நியூ ஜீலாந்தின் சிறிய ஒளி-தாங்கிகள்
நியூ ஜீலாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
அந்த இரவு கும்மிருட்டாய் இருந்தது—நிலா இல்லாத வெட்டவெளி. கேம்ப் விளக்குகள் அணைந்துவிட்டபோது, ஒளிவீசும் நட்சத்திரங்களின் ஓர் அண்டத்தில் நாங்கள் இருந்ததைப்போல் தோன்றியது. குறுகலான வழியொன்றின் கீழ்ப்பகுதியில் இருந்த ஒரு வெந்நீர் ஊற்றை நோக்கி, ஒரு செங்குத்தான பாதையில் போய்க்கொண்டிருந்தோம். நீராவி பறந்துகொண்டிருந்த அந்த நீருக்கு இரு பக்கங்களிலும் தாவரங்கள் வளர்ந்துவந்தன. நாள் முழுவதும் பயணித்த பிறகு, அந்த நீரில் மூழ்கி இளைப்பாறினோம். உல்லாசமாய் மோட்டாரில் பயணிப்பவர்கள் தங்கிச் செல்லும் வசதிகள் கொண்ட கேம்ப்பில் இந்த ஊற்று இருந்தது; இங்கு, நிலத்திலிருந்து இயற்கையாக வெந்நீர் கொப்பளித்து வந்தவண்ணம் இருந்தது.
நட்சத்திரம் ஒன்று வானில் வேகமாக கடந்து செல்வதை நான் பார்த்தேன். அதை என் மனைவியிடம் சொல்வதற்காகத் திரும்பினேன்; திரும்பினபோது, கால் இடறி தண்ணீரில் தடால் என்று விழுந்தேன், தண்ணீர் தெறித்த ஓசை பலமாகக் கேட்டது. எண்ணற்ற நட்சத்திரங்கள் திடீரென்று அணைந்துவிட்டபோது, அதாவது மறைந்துவிட்டபோது, குழம்பிப்போனேன்! அதை ஆச்சரியத்துடன் சொன்னபோது, அந்த நட்சத்திரக் கூட்டம் முழுவதும் மறைந்துவிட்டது. அண்டத்தில் ஓர் ஓட்டை விழுவதற்கு நான் காரணமாகிவிட்டதுபோல் தோன்றியது!
நடந்தது என்னவென்று கண்டுபிடிக்க நான் முயன்றுகொண்டிருக்கையில், அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக மறுபடியும் தோன்றின. ஒரு நட்சத்திரக் கூட்டம் மட்டும் மற்ற முக்கிய நட்சத்திரக் கூட்டங்களைக் காட்டிலும் எனக்கு மிக அருகில் இருப்பதை இப்போது கண்டேன். நிஜமாகவே, அவற்றுள் சில நட்சத்திரங்கள் தொட்டுவிடுமளவுக்கு அவ்வளவு கிட்ட இருந்தன. நாங்கள் அப்போதுதான் முதல் தடவையாக நியூ ஜீலாந்து மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருந்தோம். அவை, எங்களால் பார்க்க முடியாதிருந்த பசுமையான தாவரங்களாலான சுவர்களில் இருந்துகொண்டு, எங்கள் தலைக்கு மேலாக இங்குமங்குமாய் அசைந்தாடின; அவற்றின் இதமான ஒளி, நட்சத்திர ஒளியைப் போலவே இருந்தது.
நியூ ஜீலாந்து மின்மினிப் பூச்சி ஒரு புழுவல்ல, அது ஒரு பூச்சி. அது உலகின் பிற பாகங்களில் காணப்படும் மின்மினிப் பூச்சிகளிலிருந்தும் மினுக்கட்டான் பூச்சிகளிலிருந்தும் வித்தியாசமானது. ஆராக்னாகாம்ப்பா லூமினோஸா என்ற அதன் பெயர், ஒளிரும் ஒருவகை சிலந்தியாய் இருக்குமோ என்று உங்களுக்குத் தோன்றலாம்; ஆனால் அது உண்மையில் சிலந்தியுமல்ல.
நாங்கள் முதலாவது தடவை பார்த்ததற்குப் பின் வெகு சீக்கிரத்திலேயே, நியூ ஜீலாந்தைச் சேர்ந்த வடக்குத் தீவிலிருக்கும் வைட்டோம்மோ குகைகளில் மறுபடியும் மின்மினிப் பூச்சிகளைக் கண்டோம். இச் சிறிய உயிரினங்களைப் பார்ப்பதற்காக ஒரு படகு எங்களை ஏற்றிச் சென்ற அந்த மின்மினிப் பூச்சிக் குகைக்கு நாங்கள் சென்றுவந்த பயணத்தைப் பற்றி நான் விவரிக்கிறேன்.
வைட்டோம்மோ குகை
அந்த மின்மினிப் பூச்சிக் குகை மிக அற்புதமானது; பாறையின் கரைசல் துளி வீழ்வால், மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணாம்புப் பாறையான தொங்கூசிப் பாறையும் (stalactite), நிலத்தினின்று மேல்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணாம்புப் பாறையான பொங்கூசிப் பாறையும் (stalagmite) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் கணிசமாகச் சேர்ந்திருந்தன; அந்த மகத்துவக் கலைவண்ணத்தைக் காட்டுவதற்காக அந்தக் குகை அழகாய் ஒளியூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கு அருகிலும் நாங்கள் செல்லுகையில், எங்கள் வழிகாட்டி விளக்குகளைப் போட்டார்; அந்த வசீகரிக்கும் உருவங்களையும், சுரங்கப் பாதைகளையும் பார்த்தபோதும்—நிலத்துக்கடியில் எதிர்பாராததும் வினோதமானதுமாய் இருந்த விந்தையுலகைப் பார்த்தபோதும்—நாங்கள் வியப்படைந்தோம். அந்த இருட்டுக்குள் இறங்கிப்போவதற்கிருந்த படிக்கட்டுகளின் மேற்புறத்தில் நாங்கள் வந்துசேர்ந்தபோது, எங்கள் காலடி ஓசை கணீரென்று எதிரொலித்தது. எங்கள் கண்கள் இருட்டுக்குப் பழக்கப்பட்டுப் போனதால் எங்கள் தலைக்குமேல் பச்சைநிற ஒளிவீசிய சிறுசிறு விளக்குகளை நாங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அடேயப்பா, மின்மினிப் பூச்சிகள்!
நாங்கள் இறங்குதுறை ஒன்றையடைந்து, படகில் ஏறினோம். அந்த இறங்குதுறையிலிருந்து சற்று தள்ளி, இருட்டுக்குள் பயணப்பட்டோம். பிறகு ஓரமாகச் சுற்றி வந்தபோது, சுருங்கச் சொன்னால், சிறு அளவிலான பால்வீதி மண்டலமே எங்கள் தலைக்கு மேல் இருந்தது என்பேன். அதாவது, அந்தக் குகையின் கூரை முழுவதும் மின்மினிப் பூச்சிகளால் மூடப்பட்டிருந்தது. ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா இவ்விடத்தை “உலகின் எட்டாவது அதிசயம்” என்று அழைத்தார்.
வசீகரிக்கும் மின்மினிப் பூச்சி
சுற்றுப்பயணம் முடிந்தபோது, மின்மினிப் பூச்சியைப் பற்றிய வியப்பு, அதைப் பற்றி இன்னும் அதிகத்தைத் தெரிந்துகொள்ள எங்களை உற்சாகப்படுத்தியது. அவ்வாறு நாங்கள் தெரிந்துகொண்ட போதோ, அது நாங்கள் பார்த்திருந்த சமயம் இருந்ததைப் போலவே வசீகரமாய் இருந்தது. ஒரு சிறிய லார்வாவாக (புழுவாக) வாழ்வை ஆரம்பித்து, பின்புற விளக்கு ஏற்கெனவே ஒளிர்வதாய், இந்த நியூ ஜீலாந்து மின்மினிப் பூச்சி அதன் வாயிலுள்ள தனித்தனி சுரப்பியிலிருந்து பிசினையும் பட்டு நூலையும் சுரக்கச் செய்து ஒரு தொங்கும் ஊஞ்சல் படுக்கையைக் (hammock) கட்டி, அதை அந்தக் குகையின் கூரையில் ஒட்டிக்கொள்ளச் செய்கிறது. இந்தத் தொங்கும் ஊஞ்சல் படுக்கை உண்மையில், அந்த லார்வா முன்னும் பின்னுமாக நகருவதற்கேற்ப கட்டப்பட்ட ஒரு சுரங்கப் பாதையே.
இந்த மின்மினிப் பூச்சி உயிர்வாழ்வதற்கு உணவு தேவை. ஆகவே ஆறிலிருந்து ஒன்பது மாதங்களுக்கு எதையாகிலும் பற்றியிழுத்து உண்ணுகிறது. அவ்வாறு அது பற்றியிழுத்து உண்ணும் உணவு நீரிலிருந்து வந்த போதிலும், தரைப்பகுதியிலேயே அதற்குக் கிடைக்கிறது. கொசுவினப் பூச்சி வகைகள், கொசுக்கள், கல்லுக்கடியில் வாழும் தூண்டில் பூச்சிகள், ஈசல்கள் ஆகியவை ஒளியினிடமாகக் கவரப்பட்டு அங்கு வருவதால் இந்த லார்வாக்களுக்கு உணவு தொடர்ந்து கிடைக்கின்றன. அவற்றைப் பிடிப்பதற்காக, மின்மினிப் பூச்சி அதன் தொங்கும் ஊஞ்சல் படுக்கையிலிருந்து இழைகளை வரிசையாக (சில சமயங்களில் 70 இழைகள் வரையில்) கீழ்நோக்கி வரவிடுகிறது. அந்த இழைகள் ஒவ்வொன்றின் கீழ் பாகத்திலும் ஒரே மாதிரியான இடைவெளி விட்டுவிட்டு, ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ள பிசின் துளிகள் இருப்பதால் அவை, மிகச் சிறிய முத்து நெக்லஸ்கள் நேராகக் கீழ்நோக்கி தொங்குவதைப் போல் காட்சியளிக்கின்றன.
இரைபிடிப்பதற்காக மின்மினிப் பூச்சி தொங்கவிட்டிருக்கும் இழைகளுக்கு ஒளியூட்டுவதற்காக பயன்படுத்தும் ஒளியே அதன் வெகு வசீகரமான அம்சமாய் இருக்கிறது. நியூ ஜீலாந்து மின்மினிப் பூச்சி, நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டு ஒளி வீசும் தன்மையற்ற பூச்சிகளின் தொகுதியைச் சேர்ந்தது. ஆனாலும், அதன் விருப்பத்துக்கிசைய எப்பொழுது வேண்டுமானாலும் அது அந்த ஒளியை அணைக்கவல்லதாய் இருக்கிறது. ஒளி உமிழும் உறுப்பு அதன் கழிவுப்பொருள் வெளியேற்றும் குழாய்களின் முடிவுப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த லார்வாவின் மூச்சு மண்டலத்தின் ஒரு பகுதி ஒரு பிரதிபலிப்புப் பொருளாக செயல்படுகிறது, ஆகவே ஒளிக் கதிரைக் கீழ்ப்புறமாக அனுப்புகிறது. இந்த ஒளியை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஆக்ஸிஜனையோ, அல்லது பிற ரசாயனப் பொருட்களையோ தடை செய்வதன் மூலம் அது அந்த ஒளியை அணைக்கிறது.
என்றபோதிலும், மின்மினிப் பூச்சி உருவாக்கியிருக்கும் சுரங்கப் பாதையின் முனையிலுள்ள ஒளி, இரையாகப் போகும் பூச்சி எதிர்பார்க்கிற அளவுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமான அடையாளமாய் இல்லை. அந்தப் இரைப் பூச்சி, அதைச் சாகடிக்கப்போகிற, வரிசையாக விடப்பட்டுள்ள அந்த இழைகளினூடே பறந்துசெல்கையில், சிலர் கூறுவதுபோல், அங்கிருக்கும் ஓர் இரசாயனப் பொருள் அதைப் படிப்படியாக உணர்விழக்கச் செய்கிறது. இரைப் பூச்சி துள்ளுவதை உணர்ந்து, இந்த லார்வா அந்தத் தொங்கும் ஊஞ்சல் படுக்கைக்கு வெளியே, எதிர்பாராத விதத்தில் தொங்குகிறது, பிறகு அதன் உடலைச் சுருக்கிக்கொள்ளும் அமைப்பைப் பயன்படுத்தி, அந்த இழையை அதன் வாய்க்குள் இழுத்துக்கொள்கிறது.
ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரையில் இரையைப் பிடித்து உண்ட பிறகு, இந்த லார்வா கூட்டுப்புழுப் பருவத்தை எட்டுகிறது; அதன் பிறகு ஒரு முதிர்ச்சியடைந்த பூச்சியாக வாழ்வை அனுபவிக்கிறது. அவ்வாறு முதிர்ச்சியடைந்த பூச்சி உண்மையிலேயே வாழ்வை அனுபவிக்கிறதா, இல்லையா என்பது சந்தேகத்துக்குரியது. அது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத்தான் உயிருடன் இருக்கும், ஏனெனில் முதிர்ச்சியடைந்த பூச்சிக்கு வாய் இருப்பதில்லை, ஆகவே அதற்கு உண்ண முடிவதில்லை. மீந்திருக்கும் அதன் வாழ்நாள் இனவிருத்திக்காக செலவழிக்கப்படுகிறது. பெண் பூச்சிகள் அவற்றின் கூட்டைவிட்டு வெளியே வந்த அந்தக் கணத்திலேயே முதிர்ச்சியடைந்த ஆண் பூச்சிகள் அவற்றைச் சினைப்படுத்துகின்றன. சினையுற்ற பெண் பூச்சி ஒவ்வொன்றாய் முட்டைகளை இடுவதற்காக ஒரு நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம்; அதற்குப் பின்பு அது செத்துவிடுகிறது. மனிதருக்கு அளவற்ற இன்பத்தை அளிக்கின்ற, கண்ணைப் பறிக்கும் பால்வீதி மண்டலத்தை உருவாக்குவதில் பங்கேற்றிருப்பதாய், நியூ ஜீலாந்தின் சிறிய ஒளி-தாங்கியின் 10 முதல் 11 மாத வாழ்க்கைச் சுழற்சி முடிவடைந்துவிடுகிறது.
[பக்கம் 17-ன் படம்]
எதிர்ப்பக்கம்: மின்மினிப் பூச்சிக் குகைக்குள் நுழைதல்
[பக்கம் 17-ன் படம்]
மேலே: மின்மினிப் பூச்சிகளால் ஒளிவீசும் குகைக் கூரை
[பக்கம் 17-ன் படம்]
வலது: மின்மினிப் பூச்சி இரை பிடிக்க பயன்படுத்தும் இழைகள்
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
பக்கம் 16-17-ல் உள்ள படங்கள்: Waitomo Caves Museum Society Inc.