்சன் சொல்லுகிறார். நற்கருணையில் “மொத்த விற்பனை” அணுகுமுறை பற்றி சில முறையீடுகள் எழுப்பப்பட்டிருக்கிறபோதும், ஏற்கெனவே 4,000-க்கும் மேலான சர்ச்சுகள் இந்தப் புதிய சாதனத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. ஜாண்சன் அதற்கு பதிலுரைப்பவராய்: “இயேசு திரளானோருக்கு உணவளித்தபோதுதான் முதல் விரைவு-உணவு சாப்பாட்டை அளித்தார்,” என்று கூறினார்.

புறாக்களின் போக்குவரத்து

நிலத்தடி ரயிலில் போய் வரும் பயணிகளுடன்கூட லண்டனிலுள்ள புறாக்களும் இலவச சவாரி செய்துவருவதாக நெடுங்காலமாக கவனிக்கப்பட்டிருக்கிறது என்று நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அதோடுகூட, அந்தப் பறவைகள் வழியில் எந்த நிலையத்தில் இறங்க வேண்டும் என்றும் அறிந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்தப் பத்திரிகை விடுத்த ஓர் அழைப்பிற்கு இணங்கி, சிறகுள்ள இந்தப் பயணிகளுடன் தங்களுக்கிருந்த சொந்த அனுபவங்களைக் குறித்து பல வாசகர்கள் எழுதினார்கள். உதாரணமாக, ஒருவர் இவ்வாறு எழுதினார்: “1974-76-ல், பாடிங்டனில் நிலத்தடி ரயிலில் ஏறி அதற்கடுத்த நிலையத்தில் இறங்கும் இளஞ்சிவப்பு நிறமுள்ள ஒரு புறாவை நான் தவறாமல் சந்திப்பதுண்டு.” 1965-லேயே இதுபோன்ற ஒரு நிகழ்வைக் கவனித்ததாக வேறொருவர் குறிப்பிட்டார். லண்டனின் போக்குவரத்து அமைப்புக்கு சுமார் 30 வருடங்களாக இந்தப் புறாக்கள் பயணக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்திருப்பதாகத் தோன்றும்!

கருணை கொலையை ஆஸ்திரேலிய அரசு சட்டப்பூர்வமாக்குகிறது

தற்கொலையை அனுமதிக்கும் புதிய அரச சட்டம் ஒன்றின்கீழ் மருத்துவர் உதவ, இறக்கும் முதல் நபராக ஆனார், ஆஸ்திரேலியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. அவர் தன்னுடைய 60-களில் இருந்தார்; சாவுக்கேதுவான முற்றும் நிலையில் இருந்த விந்துசுரப்பி புற்றுநோயால் அவர் துன்பப்பட்டார். “ஒருவர் சட்டப்பூர்வமாக தன் உயிரைப் போக்கியிருக்கும் முதல் முறை இதுவே,” என்கிறார், அந்த நபரின் உயிருக்கு ஆபத்தூட்டும் அளவுகளில் தூக்க மருந்துகளை அளித்த மருத்துவராகிய டாக்டர் ஃபிலிப் நிக்கி. “படுக்கையின் பக்கத்திலுள்ள ஒரு லாப்டாப் கம்ப்யூட்டரில் ஒரு கீயை அழுத்தி தன் சொந்த மரணத்தின் செயல்பாட்டை தொடங்க அனுமதிக்கும் ஒரு இயந்திரத்தோடு அந்த நபர் இணைக்கப்பட்டார்,” என்று விவரித்தார் நிக்கி. என்றாலும், அந்தப் புதிய சட்டம் கடும் எதிர்ப்பை எதிர்ப்படுகிறது. அந்தச் சட்டத்தை ஒழிப்பதற்கான சட்டங்களைக் குறித்து தேசிய பாராளுமன்றம் சிந்தித்துக்கொண்டிருக்கிறது; சில மருத்துவர்களாலும் சர்ச்சுகளாலும் அந்தச் சட்டம் நீதிமன்றத்தில் சவால் விடப்பட்டிருக்கிறது.

சர்ச்சுகள் மாற்றியமைக்கப்படுதல்

ஹெட் ஓவரேஸல்ஸ் டாக்ப்லாட் என்ற டச் செய்தித்தாளின்படி, நெதர்லாந்திலுள்ள சுமார் 300 சர்ச் கட்டடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளாகவும், அபார்ட்மெண்ட்டுகளாகவும், எக்ஸிபிஷன் ஹால்களாகவும், அலுவலக கட்டடங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. நெதர்லாந்தில் கடந்த 15 வருடங்களில், சர்ச்சுக்கு வருகை தந்தோரின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்திருக்கையில், சர்ச் கட்டடங்களை பராமரிக்கும் அதிகமான செலவுகளின் பாரத்தை தங்கள் தோள்களிலிருந்து இறக்க யாரையாவது கண்டுபிடிப்பதில் அநேக சர்ச்சுகள் சந்தோஷப்படுகின்றன. சில சர்ச் கட்டடங்கள், ஒரு கில்டர் (சுமார் 60 சென்டுகள், ஐ.மா.) என்ற மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன! என்றாலும், முன்னாள் சர்ச்சை ஒரு வர்த்தக கட்டடமாக மாற்றியமைப்பது, குறிப்பாக வயதானவர்கள் மத்தியில் அதிகப்படியான உணர்ச்சிப்பூர்வ வேதனையைக் கிளப்பிவிடுகிறது. ஒரு செய்திமூலம் இவ்வாறு குறிப்பிட்டது: “அவர்கள் வருடக்கணக்காக ஆராதனைக்காக அங்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு ஞானஸ்நானம் பெற்றார்கள், திருமணத்தில் இணைக்கப்பட்டார்கள்; இப்போதோ மக்கள் அங்கு மிகவும் சாதாரண காரியங்களைச் செய்வதை . . . சபிப்பதைக்கூட காண்கிறார்கள்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்