சிறார் விபசாரம்—ஓர் உலகளாவிய பிரச்சினை
ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபர்
அதிர்ச்சியூட்டும் ஒரு முறையில் சிறுவரைத் தவறாக பயன்படுத்தும் செயல் மனித சமுதாயத்தைக் குலுக்கி வருகிறது; அது இந்தளவுக்குப் பரவலாயும் இப்படிப்பட்ட இயல்புடையதாயும் இருப்பது சமீப ஆண்டுகள் வரையில் அவ்வளவு பரவலாய் அறியப்பட்டிருக்கவில்லை. அதற்கான பரிகாரம்தான் என்ன என்பதைக் காண, 130 தேசப் பிரதிநிதிகள் ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில், வியாபார முறைப்படியாக சிறார்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிரான முதல் உலக காங்கிரஸ் மாநாட்டில் கூடினர். ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபரும் அங்கு ஆஜராகியிருந்தார்.
மாக்டாலினுக்கு 14 வயதாய் இருந்தபோது, பிலிப்பீன்ஸிலுள்ள மணிலாவில் ஒரு பியர் பாரில், உணவருந்த வருபவர்களுக்கு இடமளிக்கும் ஒரு “பணிப்பெண்” வேலையில் சேர வசீகரிக்கப்பட்டாள். உண்மையில், ஆண் வாடிக்கையாளர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று, அவர்கள் தன்னலத்துக்காகப் பயன்படுத்துவதற்கு—ஓர் இரவில் சராசரியாக 15 பேரும் சனிக்கிழமைகளில் 30 பேரும் பயன்படுத்துவதற்கு—தன் உடலை அனுமதிப்பதை அவளுடைய வேலை உட்படுத்தியது. சில சமயங்களில், இனிமேலும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொன்னபோது, தொடர்ந்து அவள் அதில் ஈடுபட அவளுடைய மேலாளர் வற்புறுத்துவான். களைப்பு, மனச்சோர்வு, வருத்தம் ஆகிய உணர்வுடன், பெரும்பாலும் அவளுடைய வேலைநாள் காலை நான்கு மணிக்கு முடிவடையும்.
சாரூண், கம்போடியாவின் பினாம் பென்னைச் சேர்ந்த ஓர் இளம் அனாதை தெருவோரச் சிறுவன். அவனுக்கு மேகநோய் இருந்தது. அவன் அயல்நாட்டு ஆண்களுடன் ‘போயிருந்ததாக,’ அதாவது உறவு கொண்டிருந்ததாக தெரிந்தது. அவன் ஒரு புத்தமதக் கோயிலில் தங்கிக்கொள்ளும்படி அவனுக்கு வீடு கொடுக்கப்பட்டது. அங்கே ஒரு முன்னாள் துறவியால் ‘பராமரிக்கப்பட’ வேண்டியவனாய் இருந்தான். என்றபோதிலும், இந்த மனிதன் பாலியல் சம்பந்தமாக இந்தப் பையனை மோசமாக நடத்தி, அயல் நாட்டவருடன் முறைதகாத உறவு கொள்ளச் செய்தான். புத்தமதக் கோயிலைச் சேர்ந்த சாரூணின் வீடு இடிக்கப்பட்டபோது, அவன் தன்னுடைய ஆண்ட்டியுடன் வசிக்க ஆரம்பித்தான்; ஆனாலும் தெருவில் இன்னும் விபசாரக்காரனாக தொழில் நடத்தும்படி வற்புறுத்தப்பட்டான்.
இவை, வியாபார முறைப்படியாக சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துதலுக்கு எதிரான, முதல் உலக காங்கிரஸ் மாநாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் ஆலோசிக்கப்பட்ட பயங்கரப் பிரச்சினைக்கு வெறும் இரண்டு உதாரணங்களே. இந்தப் பழக்கம் எவ்வளவு பரவலாய் இருக்கிறது? லட்சக்கணக்கான சிறார்கள் உட்பட்டுள்ளனர்—உண்மையில், அது கோடிக்கணக்கிலிருக்கலாம் என்பதாக சிலர் சொல்கின்றனர். மாநாட்டுப் பிரதிநிதி ஒருவர் இந்தப் பிரச்சினையைத் தொகுத்துரைத்ததாவது: “சிறார்கள் பாலியல் சம்பந்தமாகவும் பொருளியல் சம்பந்தமாகவும் பண்டங்களைப்போல் வாங்கவும் விற்கவும்படுகின்றனர். அவர்கள் தேசிய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுத்தனமாய் கடத்தப்படுபவர்களைப் போன்று சட்டவிரோதமாக வாங்கவும் விற்கவும்படுகின்றனர்; விபசார விடுதிகளில் சிறை வைக்கப்பட்டு, பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துபவர்களுக்கு அடிபணியும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.”
அந்தக் கூட்டத்தினரிடம் ஆற்றிய தன் வரவேற்புரையில், ஸ்வீடன் நாட்டுப் பிரதம மந்திரி யோரன் பெர்ஸான் இந்தத் தன்னலப் பயன்படுத்தலை, “மிகவும் மிருகத்தனமான, மிகவும் காட்டுமிராண்டித்தனமான, அருவருப்பான குற்றச்செயல் பிரிவு” என வர்ணித்தார். ஐக்கிய நாடுகளொன்றின் பிரதிநிதி அதை, “சிறார்களுக்கு எதிரான எல்லாவித முயற்சியோடும் கூடிய ஒரு தாக்குதல் என்பதாகவும், . . . . முற்றிலும் தீயதாய் இருப்பதாகவும், கற்பனை செய்து பார்ப்பதிலேயே மனித உரிமைகளை மிகவும் அவகீர்த்தியான முறையில் மீறுவதற்கு ஒரு மிதமிஞ்சிய உதாரணமாய் இருப்பதாகவும்” சொன்னார். சிறார்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் விஷயத்தில், அது பரவலாய் இருப்பதையும் அதன் இயல்பையும் அதற்கான காரணங்களையும் அதன் விளைவையும் பற்றி ஆராய்ந்தபோது, அதைப் போன்ற கோபக் கணைகள் அந்தக் கூட்டத்து மேடையிலிருந்து பாய்ந்தன.
“அது நாடுகடந்தும் செல்லுகிறது, அதன் விளைவோ வாழையடி வாழையாய்க் கடத்தப்படும் நிலையில் இருக்கிறது” என்று ஒரு செய்திமூலம் தெரிவித்தது. மற்றொரு செய்திமூலம் குறிப்பிட்டதாவது: “மதிப்பிடப்பட்ட பத்து லட்சம் சிறார்கள் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி டாலர் புரளும் சட்டவிரோத பாலியல் வியாபாரத்தில் நுழைகின்றனர்.” என்ன விளைவோடு? “சிறார்களின் கௌரவம், தனித்துவம், சுயமரியாதை ஆகியவை மட்டமாகக் கருதப்பட்டு, நம்பிக்கை வைப்பதற்கான அவர்களுடைய திறன் மந்தப்படுத்தப்படுகிறது. அவர்களுடைய உடல் சம்பந்தப்பட்ட, உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஆரோக்கியம் ஆபத்துக்குள்ளாகிறது; அவர்களின் உரிமைகள் மீறப்பட்டு அவர்களுடைய எதிர்காலம் இருண்டதாகிறது.”
சில காரணங்கள்
இந்தப் பிரச்சினை ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரிப்பதற்கான சில காரணங்கள் யாவை? சில சிறார்கள், “தெருக்களில் வாழ்க்கையை ஓட்டுவதற்கான ஒரு வழியாகவோ, தங்கள் குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு வழியாகவோ, அல்லது துணிமணிகளுக்கும் பொருட்களுக்கும் பணம் செலுத்துவதற்கான ஒரு வழியாகவோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று சொல்லப்பட்டது. மற்ற சிறார்கள், விளம்பர வாயிலாக பல்வேறு வகைப் பொருட்களை மக்கள் வைத்திருப்பது பற்றிய எண்ணம் எப்பொழுதும் வந்து மோதுவதால் ஏமாற்றப்படுகின்றனர்.” இன்னும் பிற சிறார்கள் கடத்தப்பட்டு விபசார தொழிலில் ஈடுபடும்படி வற்புறுத்தப்படுகின்றனர். எங்குமுள்ள தார்மீக மதிப்பீடுகள் வேகமாய் அரித்தழிக்கப்பட்டிருப்பதும், நம்பிக்கையற்ற தன்மையின் ஒரு பொதுவான உணர்வும், காரணங்களாய் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டன.
பல பெண்பிள்ளைகளும் பையன்களும் குடும்ப உறுப்பினர்களால் தவறாக பயன்படுத்தப்பட்டதால் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்—வீட்டில் வன்முறையை எதிர்ப்பட்டதாலும், முறைதகாப் புணர்ச்சிக்கு ஆளானதாலும் வீட்டைவிட்டு வெளியே துரத்திவிடப்பட்டு தெருவில் வாழ்க்கை நடத்தும்படி ஆகிறது. அங்கு, சிறுவர் புணர்ச்சிக்காரர்களாலும் மற்றவர்களாலும் சில போலீஸ்காரர்களாலும்கூட தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தில் இருக்கின்றனர். கிட்ஸ் ஃபார் ஹையர் என்ற தலைப்பில் இந்தப் பிரச்சினையைப் பற்றிய ஓர் அறிக்கை, பிரேஸிலைச் சேர்ந்த ஆறு வயது காட்யாவைப் பற்றி சொல்கிறது. அவள் ஒரு போலீஸ்காரனால் பிடிக்கப்பட்டபோது, அசிங்கமான செயல்களில் ஈடுபடும்படி அவளை அவன் வற்புறுத்தியதோடு, அவள் அவனுடைய மேலதிகாரியிடம் தெரிவித்தால் அவளுடைய குடும்பத்தையே அடியோடு தொலைத்துவிடப் போவதாக பயமுறுத்தவும் செய்தான். அடுத்த நாள் வேறு ஐந்து பேரோடு அவன் மீண்டும் வந்தான்; அவர்கள் அனைவருமே அதே அசிங்கமான பாலியல் சேவையை அவள் தங்களுக்காக செய்யும்படி விரும்பினர்.
ஸ்வீடன் நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிறார்களின் புலன் விசாரணை அதிகாரி அந்தப் பிரதிநிதிகளிடம் சொன்னதாவது: “சிறுவர் விபசாரத்துக்குக் காரணமாய் இருப்பது எது என்பதைப் பற்றிய ஆய்வுகளை நடத்தியிருக்கும்போது, மிகப் பெரிய காரணிகளில் ஒன்று, பாலியல் சுற்றுலா ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை.” ஓர் அறிக்கை சொன்னதாவது: “கடந்த பத்தாண்டுகளில் சிறுவர் விபசாரத்தில் ஏற்பட்டுள்ள ஆச்சரியப்பட வைக்கும் அதிகரிப்புக்கு சுற்றுலாத்தொழிலே நேரடி காரணம். வளர்ந்துவரும் நாடுகளால் அளிக்கப்படும் புத்தம்புதிய சுற்றுலா கவர்ச்சி சிறுவர் விபசாரமே.” ஐரோப்பா, ஐக்கிய மாகாணங்கள், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்தும், இன்னும் பிற நாடுகளிலிருந்தும் வரும் “பாலியல் சுற்றுலா” பயணிகள் உலகமுழுவதிலும் சிறுவர் விபசாரவிபசாரிகளுக்குப் பெரும் கிராக்கியை ஏற்படுத்துகின்றனர். ஓர் ஐரோப்பிய விமானப் போக்குவரத்து நிலையத்தில், பாலியல் சுற்றுலாக்களை முன்னேற்றுவிப்பதற்காக ஒரு குழந்தையின் கார்ட்டூன் வரைபடம் பயன்படுத்தப்பட்டது. சுற்றுலா ஏஜென்ஸிகள் பாலியல் சுற்றுலாக்களை ஆயிரக்கணக்கானோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்கின்றன.
நீண்டுகொண்டே போகும் இந்தக் காரணிகளின் பட்டியலில், புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக பிரபலமடைந்துள்ள சர்வதேச சிறுவர்-பாலியல் நிறுவன முன்னேற்றுவித்தலும் இடம்பெறுகிறது. இன்டர்நெட்டும் அதோடு தொடர்புடைய பிற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களுமே ஆபாசமான பாலின செயல்களின் வரைபடங்களுக்கு மிகப் பெரிய மூலகாரணமாக இருப்பதாய் அறிக்கை செய்யப்படுகிறது. மட்டரக வீடியோ சாதனங்களும் அதைப் போலவே சிறுவர் ஆபாச பாலினம் சம்பந்தப்பட்ட வரைபடத்தை உண்டாக்குவதை எளிதாக்கியிருக்கிறது.
அவர்கள் யார்?
சிறார்களைப் பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்துபவர்களில் பலர் சிறுவர் புணர்ச்சிக்காரர்களே. ஒரு சிறுவர் புணர்ச்சிக்காரனுக்கு, சிறார்களின்மீது வக்கிரமான பாலின கவர்ச்சி இருக்கிறது. ஸ்வீடனைச் சேர்ந்த சிறார்களின் புலன் விசாரணை அதிகாரி சொல்வதன்படி, “அவர்கள் உண்மையில் வயதாகிவரும் ஆட்களாகவோ, மழைக்கோட்டைப் போட்டுக்கொண்டு, நேர்த்தியாய் உடையணிந்திராத ஆட்களாகவோ, அல்லது ரவுடியைப் போன்ற விதங்களில் உடையணிந்த ஆட்களாகவோதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கற்றுத் தேர்ந்த நடுத்தர வயதுள்ள ஆணே சிறுவர் புணர்ச்சிக்காரனாய் இருந்திருப்பது எங்கும் பரவலாய்க் கண்டுபிடிக்கப்படுகிறது. அவன் பெரும்பாலும் சிறார்களுடன் சேர்ந்து செயல்புரியும் ஆசிரியராகவோ, மருத்துவராகவோ, சமூக சேவகராகவோ, அல்லது ஒரு மதகுரு தொழில் பார்ப்பவராகவோ இருக்கிறான்.”
ஆஸ்திரியாவிலிருந்து வந்த ஒரு பாலியல் சுற்றுப் பயணியால் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்ட ரோஸார்யோ என்ற பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 12 வயது சிறுமியைப் பற்றி அந்த ஸ்வீடன் தொகுதி உதாரணமாகக் குறிப்பிட்டது. அவ்வாறு அவளைப் பலவந்தப்படுத்தியபோது அவள் இறந்தேபோய்விட்டாள்.
ஜெனீவாவில், யூனிசெஃப்பின் (ஐக்கிய நாடுகள் சிறார்கள் நிதி) நிர்வாக இயக்குநர் கேரல் பெல்லாமி, அந்த 12 வயது பிலிப்பீன்ஸ் நாட்டுச் சிறுமியைப் பற்றி பின்வருமாறு சொன்னார்: “சிறார்களின் கவனிப்புக்கும் பாதுகாப்புக்கும் நம்பகமான ஆட்களாக செயல்படுபவர்கள்தான் பெரும்பாலும் இந்தச் சகிக்கமுடியாத பழக்கத்தை அனுமதிப்பவர்களாகவும் தொடர்ந்திருக்கும்படி செய்பவர்களாகவும் இருக்கின்றனர். சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்த தங்கள் கௌரவத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவோரில் ஆசிரியர்கள், உடல் நல தொழில்முறைப் பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், குருவர்க்க உறுப்பினர்கள் ஆகியோரும் உள்ளனர்.”
மதம் உட்பட்டிருக்கிறது
சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துவது, “குற்றச்செயல்களிலேயே மிகவும் அருவருப்பானது” என்றும், “உண்மை என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் திரித்துக் கூறப்படுவதனாலும், மரியாதைக்குரியவையாய்க் கருதப்படுபவை அவ்வாறு கருதப்படாமல் போவதனாலும் வந்த விளைவே” என்றும் ஸ்டாக்ஹோம் காங்கிரஸ் மாநாட்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் ஒரு பிரதிநிதி சொன்னார். ஆனாலும், கத்தோலிக்க சர்ச்சில் அதன் மதகுருமார்களுக்கு மத்தியிலேயே அப்படிப்பட்ட பழக்கங்கள் இருப்பதால் அது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 16, 1993 தேதியிட்ட நியூஸ்வீக் பத்திரிகையில், “குருக்களும் பலாத்காரமும்” என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை, “ஐ.மா. கத்தோலிக்க சர்ச்சின் நவீன கால வரலாற்றிலேயே தலைகுனிவை ஏற்படுத்திய குருவர்க்கம் சார்ந்த அவமானம்” பற்றி அறிக்கையிட்டது. அது கூறியதாவது: “1982-லிருந்து, கணக்குப்படி 400 குருமார்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அதே சமயத்தில், சர்ச்சுக்குச் செல்வோரில் சிலர் அனுமானிப்பது என்னவென்றால், 2,500 குருமார்களாவது சிறார்களையோ அல்லது பருவ வயதினரையோ பாலியல் ரீதியில் தொல்லைப்படுத்தியிருக்கின்றனர் என்பதே. . . . இந்த அவமானம், சர்ச்சுக்குப் பண இழப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி, கடும் தர்மசங்கடமான நிலைக்கு உட்படுத்தியிருக்கிறது—அதோடு, அதன் தார்மீக அதிகாரம் சிலவற்றையும் இழக்கும்படி செய்திருக்கிறது.” உலகமுழுவதிலுமுள்ள பிற மதங்களும் அதே சூழ்நிலையில்தான் இருக்கின்றன.
பிரிட்டிஷ் கூட்டரசைச் சேர்ந்த பாலியல் குற்றச்செயல் ஆலோசகரான ரே வையர், ஒரு குருவால் இழிவாக பலாத்காரப்படுத்தப்பட்ட இரு பையன்களைப் பற்றி ஸ்டாக்ஹோம் காங்கிரஸ் மாநாட்டில் தெரிவித்தார். அவர்களில் ஒரு பையன் இப்போது குருவால் இழிவான பலாத்காரத்துக்குப் பலியான சிறார்களுக்காக ஓர் ஏஜென்ஸியை நடத்திவருகிறார். மற்றொருவரோ, தவறாகப் பயன்படுத்தும் தொழிலைச் செய்பவராகவே ஆகிவிட்டார்.
தாய்லாந்தைச் சேர்ந்த மீடானாண்டூ பைக்கூ என்ற ஒரு புத்தக் கல்விமான், “தாய்லாந்தில் பல்வேறு படிநிலையில் நிகழ்ந்துவரும் வியாபார முறைப்படியாக சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்தும் செயலுக்கு, புத்த மதத்தின் சில செயல்களும் பொறுப்புடையவை. தாய்லாந்திலிருக்கும் உள்ளூர்க் கிராமங்களில், விபசாரத் தொழில் செய்யும்படி வற்புறுத்தப்பட்டிருக்கும் சிறார்களால் புத்த சமுதாயத்திற்குத் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்தின் மூலம் துறவிகளும் சில சமயங்களில் பலனடைந்துள்ளனர்” என்று அறிக்கையிட்டார்.
என்ன செய்யலாம்?
பிரிட்டிஷ் குடியரசிலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியா ஓக்கானல் டேவிட்ஸன், தன்னலத்துக்காகப் பயன்படுத்துவோரின் நடத்தை சரிதானா என எதிர்ப்புக் குரலெழுப்பும்படி அந்தக் காங்கிரஸை அழைத்தார். தவறாகப் பயன்படுத்துவோர் பெரும்பாலும் பாலியல் ரீதியில் கற்புடன் நடந்துகொள்ளாதிருக்கும் நிலையின் பேரிலும், சிறார்களின் ஒழுக்கக் கேட்டின் பேரிலும் கவனத்தைச் செலுத்துகின்றனர். அந்தப் பிள்ளை ஏற்கெனவே ஒழுக்க ரீதியிலும் அதன் பண்புநலன்களிலும் கெட்டுப் போய்விட்டதாகவும் விவாதிக்கின்றனர். தன்னலத்துக்காகப் பயன்படுத்துவோராய் இருக்கும் சிலர், தங்கள் செயல்களால் எந்தத் தீங்கும் நேரிடாது என்றும் அந்தப் பிள்ளை பயனடைகிறது என்றும் சொல்லி, திரித்துப் பொய்யாக வாதிடுகின்றனர்.
பாலியல் சுற்றுலாவின் தொடர்பாக விசாரணைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவொன்று, சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காக பயன்படுத்துவதை எதிர்த்துப் போராடுவதற்காக, அது பற்றிய கல்வியையும் பள்ளிப் பாடத்திட்டத்துடன் சேர்த்துக்கொள்வதை சிபாரிசு செய்கிறது. அதோடு, சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துவோருக்கு எதிரான தகவல், சுற்றுப் பயணிகள் செல்லுமிடங்களிலெல்லாம்—அவர்கள் கிளம்புவதற்கு முன்பும், பயணத்தின்போதும், போய்ச் சேர்ந்த பின்பும்—அவர்களை எட்ட வேண்டும்.
தகவல் தொடர்பு சம்பந்தமான புதிய தொழில் நுட்பங்களைப் பற்றிய, சிறார்களைத் தன்னலத்துக்காகப் பயன்படுத்தும் பொருள்களை முற்றிலும் அகற்றுவதற்கான வழிகாட்டுக் குறிப்புகளை தேசங்கள் அளிக்க வேண்டும் என்று ஒரு குழு ஆலோசனை கூறியது. இந்தத் துறையின் செயல் நடவடிக்கையை ஒத்திசைவிக்க ஒரு தனி சர்வதேச ஏஜென்ஸியை நிறுவுவதைப் பற்றி சிந்திக்கப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் பாலியல் ஆபாச வரைபடங்களும், பொதுவாக குழந்தைகளை உட்படுத்தும் பாலியல் ஆபாச வரைபடங்களை வைத்திருப்பதும் சட்டப்பூர்வ குற்றச்செயலாக எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்பட வேண்டும்; மேலும் சட்டப்படி தண்டனையும் கொடுக்கப்பட வேண்டும் என்று மற்றொரு குழு சிபாரிசு செய்தது.
பெற்றோர் என்ன செய்யலாம்? தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பைப் பெற்றோர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாக செய்திமூலங்கள் வகிக்கும் பங்கைப் பற்றி ஆராயும் ஒரு குழு ஆலோசனை கூறியது. அது குறிப்பிட்டதாவது: “பிள்ளைகள் தகவல் மூலங்களான செய்தித்தாள், ரேடியோ, டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தும் சமயத்தில் பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்டுவது மட்டுமல்லாமல், அதில் விழுந்துவிடுவதற்கு இருக்கும் சந்தர்ப்ப சூழமைவைப் பற்றிய கூடுதல் தகவல்களையும், விளக்கத்தையும், பல்வேறு செய்தி மூலங்களைப் பற்றியும், செய்திமூலங்களில் ஒன்றைவிட மற்றொன்று எவ்வகையில் சிறந்தது என்றும் புரிய வைப்பதன் மூலம் பிள்ளைக்குக் கற்றுத்தரலாம்.”
ஸ்வீடன் நாட்டு டிவி நிகழ்ச்சி ஒன்று, அந்தக் காங்கிரஸ் மாநாட்டைப் பற்றி அறிக்கை செய்தபோது, பெற்றோர் ஆபத்தைக் குறித்து தங்கள் பிள்ளைகளை விழிப்புடன் இருக்கச் செய்வதற்காக அவர்களைச் சிறந்தவிதத்தில் காத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அழுத்திக் கூறியது. என்றபோதிலும், அது ஆலோசனை கூறியதாவது: “வெறுமனே ‘ஒழுக்கங்கெட்ட விதத்தில் உடையணிந்திருக்கும் வயதான ஆண்களுக்கு’ எதிராக மட்டும் பிள்ளைகளை எச்சரிக்காதீர்கள் . . . அவ்வாறு எச்சரிப்பதன் மூலம் வயதான, நேர்த்தியாய் உடையணிந்திராத ஆண்களை எதிர்ப்படும்போது மட்டுமே அவர்கள் எச்சரிக்கையாக இருக்க நேரிடும்; அதே சமயத்தில் அப்படிப்பட்ட குற்றச்செயல்களைச் செய்யும் ஓர் ஆள், ஒரு சீருடை அல்லது நேர்த்தியான சூட்டைப் போட்டுக்கொண்டு மிகக் கச்சிதமாகவும்கூட உடையணிந்திருக்க சாத்தியமுண்டு. ஆகவே, சிறார்களிடம் வழக்கத்துக்கு மாறாக அக்கறை காட்டும் புதியவர்களுக்கு எதிராக அவர்களை எச்சரியுங்கள்.” உண்மையில், அவர்களுக்குத் தெரிந்தவர்களாய் இருப்பவர்கள் உட்பட எந்தவொரு நபராவது தகாத முறையில் அவர்களிடம் முதன்முதலாக அணுகுவதைப் பற்றியும் சிறுவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்—உரிய இடத்தில் புகார் செய்யத் தூண்டப்படவும் வேண்டும்.
ஒரே தீர்வு
சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துவதன் காரணங்களை மேற்கொள்வது எப்படி என்பதைப் பற்றிய ஆலோசனையை ஸ்டாக்ஹோமில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தால் கொடுக்க முடியவில்லை. எங்கும் வேகமாய் சீர்கேடடைந்து வரும் தார்மீக மதிப்புகள்; அதிகரித்து வரும் சுயநலமும் பொருள் சம்பந்தமான உடைமைகளுக்கான பேராவல்; மக்களை அநீதியிலிருந்து பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கான அதிகரித்து வரும் அவமரியாதை; பிறர் நன்றாய் வாழ்வது, கௌரவத்துடன் வாழ்வது, பிறருடைய உயிர் ஆகியவற்றுக்கான அதிகரித்து வரும் அவமரியாதை; குடும்ப அமைப்பில் தீவிரமாய் ஏற்பட்டு வரும் முறிவு; ஜனத்தொகை அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம், நகர்மயமாக்குதல், இடம் பெயர்தல் ஆகியவற்றால் ஏற்படும் பரவலான வறுமை; அயல் நாட்டவருக்கும் அகதிகளுக்கும் எதிரான அதிகரித்து வரும் நிறவெறி; என்றும் வளர்ந்துவரும் போதைப் பொருள்களின் உற்பத்தியும் சட்டவிரோதமான கடத்தலும்; கலப்பு மதக் கருத்துக்கள், செயல்கள், பாரம்பரியங்கள் ஆகிய இவையெல்லாவற்றையும் இந்தக் காரணங்கள் உள்ளடக்குகின்றன.
சிறார்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தாலும், அப்படிப்பட்ட கெட்ட செயல், பைபிளை கவனமாக வாசிப்பவர்களுக்கு ஆச்சரியமூட்டுவதாய் இல்லை. ஏன் அப்படி? ஏனெனில் “கடைசி நாட்கள்” என்பதாக பைபிள் அழைக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்; கடவுளுடைய வார்த்தையின்படி, “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்” இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5, 13, NW) ஆகவே ஒழுக்க நெறிகள் மோசமாகிக்கொண்டு வந்திருப்பதில் ஆச்சரியம் ஏதேனும் இருக்கிறதா?
என்றபோதிலும், இந்த உலகின் மிகப் பெரிய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு இருப்பதைப் பற்றி பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அதுவே, சர்வ வல்லமையுள்ள கடவுளால் ஒட்டுமொத்தமாக துடைத்தழிக்கப்படுதல். சீக்கிரத்தில், தம்முடைய சக்தியை அவர் வெளிக்காட்டி, தம்முடைய நீதியுள்ள நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படாதவர்களைப் பூமியிலிருந்து நீக்கிவிடுவார்: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22; 2 தெசலோனிக்கேயர் 1:6-10.
‘அறுப்புண்டு போகும்’ ஆட்களில், சிறார்களை விபசாரக்காரர்களாக்குபவர்களும், சிறார்களைத் தவறாகப் பயன்படுத்தும் கெட்ட மக்களும் உள்ளடங்குவர். கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுவதாவது: “வேசிமார்க்கத்தாரும், . . . விபசாரக்காரரும், . . . ஆண்புணர்ச்சிக்காரரும் [அல்லது பையன்புணர்ச்சிக்காரரும்] . . . கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) அது மேலும் குறிப்பிடுவதாவது: “அருவருப்பானவர்களும் . . . விபசாரக்காரரும்,” ‘இரண்டாம் மரணத்தில்’—முற்றிலுமான அழிவில் பங்கடைவார்கள்.—வெளிப்படுத்துதல் 21:8.
கடவுள் இந்தப் பூமியைச் சுத்திகரித்து, முற்றிலும் புதிதான, நீதியான ஒழுங்கமைப்பாகிய, “புதிய வானமும் புதிய பூமியும்” உண்டாகும்படி செய்வார். (2 பேதுரு 3:13) பிறகு, அவர் உண்டாக்கும் அந்தப் புதிய உலகில், கெட்ட, முறைதகா செயலில் ஈடுபடும் மக்கள், இனி மறுபடியும் அப்பாவிகளைத் தங்களுக்கு சாதகமாய்ப் பயன்படுத்த மாட்டார்கள். அவ்வாறே, அப்பாவிகளும் பலியாட்களாக்கப்படுவதைப் பற்றி இனி மறுபடியும் பயப்பட மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் “பயப்படுத்துவார் இல்லாமல்” இருப்பார்கள்.—மீகா 4:4.
[பக்கம் 13-ன் பெட்டி]
பாலியல் சுற்றுலா—ஏன்?
(சுற்றுப் பயணிகள் சிறார்களுடன் பாலுறவு கொள்வதற்கான சில காரணங்கள்)
(1) அந்தச் சுற்றுப் பயணியை இன்னார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவர் இருப்பதானது, தன் குடும்பச் சூழ்நிலையிலிருக்கும் சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து அவரை விடுவிக்கிறது
(2) உள்ளூர் மொழியைக் குறைந்தளவே அறிந்திருப்பதனால், அல்லது துளிகூட அறியாதிருப்பதனால், ஒரு சிறுபிள்ளையுடன் பாலுறவு கொள்வதற்காகப் பணம் செலுத்தும் பழக்கம் பொதுவாய் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றோ, வறுமையிலிருக்கும் சிறார்களுக்கு உதவும் ஒரு வழி என்றோ நம்பும்படி சுற்றுப் பயணிகள் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம்
(3) நிறவெறி சம்பந்தப்பட்ட மனோபாவங்கள், தங்களைவிடத் தாழ்வானவர்களாகக் கருதுபவர்களை சுற்றுப் பயணிகள் தன்னலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளச் செய்கிறது
(4) வளர்ந்துவரும் நாடுகளில் பாலுறவுத் தொழில்கள் குறைந்தளவு பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்போது, சுற்றுப் பயணிகள் தங்களை செல்வந்தராய் இருப்பதாக உணருகின்றனர்
[பக்கம் 15-ன் பெட்டி]
இந்தப் பிரச்சினையின் உலகளாவிய நிலை
(பின்வருபவை அரசு அதிகாரங்களாலும் பிற அமைப்புகளாலும் செய்யப்பட்ட மதிப்பீடுகள்)
இந்தியா: 4,00,000 சிறார்கள் பாலுறவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை: 6 வயது முதல் 14 வயது வரையான 10,000 சிறார்கள் விபசார விடுதிகளில் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்; 10 வயது முதல் 18 வயது வரையான 5,000 சிறார்கள் தாங்களாகவே சுற்றுப் பயணி விடுதிகளில் பணிபுரிகின்றனர்
ஐக்கிய மாகாணங்கள்: 1,00,000-க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட்டிருந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன
கனடா: ஆயிரக்கணக்கான பருவ வயது பெண்கள், விபசார தரகர் குழுவால் விபசாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
கிழக்கு ஐரோப்பா: 1,00,000 தெருப் பிள்ளைகள். பலர் மேற்கு ஐரோப்பாவிலிருக்கும் விபசார விடுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்
கொலம்பியா: போகோட்டா நகரத் தெருக்களில் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் ஐந்து மடங்காகியிருக்கிறது
சீனா: விபசாரத்தில் ஈடுபட்ட சிறார்கள் 2,00,000 முதல் 5,00,000 வரை. சமீப ஆண்டுகளில் சுமார் 5,000 சீனப் பெண்பிள்ளைகள் நாட்டெல்லைக்கு அப்பால் வசீகரிக்கப்பட்டு மயன்மாரில் விபசாரிகளாக விற்கப்பட்டுள்ளனர்
தாய்லாந்து: 3,00,000 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்
தைவான்: 30,000 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்
பிரேஸில்: குறைந்தபட்சம் 2,50,000 சிறார் விபசாரக்காரர்கள்
பிலிப்பீன்ஸ்: 40,000 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர்
மயன்மார்: 10,000 பெண்பிள்ளைகளும் பெண்களும் தாய்லாந்திலுள்ள விபசார விடுதிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகின்றனர்
மொஸாம்பிக்: சிறார்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்தியதாக ஐநா சமாதான படையை உதவி ஏஜென்ஸிகள் குற்றஞ்சாட்டின
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
“மிகவும் காட்டுமிராண்டித்தனமான அருவருப்பான குற்றச்செயல் பிரிவு.”—ஸ்வீடன் பிரதம மந்திரி
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
“ஒவ்வொரு ஆண்டும், 1 கோடி முதல் 1.2 கோடி வரையில் ஆண்கள் இளம் விபசாரக்காரர்களைச் சந்திக்கின்றனர்.”—தி இக்கானமிஸ்ட், லண்டன்
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
வளர்ந்துவரும் நாடுகளில் பாலியல் சுற்றுலா சிறுவர்களைப் பாலியல் ரீதியில் தன்னலத்துக்காகப் பயன்படுத்துவதற்கு ஒரு பெரிய காரணமாக இருக்கிறது