எந்த மதம் கடவுளின் சம்மதத்தைப் பெறுகிறது?
விசனகரமாக, 16-வது நூற்றாண்டு பிரான்ஸில் இருந்த மதப் பகைமைகள் முடிவடைந்து விடவில்லை. அதைத் தொடர்ந்த நூற்றாண்டில் கத்தோலிக்கரும் புரொட்டஸ்டண்ட் பிரிவினரும் முப்பது ஆண்டுக்காலப் போரில் (1618-48) போர்க்களத்தில் சந்தித்தபோது, மீண்டும் ஆழமாய் வேரூன்றிய தப்பெண்ணங்கள் ஐரோப்பாவை இரண்டாகப் பிரித்துவிட்டன. கடவுளின் பெயரில், கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டிக்கொண்டவர்கள் ஒருவரையொருவர் கொடூரமாகக் கொல்லும் செயலில் மீண்டும் ஈடுபட்டனர்.
மதப் பகைமைகளும் கொலைகளும் முடிவடைந்து விடவில்லை. அயர்லாந்திலுள்ள கத்தோலிக்கரும் புரொட்டஸ்டண்ட் பிரிவினரும் சமீபத்தில் ஒருவரையொருவர் கொலை செய்திருக்கின்றனர்; முன்னாள் யூகோஸ்லாவியா பிராந்தியத்தில் ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களும் ரோமன் கத்தோலிக்க மதங்களும் அதைப் போன்றே செய்திருக்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப் போர்களின்போது, கத்தோலிக்கர், புரொட்டஸ்டண்ட் ஆகிய இரு பிரிவினருமே தங்கள் சொந்த மத உறுப்பினர்களில் லட்சக்கணக்கானோரை போர்க்களத்தில் கொன்றிருக்கின்றனர் என்பது நம்ப முடியாததாய்த் தோன்றலாம். இந்தக் கொலைக்கு நியாயமான காரணம் இருக்கிறதா? கடவுளுடைய நோக்குநிலை என்ன?
நியாயமான காரணங்காட்ட முயற்சிகள்
1995 பிரிட்டானிக்கா புக் ஆஃப் தி இயர் குறிப்பிடுவதாவது: “வன்முறைக்கான இறையியல் சார்ந்த நியாயமான காரணங்கள் வெவ்வேறு முன்னணிகளால் 1994-ல் முயற்சி செய்யப்பட்டுள்ளன.” 1,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, கொலைக்கு நியாயமான காரணம் காட்ட, கத்தோலிக்க தத்துவ மேதை “புனித” அகஸ்டினால் அதைப் போலவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியாவின்படி, அவர் ‘போர்-நியாயக் கொள்கையை’ தோற்றுவித்தவர்; அவருடைய சிந்தனை ‘நவீன காலங்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது’ என்பதாய் அந்த என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், புரொட்டஸ்டண்ட் ஆகிய சர்ச்சுப் பிரிவுகள் கடவுளின் பெயரில் கொலை செய்வதை அனுமதித்தும், முன்னேற்றுவித்தும்கூட இருக்கின்றன. இந்த மதங்கள் இரத்தஞ்சிந்தும் செயல்களைச் சாதித்திருக்கிறபோதிலும், உலகமுழுவதிலுமுள்ள மற்ற அநேக பெரிய மதங்களும் இவற்றைப் போலவே இரத்தஞ்சிந்தும் செயலைச் செய்திருக்கின்றன. அப்படியானால், மெய் வணக்கத்தைக் கடைப்பிடிக்கும் மக்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்?
அவை தாங்கள் நம்புவதாய் சொல்லிக்கொள்ளும் விஷயங்களைக் கேட்ட மாத்திரத்தில், அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இந்த விஷயத்தைப் பற்றி, இயேசு கிறிஸ்து எச்சரித்ததாவது: ‘போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள்; இவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்; உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள். அவர்கள் கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள். . . . நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்; தீய மரமோ தீய பழம் கொடுக்கும். . . . நல்ல பழம் கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்.’—மத்தேயு 7:15-20, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
அவர்களுடைய கனிகளினால் அறிதல்
குறிப்பாக, இரத்தஞ்சிந்துதலை உட்படுத்திய போர்களை முன்னேற்றுவித்ததன் மூலம் உலக மதங்கள் ‘கெட்ட கனியைக்’ கொடுத்துள்ள ‘கெட்ட மரங்களாய்’ இருப்பதாக லட்சக்கணக்கான நேர்மையான மக்கள் அறிந்துவருகின்றனர். பைபிளில் பொய் மத உலகப் பேரரசு, “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படும் ஓர் ஆவிக்குரிய வேசியாக விவரிக்கப்படுகிறது. “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று பைபிள் கூறுகிறது.—வெளிப்படுத்துதல் 17:3-6; 18:24.
இவ்வாறு, மதத் தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் போர்களுக்குச் சம்மதம் தெரிவிப்பதற்கு மாறாக, தம்முடைய பெயரில் கொலை செய்திருக்கும் அந்த மதங்களைக் கடவுள் சீக்கிரத்தில் நியாயந்தீர்ப்பார். இதை அவர், “பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்” என்று கூறும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகச் செய்வார். அந்த மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சி நிறைவேறும்போது, கடவுள் ‘மகா வேசிக்கு நியாயத் தீர்ப்புக்கொடுத்திருப்பார்,’ ‘தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கியிருப்பார்.’—வெளிப்படுத்துதல் 18:21; 19:2.
“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்ற பைபிள் தீர்க்கதரிசனத்துக்கு இசைவாக உண்மையிலேயே வாழும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களா என்று, கடவுளின் பெயரில் செய்யப்பட்டிருக்கும் கொலைகள் அனைத்தாலும் வெறுப்படைந்துள்ள மக்கள் யோசிக்கலாம். (ஏசாயா 2:4) போரில் பங்குபெறாதிருக்கும், உண்மையிலேயே கடவுள் பயமுள்ள மக்களை உங்களுக்குத் தெரியுமா?
கடவுளின் சம்மதத்தைப் பெற்றுள்ள மதம்
மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் பிரசுரிக்கப்பட்ட, “வன்முறைக்கு நியாயமான காரணம் காட்டுவதைப் பற்றிய கூடுதலான தகவல்” என்ற சமூகவியல் சார்ந்த ஓர் ஆய்வு குறிப்பிட்டதாவது: “இந் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடுக்கப்பட்டுள்ள பெரியளவிலான இரண்டு உலகப் போர்களிலும் அதைத் தொடர்ந்து வந்த ‘பனிப்போர்’ காலத்தில் ஏற்பட்ட ராணுவ மோதல்களிலும் யெகோவாவின் சாட்சிகள் ‘கிறிஸ்தவ நடுநிலைமை’ என்ற அகிம்சைத் தன்மையுடைய நிலைநிற்கையைத் தொடர்ந்து காத்துவந்திருக்கின்றனர்.” சாட்சிகள் தொடர்ந்து நடுநிலைமை வகித்துவந்திருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுகையில், அந்த ஆய்வு தெரிவித்ததாவது: “யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகள், பைபிள் ஏவப்பட்டு எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தை என்ற அவர்களுடைய நம்பிக்கையிலிருந்து தோன்றுகின்றன.”
ஆம், யெகோவாவின் சாட்சிகள் பைபிளுக்கிசைவாக வாழ்கின்றனர். பைபிள் போதிப்பதாவது: ‘இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். . . . தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்.’—1 யோவான் 3:10-12.
யெகோவாவின் சாட்சிகள் உலக மதங்களின் இரத்தப்பழியைக் காணும்படி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அவர்கள் பின்வரும் பைபிளின் அவசர அறைகூவலை எதிரொலித்தும் இருக்கின்றனர்: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய [மகா பாபிலோனுடைய] பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:4, 5.
ஒவ்வொரு ஆண்டும் உண்மை மனதுள்ள அதிகமானோர், பொய்மத உலகப் பேரரசைவிட்டு வெளிவரும்படியான அந்த அழைப்புக்குச் செவிகொடுத்து வருகின்றனர். மதத்தின் பெயரில் செய்யப்பட்டிருக்கும் அனைத்துக் கொலைகளாலும் நீங்கள் அதிர்ச்சியுற்றிருந்தீர்களென்றால், இந்தப் பத்திரிகையை உங்களுக்கு அளித்த நபரிடம் நீங்கள் தொடர்புகொள்ளும்படியோ, அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளில் ஒன்றுக்கு எழுதும்படியோ, நாங்கள் உங்களை வரவேற்கிறோம். நீதியுள்ள ஒரு புதிய உலகைப் பற்றிய பைபிளின் வாக்கைப் பற்றி நீங்கள் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்கு உதவிசெய்ய யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பார்கள். அந்தப் புதிய உலகில் போரே இராது.—சங்கீதம் 46:8, 9; 2 பேதுரு 3:13.
[பக்கம் 10-ன் படம்]
“அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள் கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.” தீத்து 1:16